கட்டளைக் கலித்துறை(கன்னி முயற்சி -நண்பர் ”அசோக் சுப்ரமணியம்” மோனை, ஈற்றுச்சீர் பார்த்து சரி செய்து கொடுத்தது- அவருக்கு நன்றி – அமெரிக்காவில் இருந்து வந்தவர் ”ஜெட்-லேக்கை” கூட பொருட்படுத்தாமல் விடிய விடிய விழித்து சரி செய்தார்…. மீண்டும் அவருக்கு நன்றி) ”அன்னை அந்தாதி”….அருணகிரிக்கு முருகர் முத்து என்று எடுத்துத் தந்தது போல், முதல் பாடலின் முதல் வரியை எழுதியவர் ”தண் டமிழ் கொண்டல் ஸ்ரீ சிதம்பரம் சார் அவர்கள்….அவருக்கு நமஸ்காரம்….!

காப்பு
——————

images
துலங்குவெண் நீறு துனிப்பிறை கோடு துணைக்கரங்கள்

இலங்கரன் பாகம் இடப்புறம் ஏகும் இமையவளின்

வலம்புகழ் வீரம் வணங்கியந் தாதி வரைந்துரைக்க

கலைதந்த ஆனை கணபதி ராயன் கழலரணே…

அரனும் அரியும் அயனும் அளிக்கவும் ஆற்றிடாத

வரம்தரும் கற்பக வல்லியின் பாதம் வழுத்திடுவோர்

நரனாய்ப் பிறந்து நடைபிண வாழ்வில் நலிந்திடாது

பரணப் பரத்துப் பதவியால் வெல்வராம் பற்பிறப்பே!.

பிறவா வரந்தரும்; பின்னும் பிறப்பின் பிறகெமனால்

இறவா திருந்திடச் ஈயும்; குகையாம் இதயமதில்

மறவா தெழுந்து வரும்பார்; அழைக்கும் மகனெனவும்;

உறவாய் அபிராமி ஒன்றே உலவும் உலகினிலே!

உலகவள் நெற்றி விழிவந்து காய்ந்த ஒளித்துகளே

திலகமாய் அங்கு திகழும் பரிதியும் திங்களுமே

உலவிடும் செவ்வாய் புதன்வ்யாழன் வெள்ளி உபத்திரவம்

குலவாது கூட்டும் குரைகழல் கும்பிட்டுக் கொள்ளுமினே

கொள்பவள் கற்பகம், வெல்பவள் காளியே, கோடிகவி

உள்ளிட பாரதி, ஒண்மாலே லக்ஷ்மி, உவந்தணைப்பள்,

அள்ளுவள் தாயாராய், ஆற்றுவள் ஐயனாய், அன்பதனின்

நள்ளென நண்பியாய் நல்கும் நலமெலாம் நன்றவளே!

அவளை நினைத்து அவலை இடித்தால் அவளசையாள்

அவளைத் துதித்தல் அவளை நினைத்தல் அவளருளால்

அவளே நமக்குள் அவளாய்த் திளைத்தால் அதுசுகமாம்

அவளில் கலந்து அவளாய் முடிந்தால் அதுபரமே!

பரசிவ வெள்ளம் பராசக்தி உள்ளம் பயின்றுணர்தல்

பிரபத்தி ஆகும்! பிரபஞ்சம் வந்து பிறந்திறக்கும்

ஒருகேடும் நீங்கும்! உலகிதன் மாய உருவொழிந்து

மருவுவள் சக்தி மனத்தினில் உண்மை வசப்படுமே!

வசமான சித்தி வலமென் றதனின் வசம்விழாதீர்

நிசமான கூலி நிலையான அன்னை நிழற்றுணையாம்

அசலான தெய்வம் அவளுண்டு வேறே அணுக்கமெலாம்

பிசினாகக் கம்பளிப் போர்வையில் ஒட்டும் பிசுபிசுப்பே

பிசுபிசுத் தோடும் பிறவிப் பிணிகள் கொசுக்கடியாய்

தசகத் தலைகள் துணித்தவன் தங்கையின் தண்ணடிமுன்!

திசையெட்டு தீவளி அப்புமண் எங்கும் திகழ்பவளை

வசனித்த பட்டர் அபிராமி அந்தாதி வாழ்த்துமினே!

வாழ்த்த வயதுண்டு வல்லாள் அவளென்றும் வாலையடா

பாழ்தவம் பூணும் விரதங்கள், பக்தியும் பண்ணலுமேன்?

நாழ்பட நாழ்பட நம்பிக்கை சேர்த்திடும் நாயகிமுன்

தாழ்வு உயர்வெலாம் தாயவள் கண்முன் தளசமமே!

சமமவள் நோக்கு சரியோ தவறோ சரணடைய

இமையெனக் காத்து இருகரம் நீட்டி இகபரத்தை

அமைவுறச் செய்வாள் அபிராமி அன்னை அவளிருக்க

சமயமாய் வீணே சடங்குகள் செய்தல்.. சரி!சிரிப்பே!

சிரித்திட மாதுளை, சம்புமுன் கொவ்வை, சினமடைந்து

முரற்றிடப் பாகல், முறுவலில் முல்லை, முனிகணங்கள்

சிரத்தினில் காய்ந்து சிவப்பழம் ஆகிடும் செவ்விதழை

தரித்திடும் தாய்முன் தலைதாள் வணங்குதல் தாம்தவமே!

தவமிலேன், தான தரும மறியேன் தவமுறைகள்

விவரமாய் கூறும் வழிய றியேன்தாளில் வீழ்பவர்க்கும்!

சிவமோடு சக்தி வழிபா டறியேன் சிரம்நிறைய

அவம்தானே அம்மா அதனாலே வந்தேன் அருள்பெறவே

பெறவந்தேன் பேரின்பம் பிச்சி யுனது பெருமைபாடி

அறக்கயத் தாதுவை அள்ளும் அளியாக ஆகிநானும்

குறவன்பெண் வள்ளிக் குமரன் கரத்தில்வேல் கொள்ளவன்று,

வறுநகை கொண்டுமே வந்தாற்போல் நீவரு வாயுமையே

வாயுண்ட தாம்பூலம் சிந்த வரதன் வரகவியாம்

வாயென்றும் பேசாத மூகனோ வாக்கின் அதிபதியாம்

வாயென்ற பட்டர்க்கு வானத்தில் வந்த வளர்பிறையே

தாயென்ற போர்வையில் தந்தைக் கிணையான தத்துவமே

தத்துவக் கோலுக்குத் தேறாத கற்பகத் தார்தருவாம்

சத்தியம் தர்மங்கள் சார்ந்தோர்தம் சிந்தைக்கும் தாம்வசமில்

பத்தினி பக்தர்தம் பித்தினுக் காட்படு பாங்கினளாம்

உத்தமி ஈசர் உடலி டபாகத்தே உற்றவளே….கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *