பெண்களே உங்களை நீங்களே உணருங்கள்.
நாகேஸ்வரி அண்ணாமலை.
இந்தியக் கலாச்சாரம் மிகவும் பழமை வாய்ந்தது என்று வாய் கிழியப் பேசுகிறோம். இங்குதான் வேதங்கள் தோன்றின, வேதங்கள் மிகச் சிறந்த தத்துவங்களைக் கூறுகின்றன, மனிதன் கடைத்தேற அவற்றைத் தெரிந்து கொள்வது ஒன்றுதான் வழி என்றெல்லாம் கூறுகிறார்கள். இந்த வேதங்கள் மனித வாழ்க்கைக்கு வழி காட்டுவதாகவே வைத்துக் கொள்ளுவோம்.
இந்த வேதங்களை எத்தனை பேர் படித்திருக்கிறார்கள், எத்தனை பேர் அந்த வேதங்கள் காட்டிய வழியில் நடக்கிறார்கள் என்றால் அது ஒரு சில பிராமணர்கள் மட்டுமே. இந்த வேதங்கள் சிறப்பு வாய்ந்தவை என்றால் அவற்றின் சாரத்தை எல்லாக் குழந்தைகளுக்கும் கற்பித்து, அவர்கள் அதை வாழ்க்கையில் பின்பற்ற வைக்க முடிய வேண்டுமல்லவா?
இந்தியக் கலாச்சாரத்தின் இன்னொரு சிறப்பம்சமாகக் கருதப்படுவது இந்தியப் பெண்கள். இதிகாசங்களிலும் புராணங்களிலும் பெண்கள் குடும்ப நலனைப் பேணுபவளாக, தன்னலமற்றவளாக, தியாகச் செம்மலாகச் சித்தரிக்கப்படுகிறாள். இவற்றைச் சிறு வயதிலேயே கேட்டுக் கேட்டுப் பெண்கள் மனைவி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள். மனைவி என்ற முறையில் தனக்கென்று சில உரிமைகள் இருக்கின்றன என்பதை நினைப்பதில்லை.
மனைவி என்பவள் குடும்ப நலனைப் பேணுபவளாக இருப்பதில் தவறில்லைதான். அப்படி நடந்து கொள்வதால் அந்தக் குடும்பம் முன்னேறும் என்றால் நல்லதுதான். தன்னலமற்றவளாக இருப்பதிலும் தவறு எதுவும் இல்லைதான். குடும்ப அங்கத்தினர்களுக்காகத் தியாகம் செய்வதிலும் ஒரு சந்தோஷம் இருக்கத்தான் செய்கிறது. தனி மனித உரிமைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வரும் மேல்நாட்டுக் கலாச்சாரத்தில் இதெல்லாம் மறைந்து வருவது வேதனைக்குரிய விஷயம்தான்.
இருப்பினும், இந்தியப் பெண்கள் அளவிற்கு அதிகமாக இவ்விஷயங்களில் மூளைச் சலவை செய்யப் பட்டிருக்கிறார்கள். இப்போது நிறையப் பெண்கள் வேலைக்குப் போகிறார்கள், அவர்களால் அலுவலகத்தில் எட்டு மணி நேரம் உழைத்து விட்டு வந்த பிறகு வீட்டிலும் முன் போல் உழைக்க முடியாது என்பதை அவர்களின் கணவன்மார்கள் உணருவதில்லை. இருவரும் வேலைக்குச் சென்றாலும் சமையல் என்னவோ இன்னமும் மனைவியின் பொறுப்புதான். சமையலை மனைவி செய்தாலும் கூடமாட உதவி செய்யலாம் என்ற எண்ணமே இந்த கணவன்மார்களுக்கு உறைப்பதில்லை.
சமீபத்தில் உறவினர் ஒருவர் வீட்டிற்குச் சென்றிருந்தேன்.இருவரும் வேலையிலிருந்து திரும்பி வந்தார்கள். மனைவி வந்தவுடனேயே சமையல் செய்ய ஆரம்பிக்கிறாள். கணவன் சமையலுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது மாதிரி நாற்காலியில் அமர்ந்து ஓய்வெடுக்கிறான்.அதுவுமல்லாமல் அரை மணி நேரத்தில் ‘உணவு தயாரா?’ என்று அவளைக் கேட்டுக் கொண்டிருக்கிறான். அவளும் தன்னைப் போல் வேலைக்குப் போய்விட்டு வந்து களைப்பாக இருப்பாளே என்ற எண்ணம் அந்தக் கணவனுக்கு இருந்ததாகத் தெரியவில்லை. மனைவி அவசர அவசரமாகச் சமைத்து முடித்துக் கணவனுக்குப் பரிமாறுகிறாள். அவன் சாப்பிட்டு முடித்து விட்டு அதன் பிறகு எந்த வேலையும் இல்லை என்பது போல் டி.வி. பார்க்க உட்கார்ந்து விடுகிறான். சமையலறையைச் சுத்தப் படுத்துவதும் மனைவியின் வேலைதான். சமையல் மட்டுமல்ல, மற்ற எந்த வீட்டு வேலையிலும் தனக்குப் பங்கு இருப்பதாக அந்தக் கணவன் உணரவில்லை.
வெளியில் சென்று உழைத்து வீட்டிற்குத் தேவையானவற்றைத் சம்பாதித்துக் கொண்டு வருவது கணவன் வேலை, வீட்டைப் பராமரிப்பது மனைவியின் வேலை என்ற காலமெல்லாம் மனைவியும் வெளியில் போய் சம்பாதிக்க ஆரம்பித்த பிறகு மலையேறி விட்டது என்பது இந்தக் கணவன்மார்களுக்குப் புரிந்ததாகத் தெரியவில்லை. ஒரு சில ஆண்கள் மனைவியும் வேலைக்குச் செல்வதால் தனக்கு வரும் சிரமங்களை எண்ணி, மனைவி வீட்டு வேலைகளைக் கவனித்தாலே போதும் என்று கட்டுப் படுத்தி விடுகிறார்கள். மனைவியின் சம்பாத்தியமும் வேண்டும், அவள் முன் போல் வீட்டிலும் உழைக்க வேண்டும் என்று எண்ணும் ஆண்கள்தான் இப்போது அதிகம்.
இன்னொரு தம்பதி. மனைவி ஒரே மகள் என்பதால் பெற்றோரின் சொத்து முழுவதையும் இவளே அடைந்தாள். இவளுடைய கணவன் எப்படி எல்லாவற்றையும் தொலைத்தான் என்று தெரியவில்லை. இப்போது கஷ்ட ஜீவனம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தன்னுடைய இந்த நிலைக்குக் காரணம் தன் கணவன்தான் என்பதை இந்தப் பெண் உணர்ந்ததாகத் தெரியவில்லை. கணவன் மீது எந்தக் கோபமும் இருப்பதாகத் தெரியவில்லை. இவள் பக்கத்து உறவினர் ஒருவர் இவளுக்காகக் கொடுத்த சொற்பப் பணத்தைக் கொண்டு கணவன் தனக்குத் துணிமணி வாங்கிக் கொள்கிறான். மனைவிக்கும் அதில் ஒரு புடவை வாங்குகிறான். கஷ்ட ஜீவனம் நடத்தும் சமயத்தில் கணவன் இப்படிப் பணத்தை ஊதாரித்தனமாகச் செலவழிக்கிறானே என்று எண்ணாதது மட்டுமல்ல, ‘அவர் தனக்கு இரண்டு சட்டைகள் வாங்கிக் கொண்டார். எனக்கும் ஒரு புடவை வாங்கிக் கொடுத்தார்’ என்று பெருமையாகக் கூறுகிறாள் மனைவி. இவள் பணத்தில்தான் அவன் வாங்கிக் கொடுத்திருக்கிறான். இதில் என்ன பெரிதாக அவளுக்குச் செய்து விட்டான் என்று மனைவி நினைக்கிறாள்?
முதலில் குறிப்பிட்ட மனைவி எந்த வித உதவியும் கணவனிடம் எதிர்பார்க்கவில்லை. வெளியில் வேலைக்குப் போனாலும் வீட்டைக் கவனித்துக் கொள்ளுவதும் தன் கடமை போல் எண்ணுகிறாள். இரண்டாவதாகக் குறிப்பிட்ட மனைவியோ அதற்கு ஒரு படி மேலே போய் தன் பணத்தில் புருஷன் தனக்கு வாங்கியது போக அவளுக்கும் ஒரு புடவை வாங்கியதைப் பெரிய காரியமாகக் கருதுகிறாள்.
குடும்பத்திற்காக உழைப்பது, தியாகம் செய்வது எல்லாம் சிறந்த குணங்கள்தான். அதில் சந்தோஷம் காண்பதும் நியாயமானதே. ஆனால் அதற்கும் ஒரு எல்லை இருக்கிறதல்லவா? இந்தப் பெண்கள் எல்லையையும் மீறிப் போய் விடுகிறார்களே? இவர்களுடைய அறியாமை ஆண்களுக்கல்லவா சாதகமாக அமைந்து விடுகிறது.
சமீபத்தில் ஒரு பழைய தமிழ்ப் படம் பார்த்தேன். ‘சேவை செய்வதே ஆனந்தம், பதி சேவை செய்வதே ஆனந்தம்’ என்று ஒரு பாட்டு அதில் வருகிறது. இப்படிச் சொல்லிச் சொல்லியே பெண்களை மூளைச்சலவை செய்திருக்கிறார்கள். மேல்நாடுகளில்போல் தான், தனது என்ற எண்ணத்தை பெண்கள் மனத்தில் வளர்க்காமல் இருக்கலாம். ஆனால் கணவன்தான் ஒரு மனைவிக்கு எல்லாமும், அவளுக்கென்று எதுவும் இல்லை என்று போதிக்கத் தேவையில்லை. கணவனே கண் கண்ட தெய்வம், மணாளனே மங்கையின் பாக்கியம் என்ற போதனை எல்லாம் இந்தக் காலத்திற்கு ஒவ்வாதது.