-மேகலா இராமமூர்த்தி

 

dancing-doll

தலையாட்டி பொம்மையைக் கலைநயத்தோடு படம்பிடித்திருப்பவர் திருமிகு. ஷாம்னி. அதனை இவ்வாரப்போட்டிக்குத் தெரிவுசெய்து தந்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றியை நவில்கின்றேன்.

அரங்கில் பெண்கள் தலையாட்டலாம் அது கலை! வாழ்வில் அது கூடாது! தம்மிடம் வாலாட்டும் வல்லூறுகளை வெட்டிவீழ்த்தும் ஆற்றல் வனிதையர்க்கு வேண்டும் என்று என் காதோரம் கிசுகிசுத்துச் செல்கின்றது அபயமுத்திரை காட்டும் இந்தத் தலையாட்டி பொம்மை!

பொம்மையை வைத்து நம் கவிஞர் குழாம் தீட்டியிருக்கும் கவிஓவியங்கள் அழைக்கின்றன நம்மை! அவற்றைக் கண்டு ரசிப்போம் இனி!

***

”அளவான ஆட்டம் வாழ்வுக்கு வளம் சேர்ப்பது; அதுவே அளவை மீஞ்சினால் வாழ்வையே ஆட்டங்காண வைப்பது!” எனும் அரிய தத்துவத்தை எளிமையாய் விளக்குகின்றாள் இந்தப் பாவை” என்று பூரிக்கின்றார் திருமிகு. ராதா விஸ்வநாதன்.

…அசைவுகளும் ஆட்டமும்
அடங்கியதே இவ் வாழ்க்கை

அசைவுகளும் ஆட்டமும் இல்லாவிடில்
அனைத்தும் ஆவியில்லா ஜடமாகுமே

இதையே உணர்த்துகிறானோ
இறைவனும் ஆடலரசனாக‌

பார்க்கும் நமக்கு இந்த‌
பாவையின் ஆட்டமும் பள்ளிக்கூடமே

கற்க பாடமும் பல உண்டு இவளிடத்தில்
கவனித்துப் பார்க்கும் நமக்கு

இருக்கிறது இவளுக்கு என்றும்
சுதந்திரம் சுழன்று சுற்றி ஆட–ஆனால்

வஞ்சி இவளின் ஆட்டம் என்றும்
வரம்பும் எல்லையும் மீறுவதில்லை

ஆடும் ஆட்டத்திற்கும் எங்கும்
இடம், பொருள், ஏவலுண்டாம்

எல்லை மீறா ஆட்டம் தருமாம்
என்றும் எல்லோருக்கும் இன்பம்

இதனை எடுத்து இயம்புகிறாள்
இந்தப் பாவை தன் தலை ஆட்டத்தில்

***

”கொடுமை செய்து சண்டையிடும் வீணரின் கொண்டை பிடித்தாட்டும் வீரம் பெண்டிருக்கு வேண்டும்” என்று பெண்ணுரிமை பேசுகின்றது திருமிகு. நாகினியின் இனிய கவிதை.

பிடித்து ஆட்டு… 

கொடுமை கண்டு துடித்தெழ
.. கொடுப்பினை இல்லையெனப் பெண்மகவு
கொலுவீற் றிருந்தால் உரிமை
…கொடுத்திடுவார் என்றுன தெண்ணத்தீ
கொடியைத் தகர்த்தெ றியுந்நல்
.. கொள்கைப் படிகளில் ஏறிநின்று
*கொழுத்தா டுசெய்திடும் ஈனர்கள்
.. கொண்டை பிடித்தாட்டு கண்ணே!

***

பகுத்தறிவைப் புதைத்துவிட்டு, சுயமரியாதையைத் தொலைத்துவிட்டு, கொள்கையற்ற அரசியல்வாதிகளுக்குத் தலையாட்டும் இளையோரைச் சாடுகின்றார் திருமிகு. மா. பத்ம பிரியா.

தலையாட்டிகள்

எதிர்கேள்வி கேளாத எதிர்காலமே!
நம்முள்ளே எத்தனை தலையாட்டிகள்
தலையின் பயனே தலையாட்டவா
தமையனே!
தன்மானமில்லா தள்ளாடும் தமிழனமே!
தலைமை கண்டு தலைகுனியும் தலைவனுக்கா
உன்தலை ஆட வேண்டும்
எத்தனை தலைமை வந்தாலும்
ஏன்னென்று கேளாது தலையாட்டும் தலைவனுக்கா
உன் தலை வீழ வேண்டும்
பகுத்தறிவில்லா பாமர தலையாட்டிகள்
பாவம் ஆட்டினால் பரவாயில்லை
பட்டதாரி கூட்டமும் சேர்ந்தா தலையாட்டும்
பதறும் நெஞ்சுள்ளே கதறும் தமிழ்மானம்
புரட்சியாளர் வந்து போன புண்ணிய பூமியிது
பொய் புரட்டு ஆதிக்கத்தை வேடிக்கை பார்க்கிறது
விழிப்புணர்வில்லா வாக்காளத் தலையாட்டிகளால்
ஆளும் வர்க்கத்தை ஆதரிக்கும்
அரசியல் தலையாட்டிகள் நம்முள்ளே
இலவசத்தில் மயங்கிய மக்களால்
இலஞ்சத்தில் மிதக்கும் இரக்கமில்லா தலையாட்டிகள்
தலைகுனிவு தமிழனுக்கா
தலைநிமிர்ந்து பாருங்கள்
தயவுகூர்ந்து தலையாட்டிகளே
தளிர்க்கும் பிஞ்சுகளை தலையாட்டிகளாய் மாற்றாதீர்

***

அமைதியாய் வாழவேண்டிய மனித வாழ்வில் தேவையற்ற ஆர்ப்பாட்டம் எதற்கு? அது கேட்டிற்கன்றோ வழிவகுக்கும்! என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

ஆடும் பொம்மை ஆட்டமென
அமைந்த உலக வாழ்வினிலே
ஓடும் இந்த மாந்தரெல்லாம்
ஒன்று மறியா தாடுகின்றார்,
கேடு செய்தும் ஏமாற்றியும்
குவித்த பொருளும் நிலைப்பதில்லை,
நாடு செயலில் நல்லதையே
நாளும் நலமாய் வாழ்ந்திடவே…!

***

”உலகமென்னும் நாடகமேடையில் நித்தம் ஒரு புத்தம்புது நாடகம்! அதிலொன்று அரசியல் பதவிகளுக்காக மனிதர்கள் தம் கண்ணியம் விற்று அதிகாரத்தில் உள்ள பெண்மணிகளிடம் ’பதவி’சாகத் தலைதாழ்ந்து நிற்பது!” என்று வருந்துகின்றார் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன்.

ஆட்டுவித்தால் யாரொருவர்
ஆட மாட்டார் உலகினில்
ஆட்சிப் பீடத்தைப் பிடிக்க
அள்ளி அள்ளி கொடுத்து
ஆடவைக்கும் வஞ்சிப் பெண்ணின்வரம்பு மீறல்
ஆட்டுவிப்பிற்கு ஆடுகின்றார்
அமைச்சர் யாவரும் பதவிஆசையில்
தன் மானத்தை அடகு வைத்து
தலயாட்டி பொம்மைகளாய் மாறுவது
தலைவிதியா ? இல்லை இறைவனின் சதியா ?
அக்கிரமங்களுக்கு தலையாட்டும்
பொம்மையாய் மானிடர் இருக்கும் வரை
தலை நிமிர்வு தமிழகத்திற்கும் அவர்தம்
எதிர்கால வாரிசுகளுக்கும் இல்லை ஒரு போதும்
வேதனையும் சோதனையும் தமிழக மக்களுக்கே!

***

படத்திலுள்ள தலையாட்டி பொம்மை, பெண்ணியம் முதல் அரசியல் கண்ணியம் வரைப் பலவற்றை யோசிக்கவைத்திருக்கின்றது நம் கவிஞர்களை! தம் சிந்தனை வீச்சைச் சிறப்பாய்ப் பாய்ச்சியிருக்கும் அவர்களுக்கு என் பாராட்டுக்கள்!

அடுத்து வரப்போவது இவ்வாரத்தின் சிறந்த கவிதை!

பெண்ணடிமை!

தலையாட்டிப் பொம்மைகளா
தாய்க் குலத்து
வாய்பேசா வனிதையர் ?
சாவி கொடுத்தால்
சலங்கை ஒலி
தாளமிடத்
தாவியாடும் பாவைகளா ?
பாரதிராஜா தேர்ந் தெடுக்கும்
திரை உலகத்
தேனிலவு வானிலவுத்
தேவதையரா?
தொப்புள் கொடி அறுந்ததும்
அப்பனுக்கு அடிமை!
தாலிக் கொடி ஏறியதும்
போலிப் புருசனுக்கு அடிமை!
வேலைக்குப் போன
ஊழியத்தில்
மேலதிகாரிக்கு அடிமை!
வாழ்க்கையில்
உனக்கில்லாத பட்டமா?
விதவை, மலடி,
உடன்கட்டை ஏறடி!
வரதட்சணை வர்த்தகி!
புகுந்த வீட்டில்
மாமியாருக்கு அடிமை!
ஆணைப் பெற்றவள் நீ!
பெண்ணைப் பெற்றவளும் நீ!
ஆயினும்
இல்லமும், நாடும் உனக்குப்
பொல்லாத சிறைதான் !
தலையாட்டம் நின்று
தலை நிமிர்ந்து
விதியை எதிர்க்கி றாயோ
அன்றுதான்
விடுதலை உனக்கு!

எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை எனும்போதும், எட்டும் உயரத்தில் அவர்களிடையே நிறையவே வேறுபாடுகள் உள. விடுதலை வேள்வி செய்து மண்ணடிமையை நாம் தீர்த்தபின்பும், பெண்ணடிமை நம்மிடையே முற்றாய்த் தீர்ந்ததா எனும் கேள்விக்கு ’இல்லை’ என்று நம்மால் விடையிறுக்க இயலவில்லை!

பெண்ணுக்கொரு நீதி ஆணுக்கொரு நீதி எனும் சமமற்ற சமுதாயமே இன்றுவரை நீடிக்கின்றது. தலையாட்டி பொம்மைகளாகவே இன்னமும் பெண்ணினம் வாழ்ந்துகொண்டிருந்தால் ’நிமிர்ந்த நன்னடையோடும், திமிர்ந்த ஞானச்செருக்கோடும்’ பாரதி கண்ட புதுமைப்பெண்ணாய் வாழ்வதற்கு அவர்களுக்கு வாய்ப்பில்லாமலே போய்விடும்! என்று மாதரை எச்சரிக்கும் திரு. ஜெயபாரதனின் கவிதை நெஞ்சின் ஆழம் சென்று தைக்கிறது!  இக்க’விதை’யை வீரியத்தோடு நட்டிருக்கும் திரு. ஜெயபாரதனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தெரிவுசெய்து பாராட்டுகின்றேன்.

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “படக்கவிதைப் போட்டி 91-இன் முடிவுகள்

  1. இவ்வாரப் படக்கதைக்குச் சிறந்த கவிஞராய் என்னைத் தேர்ந்தெடுத்த மேகலா இராமமூர்த்தி அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சி. ஜெயபாரதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *