படக்கவிதைப் போட்டி (92)
பவள சங்கரி
அன்பிற்கினிய நண்பர்களே!
வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?
பிரவீண் குமார் பழனிசாமி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (31.12.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுக்களும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.
வண்ணக் கனவுகள்
ஆயிரம் உனக்கு!
அத்தனையும் தொலைந்தது
யார் இதன் பொறுப்பு!
பெண் மகவு பிறந்ததும்
அழிப்பு!
தப்பிப் பிழைத்தால் அன்றாடம்
நீ பார்ப்பது அன்னை தந்தையின்
வெறுப்பு!
அன்றிலிருந்து இன்று வரை நீ
பார்த்ததெல்லாம் சமூகத்தின்
அலைக்கழிப்பு!
இருந்தும் பெண்ணே மனித
இனத்தை காத்திருப்பது உன்
சிறப்பு!
சிறுவயதில் பெற்றோரின் கனவுகளை
சுமந்தாய் !
திருமணம் ஆனவுடன் கணவனின்
கனவுகளைச் சுமந்தாய்!
பின்னொரு நாளினிலே பிள்ளைகளின் கனவுகளை
சேர்த்தே நீ சுமந்தாய்!
பெண்ணே நீ பொறுத்தது போதும்!
மற்றவர்கள் கனவுகளை சுமந்தது போதும்!
நன்று! நன்று!, காற்றில் இப்போது
விடுவதெல்லாம் மற்றவர்கள் கனவுகளா ?
மறந்து விட்ட உன் எண்ணக் கனவுகள் இனி வண்ணக் கணவுகள் ஆகட்டும்!
கனவுகள் நனவாக ஆண் குலம்
ஆதரவு காட்டட்டும்!
எதிர்ப்பவர்கள் எரிந்து சாம்பலாய் போகட்டும் !
சாம்பலில் உயிர்த்தெழும் பீனிக்ஸ்
பறவையென பெண்கள் புகழ்
நிலைக்கட்டும்!
ஊதிவிடு கவலைத் துகள்களை!
ஊக்கமுடன் எழுந்திரு
ஊகங்களால் எழுப்பும் சந்தேக
ஊனத்திலாழும் வஞ்சகரை
ஊதிவிடு துணிவுக்காற்றெனும்
ஊன்றுகோலால் விரட்டிவிடு!
கவலை கிழியும் தாள்தான்
காற்றாய் ஓடும் துகள்தான்
காலம் ஓட்டும் நகல்தான்
காவல் தன்னம்பிக்கை பகல்தான்
காயம் மாற்றும் அகல்தான்!
முழங்கால் குத்திட்டு
முட்டிமோதி அழுதால்
முதலுதவி யாவாரேது
முயற்சிவாய் கொண்டுதுயர்
முட்களை ஊதினால்
முடக்கும் கவலையேது!
.. நாகினி
காற்று பேசியது……
கண்ணில் தெரிவதில்லை
கையில் இருப்பதில்லை
ஊனில் இருப்பதனால்
ஊதி வெளியேற்றி
உன்னதம் கொள்கின்றாய்
உன்னை அறிகின்றேன்
மண்ணில் பயணித்தே
மாண்புகள் கொண்டதனால்
புல்லும் செடிகொடியும்
புள்ளும் விலங்கினமும்
இன்னமும் வாழ்ந்திடவே
இன்பங்கள் சேர்க்கின்றேன்
வண்ணங்கள் சேர்த்தீர்கள்
வண்ணம் சிதைகின்றேன்
வாழும் இனங்களுக்கு
வாய்ப்பாடு சொல்கின்றேன்
திண்ணம் கொள்ளுங்கள்
தீமை விலக்குங்கள்
பேதம் எனக்கில்லை
வேதமும் கற்றதில்லை
விஞ்ஞானம் தொட்டதில்லை
மெய்ஞ்ஞானம் விட்டதில்லை
தொன்மையாய் இருப்பதனால்
தன்மையாய் இருக்கின்றேன்
உட்செல் விரைவாக்கி
ஊதல் மெதுவாக்க
ஊனும் வளர்ந்திடுமே
நீளும் வருடங்களாய்
வாழ்வு ஒருமுறைதான்
வாழ்ந்து உணர்ந்திடுங்கள்
மானுடம் உய்வுபெற
மாசுகள் தொய்வுபெற
மாநிலம் நன்மைபெற
மாந்தரும் வாழ்வுபெற
எண்ணங்கள் சீராக்கி
ஏற்றங்கள் செய்திடுங்கள்!
சொன்னதைக் கேளுங்கள்
சொர்க்கத்தில் வாழ்ந்திடவே!!
– சுரேஜமீ
வண்ணக் கனவுகள்
இரவில் பூடக்கும் மலர் போல்
இராப் பகலாக தன் எண்ணங்களை
தொடுத்துப் பார்க்கிறாள்
வண்ண மலர் மாலையாக
கனவுகள் நினைவுகளாக
மலரும் நேரம்…
எண்ண மலர் மாலையை
துண்டுகளாக்கி விட்டார்கள் ..அறிவிலிகள்..
இவளது வெற்றி இவர்களுக்கு வேதனை
தோல்வியை ச்ந்திக்க இயலாமையில்
இவளது எண்ணம் துண்டுகளாக பறக்கின்றன
துவண்டு விடுவாள் என நினைப்பு
துவள்வது இவள் உடலின் இயற்கை-ஆனால்
நாணலாக நிற்பது இவளின் இலக்கணம்
கையில் ஏந்துகிறாள்
எண்ணக் கனவுகளின் வண்ணத் துகள்களை
மாலையாக தொடுக்கிறாள் மறுபடியும்
சாதிக்கப் பிறந்தவள் இவள்
சரித்திரம் படைத்தவர்களின்
சந்ததியில் வந்தவள்
ஈன்றவளும் இவள் வர்க்கமே
கற்பிக்கும் தெய்வமும் இவள் வடிவே
காவல் காக்கும் தெய்வமும் இவள் வடிவே
ஆதியும் அந்தமும் இவள் வடிவே
போற்றத் தெரியாதவர்கள்
தூற்றித் திரிய வேண்டாம்
தூற்றுபவனையும் மன்னித்து தன்னுள்
ஊற்றென பாயும் அன்பினால்
அணைக்கும் இவள் நிற்கிறாள்
ஏறு அழிஞல் மரமென
இவளின் கனவுகளுக்கு
துணை போகாவிட்டாலும்
துண்டிக்க வேண்டாம்
தொலைவில் நின்றாவது வாழ்த்துங்கள்
இவளது எண்ணக் கனவுகளை
ஏறு அழிஞ்சல் மரமென என்பது சரி
புத்தாண்டு நாளதனில்
கலவைக் காகிதம் காற்றில் பறக்குது
கவலை மறந்தே மனம் வானில் சிறகடிக்குது
ஊதித் தள்ளிடும் காகிதம்
உன்மத்தமானது பிள்ளைமனம்
ஒவ்வொரு வண்ணமும்
ஒவ்வொரு எண்ணமாய்
எண்ணத்தின் வண்ணத்தில்
புதுஉலகு வரைந்திட
துடிக்குது கரங்கள்
மடிந்திடும் கூட்டமல்ல நாம்
கேள்விகளால் வேள்விகள் செய்வோம்
கன்னி மனமதில் கேள்வி ஞானம் ஊறிடும்
கண்ணில் தெரியும் கடமைகள் ஆயிரம்
தடைகளைத் தாண்டிட வேகம் கூடிடும்
தலை நிமிரவே மனம் தத்தித் தாவிடும்
புதுமைப் பெண்ணாய் புது உலகை ஆள
புத்தாண்டு நாளதனில்
வண்ணக் கனவுகளால்
பதியனிடட்டும் பாவையர் உலகு
பெண்மையைப் போற்றுவோம்…
மாதவம் செய்து
மங்கையாய்ப் பிறக்குமுன்னே,
மலையாய் இடறும் வழித்தடைகள்
ஏராளம் ஏராளம்..
கள்ளிப்பாலாய்
கொல்லும் நெல்லாய்
கொலை மாத்திரையாய்,
மாய்க்கும் தடைபல கடந்து
பிறக்கிறாள் பெண்ணாய்..
பிறந்தது பெண்தானாவென
பெண்ணே
சலித்திடப் பிறந்து,
பாலைநிலப் பயிராய் வளர்ந்து
பருவத்தை எட்டுகிறாள்
பாதுகாப்பில்லா உலகில்..
பல்லிளிப்பு
பலாத்கார மலைகளைத் தாண்டி
புகுந்திடும் மணவாழ்விலும்,
மலிந்து கிடக்கும்
மாற்றங்களும் ஏமாற்றங்களும்..
பின்னுள்ள வாழ்வில்
பிள்ளைக்காக
பிறருக்காக என்ற ஓட்டத்தில்,
தன்னை மட்டும்
மறந்த
துறவுப் பயணம்..
இத்தனையும் தாண்டி
இதற்கு மேலும்
இடர்களையும் கடந்து
நடந்துதான்
ஆணின் வெற்றிப் படிக்கட்டாகி
வெந்து போகிறாள்..
இவளின்
சாதனைக்குமுன்
சரித்திரங்களெல்லாம்
சாதாரணம்தான்..
பெண்மையைப் போற்றுவோம்
புது உலகம் காண்போம்…!
-செண்பக ஜெகதீசன்…