கட்டுரைகள்பொது

தாய்நாடு

-தமிழ்த்தேனீ

“உலகத்தில் உள்ள அனைவரின் தாயையும் அம்மா என்று அழைக்கலாம் ஆனால் நம் தாயை அம்மாவென்று அழைக்காமல் பாசத்தோடு அன்போடு கவனியாமல் இருந்தால் அது நியாயமா? —-தமிழ்த்தேனீ.

***

102 வயதான ஒருவரைப் பேட்டிகாண ஒரு இளவயது நிருபர் செல்கிறார்.

நிருபர் : ஐயா உங்களை வணங்குகிறேன். இந்த வயதிலும் நீங்கள் இளமைத் துள்ளலோடு இருக்கிறீர்களே அதன் ரகசியம் என்ன?

முதியவர்: நான் சிறு வயதிலிருந்தே மது, மாது, புகைப்பிடித்தல் போன்ற எந்தக் கெட்ட வழக்கமும் இல்லாதவன். அதுதான் காரணம் என் இளமைக்கும் ஆரோக்கியத்துக்கும்.

(இப்படி இவர்கள் பேட்டி எடுக்கும் வைபவம் நடந்து கொண்டிருக்கும்போதே)

மாடியிலிருந்து ’லொக் லொக்’கென்று இருமும் சத்தம் கேட்கிறது.

நிருபர் : ஐயா மேலே யாரோ இருமும் சப்தம் கேட்கிறதே!

முதியவர் : ஆமாம் அவர் என் அண்ணன்!

நிருபர் : அவர் ஏன் இருமுகிறார்?

முதியவர் : அவருக்கு இல்லாத கெட்ட பழக்கங்களே இல்லை; அதனாலே உடம்பு கெட்டுப் போச்சு.

(நீதி : உலகில் உள்ள எல்லா சந்தோஷங்களையும் அனுபவித்துவிட்டு 104 வயதிலும் இன்னமும் இருமிக் கொண்டு இருக்கும் அண்ணன் சரியா, அல்லது எந்த சுகத்தையும் அனுபவிக்காமல் 102 வயது வாழும் தம்பி சரியா என்றால் எதையுமே அனுபவிக்காமல் எத்தனை வயது வாழ்ந்தாலென்ன என்று தோன்றுகிறது)

இந்த நீதி சரியா என்றால் அது சரியல்ல என்பது என் கருத்து, சிகரெட் பிடித்தால் கேன்ஸர் வருமென்கிறார்கள். இப்போது மாசுபட்டிருக்கும் சுற்றுச் சூழலால் எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாத ஆசாரமானவர்களுக்கும் கேன்ஸர் வருகிறது. அதற்காக கெட்ட பழக்கங்களை கற்றுக் கொள்ளுங்கள் என்று நான் உபதேசிப்பதாக யாரும் நினைக்காதீர்கள். கற்றுக்கொள்ள வேண்டாம். ஆனால் மாசுபடுத்தப்பட்ட சுற்றுச்சூழல் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைப் பன்றிக் காய்ச்சல் ஒவ்வாமைகள் பலவிதமான குறைபாடுகள் ஆகிய எல்லாவற்றையும் தோற்றுவிக்கின்றன.

ஆகவே நம் நாட்டின் சுற்றுச்சூழலை சாலைகளில் கொப்பளிக்காத சாக்கடைகள் கொசுக்களை உற்பத்தி செய்யாத மூடப்பட்டுத் தடையின்றி ஓடக் கூடிய சாக்கடைகளை முதலில் உருவாக்க வேண்டும். மாசுபடாத காற்றை மக்கள் ஸ்வாசிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மொத்தத்தில் சுத்தமான நாடாக நகரமாக நம் நாட்டையும் நகரங்களையும் கிராமங்களையும் அரசாங்கம் நிர்வகிக்க வேண்டும் என்பதே என் நோக்கம் ஆவன செய்வார்களா அரசு நிர்வாகம்.

அல்லது நாமாவது இப்படிப்பட்ட சுத்தமான நாடாக மாற்ற நடவடிக்கை எடுப்போமா என்பதே என் கேள்வி. கேள்விகள் கேட்பது எளிது; விடை கடினமானது. ஆகவே ஒவ்வொரு தனிமனிதரும் சிந்திக்க வேண்டும். நம்மால் என்ன செய்யமுடியும் என்று. நாம் சுத்தம் செய்யாவிடினும் அசுத்தம் செய்யாமலிருப்போமா. சுத்தம் கட்டுப்பாடு என்பதெல்லாம் சட்டம் போட்டுத்தான் வரவேண்டும் என்பது நியாயமல்ல. மனதுக்குள் தாமாகவே எழ வேண்டிய நியாயமான உணர்வு.

வெளிநாடுகளில் குப்பை போட்டால் அசுத்தப்படுத்தினால் அநாகரீகமாக நடந்துகொண்டால் சட்டப்படி தண்டிக்கிறார்கள். அதற்குப் பயந்து நாமும் அங்கே போகும் போது நாகரீகமாக அசுத்தப்படுத்தாமல் குப்பைகளைப் போடாமல் கட்டுப்பாட்டுடன் இருக்கிறோமே!

அதனால் நம்மாலும் முடியும் இப்படியெல்லாம் நடந்து கொள்ள எனும்போது ஏன் நம் நாட்டிலே மட்டும் மாறாக நடந்து கொள்கிறோம்.

வெளிநாட்டுக்குச் சென்று அங்கே குப்பைகளைப் போடாமல் இருந்துவிட்டு மும்பையோ டெல்லியோ வந்தவுடன் கண்ட இடங்களில் பான்பராக் போட்டுச் சுவைத்து எச்சில் துப்புகிறோம், குப்பைகளைக் கண்ட இடத்தில் போடுகிறோம், பெண்களை வெறிக்க வெறிக்கப் பார்க்கிறோம் நியாயமா இவையெல்லாம்.

பயமுறுத்தினால்தான் சட்டம் போட்டுத் தண்டித்து பயமுறுத்தினால்தான் ஒழுங்காக நடப்போம் இல்லையென்றால் எப்படி வேண்டுமானாலும் வாழ்வோம் என்பது முறையா?

ஐயாமாருங்களே! அண்ணன்மார்களே! தம்பிமார்களே! இது நம்மோட நாடு நம் நாட்டின் மேல் பாசத்தையும் நேசத்தையும் தேச பக்தியையும் வளர்த்துக் கொள்ளுங்கள் இது வேண்டுகோள்!

 

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க