க.பாலசுப்பிரமணியன்

பார்வை எப்படியோ பரம்பொருள் அப்படியே

திருமூலர்-1-3

.ஒரு நாள் ஒரு வழிப்போக்கன் காட்டின் வழியாகச் சென்றுகொண்டிருந்தான். அங்கே ஒரு முனிவரின் குடில் இருப்பதைக்கண்டு அவரிடம் சென்று “அய்யா. நான் கிழக்கே இருக்கும் கிராமத்திலிருந்து மேற்கே இருக்கும் கிராமத்தை நோக்கி வாழ்வாதரம் வேண்டி சென்றுண்டிருக்கின்றேன். அந்த கிராமத்திலிருக்கும் மக்கள் எப்படிப் பட்டவர்கள் என்று தங்களால் சொல்ல முடியுமா? தங்கள் அறிவுரை எனக்கு உதவியாக இருக்கும்.” என்றான். அதைக்கேட்ட முனிவர் ஒரு புன்முறுவலுடன் “நீ வருகின்ற கிராமத்து மக்கள் எப்படிப் பட்டவர்கள்?” எனக் கேட்டார்.

“அவர்கள் மிகவும் மோசமானவர்கள். நல்ல எண்ணங்களே இல்லாதவர்கள். அங்கே ஒருவர் கூட நல்லவர் கிடையாது” என்று சொல்ல, “அப்படியா? நான் மிகவும் வருந்துகின்றேன். ஆனால் நீ செல்லக்கூடிய இந்தக் கிராமத்தைச் சார்ந்தவர்களும் அப்படித்தான். நீயே சென்று பாரேன்”  என்று பதிலளித்தார்.

சில நாட்களுக்குப் பின் மற்றொரு வழிப்போக்கன் அதே கிராமத்திலிருந்து வரும்பொழுது முனிவரை அணுகி அதே கேள்வியைக்கட்டான். இப்பொழுதும் முனிவர் அவனை நோக்கி “நீ வருகின்ற கிராமத்து மக்கள் எப்படிப்பட்டவர்கள்? ” எனக் கேட்க “அவர்களா? மிகவும் நல்லவர்கள். நல்ல  உதவும் சிந்தனை உடையவர்கள். அவர்களில் ஒருவர் கூட கெட்டவரில்லை. உண்மையிலேயே அந்த கிராமத்தை விட்டு வர நான் வருந்துகின்றேன்.” என்றான். முனிவரும் புன்முறுவலுடன் “அப்படியா. மிக்க மகிழ்ச்சி.நீ செல்லும் இந்த கிராமத்தைச் சார்ந்தவர்களும் மிக நல்லவர்கள் .மிகவும் பரோபகாரிகள். நீயே சென்று பாரேன்.” என்று சொன்னார்.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த அவருடைய சீடர்கள் முனிவரின் இந்தச்  செயல் கண்டு மிகவும் ஆச்சரியமும் வேதனையும் அடைந்து அவரிடம் சென்று “குருவே. நீங்கள் செய்வது உங்களுக்கே சரியாகப் படுகின்றதா ?

இரண்டுபேருக்கும் முரணான பதில்களை சொல்லி அவர்களை ஏமாற்றலாமா ? உண்மைக்குப் புறம்பான வழியில் தாங்களே செல்லலாமா? ” எனக் கேட்டனர்.

அவர் சிரித்தபடியே சொன்னார் “நான் பொய் பேசவில்லையே. முதலாமவனுக்கு அந்த கிராமத்தில் ஒருவர்கூட நல்லவராகத் தெரியவில்லை. குற்றம் அவன் பார்வையிலிருந்தது இரண்டாமவனுக்கோ ஒருவர் கூடக் கெட்டவராகத் தெரியவில்லை. அவன் பார்வையில் தெளிவு இருந்தது. நாம் எவ்வாறு உலகைப் பார்க்கின்றோமோ அவ்வாறே உலகம் நமக்குத் தென்படும். அதனால்தான் அவர்கள் பார்வையில் கிடைத்த பதில்களை அவர்களுக்கு கூறினேன் : என்று விளக்கம் அளித்தார்.

“நீ எவ்வாறு பார்க்கின்றாயோ அவ்வாறே ஆகின்றாய்” என்பது முதுமொழி. அதேபோல் நாம் எவ்வாறு இறைவனைப் பார்க்கின்றோமோ அவ்வாறே நமக்குத் தென்படுகின்றான், அணுவிலிருந்து அண்டம் வரை எங்கும் அவன் ஆட்சி தான். அதை உணர்ந்தவருக்கு அவன் தரிசனம் எல்லா இடத்திலும் கிடைக்கும். இந்தக் கருத்தை வலியுறுத்தும் வண்ணம் அமைந்துள்ளது திருமூலரின் கீழ்கண்ட பாடல்

எங்குந் திருமேனி எங்குஞ் சிவசக்தி

எங்குஞ் சிதம்பரம் எங்குந் திருநட்டம்

எங்குஞ் சிவமா யிருந்தலால் எங்கெங்குந்

தங்குஞ் சிவனருட் டன்விளை யாட்டதே.”

திருமூலருக்கோ எங்கும் சிவனின் ஒளியும் அருளும் புலப்பட்டது.

இதேபோல் கபீர்தாசர் கூறுகின்றார் :

“நான் வெளியிலே இறைவனின் வண்ணத்தைக் காணச் சென்றேன். பார்க்குமிடமெல்லாம் அவன் வண்ணமாகவே இருந்தது. கடைசியில் நானும் அவன் வண்ணத்தில் ஒரு பகுதியாகத்தான் தென்பட்டேன்”

திருநாவுக்கரசருக்கோ இந்த வண்ணம் எங்கெங்கெல்லாம் தென்படுகின்றது?

விண் ஆகி, நிலன் ஆகி, விசும்பும் ஆகி

வேலை சூழ் ஞாலத்தார் விரும்புகின்ற

எண் ஆகி, எழுத்து ஆகி. இயல்பும் ஆகி

ஏழ் உலகும் தொழுது ஏத்திக் காண நின்ற

கண் ஆகி, மணி ஆகி, காட்சி ஆகி

காதலித்து அங்கு அடியார்கள் பரவ நின்ற

பண் ஆகி, இன்அமுதுஆம் பாசூர் மேய

பரஞ்சுடரைக் கண்டு அடியேன் உயந்தஆறே !

”வெளியில் இருக்கின்ற ஒளி உள்ளே பிரதிபலிக்கின்றதா? இல்லை உள்ளே இருக்கின்ற ஒளி வெளியே பார்க்கும் இடங்களிலெல்லாம் வெளிப்படுகின்றதா ?  “ -என்ற ஐயம் எழுத்தான் செய்கின்றது

அவனை நம்மால் கட்டுப்படுத்த முடியுமா? ஏதாவது ஒரு இடத்தில் அவனை கட்டியோ அல்லது அடைத்தோ க்க முடியுமா ?

பட்டினத்தார் என்ன கூறுகின்றார் ?

பத்துத் திசைக்கு மடங்காப் பருவமடி

எத்திசைக்கு பொங்கு மிடைவிடா தேகமடி.

அது மட்டுமா ?

தித்திக்க வூறுமடி சித்த முடையார்க்குப்

பத்திக் கடலுட் பதித்தபரஞ் சோதியடி “

இந்த அனுபவ பூர்வமான உணர்வுகளை நம்மால் புரிந்துகொள்ள என்ன ஆழ்ந்த அறிவு தேவைப்படுகின்றது?

இந்த அறிவித்த தேடும் பொழுதுதான் நமக்கு வாழ்க்கையில் எவ்விதமான மாயையில் பிடிபட்டு உண்மையை அறிய மறுக்கிறோம் என்ற துயரம் வருகின்றது. இந்த நிலையில் தான் மாணிக்கவாசகரும் பாடுகின்றார் :

யானேபொய் என் நெஞ்சும்

பொய் என் அன்பும் பொய்

ஆனால் வினையேன் அழுதால்

உன்னைப்   பெறலாமே

தேனே அமுதே கரும்பின்

தெளிவே தித்திக்கும்

மானே அருள்வாய் அடியேன்

உனைவந்து உருமாறே !

இறைவனின் அருளை பெறுவதற்கு அடியார்கள் எவ்விதமெல்லாம் தவித்திருக்கின்றார்கள் என்பதை உணரும் பொழுது நமது மெய்  சிலிர்க்கின்றது !

தொடருவோம்

(தொடரும் )

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *