செல்வன்

இவ்வார வல்லமையாளராக திரு. இரா.பானுகுமார் அவர்களை அறிவிப்பதில் வல்லமை பெருமகிழ்ச்சி அடைகிறது.

இன்று தமிழ்மரபில் சமணத்துக்கு இருக்கும் உயர்ந்த இடத்தை உலகுக்கு அறிவிக்கும் “தமிழ் சமண மரபு விக்கி” பக்கம் தமிழ்மரபு அறக்கட்டளையால் வெளியிடப்பட்டது. இதற்கு மிக முக்கிய காரணமாக அதன் தலைவி முனைவர் சுபாஷினி அவர்களையும், திரு பானுகுமார் அவர்களையும், செல்வமுரளி அவர்களையும் தமிழ் மரபு அறக்கட்டளை அறிவித்திருக்கிறது. இந்த பக்கம் வெளியாவது தமிழ் சமணத்தின் வரலாற்று சுவடுகளை தமிழர் அறியமிக உதவி செய்யும் என வல்லமை நம்புகிறது.

சமணத்துக்கும் தமிழருக்கும் உள்ள உறவு மிக தொன்மையானது. ஆயிரமாயிரம் ஆண்டு பழமையானது. ஆனால் கால ஓட்டத்தில் சமணமதம் தமிழகத்தில் இருந்த சுவடே தெரியாது இருந்த நிலையில் அதன் தொன்மையை வலையுலகில் பரப்பியவர்களில் பானுகுமார் அவர்கள் மிக முக்கியமானவர். 15 ஆண்டுகளுக்கு முன்பே அவர் வலைப்பதிவில் தமிழ்சமணம் குறித்து எழுதிய கட்டுரைகளை படித்து வியந்துகொண்டிருந்தேன். அவரும் பொள்ளாச்சி நாசா. கணேசன் அவர்களும் சமணர் குறித்த பல கட்டுரைகளை எழுதினார்கள். தமிழ் மரபு அறக்கட்டளை அதற்கு பேருதவி செய்துள்ளது.

சமணம் பற்றி மக்களுக்கு இருக்கும் பல குழப்பங்களை தெளிவிக்கிறார் பானுகுமார். உதாரணமாக சமணம் இல்லறவியலையும், இன்பத்தையும் மறுக்கிறது எனும் மாயையை கீழ்கண்டவாறு உடைக்கிறார்

“உலகியல் ஒழுக்கங்களை அல்லது உலக இயல்பை இரண்டு அறங்களாகப் பிரித்துப் பார்க்கிறது சமணம். இந்திய சமயங்களில், முதன் முதல் “இல்லறம்”, “துறவறம்” என்றும் தனி தனியே ஒழுக்கங்களை எடுத்தோம்பிய சமயம் சமணமாகத்தான் இருக்கும்!

மக்களை நன்வழிப் படுத்தி அவர்களை பாங்குற வழிநடாத்தி செல்ல “சிராவக தர்மம்” என்னும் இல்லற தர்மத்தை வகுத்துக் கொடுத்து, உலக இன்னல்களில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு உலகப்பற்றைத் துறந்து வீடுபேறடைய “யதி தர்மம்” என்னும் துறவற தர்மத்தை வகுத்துக் கொடுத்து வழங்கியது சமணம் என்றால் அது மிகையல்ல!

“இல்லறம் ஏனைத் துறவறம் என்றிவற்றைப்
புல்ல உரைப்பது நூல் – அருங்கலச் செப்பு (60)

வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதல் நூலாகும் – அஃதாவது, உலக முதல் முனைவனான “ஆதிபகவனால்” அருளப்பட்டது முதல் நூலாகும். மேலே காட்டியப் பாடல் சொல்வதுப் போல் அவ்வாறு அருளப்பட்ட நூல் இல்லறமும், துறவறமும் ஆகிய இரண்டு அறங்களையும் கொண்டு விளங்கும் என்றும் அறிவுறுத்துகிறது. “

ஸ்வஸ்திகாவுக்கும் சமணத்துக்குள் உள்ள தொடர்பு என்ன என்பதை கீழ்கண்டவாறு விளக்குகிறார்

“பாரத சமயங்களில் மிகப் புனித சின்னங்களுள் இந்த ஸ்வஸ்திகமும் ஒன்று.
இச்சின்னத்தை எல்லா பாரத சமயங்களும் மங்கல சின்னமாக கருதினாலும்,
சமணத்தில் இதற்கு ஒரு தனியிடம் உண்டு. நிகழ்க் கால ஏழாவது
தீர்த்தங்கரரின் (சுபார்ச்வநாதர்1)இலாஞ்சணமும் (சின்னம்) ஸ்வஸ்திக்
தான். சமணர்களுக்கு இது அடையாளச் சின்னமுமாகப் பயன்படுகிறது.
சமணர்கள் தங்கள் வீட்டுக் கதவுகளில் இவற்றை பொறித்து வைப்பர்.
வெளி ஊர்களில் இருந்து புலம் பெயரும் சமணக் குடும்பங்களை இந்த
சின்னத்தை வைத்தே, சமணர்கள் வாழும் வீட்டை அடையாளம் கண்டுக்
கொள்வார்கள்.”

சமணத்தின் சிறப்பையும், தமிழ் மரபில் அதற்குள்ள சிறப்பையும் தமிழர் உணர இத்தேர்வு உதவும் என வல்லமை நம்புகிறது. வல்லமையாளர் பானுகுமார் அவர்களுக்கு வல்லமையின் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.comvallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 ]

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.