மீ.விசுவநாதன்
பகுதி: பதினொன்று

பாலகாண்டம்

ஸ்ரீராம-தர்ம-சரிதம்-2

விஸ்வாமித்திரர் தயரதனிடம் விடுத்த கோரிக்கை

 

சொன்னசொலை மீறாத குலத்தினிலே வந்த
கோவே! நற் குணக்குன்றே உன்வார்த்தை கேட்டு
இன்னமுதைப் பெற்றுவிட்ட இன்பத்தைக் கொண்டேன் !
என்னுள்ள எண்ணத்தைச் சொல்கின்றேன் ! எந்தன்
இன்னலைநீ போக்கிடுவாய் என்றுன்னை நம்பி
இப்போதே உரைக்கின்றேன் கேட்பாய்நீ ! வேள்வி
முன்னிலையில் காவலுகுன் மூத்தமகன் தன்னை
முகமலர்ந்து அனுப்பிடநீ முடிவெடுப்பாய் மன்னா ! (1)

காரணத்தைச் சொல்கின்றேன் கவனித்துக் கேட்டால்
கட்டாயம் என்சொல்லின் கருத்தினைநீ ஏற்பாய் !
வாரணத்தை விழுங்கிவிடும் வலிமையைக் கொண்ட
“மாரீசன், சுபாகு”வெனும் வல்லசுரர் வந்து
காரணமே இல்லாமல் கணக்கில்லாத் துன்பம்
காட்டிலுள முனிகளுக்கே செய்கின்றார் நித்தம் !
பூரணமாய் ஒருயாகம் முடிப்பதற்கு மேலோர்
பொழுதெல்லாம் தவிகின்றா(ர்) என்போலே என்றார் ! (2)

அசுரரைநான் சாபமிட்டே அழித்திடலாம் ! ஆனால்
அப்படியோர் கோபத்தால் தவவலிமை போகும்,
நசுங்கிப் போய்விடுமே நாம்பெற்ற ஞான
நலமெல்லாம் ஓர்நொடியில் என்றெண்ணி வந்தேன்
விசும்புவரை ஓங்குபுகழ் வேந்தனுனைத் தேடி !
வேதத்தைக் காப்பவரை வேந்தந்தான் காப்பான் !
பசுக்களுக்கும் அந்தணர்க்கும் பார்மன்னன் தானே
பக்கபலம்! அதனால்தான் வந்தேன்நான் என்றார். (3)

தயரதன் மகன் இராமனை அனுப்ப மறுத்தல்

தயரதனோ இதுகேட்டுத் தண்ணீரை விட்டுத்
தரையினிலே தாவிவிட்ட மீன்போல வீழ்ந்தான்!
வியர்த்தவுடல் நடுக்கமுற, “வேதவழி நிற்கும்
விண்புகழ்சூழ் யோகியரே வேண்டாமென் பிள்ளை,
தயவுசெய்வீர் நானேநேர் வந்துமக்கு யாகக்
காவலாக இருக்கின்றேன், கண்மணியாம் ராமன்
செயலறியாச் சிறுவனென்பேன்! சிந்தனையை மாற்றிச்
செவிமடுப்பீர் என்வார்த்தை ! சேர்த்திடுவீர் என்னை !” (4)

தயரதன் மறுப்பும் வீரமுனியின் கோபமும்

என்றமொழி கேட்டவுடன் எரிதழலைக் கக்கும்
இருவிழியால் தயரதனை ஏறிட்டுப் பார்த்து ,
“கொன்றுவிட்டாய் உன்முன்னோர் குலத்தினது வாக்கின்
குடிப்பெருமை ! குருவசிட்டன் பெருமைமிகு சீட(ன்)
இன்றுமுதல் அப்பெருமை விட்டுவிட்டா(ன்)” என்றார் !
இதுகேட்டு வசிட்டருடன் எழுதுவந்து, “மன்னா
நன்றுசொல்வேன் இராமனைநீ நல்முனியின் யாக
நலம்காக அனுப்பிடுதல் வேண்டுமெனச் சொன்னார் ! (5)

குலகுரு வசிட்டரின் நல்லுபதேசம்

மேலுமிவர் அஸ்திரங்கள் மேன்மையெலாம் நன்கு
சேர்த்திருக்கும் வீரமுனி ! செய்தவத்தால் தேவர்
மேலாக ஆனவர்தான் ! திடமாகச் சொல்வேன்
இராமனுக்கு ஏற்றகுரு இவரென்பேன் !”என்று
நூலறிந்த வசிட்டருமே நோய்தீர்க்கும் நல்ல
மூலிகையின் குணம்போலக் குறிப்பறிந்து சொல்ல
நாலுதிசை வென்றிட்ட தயரதனும் அங்கே
ஞாயிறுவின் ஒளிவிஞ்சும் நல்மகனை இங்கே (6)

தயரதன் ஆணைப்படி இராம, இலக்குவர்கள் சென்றனர்

அழைத்துவர ஆளனுப்ப ஆணையும் தந்தார் !
அப்பாவின் வார்த்தைக்கு அடிபிசகாப் பிள்ளை
பிழையில்லா இராமனுடன் இலக்குவனும் வந்தான் !
பெரியமுனி முன்செல்ல இருவருமே அந்த
மழைக்கால மேகத்தின் வழியொற்றிக் கொண்டு
மகத்தான அம்பு,வில் தோளுடனே சென்றார் !
தழைத்துவரும் பூச்செடிக்குத் தண்ணீரைப் பாய்ச்சும்
தகைமையெனத் தவமுனியும் இருவரையும் காத்தார் ! (7)

பலா – அதிபலா மந்திர உபதேசம்

மாலைவேளை சரையூவின் வடகரைக்கு வந்து
மனத்தூய்மை கொள்வதற்கு மந்திரங்கள் சொல்ல
சோலையின் இளங்காற்று பூக்கொய்து போட
சுகமான வேளையிலே “பலாதிபலா” என்னும்
மேலான மந்திரத்தை இராமனுக்குத் தந்து
மிகையில்லை மேதினியில் இனியென்றும் மிக்க
சீலமுடன் திகழ்வாய்நீ சத்தியமென் வாக்கு
எப்பகையும் உன்முன்னே எரிந்துவிடு மென்றார் !

(தர்ம சரிதம் வளரும்)

(ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் பாலகாண்டத்தில் 19, 20, 21, 22 பகுதிகள் நிறைந்தது)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *