சிறுவர் இலக்கியம் படைப்பது எப்படி ? (9)

பவள சங்கரி

ஆரம்பப்பகுதி

சிறுவர் இலக்கியம்

ஆரம்பப்புள்ளியை சரியாகக் கணித்துவிட்டால்
முற்றுப்புள்ளியை கணக்கிடல் எளிது!

கதையின் ஆரம்பப்புள்ளியே அடுத்தடுத்த நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டும் கோல். ஒரு சுவையான விருந்தில் பசியைத் தூண்டும் ஒரு உணவு போன்றது. முதல் கோணல் முற்றும் கோணல் என்பதுபோல, கதையின் ஆரம்பம் சரியாக அமையவில்லையென்றால் அது வாசகர்களைச் சென்று சேர்வது சிரமம். ஒரு கதையை எழுத ஆரம்பிக்கும்போது அது செல்லும் பாதையை முழுமையாகக் கணிக்கவியலாது. பல்வேறு உத்திகளைப் பயன்படுத்துவதன் மூலம் கதையின் ஓட்டத்தை சரியான பாதையில் செலுத்த முடியும். ஒரு சில உத்திகளை உதாரணங்களாகக் காணலாம்.

உத்தி 1 : நறுக்கென்ற வசனமோ அல்லது பட்டென்ற செயல்பாடோ இதில் எதுவாயினும் நல்லதொரு ஆரம்பமாக இருக்கும்.
“எல்லாம் தயாராக இருக்கிறது. மகிழன் விண்வெளிப் பயணத்தைத் துவங்க வேண்டியதுதான்”
உலக நன்மைக்காக துணிந்து மகிழ்வுடன் கிளம்பியுள்ள மகிழனின் முதன்முதல் விண்வெளிப்பயணத்தைக் காண உலகமே திரண்டு எழுந்திருந்தது!

உத்தி 2: சுவையான ஒரு வினாவின் மூலம் சிந்திக்க வைக்கலாம்.
கனவுகளுக்கு பலன் உண்டா?

உத்தி 3: நடக்கப்போவதை குறியீடாகக் காட்டலாம்.
பறவைகளின் ஒலி மிக வித்தியாசமாக இருந்தது. ஏதோ நடக்கக்கூடாத ஒன்று நடக்கப்போவதின் அறிகுறியை உணர்ந்து அச்சத்தில் அலறும் ஓசை போல இருந்தது.

உத்தி 4: பாத்திரங்களின் நேரடியான அறிமுகங்களுடன் ஆரம்பிக்கலாம்.
மலர்மதி ஆறாம் வகுப்பு மாணவி. வகுப்பில் ஒழுக்கம், அறிவு, பண்பு, பொறுப்பு என அனைத்திலும் முன்னணி வகிப்பவள். ஆசிரியர்களுக்கு எப்பொழுதுமே அவளிடம் தனி பாசம் உண்டு. பல மாணவர்களின் கண்களை உறுத்தும் இந்த செயல், மாலதியை சற்று அதிகமாகவே காழ்ப்புணர்ச்சியில் வேகச்செய்தது.

உத்தி 5: முக்கியமான கதாபாத்திரம் தன்னைத்தானே அறிமுகம் செய்துகொள்வது.
என் பெயர் தீபா. எனக்கு 12 வயதாகிறது. 7ஆம் வகுப்பு படிக்கிறேன். பள்ளியில் இன்று ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடந்தது.

உத்தி 6: அடுத்தது என்ன நடக்கப்போகிறது என்ற ஆவலைத் தூண்டும் ஆரம்பம்.
பார்சலில் வந்த அந்த பெரிய பொருள் ஏதோ சிறு சத்தம் ஏற்படுத்தியதோடு ‘இதைப்பிரிக்க வேண்டாம்’ என்று கொட்டை எழுத்தில் எழுதியிருந்தது. ஆனாலும் சந்தனாவால் தன் ஆசையைக் கட்டுப்படுத்த இயலவில்லை. உள்ளே இருப்பதை உடனே பார்க்கவேண்டும் என்ற பேராவல்.

தவிர்க்க வேண்டியவை:

⦁ நீண்ட சரித்திரங்கள்
⦁ தீவிர நடவடிக்கை
⦁ வளவளவென்ற வசனம்
⦁ முகவுரை
⦁ அல்பாயுசு பாத்திரங்களை அறிமுகம் செய்வது.
⦁ அலாரம் அடித்தது. விழிப்பு வந்தது போன்ற மிக இயல்பான வசனங்கள்.
⦁ முக்கிய கதாபாத்திரத்தின் அழுகை, ஆழ்ந்த சோகம் போன்றவை.
⦁ குழந்தைகளுக்கு பேரதிர்ச்சி ஏற்படும் வகையில் தேவையற்ற சொல்லாடல்கள்.
⦁ குழந்தைகளுக்கு தவறான வழிகாட்டுதல்களை ஏற்படுத்தும் தீய சொற்கள்.

அனைத்திற்கும் மேலாக முக்கியமாகக் கருத்தில் கொள்ளவேண்டியது ஒரு பதிப்பகத்தாரையோ அல்லது பத்திரிக்கை ஆசிரியரையோ, வாசகரையோ முதலில் கவர்ந்திழுப்பது அந்த நூலின் முதல் மூன்று பக்கங்களே! குறிப்பாக ஆரம்பகால எழுத்தாளர்கள் என்றால் இது மிக முக்கியமானதொரு விசயம். பெரும்பாலும் ஆரம்பகால எழுத்தாளர்களின் படைப்புகளின் தலையெழுத்தை நிர்ணயிப்பது அந்த ஆரம்ப கட்ட முதல் மூன்று பக்கங்கள் என்றுகூட சொல்லலாம். முதல் மூன்று பக்கங்களில் சரியாகக் கவனம் செலுத்த முடியாவிட்டால் பல மாத உழைப்புக்குரிய அந்த படைப்பு பதிப்பகத்தாரால் புறக்கணிக்கப்படலாம். ஆகச்சிறந்த களம் கொண்ட 100 பக்க நூல் என்றாலும் பலமற்ற ஆரம்பப்பகுதி என்றால் அதை முழுமையாக வாசித்து தரம் பார்க்கப்படும் வாய்ப்பு மிகவும் குறைவே.

தொலைக்காட்சி, இணையம் என்று சரளமாகப் புகுந்து விளையாடும் இன்றைய குழந்தைகளைப் பொறுத்தவரை பதிப்பகத்தார் அளிக்கும் அந்த மூன்று பக்க கருணை வாசிப்பையேனும் அளிப்பார்களா என்பது உறுதியில்லை. நூற்றாண்டுகளான பழங்கதைகளுக்கு இன்றளவிலும் மதிப்பு அளிப்பார்களா என்ற ஐயம் தோன்றுவது இயல்பு. விக்கிரமாதித்தன், பஞ்சதந்திரம், ஹாரி பாட்டர் போன்ற மிகச்சில கதைகளுக்கு மட்டுமே அதற்கு விதிவிலக்கு உண்டு எனக்கொள்ளலாம். அந்த வகையில் இன்றைய குழந்தைகளைக் கவரும் வகையில் நவீனத்துவம் மிகுந்த கதைகளைப் படைப்பது எவ்வளவு அவசியமோ அதே அளவு அவர்களை உங்கள் நூலை வாசிக்கச் செய்வதும் அவசியம். அதற்கு அந்த படைப்பின் முதல் பகுதி அவர்களைக் கவர்ந்திழுப்பதாக அமைவது முக்கியம். அதற்கு அடுத்தடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற ஆவலைத் தூண்டுவதாக அமைய வேண்டும். முதல் பகுதியே அவர்களை சலிப்படையச் செய்யக்கூடியதாக இருந்தால் அவர்கள் அடுத்த நூலை நாடிச்செல்ல வாய்ப்பாக அமைந்துவிடும்.

உங்கள் புத்தகம் எதைப்பற்றி சொல்லப்போகிறது என்பதை முதல் பகுதியிலேயே அறியத்தருவது நலம் பயக்கும்.

காட்டில் வாழும் விலங்குகள் என்றாலும் நாட்டில் வாழும் இந்த மாமனிதர்களைவிட எந்த அளவிலும் குறைந்தவைகள் அல்ல. பசிக்காக மட்டுமே வேட்டையாடும் வழமை கொண்டவைகள்.

மேற்கண்ட இந்த ஆரம்பம் ஒரு 7/8 வயது சிறுவருக்கு என்ன விளங்கச்செய்யும்? இந்த நூல் காட்டு விலங்குகளின் குணநலன்களை ஆதியோடந்தமாக விளக்கப்போகிறதோ அல்லது தவறு செய்கின்ற மனிதர்களை இனம் காட்டப்போகிறதோ என்ற ஆர்வத்தை ஏற்படுத்தலாம்.

குழந்தைகளை இதுபோன்ற உத்திகள் மூலமாகவே அந்தக் கதையின் சூழலுக்குள் இட்டுச்செல்ல முடியும். அவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வண்ணம் அமைகிற ஆரம்பம் அந்த கதையை முழுமையாகப் படிக்கத்தூண்டுவதாக அமைந்துவிடும். சில நூல்கள் ஆரம்பத்திலேயே அதிலுள்ள முக்கியமானப் பிரச்சனை குறித்த குறிப்பைக்கொடுத்து உடனடியாக வாசிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தலாம். சிறு குழந்தைகளுக்கான படக்கதைகளில் இதை அழகாகச் சொல்வார்கள். வாசித்துக் காட்டுபவர்கள் கண்கள் விரிய வாயைக் குவித்து கையை பரப்பி இப்படி உடல் மொழி மூலமும் புரிய வைக்கும் வகையில் அமையும் கதைகள் சுவை கூட்டுபவை.
அந்த நட்டநடு இரவில் செவ்வண்ணத்தில் தோய்ந்து கிடந்த அந்த நரி மறைந்து மறைந்து எங்கேதான் போகிறது? ஓ அங்கே அந்த கிழட்டுச் சிங்கம் காத்துக்கிடக்கிறதே?

இதில் அந்தக் குழந்தை குறுக்கே தன் கற்பனையையும் அவிழ்த்துவிடும். கேள்வியும் கேட்கும். ‘ஏன் அந்த நரி சிகப்பு கலர் பூசிக்கிச்சு’ என்று ஆரம்பித்து சிங்கம் கிழடானா நடக்க முடியாதா…’ என்று இப்படி பல கேள்விகளும் கேட்டு கதையை உரிரோட்டமாக்கிவிடும். அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று அறிவதில் அதீத ஆர்வம் காட்டுவர். அதுவே அந்த கதைக்கும், அதை எழுதியவருக்கும் கிடைக்கும் வெற்றி.

முக்கியமான கதாபாத்திரம் பற்றி புதிரான செய்திகளைக்கூறி ஆர்வத்தை ஏற்படுத்தலாம். ஏதாவது கேள்வியை எழுப்பி சிந்திக்க வைக்கலாம்.

“நான் சின்ன பொண்ணா இருந்தப்ப, அப்பா என்றாலே இப்படித்தானா, முரட்டு மீசையும், கையில குச்சியுமா திரிவாங்களா.. அப்பா ஏன் அப்படி அடிச்சார் என்னை. அவரோட இனிமே என்னைக்குமே பேசவே மாட்டேன் அப்படீன்னு ஊருக்கே கேக்கற மாதிரி சத்தம் போட்டேன்”

இதைப்படிக்கும் குழந்தைக்கு பல வினாக்கள் எழும். அதன் விடை காண அடுத்த பகுதிக்குச் செல்லத் துடிக்கும்.

“பள்ளிக்குச் செல்லும் வழியில் கொஞ்ச நாட்களாக தினமும் என்னை பின் தொடர்ந்துவரும் அந்த குண்டு மனிதனைப் பற்றி இன்றாவது அப்பாவிடம் சொல்லிவிட வேண்டும் என்றுதான் நினைத்தேன். ஆனால் அதற்குள் இப்படி ஆகும் என்று நான் நினைத்தே பார்க்கவில்லை”

இப்படி ஆரம்பிக்கும் கதை அந்தக் குழந்தையை கட்டாயம் அப்படி என்னதான் நடந்தது என்று அறியும் ஆர்வத்தை தூண்டாமல் இருக்காது. இதில் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த பல செய்திகளை சுவைபட கொடுக்க முடியும். அறிவுரை என்ற வகையில் இல்லாமல் சுவையான சம்பவங்களினூடே தேவையான பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துவது சிறந்த யுக்தி.

பழைய சரித்திரக் கதைகளைச் சொல்லும்போது, அவை நடந்த காலகட்டங்கள், அந்தக்கால மரபு, பழக்க வழக்கங்கள் போன்ற பல சுவையான ஐயங்கள் எழலாம்.
இப்படி பல வகையில் அவரவர் களத்திற்கேற்ப ஆரம்பப் பகுதியை வடிவமைக்கலாம்.

தொடருவோம்

Leave a Reply

Your email address will not be published.