கவிஞர் சிற்பியின் இயற்கை சார்ந்த  தத்துவச் சிந்தனைகள்

0

-வி.செந்தமிழ்ச்செல்வி

முன்னுரை 

  வரலாற்றுக்கு முற்பட்ட ஆதிமனிதன் வரலாற்றுக்காலம் முழுவதும் தன்னை மாற்றி அமைத்ததன் காரணமாக இன்று நாகரிக மனிதனாக மாறியுள்ளான். இயற்கையோடும் மனிதர்களோடும் தொடர்பு கொண்டிருந்த மனிதன் தானும் பிற உயிர்களும் எப்படித் தோன்றின? உலகம் எப்படித் தோன்றியது? அண்டம் எப்படித் தோன்றியது? இவை எப்படி இயங்குகின்றன? யார் இவற்றைத் தோற்றுவித்தது? தோற்றுவித்தவரின் நோக்கமென்ன? போன்ற கேள்விகளைத் தனக்குள் எழுப்பிக் கொண்டான். தன் வாழ்வின் மெய்ப்பொருள் என்ன என்பது தான் மனிதனின் கேள்வியாகும்.

                  மனிதன் தன் வாழ்விற்கான அர்த்தத்தைத் தேடும் முறையில்தான் தன்னோடு தொடர்புடைய அனைத்தையும் சிந்திக்க ஆரம்பித்தான். மேலும் இறைவன், ஆன்மா, மேலுலகம், பாவம், புண்ணியம், நன்மை, தீமை, வினை, விதி, முற்பிறப்பு, பிற்பிறப்பு, அறம், அழகு, தற்காலிகம், நிரந்தரம், நடப்பியல், கற்பனை போன்ற அனைத்துக் கருதுகோள்களையும் உருவாக்கினான். மனிதனின் தேடல்கள் தொடர்ந்தன. இவ்வகைத் தேடல்கள் பல திசைகளிலும் விரிந்தன. இவ்வகைத் தேடல்கள் அனைத்தையும் உள்ளடக்கிய சிந்தனை மற்றும் உணர்வுத் தொகுப்பு தான் ‘மெய்யியல்’என்று வழங்கப்படுகின்றது. இந்த மெய்யியல் என்பதனுள் காலம், வரலாறு, இயற்கை, சமூகம், பொருளியல், அறிவியல், கலை, இலக்கியம், பண்பாடு என்று பல கூறுகள் அடங்கியுள்ளன. இவ்வகையில் இயற்கை சார்ந்த தத்துவங்கள் சங்ககாலம் முதலே இருந்து வருகின்றன.

தத்துவம் – விளக்கம்

        ’தத்துவம்’ என்ற சொல் நெடுங்காலமாகவே ஆன்மிகவாதிகளால் பிரமத்தைச் சுட்டப் பயன்படுத்தப்பட்டு வந்தள்ளது. சாமவோ சாந்தோக்கிய உபநிடதத்தில் வேதாந்த மகாவாக்கியமான தத்துவம்சி (தத் – இறைவன், துவம் – நீ, அசி – ஆகிறாய்) இறைவன் ஒருவன் உள்ளான் என்பதை வலியுறுத்துகிறது.”1  மாணிக்கவாசகரும், “தாயிற் சிறந்த தயாவான தத்துவனே” என்று பிரமத்தைச் சுட்டத் தத்துவம் என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார்.”2

         பழங்காலத்தில் ‘மெய்’என்னும் சொல், உட்பொருளை உணர்த்திற்று. உட்பொருள் என்பது உண்மைப்பொருள் என்று பொருள் தருகிறது. இந்த அடிப்படையில் தத்துவம் என்ற வடசொல்லை விடுத்துத் தமிழ்ச் சொல்லான  ‘மெய்ப்பொருளியல்’என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இதனை ‘மெய்யியல்’ என்றும் வழங்குவர்.

           மேலும்  ‘Philisiphy’ என்னும் ஆங்கிலச் சொல்  ‘பிலாஸ்’, ‘சோபியா’என்னும் இரு கிரேக்கச் சொற்களாலானது. இதன்  தமிழாக்கம் ‘பேரறிவுக்காதல்’ என்பதாகும்.  ‘ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள அளப்பரும் கரணங்கள் நான்கும் சிந்தையே ஆக’ என்ற பெரிய புராணச் சொற்றொடரில் பேரறிவு என்னும் சொல் ஏறத்தாழ இதே பொருளைத் தாங்கி வந்துள்ளது.”3

‘Phylosophy’ என்னும் சொல் தத்துவம் என்றும் மொழியாக்கம் செய்யப்படுகிறது. தத்துவம் என்பது ‘தத்வ’ என்ற வடசொல்லின் தற்பவம் ஆகும். ‘நீயே அது’என்பது  இச்சொல்லின் உண்மைப் பொருளாகும்.

தத்துவத்தின் நோக்கம்

                ஒட்டு மொத்தமான மனித விடுதலை என்பதே மெய்யியலின் நோக்கம் ஆகும். அறிவியல் மற்றும் அரசியல் முதலியவற்றைத் தனித்தனியாகச் செயல்படுத்துவதில் மனித விடுதலை என்ற நோக்கம் நிறைவேறுவதில்லை. ஆகவே, அனைத்தின் வழியாகவும்  மனிதனைப் புரிந்து கொள்ளுதல், பிறகு சூழலை மாற்றுதல் என்று செயல்பட வேண்டியிருக்கிறது.

                மனிதன் தன்னைப்புரிந்து கொள்வதென்பது சமூக நிலவரங்கள் பொருளியல், சமூக அமைப்புக்கள் முதலியவற்றைப் புரிந்து கொள்வதன் மூலமே சாத்தியமாகும். இவ்வாறு அனைத்துக் கூறுகளிலும் மனிதன் தன்னைப் புரிந்து கொள்வதன் மூலமே விடுதலைக்கு அவனைத் தூண்ட முடியும். இதுவே தத்துவத்தின் கடமையாகும். எத்தகைய சூழலில் மனிதவாழ்வின் அர்த்தம் அழிந்து போகிறது என்பதையும், எத்தகைய செயல்பாட்டின் மூலம் மனிதவாழ்வு அர்த்தம் பெறும் என்பதையும் ஆராய்வதே  தத்துவமாகும்.

கவிஞர் சிற்பியின் கவிதைகளில்  தத்துவம்

                இலக்கியப் படைப்பாக்கத்தில் தத்துவம் administration_director_profile_photo-to-be-replacedகுறிப்பிடத்தக்க இடம் வகித்து வருகின்றது. கவிதை, நாவல், சிறுகதை முதலிய படைப்பு இலக்கியங்களில் தத்துவத்தைப் படைப்பாளர்கள் கலந்து எழுதிவருகின்றனர். “ஒரு கலைப்படைப்பில் தத்துவம் அளவோடு சேர்கிறபோது அப்படைப்பு கலைத்தன்மை கொண்ட சிறந்த படைப்பாக அமைகின்றது. தத்துவம் மட்டும் தூக்கலாக அமைகிறபோது அப்படைப்பு, தத்துவ விசாரமாக அமைந்துவிடுகிறது.

படைப்பிலக்கியத்திற்கும் தத்துவத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு. இரண்டுமே மனிதனைப் பற்றிப் பேசுபவை. மனித விதியை, மனிதனின் இருப்பைத் துருவி அறிவதையே தமது தேடலின் மையமாகக் கொண்டவை”4 என்று தி.சு.  நடராஜன் கூறுகிறார். இந்தியத் தத்துவ மரபில் ஆழ்ந்த புலமை இருந்தால்தான், தத்துவம் சார்ந்த படைப்புகளை உருவாக்க இயலும். அவ்வகையில் கவிஞர் சிற்பியின்  தத்துவச் சிந்தனைகள் இயற்கை சார்ந்த நிலையில் இங்கு ஆராயப்படுகின்றன.

இயற்கை சார்ந்த தத்துவச்சிந்தனைகள் 

     ஒவ்வொரு கவிஞனும் இயற்கையை நேசிக்கிறான். அதன் அழகில் மனம் பறிகொடுத்துப் பரவசப்படுகிறான். இயற்கையின் அனைத்துக் கூறுகளையும் மிகுந்த ஈடுபாட்டுடன் உள்வாங்கிக் கொள்கிறான். இயற்கையோடு  மனிதன் கொண்ட காதல் மனித சமுதாயத்தின் பக்கமாகத் திரும்பும்போது  கவிஞனின் மனஇயக்கம் தீவிரமடைகிறது. அப்போது மனித வாழ்க்கையை இயற்கையின் தளத்தில் வைத்துப் பார்க்கிறான். மனிதனின் வரலாற்றில்  பின்நோக்கி வெகுதொலைவு  செல்கிறான். வரலாற்றினூடே மனித சமுதாயம் வளர்ந்து வந்த முறைகளும், நிகழ்காலத்தில் அதன் தன்மைகளும் இணைவதைக் கண்டு எதிர்காலம் நோக்கித் தனது பார்வையை விரிக்கிறான். அந்தப்பார்வை, மனிதகுலம் ஒரு முழுமையை நோக்கிப்பயணம் செய்து கொண்டிருப்பதைப் புலப்படுத்துகிறது.

இயற்கையின் இறைமைத் தன்மை

                இயற்கை மனிதனுக்குப் பல உண்மைகளைச் சொல்லித் தருகின்றது என்று எடுத்துரைத்த கவிஞர், இயற்கையில் நிறைந்திருக்கும் இறைமைத் தன்மையையும் எடுத்துரைக்கின்றார். இயற்கையில் இறைமையைக் காணும் பண்பு திருமுருகாற்றுப்படையில் இடம் பெற்றுள்ளது. பாரதியின் வசன கவிதையிலும் இயற்கையின் மூலம் இறைமையைக் கூறுகிறார் இவர்.

                “பக்கத்து மலைகள்
     கண்ணுக்குத் தெரியாதபடி
     மூகில்கள் மூடி மறைந்திருந்தன
     கண்ணன் தனக்கே சொந்தமென்ற
     நப்பின்னைப் பிராட்டி
     கட்டித் தழுவிக் கிடந்தாற்போல்”5

 என்று ‘இயற்கையின் இறைத்தன்மை’யை   எடுத்துரைக்கின்றார்.

மேலும்,

                ’ஒம்’என்று
                யாழ்ப்பாண மொழியில்
                ஓதிப்போனது
                மெல்லிளங்காற்று”6

என்று காற்று எழுப்பும் ஒசையை ‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்துடன் இணைத்துப் பாடுகின்றார் கவிஞர். மேலும் கூறுகையில்,

‘ஓம் ஓம்’என்பது போல்
                 ஓலமிடக் கேட்டான்”7

 என்று காற்று எழுப்பும் ஒசைகளுக்கு இறைமைத் தன்மை உண்டென்று பாடுகின்றார் கவிஞர் சிற்பி.

இயற்கை கற்றுத்தரும் தத்துவங்கள்

     இயற்கையழகு, மனிதனின் வாழ்க்கைக்குத் தேவையான கருத்தை வழங்குகின்றது. இவ்வகையில் கவிஞர் சிற்பி,

                ”காடு இப்போதெல்லாம்
                ஞானி கற்றுத் தரும் பள்ளிக்
                கூடமாகிவிட்டது
                 பூச்சிகள் சீடனுக்குப்
                 புனைகதை கூறின
                ஓடுவதால் பெயர் பெற்ற ஓடைகள்
                குதித்துக் குதூகலிக்கச்
                சொல்லிக் கொடுத்தன”8

 என்று இயற்கை மனிதனுக்கு உணர்த்தும், கருத்துக்களை எடுத்துரைக்கின்றார்.
மேலும் இவர்,

                ”ஞானியின் கண்காட்டக் காட்டக்
                 காடு சீடனுக்கு
                ஆயிரம் கலைகள் கற்றுக் கொடுத்தது
                 ஞானப்பறவைகள்
                 சீடனுக்குள்
                 கூடுகட்டத் தொடங்கின”9

என்று கூறுகின்றார். மானை அடித்துச் சென்ற புலியின் காட்சியைக் காட்டி ‘வலுவுள்ளது தான் பிழைக்கும்’ என்ற கருத்தைச் சொல்லி இயற்கை நியதியை வெளிப்படுத்துகிறார்.

இயற்கையும் மனித உறவும் 

                இயற்கைப் புனைவில் மனித உறவுகளை இணைத்துப் பார்க்கும் போக்கை இவரிடம் காணமுடிகின்றது.

                ”ஞானி வானத்தைக் காட்டினார்
                  நிலாவைப் பார்த்தாயா
                 அம்மா முகம் போல் குளிர்ச்சியாய்…
                 சூரியனைப் பார்த்தால்
                அப்பா மாதிரி
                கொஞ்சம் இதமாயச் சூடாய்…
                 நட்சத்திரங்களைப் பார்த்தால்
                 சுற்றத்தார் போல”10        

     மேற்கண்ட கவிதையில் நிலவும், சூரியனும், நட்சத்திரங்களும், நமது உறவுகள் என்கிறார். இதிலிருந்து இயற்கைக்கும் மனித உறவுகளுக்கும் உள்ள ஒற்றுமைத் தன்மை நன்கு புலப்படுகின்றது.

கவிஞர் சிற்பியின் பிரபஞ்சப்பார்வை

                பிரபஞ்சப் பார்வையின் ஒரு முக்கியமான அங்கம் இயற்கையில் கரைதலாகும் என்கிறார். பிரபஞ்ச வெளியின் பொதுமையைத் தரிசிக்க உதவும் கருவி இயற்கையே.       அவ்வியற்கைப் பேணலும் சூழலிய நுண்ணுணர்வும் தான் பிரபஞ்சப் பார்வையின் பரிமாணங்களில் ஒன்று என்ற கவிஞர் சிற்பியின் எண்ணத்தைப் பின்வரும் கவிதை வரிகளின் மூலம் அறியலாம்.

அவர்,

   “தேசங்கள் தோறும்
                ஞானங்கள் தந்தவை மரங்கள்
                மரங்கள் அழிந்தால்
                மானுடம் அழியும்
                உணவும் உடையும்
                உறையுளும் அழியும்
                மரங்களை முன்னவர் போலப்
                பூசியா விட்டாலும்
                நேசி… மரங்களை நேசி”11 

என்று கூறி, இயற்கையின் முக்கியத்துவத்தை விளக்குகிறார். ‘மரங்களை முன்னவர் போலப் பூசியாவிட்டாலும் நேசி… மரங்களை நேசி’ என்ற வரிகள் தற்போதைய மனிதர்கள் (இயற்கையைக் காக்கத் தவறும் மனிதர்கள்) மீது இவருக்குள்ள கோபத்தைக் காட்டுகிறது.

அறிவு நுட்பமும் உணர்ச்சியும்

                ‘பூஜ்யங்களின் சங்கிலி’ – உணர்ச்சியும் அறிவுநுட்பமும் கொண்ட கவிதை நூலாக அமைந்துள்ளது. ஞானியின் உரையாடல்கள் உணர்ச்சிபூர்வமாகவும் அறிவு நுட்பத்தை விளக்கும் வகையிலும் அமைந்துள்ளன. இதனை,

                ”முகிலுக்கு எது மூலம்?
                 கடலெனில்
                கடலுக்கு எது மூலம்?
                 நதியெனில்
                 நதிக்கு எது மூலம்?
என அடுக்கினார் ஞானி.
                 நதி மூலம் போலத்தான்
                 இந்த ரிஷி மூலம்”12

என்று தன் ரிஷி மூலம் பற்றிக் கூறுகின்றார். மேலும்,

  “இந்த ரிஷிமூலம் போலத்தான்
                அந்த ஆதிமூலம்
                கெக்கலித்தார் ஞானி
                திக்குகள் தலைகுனிந்து கேட்டன”13 

 என்று கூறுவது கவிதையை மீறிட்டு நிற்கும் உணர்ச்சி, அறிவு நுட்பத்தையும், தர்க்கத்தையும் அவரிடம் ஏற்படுத்துவதைக் காணமுடிகின்றது.

இயற்கையோடு கலந்த வாழ்வு

                ‘இயற்கையில் அமைதியைத் தேடுதல்’ என்னும் உட்கருத்தை ‘பூஜ்யங்களின் சங்கிலி’ அடி நாதமாகக் கொண்டிருந்தாலும், இந்தியத் தத்துவ ஞானம் பற்றிய சில சிந்தனைகளை முன் வைக்கின்றார் கவிஞர் சிற்பி. இதனை விளக்கும் வகையில்,

                “களங்கமற்ற இயற்கையோடு
                கொஞ்சநேரம்
                இயற்கையில் கரைந்து கலந்து
                கொஞ்சநேரம்”14

என்ற இக்கவிதை அமைகின்றது. மனிதன் இயற்கையோடு கலந்து வாழ வேண்டும் என்ற தத்துவத்தை இதன் மூலம் எடுத்துரைக்கின்றார். மேலும் மரத்தினடியில் உருவான தத்துவச் சிந்தனைகளையும் கூறுகின்றார். மேலும் ஓடைகள், மழை, வெயில், பனி, கொடிகள், பூக்கள், காய்கள், கனிகள் முதலியனவற்றின் மூலம் இயற்கை கூறும் தத்துவங்களையும் மனிதனுக்கு உணர்த்துகின்றார்.

நிலையாமைத் தத்துவம்

                ஒரு காட்டு மயிலின் சடலத்தின் மூலம் நிலையாமைத் தத்துவத்தைப் பின்வரும் கவிதையில் எடுத்துரைக்கின்றார்.

                “அழகுக்கொரு முடிவா?
                இனிமைக்கொரு அழிவா?
                குருவே இது சரியா?
                …………………………
                கலக்கம் உன்னை
                அலைக்கழிக்கிறது மகனே
                மூலத்தை அறிந்தால்
                சோகத்தை ஒதுக்கலாம்”15 

     பிறக்கின்ற அனைத்து உயிர்களுக்கும் இறப்பு என்பது நிச்சயிக்கப்பட்ட விதியாகும் என்பதை இக்கவிதையில் உணர்த்துகிறார். மேலும் சருகு உதிர்வது போல் ஞானியின் மேனி உதிர்ந்தது என்று ஞானியின் ஆன்ம விடுதலையையும் பின்வரும் கவிதையில் குறிப்பிடுகின்றார்.

                “ஆலமரம்
                இலைநாக்குகளால்
                பேசிக் கொண்டிருந்தது”16

என்று கவிதையைத் தொடங்கி,

குருதேவரின் மேனி
                சருகு உதிர்வது போலச்
                சாய்ந்து கொண்டிருந்தது”17

என்று கவிதையை முடிக்கின்றார். பசுமையான இலை, உலர்ந்த இலை என்ற இருநிலை எதிர்வு மூலம் நிலையாமைத் தத்துவத்தைக் குறிப்பாக உணர்த்துகின்றார். இந்தியத் தத்துவ மரபில் காலங்காலமாகச் சொல்லப்பட்டு வரும்  ‘நிலையாமைத் தத்துவத்தை’காலத்தத்துவத்தோடு சேர்த்துப் ‘பூஜ்யங்களின் சங்கிலி’யில் கவிஞர் சிற்பி எடுத்துரைக்கின்றார்.

முடிவுரை

                இயற்கை மனிதனுக்குப் பல உண்மைகளைச் சொல்லித் தருகின்றது என்று கூறி இயற்கையில் நிறைந்திருக்கும் இறைத்தன்மையை எடுத்துரைக்கின்றார். இயற்கைக்கும், மனிதனுக்கும் இடையிலான புனிதமான உறவுகளை இணைத்து காட்டும் இவரது கவிதைகள் மனிதன் இயற்கையோடு கலந்த வாழ்வை வாழவேண்டும் என்ற சிந்தனையை எடுத்துக் காட்டுகின்றது.

சான்றெண்விளக்கம்:

  1. தமிழ்ப் புதுக்கவிதைகளும் மெய்யியற்சிந்தனைகளும் ப.23
  2. சிவபுராணம் ப.5
  3. இந்தியத் தத்துவஞானம் ப.8
  4. கவிதையிலிருந்து மெய்யியலுக்கு., ப.47
  5. சிற்பியின் கவிதைத் தொகுதி., ப.1053
  6. மேலது., ப.1060
  7. மேலது., ப.1060
  8. மேலது., ப.1048
  9. மேலது., ப.1049
  10. மேலது., ப.1063 – 1064
  11. மேலது., ப.1039
  12. மேலது., ப.1061
  13. மேலது., ப.1062
  14. மேலது., ப.1034
  15. மேலது., ப.1050 – 1051
  16. மேலது., ப.1021
  17. மேலது., ப.1101

***

-வி.செந்தமிழ்ச்செல்வி,
முனைவர் பட்ட ஆய்வாளர்,
தமிழ்த்துறை,
பாரதியார் பல்கலைக்கழகம்.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.