இலக்கியம்கவிதைகள்

கைகோர்த்து நிற்போமே !

 

 

எம் . ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்திரேலியா 

gandhi_delhi_500_22_05278

 

பசித்திருந்தார் தனித்திருந்தார்
விழித்திருந்து செயற்பட்டார்
பழிபாவம் தனைவெறுத்துப்
பக்குவமாய் வாழ்ந்திருந்தார்!

தனக்கெனவே பலகொள்கை
இறுக்கமாய்க் கடைப்பிடித்தார்
தளர்ந்துவிடும் வகையிலவர்
தனைமாற்ற விரும்பவில்லை!

பொறுப்புகளைப் பொறுமையுடன்
பொறுப்பேற்றே ஆற்றிநின்றார்
வெறுத்தாலும் பலவற்றை
விருப்பமுடன் அவர்செய்தார்!

மற்றவரை மனம்நோக
வைக்காமல் இருந்துவிட
மனத்தளவில் வேதனையை
வைத்துவிட்டார் மாமனிதர்!

தன்வீட்டை நினையாமல்
தாய்நாட்டை நினைத்துநின்றார்
தாய்சொல்லைத் தட்டாத
தனயனாம் காந்திமகான்!

தாய்சொல்லே வேதமாய்
தான்மனத்தில் கொண்டதனால்
தாய்நாட்டின் விடுதலைக்காய்
தனையிழக்கத் துணிந்துநின்றார்!

உடையை மாற்றினார் உணவை மாற்றினார்
படையை மாற்றினார் பாதைகூட மாற்றினார்
ஆயுதத்தை மாற்றினார் அஹிம்சைதனை ஏற்றினார்
அகிலம்பார்த்து வியந்துநிற்க அரக்கத்தையும் ஓட்டினார்!

நீதிபார்த்து நின்றுநின்று நிமிர்ந்து செயலாற்றினார்
சாதிபேதம் தனையுடைத்துச் சமத்துவத்தைப் போற்றினார்
பாதியாடை தானுடுத்திப் பார்வியக்கச் செய்திட்டார்
பாரதத்தை மீட்டெடுத்த பாரதத்தின் பொக்கிஷம்!

பண்புகாத்து பலரும்போற்ற பாரதத்தை உருவாக்க
பட்டபாடு கொஞ்சமல்ல காந்திமகான் வாழ்வினிலே
காந்திபட்ட பாடெல்லாம் கடுகளவு நினையாமல்
காற்றிலே பறக்கவிட்டுக் கவலையின்றித் திரிகின்றார்!

நீதியொரு பக்கம் நிட்டூரம் மறுபக்கம்
சாதியொரு பக்கம் சதிகாரர் நாற்பக்கம்
கள்ளமின்றிச் சிரிக்கின்ற காந்திபடம் காசுதனில்
கள்ளப்பண முதலைகளோ நல்லவராய் உலவுகிறார்!

காசுபற்றி நினையாத காந்திமகான் இப்போது
காசுதனில் இருந்தாலும் கவலையுடன் தானிருப்பார்
காந்திதனைக் காசில்வைத்துக் கலப்படங்கள் செய்வாரைக்
காந்தி ஜயந்திதனில் கல்லெறிந்து கொல்லல் வேண்டும்!

மதுவெறுத்த காந்திமகான் மனம்மகிழ வைப்பதற்கு
மதுக்கடையை ஒழித்துவிட மனத்திலெண்ணம் வருமாயின்
புதிதான பாரதத்தைப் பூமியிலே கண்டிடலாம்
அதுதானே காந்திமகான் ஜயந்திக்கே அர்த்தமாகும்!

கொடியேற்றம் மலர்வளையம் கொண்டாட்டம் பேச்சரங்கம்
வெளிவேஷம் எல்லாமே காந்திக்குப் பொருத்தமல்ல
பழிபாவம் தருகின்ற பாதகங்கள் தனையொழித்துப்
பாரதத்தை மீட்டுவிட்டால் காந்திக்குப் பெருமைவரும்!

காந்தி ஜயந்திதனைக் கருத்துடனே மனத்திருத்திக்
காந்தி மனம்விரும்பும் காரியங்கள் செய்துநிற்போம்
காந்தி மகான் கண்டெடுத்த கண்ணான சுதந்திரத்தைக்
காந்தி மகான் வாழ்த்திநிற்கக் கைகோத்துக் காத்துநிற்போம்!

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க