சுயம்பு கணபதி திருக்கோயில் – புது மும்பை.
சாந்தி மாரியப்பன்.
மராட்டிய மாநிலத்தின் தலைநகராம் மும்பையிலிருந்து சுமார், 28.8 கி.மீ தொலைவில் ‘நவி மும்பை’ என்றழைக்கப்படும் பகுதியில் இருக்கிறது ‘பன்வெல்’. பழமை வாய்ந்த இந்த ஊரின் முன்னேற்றமடைந்த பகுதி ‘புதிய பன்வெல்’ என்று அழைக்கப்படுகிறது. இதன் கிழக்குப் பகுதியில் தானாகவே தோன்றி, அருள் பாலிக்கும் பிள்ளையாருக்கு கோயிலொன்று இருக்கிறது.
‘அருள் மிகு சுயம்பு கணபதி திருக்கோயில்’ மிகவும் பழமையானது. இது சுமார் இரு நூறு வருடங்களுக்கு முற்பட்டதென்று சொல்லப் படுகிறது. அந்தக் காலத்தில் இந்தப் பகுதியில் காடுகள் மலிந்தும், சில இடங்களில் அது அழிக்கப்பட்டு விவசாயம் செய்யப் பட்டும் வந்தது.
அப்படி ஒரு நாளில், ‘திரு. அஷ்டம்கர் குடும்பி’ என்பவர் தனக்குச் சொந்தமான நிலத்தை, விவசாயத்திற்காக பண்படுத்திக் கொண்டிருந்தபோது, கலப்பையில் ஏதோ தட்டுப் படுவது போல் தோன்றியது. உடனே வேலையை நிறுத்தி விட்டு, ஆராய, பூமிக்குள்ளிருந்து பிள்ளையார் மற்றும் ஆஞ்சனேயர் சிலைகள் கிடைத்திருக்கின்றன.
மகிழ்ச்சியில் திக்கு முக்காடிப் போனவர் சின்னஞ்சிறு கோயிலொன்றை எழுப்பி, பக்திப் பெருக்குடன் வழிபடத் தொடங்கினார். பொதுவாகவே மராட்டிய மக்களுக்கு பிள்ளையார் விருப்பக் கடவுளாவார். அதற்கு ஒவ்வொரு வருடமும் மும்பையில் பத்து நாட்கள் பிரம்மாண்டமான முறையில் கொண்டாடப்பட்டு வரும் பிள்ளையார் சதுர்த்தி விழாவே சான்று.
ஆகவே, இங்கேயும் அங்காரக சதுர்த்தி, வினாயகர் சதுர்த்தி, கணேச ஜெயந்தி, சதுர்த்தசி தினங்கள் மற்றும், ஆஞ்சனேயர் ஜெயந்தி போன்ற தினங்கள் வெகு கோலாகலமாக கொண்டாடப்பட்டு வந்தன. சுற்று வட்டார மக்களைப் பொறுத்த மட்டில் இது அவர்களுக்கு ஒரு புனிதத் தலமாகவே விளங்கியது.
காலப் போக்கில் சில தீய சகுனங்கள் தென்படவே கடந்த 1994 ஆம் ஆண்டு, சூன் திங்கள் இரண்டாம் தேதி, ‘திரு. கண்டால்கர் குடும்பிய’. என்பவரால் கோயில் புனருத்தாரணம் செய்யப்பட்டது.
அழகான சின்னக் கோயில்தான். சுயம்பு கணபதி வெள்ளிக் கவசம் சார்த்திக் கொண்டு அருள் பாலிக்கிறார். ஐம்பொன்னால் ஆன மூர்த்தியொன்றும் வழிபடப் படுகிறது. பிள்ளையார் சதுர்த்தி நடக்கும் இந்தப் பத்து நாட்களும் முன் மண்டபத்தில் அமர்ந்து தரிசனம் அளிக்கிறார். ஆஞ்சனேயருக்கு தனிச் சன்னிதி இருக்கிறது.
இந்தச் சன்னிதிகளுக்கு தெற்குப் பக்கத்தில் ஸ்ரீநிவாசப் பெருமாள் தேவியருடன் கோயில் கொண்டிருக்கிறார். இவர் இங்கே வந்த வரலாறை ஒரே வரியில் அடக்கி விட முடியாது. ‘ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாம பாராயண சபை’யின் முயற்சியால் இவர் இங்கே வந்த பிற்பாடுதான் கோயில் இன்னும் சிறப்புற்றது என்றே சொல்லலாம். இப்போது கோயிலின் பராமரிப்பு சபையின் நிர்வாகத்திலும், திரு. நாகராஜன் அவர்களின் மேற்பார்வையிலும் செவ்வனே நடந்து வருகிறது. சபையின் நற்பணிகளையும், ஸ்ரீநிவாசப் பெருமாளையும் பற்றிய விரிவான பகிர்வு பின்பு எழுதப்படும்.
பிள்ளையார் சன்னிதியின் வடக்குப் புறத்தில் நாகராஜனுக்கும், ராணிக்கும் ஒரு சன்னிதி இருக்கிறது. ஆயில்ய தினங்களில் சிறப்பு அபிடேக ஆராதனைகள் நடத்தப் படுகின்றனவாம். அருகிலேயே கற்சிலைப் பிள்ளையார் ஒருவரும் இருக்கிறார். இந்த நாகராஜன் இங்கே வந்ததும் ஒரு சுவாரஸ்யமான சம்பவம்தான்.
கோயிலில் சில துர்ச்சகுனங்களைக் கண்டு, கேரளத்திலிருந்து தாந்திரீகர்களை அழைத்து பிரச்சன்னம் பார்த்ததில், இந்த கோயில் இருக்கும் மனையில் பாம்பு ஒன்று வெகு காலமாக இருப்பதாகவும், அதனால், ஏற்படும் தோஷத்தை நிவர்த்தி செய்ய நாகராஜன், ராணி சிலைகளை வைத்து பூசிக்க வேண்டும் என்றும் உத்தரவு வந்ததாம். நாங்கள் போயிருந்த போது கூட அங்கிருந்த அரசமரத்தடியில் ஒருவர் படுத்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அவர் கோயிலின் செல்லப் பாம்பாம்.
இவர்களுக்குப் பக்கத்தில் நவக்கிரகங்களுக்கென ஒரு தனிச் சன்னிதி இருக்கிறது. இந்த இரண்டு சன்னிதிகளுக்கும் நடுவே துர்கா தேவிக்கும் ஒரு சன்னிதி எழுப்ப வேண்டி ஆரம்பிக்கப்பட்டு வேலைகள் நடந்த வண்ணம் உள்ளன. பசு மடம் ஒன்றும் சென்ற வருடம் ஆரம்பிக்கப்பட்டு, ஒரு பசுவும் கன்றும் இங்கே நல்ல முறையில் பராமரிக்கப் படுகின்றன. பன்வெல் ரயில் நிலையத்திற்கு வெகு அருகிலேயே இந்தக் கோயில் இருப்பதால் நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் வந்து செல்ல வசதியாக இருக்கிறது.
கோயிலில் நடந்து வரும் பூசைகளாவன:
ஸ்ரீ ராம நவமி,
அனுமன் ஜெயந்தி,
வைகுந்த ஏகாதசி,
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி,
விளக்குப் பூஜை,(ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியன்று நடத்தப் படுகிறது)
சங்கஷ்டி சதுர்த்தி (ஒவ்வொரு மாதமும்)
பாலாஜி திருக்கல்யாண உற்சவம்(ஒவ்வொரு வருடமும் ஜனவரித் திங்களில்)
நவராத்திரிப் பண்டிகை – அஷ்டமி, நவமி தினங்களில் சண்டி ஹோமம் சிறப்பாக நடத்தப் பெறுகிறது.
சஹஸ்ர நாம பாராயணம் – ஒவ்வொரு சனிக்கிழமையும்.
இந்தக் கோயில் திறந்திருக்கும் நேரங்கள்:
தினமும் காலையில் ஆறிலிருந்து பன்னிரண்டு மணி வரைக்கும். மற்றும் மாலையில் ஐந்திலிருந்து எட்டு மணி வரைக்கும்.