Featuredஇலக்கியம்கட்டுரைகள்பத்திகள்பொது

திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் ( 13)

 க. பாலசுப்பிரமணியன்

ஆசைகளுக்கு அடிமையான மனம்

திருமூலர்-1

ஆசைகளை அடக்குதல் என்பது ஒரு கடினமான செயல். பல துறவிகள் கூட ஆசைக்கு அடிபணிந்து இன்னல்களுக்கு ஆளாகியிருக்கின்றார்கள். ஆசைகளை அடக்குதல் என்பது ஒருவிதமான யோகநிலை. யோகத்திற்கே இலக்கணம் வகுத்த குரு பதஞ்சலி முனிவர்  “யோகம் என்பது சித்தத்தின் அசைவுகளை நிலைப்படுத்துவதாகும்” என்று கூறுகின்றார்..முற்காலத்தில் கல்வியின் நோக்கமே ஒரு மனிதனை நிலையான சமநிலை உணர்வுகளுக்குத் தகுதியுள்ளவனாக (ஸ்தித ப்ரஞனாக) உருவாக்குவதாகவே இருந்தது.

தற்போதைய நிலையில் மனம் ஒரு குரங்கினைப்போல் ஒரு ஆசையிலிருந்து இன்னொரு ஆசைக்குத் தாவி  எங்கும் நிலையாக இல்லாமல் அலைச்சலுக்கு  உட்படுகின்றது. மனத்தை கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை பல ஞானிகள் அழகாக  எடுத்துரைத்திருக்கின்றனர்:

“மனத்தகத் தழுக்கறாத மவுன ஞான யோகியர்

வனத்தகத் திருக்கினும் மனத்தகத் தழுக்கறார் “

என்கிறார் சிவவாக்கியர்.

ஆசைகளை அடக்குவதற்கு  ஒரு மனிதன் தன்னை வெல்ல வேண்டும். மற்றவர்களை வெல்வது என்பது எளிது, ஆனால் தன்னைத் தானே வெல்வது என்பது ஒரு கடினமான செயல். உலகின் மிகச் சிறந்த தத்துவ மேதையாக இருந்த அரிஸ்டோடில் கூறுகின்றார்  ” தன்னுடைய வலிமை வாய்ந்த எதிரிகளை வெல்பவனை விட தன்னைத்தானே வெல்பவன் மிகச் சிறந்தவன்.” (I count him braver who overcomes his desires than him who conquers his enemies; for the hardest victory is over self)

இதே கருத்தை வலியுறுத்தும் சீன அறிஞர்  லா டீஸு (Lao Tzu)  “மற்றவர்களை வெல்ல வலிமை தேவை  ஆனால் தன்னைத்தானே வெல்ல வல்லமை தேவை” (Conquering other requires Force; Conquering oneself requires strength)

எபிகுர்ஸ் (Epicurus) என்ற ஒரு மேதை மிக அழகாகக் கூறுகின்றார் “ஒரு மனிதனின் சந்தோஷத்தை அதிகரிக்க வேண்டுமென்றால் அவனையும் அதிக செல்வத்தைக் கொடுக்க வேண்டியதில்லை , அவனுடைய ஆசைகளைக் குறைத்தால் போதும்.” (If thou wilt make a man happy, add not unto his riches but take away from his desires)

ஆனால் மனிதனுடைய மனமோ ஆசைகளுக்கோ விலைபோய் தன்னை அடகு வைத்து விடுகின்றது, ஏதாவது ஒரு ஆசைக்கு அடிமையாகி தன் உண்மை நிலையை மறந்து துன்பக்கடலில் தன்னை மூழ்க வைத்துக் கொள்கின்றது .

குறிப்பாக காமத்தில்  விழுந்த மனம் பெண்ணாசையில் மதி குலைந்து கள்ளுண்ட போதையில் நிலை மறத்தல் போல் தன்னை மறக்கின்றது.

இந்த அவல நிலையை விளக்கும் திருமூலர், “எவ்வாறு ஒரு மனிதன் நல்ல பழுத்த மாங்கனி வீட்டில் இருக்கையில் அதை பதுக்கிவிட்டு புளிய மரம் ஏறி புளியம் பழத்தை நாடுவானோ அதுபோல் மனம் ஒரு மனை விட்டு இன்னொரு பெண்ணை நோக்கி ஓடுகின்றது.” என்று விளக்குகின்றார்.

திருத்தி வளர்த்ததோர் தேமாங் கனியை

அருத்தமென் றெண்ணி அறையிர்ப்  புதைத்து

பொருத்தமில்லாத புளிமாங்  கொம்பேறிக்

கருத்தறி யாதவர் காலற்ற வாறே.

இப்படி வாழுகின்ற மனிதனின் மனம் எப்படியிருக்கும்? எப்போதும் எதிலும் அவனுக்கு ஓர் பயம் இருக்கும். எங்கே தன்னை யாரவது பார்த்து விடுவார்களோ, மற்றவர்கட்கு தன் இழிவான செயல் தெரிந்தால் தம்மைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்ற பயத்திலே  ஒரு நடைப்பிணமாக வாழ்வான். இந்த நிலையை நாலடியார் பாடல் வெகு அழகாக விளக்குகின்றது.

புக்க இடத்தச்சம் போதரும் போதச்சம்

துய்க்கும் இடத்தச்சம் தோன்றாமல் காப்பச்சம்

எக்காலும் அச்சம் தருமால் எவன்கொலோ

உட்கான்  பிறனில் புகல்.

“விரும்பும் போதும் பயம், திரும்பி வரும்போதும் பயம், போகத்திலும் பயம், வெளியே தெரியாமல் காக்கும் பயம் என்று எப்போதுமே பயத்தில் வாழ்ந்தாவது பிறன் மனை ஏன் செல்லவேண்டும்? “

மனிதனின் மனநிலையை படம் பிடித்துக் காட்டி புத்தி புகட்டும் இந்த அருமையான கருத்து நமக்கு மந்திரமா இல்லை அரு மருந்தா?

(தொடரும் )

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க