மீனாட்சி பாலகணேஷ்

கண்ணன் மருகா தாலேலோ!

புலவர் பகழிக்கூத்தர் வைணவ சமயத்தவர். தமக்குண்டான தீராத வயிற்றுவலியை திருமால் மருகனான திருச்செந்தூர் முருகப்பெருமான் மீது அழகான பிள்ளைத்தமிழ் ஒன்றினைப்பாடியதால் தீர்த்துக்கொண்டவர் என்பது வரலாறு. இவருடைய திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்ப் பாடல்களில் திருமால் பெருமை, மேலும் திருமால் செய்த விளையாடல்கள் தொடர்பான தொன்மங்கள் அழகுறப் புனையப்பட்டுள்ளதனைக் காணலாம். “இத்தகு திருமாலின் மருமகனே,” எனக்கூறிப் பாடி முருகவேளை வழுத்துவது இவருடைய முத்திரை எனலாம்!

முருகப்பெருமானைச் சேடியரும் செவிலியரும் தொட்டிலிலிட்டுத் தாலாட்டி உறங்கவைக்கின்றனர். மாலெனும் மாமன் புகழைப்பாடி முருகனாம் மருமகனைக் கொண்டாடிப் பேரானந்தமடைகின்றனர்.

“வாசுகி எனும் பாம்பினை நாணாகக் கொண்டு கடலினைக் கடைந்தவன்; கொடியதும் கருமையான நிறம் கொண்டதுமான அடர்த்தியான மேகக்கூட்டங்கள் பொழிந்த அடைமழைக்கு, பெரிய மலையாகிய கோவர்த்தனகிரியைக் குடையாகப் பிடித்தவன். எதற்காக? ஆயர்குல மக்களின் பசுக்கூட்டங்கள் அனைத்தும் அந்த அடைமழையாலும், இடிமின்னலிலும் பயந்துபதறிச் சிதறியோடாமல் இருப்பதற்காக அவற்றிடம் கொண்ட அன்பினாலும் கருணையினாலும் அவ்வாறு குடைகவித்தான். அது மட்டுமின்றி, மூங்கிலாலான தனது புல்லாங்குழலால் இனிய இசையைப் பொழிந்தும் அவற்றை அமைதிகொள்ளச் செய்கிறான். அந்தப் பசுக்கள் அவனுடனும் மற்ற இடையர்களுடனும் மேய்ச்சலுக்குச் செல்லும்போதெல்லாம், கண்ணனின் இனிய குழலோசையைக் கேட்டு அதில் திளைத்திருப்பதுண்டு. ஆகவே, பெருமழை பொழிந்த சமயத்தும், அவ்விசையைக் கேட்டால் பசுக்கள் அமைதிபெறும் என எண்ணங்கொண்டு, குழலை ஊதி அவற்றை அமைதியடையச் செய்கிறான். அவன் பெருங்கருணையாளன்!

“காளிந்தி எனும் பெயர்கொண்ட யமுனை ஆற்றின் கரையில் மாடுகளை மேய்த்தபடி அவற்றின் பின்னே நடந்து சென்றவன் அவன். இத்தகைய பெருமை வாய்ந்த கண்ணனின் மருமகனே இவன், நமது சிறுமுருகன்,” எனக்கூறிப் பெண்டிர் பெருமையாகத் தாலாட்டுவதாகப் பாடியுள்ளார்.
இவ்வாறெல்லாம் முருகப்பெருமானின் குலப்பெருமையை விளம்பியவர், அடுத்து அவனுறையும் திருச்செந்தூரின் பெருமையையும் அழகுற, அதன் இயற்கைநலன்களை விவரித்துப் பரவுகிறார். அடியார்களைப் பரவசப்படுத்துகிறார்.

2
“மொட்டுக்கள் கட்டவிழும் மலர்ச்செடிகளும் பசுங்கொடிகளும் நெருங்கியுள்ள தாமரை மலர்த்தடாகங்கள் நிறைந்துள்ளது அவ்வூர். இளம் எருமைகள் தங்கள் கன்றுகளை நினைத்தமாத்திரத்தில் தாயன்பால் தமது மடியினின்று பாலைப்பொழிகின்றன. அதனால் அத்தாமரைத்தடாகம் முழுதும் பால் நிறைந்துள்ளது. அதனைக்கண்ணுற்ற பெட்டை அன்னப்பறவை (பேட்டெகினம்) நீரையும் பாலையும் பிரித்து பாலைப்பருகி மகிழ்கின்றதாம். அத்தகைய இயற்கைவளம் கொழித்து விளங்குவது திருச்செந்தூர். அவ்வூரின்கண் குடிகொண்ட செல்வனே தாலோ தாலேலோ! தெய்வயானையை மணம்புரிந்து கொண்ட சிறுவா தாலோ தாலேலோ!” எனப்பாடி மகிழ்வதாக இப்பாடல் அமைந்துள்ளது.

நுட்பமாக நோக்கின் ஒரு கருத்து நமக்குச் சிறிது வியப்பையும் குழப்பத்தையும் தரும். தாலாட்டுப் பாடுவதென்றால் முருகன் தொட்டிலில் கண்வளரும் சின்னஞ்சிறு குழந்தையாகத்தானே இருக்க வேண்டும். அந்தச் சின்னஞ்சிறு குழந்தை வளர்ந்து பெரியவனான பின்பல்லவோ மணம்புரிந்து கொள்ள வேண்டும்? அவனை இப்போதே தெய்வயானையை மணந்த முருகனே தாலோ எனக்கூறுவது ஏன்? இதுவே பிள்ளைத்தமிழின் சிறப்பாகும். அழகிய கவிதைநயம் வாய்ந்த, இலக்கணம் ஒப்புக்கொண்ட முரண்பாடு!

‘குழவி மருங்கினும் கிழவதாகும்’ என்பார் தொல்காப்பியர். சிறப்பான பெரியோர்கள் மீதே பிள்ளைத்தமிழ் பாடப்படும். அப்போது அவர்களை மானிடக்குழந்தையாகக் கருதியே பாடவேண்டும் என்பது நியதி! உண்மையாலுமே சிறுபிள்ளைகள் மீது பிள்ளைத்தமிழ் இயற்றப்படுவதில்லை! சாமானிய மக்கள்மீதும் பிள்ளைத்தமிழ் பாடப்படுவதில்லை!

3
தெய்வங்களையும், மன்னர்களையும், சான்றோரையும், அவர்களைப் பிள்ளையாகக்கொண்டு மட்டுமே பாடுவதனால், அப்பாட்டுடைத்தலைவனின்/ தலைவியின் இளமைப்பருவத்து, வளர்ந்த பருவத்து நிகழ்ச்சிகளையும், வீரதீரப் பிரதாபங்களையும், அவர்தம் சார்பான தொன்மங்களையும் கவிதை நயத்துக்காகவும், நூலின் சிறப்புக்காகவும் அழகுற எடுத்தோம்புவது ஒரு வழக்கம்; புலவர் தனது நூலைச் சிறப்புற அமைக்க எடுத்துக்கொள்ளும் உரிமை/உத்தி எனலாமா? அதுவே தனித்தன்மை வாய்ந்த பிள்ளைத்தமிழ்ச் சிற்றிலக்கியம்! தமிழ்மொழிக்கு ஒரு அழகான சிறப்பானஅணிகலன்!
பாடல் இதோ!

பாம்பால் உததி தனைக்கடைந்து
படருங் கொடுங்கார் சொரிமழைக்குப்
பரிய வரையைக் குடைகவித்துப்
பசுக்கள் வெருவிப் பதறாமற்

காம்பால் இசையின் தொனியழைத்துக்
கதறுந் தமரக் காளிந்திக்
கரையில் நிரைப்பின் னேநடந்த
கண்ணன் மருகா முகையுடைக்கும்

பூம்பா சடைப்பங் கயத்தடத்திற்
புனிற்றுக் கவரி முலைநெரித்துப்
பொழியும் அமுதந் தனைக்கண்டு
புனலைப் பிரித்துப் பேட்டெகினந்

தீம்பால் பருகுந் திருச்செந்தூர்ச்
செல்வா தாலோ தாலேலோ
தெய்வக் களிற்றை மணம்புணர்ந்த
சிறுவா தாலோ தாலேலோ.

(திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்- பகழிக்கூத்தர்- தாலப்பருவம்)

**********

சேடியரும், செவிலியரும், தாயரும் குழந்தை முருகனைத் தாலாட்டிச் சீராட்டி மகிழ்கின்றனர்.

1
“உனது மரகத வடிவம் (பச்சை நிறம்) சூரியனின் சிவந்த கதிர்கள் பட்டு அழகாக வாடித்துவண்டு போய்விடாதோ ஐயா?” என்கிறாள் ஒருத்தி.

அதாவது வெயில்பட்டுக் குழந்தை வாடிக்களைத்து விட்டதாம்; அதுவும் அம்முருகனுக்கு ஒரு தனி அழகாகத் தெரிகின்றது:

இதனை இன்னொருவிதமாக, பச்சை மயிலின்மீது ஊர்ந்து வரும் முருகப்பெருமான் வெயிலினால் வாடிக்காண்கிறான் எனக்கூறுவதாகவும் கொள்ளலாம்.

“மதிபோன்ற உனது அழகான முகம் சிறு (வியர்வைத்)துளிகள் அரும்பிடுமாறு மிகுதியாக வியர்த்துவிடாதோ?” எனக்கொஞ்சுகிறாள் இன்னொருத்தி.

“மலர்கள் போன்ற கைகளால் (குழந்தையாகிய) உன்னை அணைத்து இன்பம் எய்தும் அழகான பெண்டிர் உன்னைக்காணாமல் சென்றுவிடுவார்களோ? சென்றுவிடத்தான் அவர்கள் மனம் கேட்குமோ?” என வியக்கிறாள் செவிலித்தாய்.

“பொன்மணிகள் கொஞ்சும் குண்டலம், அரைநாண் ஆகியவற்றினை அணிந்து நீ விளையாடச் சென்றால், உன் அழகான மழலைவடிவைக்கண்டு தாயன்பு பொங்கிட, கச்சணிந்த விம்மிய முலைகளிலிருந்து பொங்கிச்சுரக்கும் பாலை உனக்குத்தர தாய்மார்கள் உன்னைத்தேடி ஓடி வரமாட்டார்களோ?”

“புரவலர் ( கொடையாளிகள்) அனைவரும் உனது விரிந்த மலர்போன்ற திருவடிகளைத் தொழுவார்கள் (ஏனெனில் புரவலர்க்கெல்லாம் புரவலன் நீதான்). போது- மலர்; இங்கு முருகனின் திருவடிகளைக்குறிப்பிடும். மெய்ஞ்ஞானமுடையவனே! (போதா) சரவணப்பொய்கையில் வளர்கின்ற தமிழ்க்கடவுளாகிய முருகனே! தாலோ தாலேலோ! நான்குவேதங்களும் போற்றுபவனே! திருச்செந்தூரை உறைவிடமாய்க் கொண்டவனே! தாலோ தாலேலோ!” எனத்தாய்மார் (ஆறு கார்த்திகைப்பெண்டிர் எனக் கொள்ளலாமா?) கொஞ்சி மகிழ்வதாக ஒரு தாலப்பருவப்பாடல்.

மரகத வடிவம் செங்கதிர் வெயிலால்
வாகாய் வாடாதோ
மதிமுக முழுதுந் தண்துளி தரவே
வார்வேர் சோராதோ

கரமலர் அணைதந் தின்புறு மடவார்
காணா தேபோமோ
கனமணி குலவுங் குண்டலம் அரைஞா
ணோடே போனால்வார்

பொருமிய முலையுந் தந்திட வுடனே
தாய்மார் தேடாரோ
புரவலர் எவருங் கண்டடி தொழுவார்
போதாய் போதாநீள்

சரவண மருவுந் தண்டமிழ் முருகா
தாலோ தாலேலோ
சதுமறை பரவுஞ் செந்திலை யுடையாய்
தாலோ தாலேலோ.

(திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்- பகழிக்கூத்தர்- தாலப்பருவம்)

இப்பாடலைப்பற்றிய இன்னொரு இனிமையான செய்தி என்னவென்றால் நமது தமிழ்நாட்டின் இசையரசி திருமதி எம். எஸ். சுப்புலட்சுமி அவர்கள் பத்து வயதுச் சிறுமியாக இருந்தபோது பாடி ஒலிப்பதிவு செய்யப்பட்ட அவரது முதற்பாடல் இதுவாகும். இதன் ஒலி-ஒளிப்பதிவு You Tube-ல் காணக்கிடைக்கும். கண்டு ரசித்து கேட்டு மகிழுங்கள். அழகான தெளிவான உச்சரிப்பு. குழந்தையே ஆயினும் சுருதிசுத்தமாகப் பாடிய பாடல்.

இன்னும் தொடர்ந்து பிள்ளைத்தமிழ் இலக்கியத்தைப் படித்து மகிழ்வோம்.

மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
{முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
தமிழ்த்துறைத் தலைவர்.}

*************

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *