இறையியல் சிந்தனைகள்: ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும்: 8

அவ்வை மகள்

மனித நேயமும் – மனிதச் சேவையும் தொழிநுட்பத்தின் இரு கண்கள்

இறையியல் சிந்தனைகள்

உலகிற்கு என்ன தேவை என்பதனை மிகச்சரியாக உணர்ந்து, அதனை மிகச்சரியான தருணத்தில், மிகச்சரியான அளவிலே தருகிறவர்கள் உலகில் வாழும் கடவுள்களாகிறாகள். துறை எதுவாகினும் எந்தத்துறைக்கும் இது பொருந்தும். மதமா? அரசியலா? மருத்துவமா? உளவியலா? தொழில்நுட்பமா? எந்தத்துறையும் இதற்கு விதிவிலக்கில்லை.

அரண்மனை வாயிலில் மணி கட்டி – மக்கள் குறை அச்சமின்றி அரண்மனை வந்து குறை அறிவிக்கச் செய்து – அவர்கள் குறைதீர்த்த மனுநீதிச் சோழனும் உயிர்த் துன்பம் இனி செய்யேன் எனப் போர் துறந்த அசோகச் சக்கரவர்த்தியும், ஆராயாது தவறிழைத்ததால் அவையில் உயிர்துறந்த நெடுஞ்செழியப் பாண்டியனும், எங்கள் தமிழகத்தில் சிறப்பான அறிவியல் ஆய்வகம் வேண்டும் என்று சொந்த நிலத்தின் பத்திரத்தையும் சொந்தப் பணத்தையும் எடுத்துக்கொண்டு டில்லி வரை சுருக்கென சென்று – மையஅரசுக்கு வழங்கி மையமின்வேதியியல் ஆய்வகம் தமிழ் மண்ணில் – காரைக்குடியில் நிலைபெற காரணமாயிருந்த வள்ளல் அழகப்பரும் அரசியல்துறையில் வாழும் கடவுள்கள்.

அம்மை நோய்க்குத் தடுப்பூசி கண்டுபிடித்த எட்வர்ட் ஜென்னர் மருத்துவத்துறையில் வாழும் கடவுள்.

ரேடியோவைக்கண்டுபிடித்த மார்க்கோனி – விமானத்தைக் கண்டுபிடித்த ரைட் சகோதரர்கள் – வெடிமருந்து கண்டுபிடித்த ஆல்பிரட் நோபல், – இவர்கள் எல்லாம் அறிவியல் – தொழில்நுட்ப உலகில் வாழும் கடவுள்கள்.

வாகன உற்பத்தியில் டாடாவும், அசோக் லேலண்டும்; வேதி உற்பத்தியில், தூத்துக்குடியிலன் தரங்கதாரா கெமிக்கல்ஸ், மேட்டூரில், மேட்டூர் கெமிக்கல்ஸ் மற்றும் கெம்பாப் தொழிற்கூடம், பொள்ளாச்சியின் சக்தி நிறுவனங்கள், ஆகியனவற்றின் நிறுவனர்கள் தொழில்நுட்பத்துறையில் கடவுள்கள். இன்று உலகம் வியக்கும்படியாக Fuel Cells எனப்படும் சக்திக் கலங்களை உலகெங்கும் நிர்மாணித்துக் கொண்டிருக்கும் ப்ளூம் எனர்ஜி நிறுவனத்தின் உரிமையாளர் தமிழர் கே. ஆர். ஸ்ரீதர் ஆற்றல் தொழில்நுட்பத் துறையில் வாழும் கடவுள்.

இவர்கள் அனைவரும் அவர்கள் வாழ்ந்த (அல்லது வாழ்ந்து வருகிற) காலகட்டத்தில் உலகிற்கு என்ன தேவை என்பதனை மிகச்சரியாக உணர்ந்து, அதனை மிகச்சரியான தருணத்தில், மிகச்சரியான அளவிலே தந்தவர்கள்.

சமயங்கள் எனும் வகையில், ஆதி சங்கரர், ஆழ்வார்கள், நாயன்மார்கள், ரமணர், வள்ளலார். இயேசுபிரான், நபிகள் நாயகம் ஆகியோர் அன்றும் இன்றும் வாழும் கடவுளானவர்கள். ஆன்மீக விஷயங்களில், உலகோர்க்கு எப்போது என்ன தேவை என்பதைச் சரியாக உணர்ந்து அந்தத் தேவையை நிறைவு செய்த பெருமை இவர்களுடையது.

பிரபஞ்சவியல் மற்றும் உடலியல் துறையில் சித்தர்கள் கடவுள்களே. உலகில் வேறெவரும் கிட்டே நெருங்கமுடியாத அள்வுக்கு உயரே சென்று உய்யஆய்ந்து நம் சித்தர்கள் நிலைநாட்டியிருக்கிற கண்டுபிடிப்புக்களை அறிந்து கொள்ள மட்டுமே பல யுகம் வேண்டும். இன்றும் என்றும் ஓப்பது மிக்கதும் உள்ளது ஏதும் இல்லை என்ற அளவுக்கு உண்மைக் கருவூலங்களை நமக்காய் விட்டுச் சென்றிருக்கிற வித்தகர்களான சித்தர்கள் என்றும் கடவுளாகவே நிலை பெறுவர்.

கணினித் தொழில்நுட்பம் என்பது இன்றைய காலகட்டத்தின் இன்றியமையாத தேவையாக இருக்கிறது. உண்ணவும், உறங்கவும், கனவு காணவும் கூட கணினி என்றாகிவிட்ட இக்கால நிலையில் – கண்ணெல்லாம் கணினி – கணக்கில்லாக் கணினி என்பதே பரிபாஷையாகி- அடையாளமாகி – விட்டது. கணினியின்றி எவரும் வாழமுடியாது என்கிற காலக் கட்டாயத்தில் நாம் வாழ்கிறோம்.

ஆனால், இன்று நம் கையில் இருக்கும் கணினித் தொழில்நுட்பம் சும்மா வந்தவிடவில்லை. இந்த செம்மாந்த வளர்ச்சிக்கு நீண்ட பின்புலம் இருக்கிறது. கணினி வளர்ச்சி கடந்து வந்திருக்கிற பாதை நெடியது – கடியது. இந்தப் பாதை கரடு முரடானது – கொடிய முகடுகள் கொண்டது – பயங்கரப் பள்ளத்தாக்குகளில் இறங்கி ஏறி வந்தது, சறுக்கிவீழ்த்தும் பிடிமானமில்லாத வழுக்குப்பிரதேசங்களைக் கடந்தது வந்திருப்பது. நினைத்தாலே நடுக்கம் கொள்ளவைக்கும் பிரம்மாண்டாமான மனிதஉழைப்பை இந்தக் கணினி வளர்ச்சி முதலீடாய் விழுங்கியிருக்கிறது. உலகின் வேறெந்த தொழிநுட்ப வளர்ச்சியும் இந்த அளவு மனித முதலீட்டை கபளீகரம் செய்யவில்லை என்றே சொல்லமுடியும். இன்று உலகளார்ந்த அளவில் பலுகிப்பெருகியிருக்கிற கணினித் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு எண்ணிறந்த இந்தியர்கள் உழைப்பு நல்கி இருக்கிறார்கள் என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும் – குறிப்பாக – நம் தமிழர்கள் தந்திருக்கிற ராப்பகல் உழைப்பு அளப்பரியது. இடம் பெயர்ந்தும், புலம் பெயர்ந்தும், தனிமனித சவுகரியங்களை இழந்தும், சொல்லொணாப் பல குடியேற்றப் பிரச்சினைகளைச் சந்தித்தும் – உலகில் அனைவருக்கும் கணினித் தொழிநுட்பம் கிடைக்க வேண்டும் என்கிற ஒரே சிந்தனையோடு மனிதவள முதலீட்டை வழங்கியிருக்கிற பல்லாயிரக்கணக்கானத் தமிழர்களை வாழ்த்தி வணங்குதல் நன்று.

கணினி வளர்ச்சி இவ்வாறானது என்றே இருப்பினும், கணினித் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு உண்மையிலேயே முதன்மையான முதலீடு ஒன்று உண்டு. அது என்னவென்றால்: “தீர்க்கதரிசனம்.”

அம்மைத் தடுப்பூசியின்றி மக்கள் வாழமுடியாது என்றது ஜென்னரின் தீர்க்கதரிசனம் – ரேடியோவின்றி மக்கள் வாழமுடியாது என்றது மார்க்கோனியின் தீர்க்க தரிசனம். மனிதர்கள் நோயுடன் வாழமுடியாது என்றது சித்தர்களின் தீர்க்க தரிசனம். சமரச சன்மார்க்கம் இன்றி மக்கள் ஒருமையுடன் வாழமுடியாது என்றது வள்ளலாரின் தீர்க்கதரிசனம்.

கணினியின்றி மக்கள் வாழமுடியாது என்றது ஸ்டீவ் ஜாப்ஸின் தீர்க்கதரிசனம். மக்களுக்கான கணினித் தேவையை மிகச் சரியாகப் புரிந்து கொண்டு அனைவர்க்கும் கணினித் தொழில்நுட்பவசதி கிடைக்கவேண்டும் என்று மனப்புலனில் வடிவமைத்து – திட்டமிட்டு – கனவு கண்டு – ஓய்வு ஒழிச்சல் இல்லாது உழைத்த ஸ்டீவ் ஜாப்ஸை உலகம் இன்று வாழும் கடவுளாகவே காண்கிறது.

கணினி வாழ்வின் அடிப்படை ஆதாரவசதி என்றாகிற காலம் வந்துகொண்டேயிருக்கிறது, அதற்காக, கணினித்தொழில்நுட்பத்தைப் பல்லோரும் பயனடையுமாறு பதப்படுத்தி, பலப்படுத்தி, பன்மைப்படுத்திட வேண்டும். அனைவருக்கும் அனைத்துக்கும் கணினித் தொழில்நுட்பம் என்று இத்தொழில்நுட்பத்தை எளிமைப்படுத்தி அதனை அனைத்து மனித சாதனமாய்த் தயார்செய்து வைத்தாலொழிய, கணினி அனைவருக்கும் கிடைக்காது என்று எண்ணினார் ஸ்டீவ் ஜாப்ஸ். இவ்வாறு எதிர் வரும் ஒரு தேவையை முன்கூட்டியே – ஏறக்குறைய ஒரு கால்நூற்றாண்டுக்கு முன்னேயே ஞான திருஷ்டியால் பார்த்தவர் ஸ்டீவ் ஜாப்ஸ். சுதந்திரம் கிடைப்பதற்கு முன்னேயே சுதந்திரத்தை ஞான திருஷ்டியால் பார்த்து “ஆடுவோமே பள்ளு பாடுவோமே!” என்று ஆனந்தக் கூத்தாடச் சொன்ன பாரதியின் உறுதியை ஸ்டீவ் ஜாப்ஸின் தேவை உணர்தலில் காணமுடிகிறது.

தேவையை உணர்தல் சிறப்பான விஷயம் தான் ஆனால் வெறுமனே உணர்தலால் என்ன பிரயோஜனம்? உணர்வை ருசுவாகவேண்டும் – எண்ணத்தைச் செயலாக்க வேண்டும் – சாதனைப்படைக்க வேண்டும் அல்லவா?

சாதனை ஒன்றைப்படைக்க வேண்டுமென்றால் விடாப்பிடியான கொள்கைப் பற்று வேண்டும் – இலக்கினின்று விலகா சிந்தை வேண்டும். கடுமையான பழக்கவழக்கங்கள் வேண்டும் – காலநேரம் விரயமாகக் கூடாது.

அதுவும் கண்ணினித் தொழில்நுட்பம் என்பது பலபேரை இணைத்தும்- இணைத்த அந்தக்குழுவைச் சிதையாமல் தன்னுடன் இணைத்தும் – உடன் அழைத்தும், உடன் இழுத்தும் செல்லவேண்டிய பணி. வேண்டும்போது குழுவை முன் தள்ளியும் – தேவைப்படும்போதெல்லாம் குழுவை மறைவில் கிடைக்கச் சொல்லியும் மாற்றுக் கட்டளைகள் பிறப்பிக்கவேண்டிய பணி. பிறப்பிக்கப்பட்ட கட்டளைகளைக் குழுபின்பற்றுமாறு கட்டுப்பாட்டுடன் ஒருங்கமைத்தல் ஆகியன மிகவும் முக்கியம். இப்பணியில் பலபேருடன் உரசல்கள் ஏற்படும் – மோதல்கள் நிகழும் – கஷ்டநஷ்டங்கள் உருவாகும் – பசி– பட்டினி – தாகம் பொறுக்கவேண்டும் – உறக்கம் விடுக்க வேண்டும் – அடிக்கடி தொலைதூரப் பயணங்கள் மேற்கொள்ள வேண்டும் – கூட்டங்கள் நடத்தவேண்டும் – கூட்டங்களில் கலந்தது கொள்ளவேண்டும் – உரை நிகழ்த்தவேண்டும் – உரையாடவேண்டும் – பிறரை தன் கருத்துக்கு இணக்கம் சொல்லவைக்க வேண்டும் – பணவிஷயத்தில் கராறாய் இருக்கவேண்டும் – உடன் பணிபுரியும் அனைவருக்கும் சம்பளம் வழங்கவேண்டும் – என ஓராயிரம் நிர்ப்பந்தங்கள். இதற்கிடையில் வளர்ச்சியைப் பொறுக்கமாட்டா பிறரின் வசைவையும் – தொந்திரவையும் – அவர் செய்யும் தீங்கையும் பொறுத்துக்க கொள்ளவேண்டும் என்ற சோதனைகளை வேறு.

இந்நிலையில் ஒருவன் ஒரு தொழில்நுட்ப முன்னோடியாக – கணினித் தொழில்நுட்பத் தந்தையாக உயர்த்துவது என்பது அற்ப சொற்பமான செயலன்று. சொல்லப்போன்னால் ஒருதனிமனிதனாக நின்று ஸ்டீவ் ஜாப்ஸ் மேற்சொன்ன அனைத்தையும் சந்திக்கவேண்டியிருந்தது. ஏனெனில் கணினித் தொழில்நுட்பத்தில் சுயம்புவாக உருவானவர் ஸ்டீவ் ஜாப்ஸ்.

ஸ்டீவ் ஜாப்ஸ்கொண்டிருந்த கணினித் தொழில்நுட்பப பற்றை, தொழிநுட்ப வெறி எனலாம். உண்பதும் உறக்கமும் கணினி என்றான வாழக்கை. யாருக்காய்க் கணினி என்றால் இந்த உலகின் உள்ள மக்கள் யாவருக்கும் கணினி என்கிற கனவு – எவர் கையிலும் கையிலும் கணினி என்கிற பார்வை – தொலைபேசியையும் கணினியையும் சங்கமித்து கையகக் கணினிகளை உருவாக்கவேண்டும் என்றத் தணியா ஆவல். இதை அவர் ஏன் செய்தார் என்றால் – அவரே கூறாக காண்க: “நான் மனித நேயன் – ஆனால் சிறுவயதுமுதலே எனக்கு மின்னணுக் கருவிகளின் பால் மிகுந்த நாட்டம் இருந்தது – என்னுடைய ஹீரோவாக நான் கொண்டிருந்தவர் போலராய்ட் கேமராவைக் கண்டுபிடித்த துவின் லேண்ட் – அவர் – அறிவியல் தொழிநுட்பக் கண்டுபிடுப்புகளில் மக்களே முதன்மையான இலக்கு என்கிறார் – அவர் வழியே எனக்குள்ள மனித சிந்தனையினையும் – தொழிநுட்பத் திறனையும் ஒன்றிணைக்க வேண்டும் என்று விரும்பினேன்!’ என்று.

ஆம்! எந்த ஒரு அறிவியல் கண்டுபிடிப்பும் மக்களுக்கான பயன்பாடே. மனித நேயமும் – மனிதச் சேவையும் தொழிநுட்பத்தின் இரு கண்கள் போன்றவை.
மனித நேயமும் – மனிதச் சேவையும் இல்லாத எந்தத் தொழில்நுட்பமும் – தொழில்நுட்பமாய் இருக்க லாயக்கில்லை என்கிறார் ஸ்டீவ் ஜாப்ஸ்.

மேலும் பேசுவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.