க. பாலசுப்பிரமணியன்

இயற்கைசார் நுண்ணறிவு (Naturalistic Intelligence)

education-1-1-1

ஹோவர்ட் கார்ட்னர் (Howard Gardner)  அவர்களின் பல்முனை நுண்ணறிவுகளில் (Multiple Intelligences) எட்டாவதாக இடம் பெற்றுள்ள நுண்ணறிவு இயற்கைசார் நுண்ணறிவு. இந்த நுண்ணறிவு பல்லாயிரம் காலம் தொட்டு மனிதஇன மேம்பாட்டில் ஒரு முக்கிய பங்கு வகித்துள்ளது. இந்த அகண்ட பூகோளத்தையும் அதைச் சார்ந்த நீர், நிலம், காற்று, செடி கொடிகள், மிருகங்கள் மற்றும் இயற்கை வளங்களைக் காப்பதற்கு இந்த நுண்ணறிவு மிகவும் தேவையானதாகக் கருதப்படுகின்றது. இன்று உலக அளவில் நாம் சந்திக்கும் பல பருவநிலை மாற்றங்கள் . நீர், நிலம், காற்று ஆகியவை மாசடைந்த நிலையில் நம்முடைய மனித இனத்தின் வாழ்வாதாரங்களுக்கு ஏற்பட்டுள்ள சவால்களைச் சந்திப்பதற்கு இந்த நுண்ணறிவைப் பற்றிய கல்வி, பயிற்சி மற்றும் திறன்கள் மிக அத்தியாவசியமாகக் கருதப்படுகின்றன.

பொதுவாக இந்த நுண்ணறிவு உள்ளவர்களின் கவனம், ஆர்வம், ஈடுபாடு ஆகியவை இயற்கை நலன்களைப் போற்றுதல், காத்தல், பேணுதல், ஆகியவற்றில் அதிகமாக இருக்கும். இந்தத் திறனில் மேம்பட்டவர்கள் கீழ்கண்ட தொழில்களில் அதிக ஆர்வம் காட்டுபவர்களாக இருப்பார்கள்

  1. விவசாயம் (Agriculture)
  2. தோட்டக்கலை (Horticulture)
  3. மீன் மற்றும் நீர் வளம் (Fisheries and Marine Development)
  4. வானிலை (Meterology)
  5. வானியல் (Astronomy)
  6. நிலவியல் (Geography))
  7. தாவர இயல் (Botany)
  8. தொல்லியல் (Archeology)
  9. புவியியல் (Earth Sciences)(
  10. சூழலியல் (Ecology)
  11. மானிடவியல் (Anthropology)
  12. புதைப்படிமவியல் (Paleontolohy)
  13. பறவையியல் (Ornithology)

இந்த நுண்ணறிவில் சிறந்தவர்களிடம் இருக்கக்கூடிய வெளிப்படையான திறன்கள் ஆர்வங்கள் :

  1. செடிகள்-மரங்கள் நடுதல் (Growing of plants/Trees)
  2. விலங்கினங்கள் வளர்த்தல் (care of Pet animals)
  3. தொட்டிகளில் மீன்கள் வளர்த்தல் (maintenance of aquarium)
  4. சுற்றுப் புறச் சூழ்நிலைகள் பற்றிய ஆரய்ச்சிகள் செய்தல் (Environmental Research)
  5. முகாமிடுதல், நடைப்பயணம் செய்தல் (Camping, Hiking)
  6. மலையேறுதல் (Mountaineering)
  7. இயற்கை வளங்கள், கனிமங்கள் சேர்த்தல் (collection of natural and mineral specciments)
  8. இயற்கை சார்ந்த புகைப்படங்கள் எடுத்தல் (Nature Photography)
  9. சுற்றலாக்கள் மேற்கொள்ளுதல் (Toursim)
  10. டிஸ்கவரி சேனல் போன்ற இயற்கைசார் படங்கள் பார்த்தல் (Visuals and serials relating to Nature)

இயற்கைசார் நுண்ணறிவு உள்ளவர்களை NATURE SMART என்று பொதுவாக அழைக்கின்றனர்.

இந்த இயற்கை சார்ந்த நுண்ணறிவு மற்ற சில நுண்ணறிவுகளுடன் இணைந்து வேலை செய்யும் பொழுது மிகச் சிறப்படைகின்றது. அப்பொழுது இயற்கை சார்ந்த உள்ளுணர்வுகள் வெவ்வேறு விதத்தில் வெளிப்படுகின்றது. உதாரணமாக ஒரு கவிஞனாக இயற்கை பற்றிய கவிதைகள் இயற்றுதல், ஒரு சமூக ஆர்வலனாக சுற்றச் சூழல் பற்றிய கருத்துக்களுக்களை வலுப்படுத்துதல், ஒரு விஞ்ஞானியாக விவசாயம் அல்லது விலங்கினங்கள் பற்றி ஆராய்ச்சி செய்தல், ஒரு வனப் பாதுகாப்பு ஊழியராக வேலை செய்தல், ஒரு புகைப்பட நிபுணராக இயற்கை சார்ந்த படங்களை எடுத்தல் போன்ற பல தொழில்களில் ஈடுபாடுகொள்ள வாய்ப்புக்கள் உண்டு. இந்த வகையில் நாம் கீழ்கண்ட சிலரின் வாழ்க்கை வரலாறுகளை முன்னுதாரணமாகக் கொள்ளலாம்

  1. ரபீந்திரநாத் தாகூர் (Rabindranath Tagore)
  2. எம். எஸ். ஸ்வாமிநாதன் (M. S. Swaminathan)
  3. சார்லஸ் டார்வின் (Charles Darwin)
  4. வோர்ட்ஸ்வொர்த் (Wordsworth)
  5. அலெக்சாண்டர் ஹம்போல்ட் )Alexander Humboldt)

சிறிய வயது முதற்கொண்டே இயற்கை சார்ந்த ஆர்வங்கள் பலருக்கும் இருக்க வாய்ப்புண்டு. முன்காலத்தில் நம்முடைய நாட்டில் பலர் இயற்கையைச் சார்ந்த வாழ்க்கையையே வாழ்ந்து வந்தனர். நிழல்களை பார்த்து நேரங்கள் அறிதல், மண், பருவங்கள் பார்த்து பயிர்களை நடுதல், இயற்கையோடு இணைந்த உணவு முறைகள், வாழ்க்கை முறைகள்   இயற்கை மருத்துவங்கள் ஏற்றுக்கொள்ளுதல், நீர் நிலைகளை பராமரித்தல் போன்ற பல வாழ்க்கையோடு இணைந்து இருந்தன. இந்த அறிவு, குடும்பத்தில் மூத்தவர்கள் மூலமாகவும்,  சமுதாய நண்பர்கள் மூலமாகவும், நேர்முகமாகவும் மறைமுகமாகவும் கிடைத்து வந்தன. காலப் போக்கில் சமுதாய வளர்ச்சிக்காக பல இயற்கை சார்ந்த செயல்கள் கைவிடப்பட்டது மட்டுமின்றி அதற்கு எதிர்மறையான கற்றலிலும் செயல்களிலும் நம்முடைய கற்றல் மற்றும் செயல் போக்குகள் மாறிவிட்டன. அதனுடைய பலனை நாம் அனுபவிக்க ஆரம்பித்து விட்டோம்.

தற்போதைய கல்வி முறையில் கற்றலில் போதுமான அளவிற்கு இயற்கையைப் பற்றிய சிந்தனை இல்லை என்பதைக் கருத்தில் கொண்டும் அதிவேகமாக அழிந்துவரும் இயற்கை சாதனங்களை பாதுகாக்க வேண்டிய நிலையை கருத்தில் கொண்டும் உச்ச நீதிமன்றம் கல்வி நிலையங்களில் உள்ள பாடத் திட்டங்களில் சுற்றுப்புற சூழல் பற்றிய கல்விக்கு கட்டாயமாகவும் நிரந்தரமாகவும் இடம் தர வேண்டும் என்று ஒரு ஆணை பிறப்பித்தது. இந்த உணர்வுகள் பள்ளியின் ஆரம்ப காலம் தொட்டு கல்லூரி பாடத் திட்டங்கள் வரை இணைக்கப்பட வேண்டும் என்றும் அறிவித்தது. இதைக் கருத்தில் கொண்டு இந்த உணர்வுகளைப் பற்றிய கருத்துக்கள் நேர்முகமாகவும் மற்ற கருத்துக்களோடு ஒருங்கிணைந்த வகையிலும்  திட்டங்கள் மேற்கொள்ளப் பட்டன. ஆயினும் நமது கல்வி முறையில் முதல் வகுப்பு முதல் கல்லூரி வரை தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும் என்ற ஒரு கருத்தும் அதில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்ற கருத்தும் மேலோங்கி நிற்பதால் சரியான அளவில் இந்தக் கருத்துக்கள் நடைமுறைப் படுத்தப்பட வில்லை. மேலும் இதற்கான வழிமுறைகள் தகவல்களை அதிகமாகப் பரிமாறிக் கொள்ளுவதில்   கவனம் காட்டுவதால் நடைமுறையில் அவற்றின் தாக்கத்தை ஏற்படுத்துவதில் அதிக அளவில் வெற்றி பெற வில்லை. இது ஒரு வேதனைக்குரிய நிலை. இதில் மாற்றங்கள் ஏற்படுத்தி பள்ளி கல்லூரிகளில்; மட்டுமல்லாது பொதுவாக சமுதாய அளவில் இயற்கைசார் நுண்ணறிவை வளர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளவேண்டுய காலக்கட்டத்தில் நாம் இருக்கின்றோம்.

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.