பெருங்கவிக்கோ பங்கேற்ற 31ம் உலகக் கவிஞர்கள் மாநாடு
உலகளாவிய பன்மொழிக் கவிஞர்களின் 31ம் மாநாடு அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தின் மிச்சிகன் ஏரிக்கரையில் உள்ள நகரமான கெனோசாவில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இம்மாநாட்டின் வரவேற்புக்குழுத் தலைவராக மேரிஆன் என்ற அமெரிக்கப் பெண் கவிஞர் இருந்து தம் குழுவினருடன் சிறப்பாகக் கவிஞர் மாநாட்டை நடத்தினார்.
இந்த மாநாடு 28 ஆகஸ்ட் 2011 முதல் 3 செப் 2011 வரை நடைபெற்றது. 27ம் நாள் வந்திருந்த உலகக் கவிஞர்கள் தங்கள் பெயர்களை உரிய கட்டணத்தைச் செலுத்திப் பேராளர்களாகப் பதிவு செய்து கொண்டனர். அன்று மாலை கெனொசா உணவகத்தில் அமெரிக்க ஹவாய்த் தீவின் பாரம்பரிய நடனமான ஹூலா நடனத்துடன் ஒரு அறிமுக விருந்தும் – பன்னாட்டுக் கவிஞர்கள் சந்திப்பும் சிறப்பாக நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது உலக நாட்டுக் கவிஞர்களும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி தங்கள் சகோதர பாசத்தைப் புதுப்பித்துக் கொண்டனர்.
இந்த உலகக் கவிஞர் மாநாட்டின் கருப்பொருள் “உலக அமைதி – மனிதநேயம் உலக மக்கள் ஒருமைப்பாடு” பற்றியதாகும். இக்கருத்துகள் பற்றிய இசைப்பாடல்கள் இசைக்கப்பட்டன.
29 ஆகஸ்ட் 2011 அன்று கெனொசாவின் கார்ட்ஹெஜ் கல்லூரியில் தொடக்க விழா நடைபெற்றது. இந்த மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ, சீனா, ஜப்பான், ஆஸ்திரியா போன்ற 21 நாடுகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பன்மொழிக் கவிஞர்கள் பங்கேற்றனர். இந்த விழா தொடக்கத்தில் அனைத்து நாட்டுக் கொடிகளையும் அந்தந்த நாட்டுக் கவிஞர்கள் முன் நின்று அவர் நாட்டுக் கொடிக்கும், அனைத்து மக்களுக்கும் மரியாதை செய்தது பிரமிப்பை ஏற்படுத்தியது.
இந்திய தேசக் கொடியை நம் பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் தமிழருக்கான பாரம்பரியப் பண்பாட்டு உடை அணிந்து இந்தியக் கொடியைக் கம்பீரமாகப் பிடித்து பன்னாட்டுக் கொடி அணிவகுப்பில் கலந்து கொண்டது மாநாட்டின் கண்கவர் அம்சமாகவும் கண்கொள்ளாக் காட்சியாகவும் அமைந்தது.
இந்தத் தொடக்க விழாவிற்கு கெனொசா மேயர் கீத் போஸ்மேன் மேடையில் அமர்ந்து சுருக்கமாக உரையாற்றினர்.
இந்த மாநாட்டிற்கு தமிழ்நாட்டிலிருந்து, பெருங்கவிக்கோ முனைவர் வா.மு. சேதுராமன், ஐகடா அறிவியல் கல்லூரித் தலைவர் முனைவர் சேது குமணன், சென்னை வழக்கறிஞர் முனைவர் சந்திரசேகர், அமெரிக்க டென்னிசி மாநிலத் தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் தலைவர் வா.மு.சே. கவிஅரசன் ஆகியோர் வருகை தந்திருந்தனர். திருமிகு சேது குமணன் தமிழகத்திலிருந்து கொண்டு வந்த பொன்னாடைகள், பரிசுப்பொருட்களை பெருங்கவிக்கோ மேடையில் அமர்ந்திருந்த அனைவருக்கும் அணிவித்து வழங்கியது இந்திய, தமிழ்நாட்டின் பெருமையை உணர்த்துவதாக இருந்தது.
பின்பு அனைத்து நாட்டு மொழிக் கவிஞர்களும் தங்கள் தங்கள் நாட்டு மொழிக் கவிதைகளை வழங்கினர். இசுபாசினியல் மொழியும் சீன மொழியும் பேசும் அனைத்து நாட்டுக்கவிஞர்கள் பலர் வந்திருந்தனர். பெருங்கவிக்கோவின் “உலகம் ஒரு பூந்தோட்டம்” என்ற கவிதையை ஓசை நயத்துடன் படித்தார். தமிழ்மணிகண்டன், முனைவர் மகாலட்சுமியால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்ட பெருங்கவிக்கோவின் கவிதையை கவிஅரசன் ஆங்கிலத்தில் படித்து உலக கவிஞர்களுக்குக் கவிதையின் சாரத்தையும் அளித்தார். மொழியாக்கத்தை விட, பெருங்கவிக்கோ சந்தத்துடன் பாடிய கவிதையை நயத்துடன் உலகக் கவிஞர்கள் பெரிதும் பாராட்டினர். ஆஸ்திரிய நாட்டுக் கவிஞர், பெருங்கவிக்கோ தமிழில் ஓசை நயத்துடன் பாடியவாறு ஏன் மொழியாக்கக் கவிதை ஓசை நயத்துடன் பாட இயலவில்லை என்பது குறித்துக் கேள்வி எழுப்பினார். கவிஅரசன் உலகக் கவிஞர்களுக்கு சந்தம்–சிந்துவுடன் ஒவ்வொரு சீரும் தேமா–புளிமா, கருவிளம், கூவிளம் என்ற அளவு சிதையாமல் கவிதை எழுதும் போது இந்த ஓசை நயங்கள் இயற்கையாகவே கவிதையுடன் இணையும் பாங்கை விளக்கினார். மூத்த தமிழின் இலக்கணத்தையும் அந்த அளவு முறைகளையும் பாங்குடன் உலகக் கவிஞர்கள் கேட்டறிந்து கொண்டனர். இந்தக் கவிதையின் மையக் கருத்தாக எல்லைக் கோடில்லா உலகம் உருவாக வேண்டும் என்பதே. தமிழ்ச் சந்த இனிமையையும், கவிதைப் பொருளையும் உலகக் கவிஞர்கள் சுவைத்தனர். இது நடக்குமா? எல்லைக் கோடில்லாத உலகம் உருவாகுமா என்று கேட்டார். “இது கவிஞர் கனவு” என்றார் வா.மு.சே. மாலை நிகழ்வுகளும் சிறப்பாக அமைந்தது. சேது குமணன் அவர்கள் சிறப்பாக இந்தக் கவிதை நிகழ்வை ஒருங்கிணைத்தார்.
மறுநாள் 30 ஆகஸ்ட் 2011 அன்று கெனொசா அமெரிக்க சிவில் போர் அருங்காட்சியக வெளியரங்கில் அமெரிக்கக் கவிஞர் வில்லியம் மார் தலைமையில் நடைபெற்ற ஆங்கிலக் கவிதை நிகழ்வில் கவிஅரசன் ஈழ இறுதிப்போரின் அவலங்கள் குறித்து எழுதிய கவிதையைப் படித்து அனைத்துலகக் கவிஞர்களின் கவனத்தை ஈழத்தின்பால் ஈர்த்தார். ஈழத் தமிழர் இன்னல் பற்றிய இந்த ஆங்கிலக் கவிதை மிகவும் அழுத்தமாகவும், உறுதியாகவும் அமைந்ததை பல கவிஞர்கள் பாராட்டினர். வருத்தத்துடன் ஈழ விடுதலைக்கும் மறுவாழ்விற்கும் தங்களால் ஆன விழிப்புணர்வுப் பணிகளை தங்கள் நாடுகளில் செய்வோம் என்றும் உறுதியளித்தனர். பெருஙகவிக்கோவின் பேரன் கவின்சாதுகுரு கவிஅரசன் எழுதிய “எங்கிருந்து நான்” என்ற ஆங்கிலக் கவிதையை உலகக் கவிஞர்களுக்கு வாசித்தார். பெருஙகவிக்கோவின் கவிதைப் பரம்பரையின் வெளியீடாகவும் அமைந்தது இந்நிகழ்வு. முனைவர் சேது குமணன், முனைவர் சந்திரசேகருடன் பன்னாட்டுக் கவிஞர்கள் பலரும் தங்கள் கவிதையைப் பகிர்ந்து கொண்டனர். சந்திரசேகரின் கருத்து வளத்தையும், சேது குமணனின் கவிதை வளத்தையும் பன்னாட்டுக் கவிஞர்கள் ரசித்தனர்.
மாலையில் மிச்சிகன் ஏரிக்கரையில் மேடை போட்டு கவியரங்கம் நடந்தது. பல நாட்டுக் கவிஞர்கள் பாடினர். அந்த மேடை அருகில் பிரான்சுப் பெண்கவிஞர் மேரியா இராபர்ட் மனித நேயத்தை வற்புறுத்தி பலரும் வியக்கும் வண்ணம் நாட்டியம் ஆடிச் சிறப்பித்தார்.
31 ஆகஸ்ட் 2011 அன்று பன்னாட்டுக் கவிஞர்கள் மிச்சிகன் ஏரிக்கரையில் கூடினர். அப்போது கவிஅரசன், சேது குமணன், சந்திரசேகர் ஆகியோரோடு பெருங்கவிக்கோ அமர்ந்திருந்த போது ஒரு அமெரிக்கர் ஓடோடி வந்து பெருங்கவிக்கோவின் கையைப் பற்றிக் கொண்டு ”வணக்கம்! வாருங்கள், நன்றாயிருக்கிறீர்களா!” என்றார். அவர் பெயர் இராபர்ட். எம்.ஜி.ஆர். பாடல்களைப் பாடினார். ”நான் தமிழ் நாட்டில் ஊட்டியில் பணியாற்றினேன். தமிழ் நன்றாகத் தெரியும். இன்று கெனொசா நியூஸ் செய்தித் தாளில் உங்களைப் பற்றிய செய்தி கண்டு தங்களைச் சந்திக்க வந்தேன்” என்றார்.
உடனே கவிஅரசன் கெனொசா நியூஸ் செய்தித்தாளை வாங்கிப் படித்தார். அதில் மிகச் சிறப்பாக பெருங்கவிக்கோ முனைவர் வா.மு.சேதுராமன் என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டு மற்ற கவிஞர்களோடும், மேயர், தலைவர் உள்ளிட்ட பலரோடு படம் வெளிவந்திருந்தது, இந்தியாவிற்கு பெருமை அளிப்பதாக அமைந்தது. கொலம்பஸ் அமெரிக்கா வரும்போது பயன்படுத்திய 15ம் நூற்றாண்டுக் கப்பல்களைப் போன்றே வடிவமைக்கப்பட்ட கொலம்பசுக் கப்பலைக் கவிஞர்கள் கண்டு வியந்தனர்.
உலகக் கவிஞர்கள் மத்தியில் இந்திய நாட்டுக்கும், தமிழுக்கும் மிகப் பெரும் சிறப்பைத் தமிழ்க கவிஞர்கள் உண்டாக்கினர். இந்த உலகக் கவிஞர்கள் சங்கத்தை முதன் முதலில் உருவாக்கியவர்களுள் முக்கியமானவர் ஒரு தமிழர். அவர்தான் கவிஞானி. கிருஷ்ணா சீனிவாஸ். இவர் சாதி, மதம், நாடு, மொழிகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு தன்னோடு நான்கு நாட்டுப் பெருங்கவிஞர்களை இணைத்துக் கொண்டு இந்த உலகக் கவிஞர் சங்கத்தை உருவாக்கினார். ஒரு தமிழ்க் கவிஞரை உலகக் கவிஞர்களுக்கு அறிமுகம் செய்வேன் எனச் சபதம் பூண்டு அமெரிக்க சான்பிரான்சிஸ்கோவில் நடந்த 5ம் உலகக் கவிஞர் மாநாட்டிற்கு அழைத்துச் சென்றார். பின்னர் உரோசிமேரி வில்கின்சன் என்ற அமெரிக்கப் பெண் கவிஞர் பல மாநாடுகளைச் சிறப்பாக நடத்தினார். இப்போது 31ம் மாநாடு கெனொஸாவில் நடந்துள்ளது.
பெருங்கவிக்கோ 5ம் உலகக் கவிஞர்கள் மாநாட்டிலிருந்து எகிப்து, துருக்கி, உரோமேனியா, இத்தாலி, பிரான்சு, செக்கோஸ்லோவேக்கியா, சீனா, மங்கோலியா, மெக்ஸிகோ போன்ற பல நாடுகளில் நடந்த இருபது உலகக் கவிஞர் மாநாட்டில் கலந்து கொண்டு தமிழ், தமிழர் இந்திய நாட்டின் பெருமையை பதிவு செய்திருக்கிறார்.
இந்த 31ம் உலகக் கவிஞர் மாநாடு மெக்சிகன் ஏரிக்கரையில் நடந்த போது இந்தியாவின் பெருங்கவிக்கோ முனைவர் வா.மு.சேதுராமன் வந்து கலந்து சிறப்பித்துள்ளார் என்ற செய்தியைப் பதிப்பித்து சிறப்பித்தது. அந்தச் செய்தியைக் கண்டு மகிழ்ந்த கெனொசா வாழ் தமிழ் அறிந்த அமெரிக்கர் ஆர்வத்துடனும் பெருமையுடனும் தமிழ் ஆர்வத்தை வெளிப்படுத்தியது உலகக் கவிஞர்களை வியக்க வைத்தது. இந்தியாவிற்குப் பெருமை சேர்வதாக அமைந்தது. மாநாட்டுத் தலைவர் மேரிஆன் இதைக் குறிப்பிட்டு பெருங்கவிக்கோவைப் பெருமைப் படுத்தினார். பெருங்கவிக்கோ எழுந்து நின்று வணங்கி அனைவர் பாரட்டுதல்களையும் பெற்றுக் கொண்டார்.
1 செப் 2011 முதல் 4 செப் 2011 வரை சுற்றுலாவிற்குப் பல கவிஞர்கள் சென்றனர். இந்தச் சுற்றுலா மின்னிசோட்டா, மினியாபோலிசில் முடிவடைந்த பின் உலகக் கவிஞர்கள் தங்கள் தாய்நாடு திரும்பினர். ஈழத்தமிழர் இன்னல் தீர்க்க வேண்டிப் பாரதப் பிரதமரைச் சந்தித்து பட்டினிப் போராட்டம் நடத்தியபின் இம்மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்கா சென்றார் பெருங்கவிக்கோ.
மொத்தத்தில் இம்மாநாடு வா.மு.சே தொடர்ந்து செல்லும் கவிதைப் பயணத்தின் எல்லைக்கோடைக் காணும் நல்ல பயணமாக அமைந்தது.