ஒரு புலி,ஒரு கலைமான் மற்றும் ஒரு நட்பு

ஸ்ரீஜா வெங்கடேஷ்

அந்தப் புலி மிகவும் அடிபட்டிருந்தது. வனத்தை அளக்கும் அதன் கால்கள் முறிந்து விட்டன. எல்லாம் கவனக்குறைவால் வந்த வினை. யானை மந்தையிலிருந்து ஒரு சிறு யானைக்குட்டியை வேட்டையாடும் போது கூட்டத்தின் தலைவன் பார்த்து விட்டது. தன் தந்தங்களால் கீறி காலால் உதைத்துத் துவைத்து விட்டது. பின்னங்கால்கள் இரண்டும் ஒடிந்து விட்டன. அதனால் இனியும் குறைந்தது ஆறு மாதங்களுக்காவது இரை தேட முடியாது. அந்த வனாந்தரத்தில் யார் தனக்கு உதவப் போகிறார்கள் என்று புலி வெறுப்புற்றிருந்த நிலையில்தான், அந்த மான் புலியின் வாழ்க்கையில் வந்தது.

எங்கும் காணக் கிடைக்கும் சாதாரண புள்ளிமான் அல்ல அது. கொம்புகளில் அழகு மிகுந்திருக்கும் கருநிறக் கலைமான். அழகிய கண்களில் எப்போதும் சோகம் தென்படும் ஒரு அப்பாவி ஜீவன். புலியின் நிலையைப் பார்த்த உடனே உதவிக்கு ஓடி வந்தது. என்ன செய்ய!! அதன் இயல்பு அப்படி.  ‘புலி தன் இனத்திற்குப் பரம விரோதியாயிற்றே, அதைக் காப்பாற்றலாமா?‘ என்றெல்லாம் நினைக்கத் தெரியவில்லை அதற்கு. ஏதோ ஒரு உயிர் கஷ்டத்திலிருக்கிறது. அதற்கு உதவ வேண்டும் என்பது மட்டுமே மானின் எண்ணமாக இருந்தது.

மானின் பணிவிடைகள் புலிக்கு அந்த நேரத்தில் மிகவும் தேவையாக இருந்தன. அடிபட்ட கால்களில் கட்டுப் போட்டு கனிவோடு கவனித்துக் கொண்டது மான். அந்த இதத்தில் தன்னை மறந்தது புலி. புலிக்கும், மானுக்கும் இடையே ஒரு மெல்லிய நட்பு உருவாக ஆரம்பித்தது. பகற் பொழுதில் மான் இரை தேடி வரும் தனக்கும் புலிக்குமாக. கிடைத்ததை பங்கு போட்டுச் சாப்பிட்டு விட்டு நல்ல மர நிழலில் ஓய்வாக அமர்ந்து இரண்டும் கதை பேசிக் கொண்டிருக்கும். அந்தத் தருணங்களில் இருவரின் நெஞ்சிலும் இனம் புரியாத ஒரு நிம்மதி, மகிழ்ச்சி ஊடாடும். பேசிக் கொண்டிருக்கையிலேயே புலி தூங்கி விடும், அப்போது மான் புலியை யாரும் தொந்தரவு செய்யாத வண்ணம் பார்த்துக் கொள்ளும்.

புலிக்கு வாயிலும் அடிபட்டிருந்ததால் மான் கொடுக்கும் புற்களும், கீரை வகைகளும், பூக்களுமே போதுமானதாக இருந்தது. இந்த இருவரின் நட்பைப் பற்றி காடே பேசியது. மற்ற மான்கள் கவலைப் பட்டன. ஒரு நாள் வயதான மான் ஒன்று புலி தூங்கும் நேரம் மானைத் தனியாக அழைத்தது. “குட்டி மானே! நீ இப்போது செய்துகொண்டிருக்கும் செயலின் தீவிரம் என்ன என்பதை அறிவாயா? என்றாவது புலி உடல் பலம் திரும்பியதும் உன்னையே உணவாக்கிக் கொள்ளாது என்பது என்ன நிச்சயம்? அதனால் புலியோடு உன் நட்பை விட்டு விடு. அது தான் உனக்கு நல்லது” என்று அறிவுரை கூறியது. ஆனால் மான் “என்னுடைய புலி அப்படிப் பட்டது அல்ல. எங்காவது புலி கீரை தின்று பார்த்திருக்கிறாயா பாட்டா? எனக்காக அதையும் தின்கிறதே அது தான் நட்பு” என்று கூறி அனுப்பி விட்டது.

நாட்கள் ஓடின. அவற்றின் நட்பில் சிறு விரிசல் கூட விழவில்லை. மற்ற விலங்குகளே அதிசயிக்க ஆரம்பித்தன. பௌர்ணமி நிலவில் அழகான ஒரு பொய்கையின் கீழிருந்து இரண்டும் வனத்தின் அழகையும், வானத்தின் அழகையும் கண்டு களிக்கும்.  தெளிந்த அந்த வானத்து நட்சத்திரங்கள் எல்லாம் தங்களை வாழ்த்துவதாகவே கருதிக்கொள்ளும்.

அந்த நேரங்களில் இந்தப் பரந்த உலகில் அவர்கள் இருவரையும் தவிர யாருமில்லை என்பது போல ஒரு மாயத்தோற்றம் இருவர் மனதிலும் உண்டாகும். மான் கண்களில் கண்ணீருடன் “புலியே உனக்கு உடம்பு சரியானதும் நீ என்னை விட்டு நீங்கி விடுவாயல்லவா? அப்போது நம் நட்பு தொடர முடியாது அல்லவா?” என்று கேட்கும். புலியின் கண்களிலும் கண்ணீர் அந்த நிலவின் பிரகாசத்தில் ஒரு மாணிக்கம் போல் ஜொலிக்கும். “இந்த உலகில் உன்னை விட்டால் யார் உண்டு எனக்கு? உன்னை நான் நீங்குவதா?” என்று மேலே பேச முடியாமல் தேம்பும். இத்தனை பாசம் வைத்திருக்கும் புலியிடம், தான் அவ்வாறு கேட்டது தவறு என்று மான் சமாதானப் படுத்தும். ஆனந்த மயமாக நாட்கள் ஓடின.

புலியின் உடல் நிலை நாளுக்கு நாள் முன்னேறியது. இப்போது புலி ஓரளவு நன்கு தேறி விட்டது. காட்டில் ஒரு அரசனைப்போல் எந்தக் கட்டுப்பாடும் இன்றி திரிந்து கொண்டிருந்த காலம் அதன் நினைவில் ஆடியது. ஒரு மெல்லிய ஏக்கம் அதை சூழ்ந்து கொண்டது. மான் கொண்டு தரும் உணவுகள் பிடிக்காமல் போயின. ஆனால் மானிடம் இதைச் சொல்லவும் தயக்கமாக இருந்தது. ஒரு வேளை தவறாக நினைத்துக் கொண்டால்? ரத்தவாடை மிகுந்த பச்சை இறைச்சிக்காக அதன் மனம் ஏங்கியது. தன்னைக் கண்டு அஞ்ச வேண்டிய மிருகங்கள் இப்போது பயப்படுவதில்லை என்பது அதன் கர்வத்திற்கு ஒரு சவாலாக இருந்தது.

மான்களையும், ஆடுகளையும், ஏன் காட்டெருமைகளைக் கூட விரட்டி விரட்டி வேட்டையாடிய சம்பவங்கள் மீண்டும் மீண்டும் கண்முன் தோன்றின. ‘எப்போதும் குறி வைத்த மிருகங்களை ஒரு குறிப்பிட்ட திசையில் துரத்திச் சென்று அது ஓடி ஓடிக் களைத்து தன் குகை வாயிலிலேயே இளைப்பாற வைக்கும் சாமர்த்தியம் கொண்ட தானா இன்று இப்படி இலைகளையும், தழைகளையும் தின்று கொண்டிருப்பது?’ என்று கழிவிரக்கம் தோன்றி மனம் முழுவதும் வியாபித்தது. சதைப்பற்று நிறைந்த மிருகங்களின் உடலைப் பார்க்கும் போதே நாவில் நீர் ஊறியது. ‘என்னுடன் இருக்கும் இந்த மானை விரட்டிச் சென்று தன் குகை வாயிலில் அடித்துச் சுவைத்தால் எத்தனை இன்பமாக இருக்கும்? நன்கு கொழுத்திருக்கும் இதன் ரத்தம் தான் எத்தனை சுவையாக இருக்கும்?’

இந்த எண்ணம் தோன்றிய போது புலி திடுக்கென்று விழித்துக் கொண்டது. “சேச்சே! என்ன கொடூரமான எண்ணம்?” என்று தலையை ஆட்டிக் கொண்டது. இனியும் மானோடு இருந்தால் ஏதேனும் விபரீதம் நேர்ந்து விடலாம் என்ற அச்சம் தோன்றியது அதற்கு. இந்த மான் ஏன் தன்னைப் பிடித்துக் கொண்டு தொங்குகிறது என்று முதல் முறையாக எரிச்சல் பட்டது.

இந்த இடத்தில் கதை நின்று போயிருந்தது.

ஒரு வரி விடாமல் வாசித்து விட்டு மதுமதி காகிதங்களை அதன் இடத்திலேயே திரும்ப வைத்தாள். கதையை எழுதியவனைக் காணோமே என்று எண்ணமிட்டாள். மதுமதி எதிர்பார்த்துக் கொண்டிருந்தது என்னைத்தான். தொலைவில் வரும் போதே என் அறைக் கதவு திறந்திருப்பதைப் பார்த்து விட்டேன். என்னைத் தவிர மதுமதி ஒருத்தியிடம் தான் சாவி உண்டு. “மதுவா வந்திருக்கிறாள்? பார்த்துக் கிட்டத்தட்ட 15 நாளிருக்குமே? போன முறையே அவள் சொன்ன நிபந்தனைக்கு ஒப்புக் கொள்ள முடியாது என்று தீர்மானமாக சொல்லி விட்டேனே? பின் எதற்கு வந்திருக்கிறாள்? ஒருவேளை மனம் மாறி, என் காதல் தான் முக்கியம் என்று எல்லாவற்றையும் தூக்கிப் போட்டு விட்டு வந்து விட்டாளோ?” மனதுள் ஆயிரம் பூக்கள் கும்மென்று பூத்தன. நடையை எட்டிப் போட்டேன்.

உள்ளே நுழையக்கூட இல்லை “இந்தக் கதையில யாரு புலி? யாரு மான்?” என்றாள். எனக்கு முகத்தில் அடித்தாற் போலிருந்தது. பதில் சொல்லவில்லை. என் மௌனத்தை தப்பாக எடுத்துக் கொண்டு “உனக்கு என்னைப் பாத்தா அலட்சியமா இருக்கா? சம்பாதிக்கத் துப்பில்லாத உன்னைப்போய் காதலிச்சேன் பாரு, எனக்கு இது தேவைதான்” என்றாள் ஆங்காரத்துடன்.

இனியும் பேசாமல் இருந்தால் நன்றாக இருக்காது என்று எண்ணியவன் “கவிஞன், எழுத்தாளன்னு தெரிஞ்சு தானே காதலிச்சே? நான் எழுதின கவிதைகள் எல்லாம் லட்சம் பெறும் கோடி பெறும்னு சொன்னியே? இப்போ என்ன திடீர்னு?” என்றேன். எனக்கு அவள் மாற்றத்திற்கான காரணத்தைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம்.

“ஆமா ! சொன்னேன்! இல்லேங்கலியே! இவ்வளவு திறமைய வெச்சுக்கிட்டு நீங்க சினிமாவுக்குப் பாட்டெழுதலாம் இல்லே? எவ்ளோ பணம் கெடைக்கும்? புகழும் கூடக் கெடைக்கும். எங்கப்பா தெரிஞ்சவங்க கிட்ட சொல்லி சான்ஸ் வாங்கித் தரேன்னு சொன்னாரு அதுவும் முடியாதுன்னிட்டே. சரி அதுதான் போகுதுன்னு அப்பா ஒரு பிசினஸ் ஆரம்பிச்சுத் தரேன் அதையாவது பாத்துக்குங்கன்னாரு அதுக்கும் முடியாதுன்னு சொல்லிட்டே? நீ என்ன தான் நெனச்சிக்கிட்டு இருக்கே? காலம் பூரா இப்படியே சோம்பேறியா இருக்கலாம்னு நெனக்கிறியா?” என்றாள். அவள் பேசும் ஒவ்வொரு சொல்லும் உண்மை தான். ஆனால் நான் வியாபாரி அல்லவே? என்னால் என் கவிதையை முடமாக்க முடியாது.  வணிக வாழ்க்கையோடு சமரசம் செய்து கொள்ளத் தயாரில்லாதவன் சோம்பேறியா? அவளுக்கு பதில் சொல்லத் துடித்த நாவை அடக்கிக் கொண்டேன்.

கடைசியா ஒரு தடவ உங்கூடப் பேசிப் பாக்கறதுக்குத் தான் நான் வந்துருக்கேன். நீ ஒண்ணுமில்லாதவன்னு தெரிஞ்சும் எங்கப்பா உன்னை வேண்டாம்னு சொல்லல்லே!  நீ மேலும் மேலும் முன்னேற உனக்கு உதவி பண்ணத் தயாராயிருக்கார். இதுக்குமேல நீ என்ன எதிர்பார்க்கறே?” என்றாள். ‘நான் எதிர்பார்ப்பது என் சுயத்தை இழக்காமல் இருப்பது ஒன்று தான்’ என்று நினைத்துக் கொண்டேன் சொல்லவில்லை.

என் மௌனம் அவள் கோபத்தைக் கிளறியிருக்க வேண்டும். “நீ திருந்தவே மாட்டே. இந்த ஜென்மத்துல உருப்படவும் மாட்டே. உங்கூட சேர்ந்து கஷ்டப் பட நான் தயாரில்லே. மனசுக்குள்ள பெரிய பாரதியார்னு நெனப்பு. உன் கதையை படிக்கற போதே நெனச்சேன், நீ உன் முடிவுல மாறல்லேன்னு. உங்கிட்ட வந்து பேசினேன் பாரு என்னைத்தான் சொல்லணும். இனிமே உன்னைத் தேடி வருவேன்னு நெனைக்காதே. இந்தா உன் ரூம் சாவி , ஒன் அஞ்சு காசுக்கு பெறாத கவிதயக் கட்டிக்கிட்டு நீயே அழு” தூக்கி எறிந்து விட்டுப் போய் விட்டாள்.

பொத்திப்பொத்தி வளர்த்த மூன்று வருடக் காதல். மூன்றே நிமிடங்களில் தூக்கியெறிந்து விட்டாள். அந்தி மயங்கும் வேளையில் கடற்கரையில் நான் சொன்ன கவிதைகளைக் கண்கள் செருகக் கேட்டவள் என்னைக் கடை வைத்துப் பிழைக்கச் சொல்கிறாள். யாருக்காகவும் என் கொள்கையை விட்டுக் கொடுக்காத தன்மையைப் பார்த்து “நீ ஒருத்தன் தாண்டா ஆம்பள”  என்று என்னைக் கட்டிக் கொண்டவள், மற்றொருவர் முன் என் கவிதைகளை அடகு வைக்கச் சொல்கிறாள். ஒருவேளை உலகத்தோடு ஒத்துப் போகாமல் இருப்பது தவறோ? பலவாறு எண்ணமிட்டவன் மீதிக் கதையை எழுதப் புகுந்தேன்.

புலியின் மாற்றங்கள் மானுக்கும் தெரியாமல் இல்லை. என்ன இருந்தாலும் தன் நண்பன் தன்னை விட்டு விலகாது என்ற நம்பிக்கையில் இருந்தது மான். புலியால் இனிமேலும் இறைச்சி இல்லாமல் வாழ முடியாது என்ற நிலை வந்தது. மானிடம் சென்று “நான் சிறு வயதிலிருந்தே சாப்பிட்ட உணவு இறைச்சி, என் உடலுக்கும் அதுதான் தேவை. இல்லையென்றால் என்னால் வேகமாக ஓட முடியாது, என் வலுவும் போய் விடும். அதனால் நான் இறைச்சி சாப்பிட்டாக வேண்டும், நீயும் ஏன் சாப்பிடக் கூடாது. நாமிருவரும் என் குகையிலேயே வாழலாம். இத்தனை நாள் எனக்காக நீ உணவு தேடித் தந்தாய். இனி நான் உனக்காக வேட்டையாடுவேன். உனக்கும் வேட்டையாடக் கற்றுத் தருவேன். நமக்கு நிறைய இறைச்சி கிடைக்கும், அவற்றை நீ சாப்பிட்டால் என்னைப் போல பலசாலியாகி விடுவாய்” என்றது.

கேட்டுக் கொண்டிருந்த மானுக்கு, இருவரும் பிரியும் காலம் வந்து விட்டது என்று தெரிந்து போயிற்று. எந்த வினாடிக்காக அது நட்பு தொடங்கிய காலம் முதல் பயந்து கொண்டிருந்ததோ அந்த வினாடி இதுதான் என்று புரிந்து கொண்டது. ஆனால் ஏனோ அது நினைத்த அளவுக்கு துக்கம் பீறிட்டு வரவில்லை. மனம் மிகவும் கனத்துப் போனது. அதே சமயம் ஏனென்று தெரியாமல் ஒரு மெல்லிய ஆசுவாசம்.

கண்ணோரம் பனித்த நீர்த்துளிகளுடன் புலியை நோக்கி “உன்னால் எப்படி உன் இயல்பிலிருந்து மாற முடியாதோ அப்படியேதான் நானும். என் இனிய நண்பனே! நீ உன் வழியில் செல், நான் என் வழியில் செல்கிறேன். என்றாவது ஒரு நாள் நீ மான் கூட்டத்தை விரட்டும் போது என்னை அடையாளம் தெரிந்து விட்டு விடுவாய் என்று நம்புகிறேன்” என்று கூறி விட்டுத் தலையைப் புல்லில் புதைத்துக் கொண்டது. ஒரு நிமிடம் தயங்கிய புலி, மானை ஒரு பார்வை பார்த்து விட்டு தன் குகையை நோக்கி நடந்தது. மானின் அழகிய கண்களிலிருந்து கண்ணீர் பெருகி அந்தப் பசும்புல்லை நனைத்தது.

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “ஒரு புலி,ஒரு கலைமான் மற்றும் ஒரு நட்பு

 1. ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றல் Superb.

 2. . இனிய கதை…. எளியநடை…… நல்ல கருத்து….!அருமையான முடிவு….. அபாரம்…! வாழ்த்துக்கள்.

 3. Good article, superb! It express the true friendship never failure.

  Please continue to give this type of story. Don’t stop.

  Thank you

  Yours
  Srirangam Sridharan

 4. அன்புள்ள கதா ஆசிரியர் அவர்களுக்கு

  நீண்ட நாட்களுக்கு பிறகு தங்களின் படைப்பை பார்க்கின்ற பொது மனதில் ஒரு மகிழ்ச்சி. ஒரு புலி மற்றும் மானின் நட்பு மிகவும் அருமை.

  கதையின் ஆரம்பம் மற்றும் முடிவு அருமை.

  என்றும் அன்புடன்
  ஸ்ரீரங்கம் சாரதா ஸ்ரீதரன்

 5. marvelouswriting.But Idonotagree with the comparison of animal friendship with humanlove.Inthe present matearialistic world earning money is more important.This storey fitsin well with post liberalisation India.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *