க. பாலசுப்பிரமணியன்

கற்றலும் தோப்புக்காரணமும்

education-1

மூளையின் வலது பகுதியும்  இடது பகுதியும் ஒருங்கிணைந்து செயல்படுவது  உடலுக்கும் மூளைக்கும் இன்றியமையாதது என்பது வல்லுநர்கள் கருத்து. இந்த இடது பகுதி உடலின் வலது பக்கத்து உறுப்புகளையும் வலது பகுதி உடலின் இடது பக்கத்து உறுப்புகளையும் கட்டுப்படுத்துவதாகவும் ஒருங்கிணைப்பதாகவும் கருதப்படுகிறது. ஆகவே உடற்பயிற்சியின் போது வலது மற்றும் இடது உடல்பாகங்களை அசைக்கும்பொழுதும் அவைகளை வலுப்படுத்தும் பொழுதும் மூளையின் இரு பகுதிகளும் வலுப்பெறுவதாகவும் மற்றும் ஒருங்கிணைத்து செயல்படுவதாகவும் மருத்துவக் கருத்து நிலவுகின்றது. இது பள்ளிகளில் உடற்பயிற்சிக்கும் மூளையின் வளர்ச்சிக்கும் உள்ள தொடர்புகளை அறிவதற்கும் மேன்மைப்படுத்துவதற்கும் தேவையானதாக அறியப்பட்டுள்ளது.

ஒரு குழந்தையின் வளர்ச்சியில் தவழும் பருவம் முக்கிய காரணமாக கருதப்படுவதும் இதனால் தான். குழந்தை தவழும் பொழுது அந்தக் குழந்தையின் உடலின் வலப்பக்க அசைவுகள் மூளையின் இடப்பக்கத்தை வலுப்படுத்துவதாகவும் இடப்பக்க அசைவுகள் வலப்பக்கத்து மூளையை வலுப்படுத்துவதாகவும் அமைவது மட்டுமின்றி இவைகளின் தொடர் அசைவு இரண்டு பக்கத்து மூளைசி செயல்களை ஒருங்கிணைத்து சிறப்படையச் செய்வதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

சிறிய வயதில் இந்தவளர்ச்சிக்குப் பாதகம் ஏற்படுமென்றால் அந்தக் குழந்தைகளின் ஒருங்கிணைந்த மூளைவளர்ச்சிக்கு சில உணர்வுப்பூர்வமான தாக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அறிஞர்கள் கருதுகின்றனர். ஆகவே, வளர்பிராயத்தில் குழந்தைகள் எந்த அளவுக்கு தவழ முடியுமோ அந்த அளவுக்கு அது நன்மை புரிவதாக சொல்லப்படுகின்றது. அது மட்டுமல்ல, நாம் வளர்ந்த பின்பும், வயதின் பரிமாணங்கள் எப்படி இருந்தாலும் தவழுதல் நமது மூளையின் வலிமைக்கு உகந்ததாக மட்டுமின்றி, அல்சமீர் (Alzhmier Disease )மற்றும் பார்க்கின்சன் (Parkinson disease ) ஆகியவற்றிலிருந்து நம்மைப் பாதுகாப்பதாகக் கருத்து நிலவுகின்றது.

அமெரிக்காவில் மூளையின் செயல்பாட்டை மேன்மைப் படுத்துவதற்காக நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சியில்  மிக வியக்கத்தக்க விளைவுகள் கண்டறியப்பட்டன. இந்த ஆராய்ச்சியின் படி “Super Brain  Yoga ” என்று சொல்லப்படும் ஒரு உடற்பயிற்சி மூளையின் வலிமையை 30 விழுக்காடு மேன்மைப் படுத்துவதாக அறியப்பட்டது

ஆராய்ச்சிகளின்படி இந்தப் பயிற்சியை சுமார் 10 மணித்துளிகள் செய்தபின் அந்த நபருடைய மூளையின் செயல்பாடுகளை MRI மூலமாக கணித்ததில் அவர்கள் மூளை சாதாரணமாக செயல்படுவதைவிட 30 விழுக்காடுகள் சிறப்பாகச் செயல்படுவதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்தப் பயிற்சியை பல பள்ளிகளிலும் தனிப்பட்ட பயிற்சி நிலையங்களிலும் துவங்கப்பட்டு மருத்துவர்களால் இதற்கான பரிந்துரையும் அளிக்கப்பட்டது. இதைப்பற்றிய தகவல்களை நாம் ஊடகங்களின்  மூலமாக விரிவாகத் தெரிந்து கொள்ளலாம்

இதில் வியப்பென்னவென்றால் இந்தப் பயிற்சி பல நூற்றாண்டுகளாக இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் “தோப்புக்கரணம்” என்ற பெயரில் செய்யப்பட்டுவந்தது. முன்காலத்தில் பள்ளிகளிலே ஆசிரியர்கள் தவறு செய்கின்ற மாணவர்களுக்குத் தண்டனையாகவும் மற்றும் திருக்கோவில்களில் அதை ஒரு வழக்கமாகவும் செய்து கொண்டிருந்ததுதான்! ஆனால், தற்போதைய சூழ்நிலையில் நமது பள்ளிகளில் அதைச் செயல்படுத்துவது தடை செய்யப்பட்ட ஒன்று.

இந்தத் தோப்புக்கரணம் செய்வதன் மூலம் மூளையின் செயல்பாட்டின் வேகமும் கூர்மையும் அதிகரிப்பது மட்டுமின்றி , கற்றலில் உள்ள கவனச்சிதைவு, குறைபட்ட சிந்திக்கும் திறன், மறதி போன்ற பலவற்றை சரி செய்ய முடியும் என்று தெரிவிக்கின்றனர். அது மட்டுமல்ல, மூளை நரம்பியல் வல்லுநர்கள் சில சாதாரண மூளை பாதிப்புகளால் அவதிப்படுவோருக்கும் இது சிறிதளவு வளர்ச்சிக்கு உதவுவதாகவும் கருதுகின்றனர்.

மற்றும் மனஅழுத்தத்தைக் குறைப்பதிலும் ADHD போன்ற சில கற்றல் சார்ந்த குறைகளின் தாக்கத்தைக் குறைப்பதற்கும் இது உதவுவதாகக் கூறப்பட்டுள்ளது. இது சிறு வயதில் மட்டும் செய்யவேண்டிய ஒரு பயிற்சியல்ல , இதை எந்த வயதிலும் செய்யலாம் என்றும் அதற்கான பலன்கள் கிடைப்பதாகவும் அறியப்பட்டுள்ளது.

செய்துபார்க்கலாமே ?

தொடரும் ..

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.