மகாபாரதம் திருக்குறள்: அறம் தழுவா நிலைக்களம்

0
சு.விமல்ராஜ்,
உதவிப்பேராசிரியர்,
ஏ.வி.சி.கல்லூரி,
மன்னன்பந்தல்
மயிலாடுதுறை

முன்னுரை:

அறம் என்பது மனிதன் மனிதனை நசுக்காமல் என்பதோடு மட்டுமல்லாது, ஏனைய உயிரிணங்கள் மீதும் வன்மை கொள்ளாதிருத்தல் எனப்படும்.   மகாபாரதமும் திருகுறளும் அறச்சிந்தனைகளை போதிப்பதாக சான்றோர்கள் பகர்வர். அவ்வகையில் இவ்விரு இலக்கியப்படைப்புகளில் வெளிப்படும் அறச்சிந்தனைகளை நோக்கிப் பயணிக்கிறது இக்கட்டுரை. இப்பெரும் படைப்புகளை ஆய்வுக்களமாக எடுத்துக்கொண்டு ஆய்வு நிகழ்த்தும்போது ஏற்படும் சிக்கல்கள் எவை எவை என்றும்,  அந்த சிக்கல்களுக்கான தீர்வுகள் எது என்றும் ஆராய்வது மிக முக்கியம். எடுத்துக்கொண்ட ஆய்வுக்கான மூலங்கள் மிகப்பெரியவை. இரண்டும் அதனதன் பணிகளில் அதன் உச்சத்தை எட்டியவை என்று கூறலாம். மகாபாரதமும் திருக்குறளும் மிக எளியப்படைப்புகள் இல்லை. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை மட்டுமல்லாது வரலாறு படைத்த இலக்கியங்களாகும். சிக்கல்கள்  என்பது எது?

இப்பெரும்படைப்புகளை எடுத்துக்கொண்டு ஒப்பாய்வு நிகழ்த்தும்போது ஏற்படும் சிக்கல் எதுவாக இருக்கும் என்றால் இவ்விரண்டும் சமகாலத்து இலக்கியப்படைப்புகளா? என்பதுதான். ஒப்பிலக்கிய ஆய்வு நிகழ்த்த சம கால இலக்கியங்களை எடுத்துக்கொள்வது தான் வழக்கம். மாறாக இரு வெவ்வேறு காலகட்டத்து இலக்கியங்களை எடுத்துக்கொண்டு ஒப்பாய்வு நிகழ்த்தும்போது அதில் பொருந்துவதையும் பொருந்தாத தையும் வேறுபடுத்தி எடுத்துக்காட்டுவது மிகக்கடினம். ஆய்வு என்பதே சிக்கல்களை அவிழ்ப்பதுதான். ஆனால்  இதில் இருக்கும் சிக்கல் என்பது வேறு. ஒப்பாய்வுக்கு என்ற நிலைப்பாட்டிலிருந்து சற்று விலகி மிகக்கடினமான ஒரு ஆய்வுப்போக்குக்கு உட்பட்டதே இந்த மகாபாரத திருக்குறள் ஒப்பாய்வு சிக்கல்கள்.

மகாபாரத கட்டமைப்பு

காப்பியங்கள்:

உலகம் முழுவதும் பல்வேறுபட்ட செம்மொழிகளில் காப்பியங்கள் பல உள்ளன. அந்தந்த காப்பியங்கள் அந்த நாட்டு பழமையான வரலாற்றை உணர்த்துவனவாக உள்ளன. காப்பியத்திற்கென்று பொதுமையான வடிவம் ஏதும் இல்லை. காப்பிய வகையை அக்காலத்து  புலவர்கள் ஆங்காங்கே அவர்களின் நுட்ப உணர்வுக்கு ஏற்ப பல வடிவங்களில் படைத்திருந்தாலும்,காப்பியங்களில்  மக்கள் வாழ்வை, வரலாற்றை கொஞ்சம் கற்பனை கலந்து அளித்துள்ளனர். கற்பனை முற்றிலும் இல்லாததா? இல்லை கற்பனை ஓரளவு உள்ளதா? என்பது ஆய்வுக்குரியதாகவே உள்ளது.

”இதிகாசம் என்ற சொல்லை இதி-ஹ-ஆச என்று பிரித்து இப்படி ஒருவன் இருந்தான் அல்லவா? என்று பொருள் கொள்வர்” (வியாசர் அருளிய மகாபாரதம்.அ.லெ. நடராஜர்.அருணா பப்ளிகேசன்.சென்னை.1961.பக்கம்.3)

“அறம்,பொருள்,இன்பம்,வீடு என்னும் நான்கனுள் ஒன்றும் பலவும் குறைந்து வருவது. இருவகை காப்பியங்களும் ஒரு வகை செய்யுளாளும் பலவகை செய்யுளாளும் உரை பரவியும் மொழி விரவியும் வரும்”(அபிதான சிந்தாமணி ஆ.சிங்காரவேலு முதலியார்.சாரதா பதிப்பகம்.சென்னை.2001.பக்கம்.407)

வியாசர் பாரதம்:

மகாபாரதக் கதையின் மூலவடிவத்தை வியாசர் கதை கேட்ககேட்க சொல்லும் அமைப்பில் படைத்துள்ளார். கதை சொல்லும் வடிவத்திலும் நாடக உருவமைப்பிலும் அமையத்தக்கதாய் இதை உணரலாம்.

சனமேசயன் என்னும் பாத்திரம் கதையை கேட்க வைசம்பாயனார் என்னும் பாத்திரம் கதையைச் சொல்லுவதுபோல் அமைத்துள்ளார். இடையில் இவ்விரு பாத்திரங்களும் உரையாடல் மேற்கொள்வது போல் அமைந்துள்ளது.

மகாபாரதத்தின் பெரும்பிரிவுக்கு பருவம் என்று பெயரிட்டு வியாசர் சிறு பிரிவுக்கும் அதே பெயரையே வைத்துள்ளார்.

பருவங்கள் 18:

1.ஆதி பருவம்

2.சபா பருவம்

3.ஆரணிய பருவம்

4.விராட பருவம்

5.உத்தியோக பருவம்

6.வீடும பருவம்

7.துரோண பருவம்

8.கண்ண பருவம்

9.சல்லிய பருவம்

10.செளப்திக பருவம்

11.ஷ்திரி பருவம்

12.சாந்தி பருவம்

13.அறுசானிக பருவம்

14.அசுவமேத பருவம்

15.ஆசிரமவாசிக பருவம்

16.மெளசல பருவம்

17.மகப்பிரதானி பருவம்

18.சொர்க்கரோகன பருவம்

மனிதர்கள் கூடிவாழும் வாழ்க்கை, அவர்களுக்குள் நிகழும் மன உணர்ச்சி, செயல்பாடு இதை பிரதிபலிப்பதாய் இந்த இதிகாசம் அமைந்துள்ளது.

திருக்குறள் கட்டமைப்பு

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாக கருதப்படும் திருக்குறள் நீதிக்கருத்துகளின் பெட்டகம் என்று எண்ணப்படுகிறது. அறம்,பொருள், இன்பம் என்னும் மூன்று உறுதிப்பொருள்களை எடுத்துச்சொல்வது. இது திருவள்ளுவ நாயனாரால் எழுதப்பட்டது என்பர். இது 7 இயல்களைக் கொண்டது.  இந்த நூலுக்கு தருமர்,மணக்குடவர்,தாமத்தர், நச்சர்,பரிதி,பரிமேல் அழகர்,திருமலையர்,மல்லர், கவிப்பெருமால், காலிங்கர் ஆகியோர் உரை எழுதியுள்ளனர். இந்த உரைகளுள் பரிமேல் அழகரின் உரையை சிறந்த உரை என்பர்.

திருக்குறளுக்கு முப்பால் நூல், உத்தரவேதம்,தெய்வ நூல், திருவள்ளுவம், பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ்மறை,பொதுமறை எனப்பல பெயருண்டு.(அபிதான சிந்தாமணி.ஆ.சிங்காரவேலு முதலியார்.சாரதா பதிப்பகம்.சென்னை.2001.பக்கம்.829.

கீழ்க்கணக்கு நூல்கள்:

1.திருக்குறள்

2.நாலடியார்

3.நாண்மணிக்கடிகை

4.திரிகடுகம்

5.சிறுபஞ்சமூலம்

6.ஆசாரக்கோவை

7.ஏலாதி

8.இன்னா நாற்பது

9.இனியவை நாற்பது

10.முதுமொழி

11.திணை மாலை நூற்றைம்பது

12.ஐந்திணை எழுபது

13.ஐந்திணை ஐம்பது

14.திணைமொழி ஐம்பது

15.கைந்நிலை

16.கார் நாற்பது

17.களவழி நாற்பது

18.பழமொழி

திருக்குறள் இயல் அமைப்பு:

நூற் பிரிவுகள்

திருக்குறள் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று பால்களும் கொண்டமையால் “முப்பால்” எனப் பெயர் பெற்றது. முப்பால்களாகிய இவை ஒவ்வொன்றும் “இயல்” என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட எண்ணிக்கையான அதிகாரங்களைக் கொண்டதாக விளங்குகின்றது. ஒவ்வொரு அதிகாரமும் பத்து பாடல்களைத் தன்னுள் அடக்கியது. ஆனால், குறளின் அதிகாரங்கள் ஏன் 10 குறள்களைக் கொண்டுள்ளன என்பதற்கான விளக்கத்தினை இன்றைய ஆய்வாளர்கள் அறியவில்லை.

அறத்துப்பால்

திருக்குறளின் அறத்துப்பாலில் பாயிரவியலைத் தொடர்ந்து முதலாவதாக 20 அதிகாரங்களுடன் “இல்லறவியல்” அடுத்து 13 அதிகாரங்கள்  கொண்ட துறவறவியல் இறுதியில் “ஊழ்” என்னும் ஒரே அதிகாரம் கொண்ட “ஊழியல்” என வகைபடுத்தப் பட்டுள்ளது. திருக்குறளில் ஒரே ஒரு அதிகாரம் உடைய இயல் “ஊழியல்” மட்டுமே. முதற்பாலாகிய அறத்துப்பாலில் மொத்தம் 38 அதிகாரங்கள்.

பொருட்பால்

அடுத்து வரும் பொருட்பாலில் அரசு இயல், அமைச்சு இயல், ஒழிபு இயல் ஆகிய இயல்கள் இருக்கின்றன. அரசு இயலில் 25 அதிகாரங்கள் உள்ளன. அமைச்சு இயலில் 32 அதிகாரங்களும், ஒழிபு இயலில் 13 அதிகாரங்களுமாக மொத்தம் 70 அதிகாரங்கள் உள்ளன.

இன்பத்துப்பால்

கடைசிப்பாலாகிய “இன்பத்துப்பால்” அல்லது “காமத்துப்பாலில்” களவியல் மற்றும் கற்பியல் என இரண்டு இயல்கள். களவியலில் 7 அதிகாரங்களும், கற்பியலில் 18 அதிகாரங்களுமாக மொத்தம் 25 அதிகாரங்கள் உள்ளன. ஆகமொத்தம் 9 இயல்கள்; 133 அதிகாரங்கள்; 1330 பாடல்கள். திருக்குறளை மொத்தம் 12000 சொற்களில் திருவள்ளுவர் பாடியுள்ளார்.

திருக்குறள் நூலமைப்பைப் பொறுத்தமட்டில், அது மூன்று பெரும் பிரிவுகளைக் கொண்டுள்ளது. பாயிரத்தில் வைக்கப்பட்டுள்ள நான்கு அதிகாரங்களுள் கடவுள் வாழ்த்து, அறன் வலியுறுத்தல், நீத்தார் பெருமை என்பவை மக்களின் முழு கட்டுப்பாட்டிற்கு உட்பட்டதாகவும், வான் சிறப்பு மட்டும் மக்களின் முழு கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டதாகவும் உள்ளது.

ஒப்பாய்வு வரையறை:

ஒப்பாய்வு நிகழ்த்தும்போது ஆய்வு நிகழ்த்தும் இலக்கியப்படைப்புகளின் களமானது பெரும்பாலும் வடிவத்தால் ஒன்றுபட்டதாக இருக்கும். சான்றாக திருக்குறளை எடுத்துக்கொண்டால் அத்திருக்குறல் போல்

தமிழிலுள்ள வேறு ஒரு அற நூல் அல்லது இந்தியமொழிகளிலுள்ள ஏதேனும் ஒரு அறக்கருத்தை எடுத்துரைக்கும் நூல் அல்லது உலகமொழிகள் ஏதேனும் ஒன்றிலுள்ள அறநூல் இவற்றை எடுத்துக்கொண்டு ஆய்வு செய்ய வேண்டும். வடிவம் ஒன்றுபட வேண்டும்.

பக்தி இலக்கியம் ஒன்றை எடுத்துக்கொண்டு அதனோடு ஒப்பிலக்கிய ஆய்வு செய்யவேண்டும் என்றால் அதே நிலைப்பாடுடைய பக்தி இலக்கியத்தை எடுக்கவேண்டும். அவ்வாறு ஆய்வு செய்யும்போது தான் கடவுள்,கடவுள்மீது மக்கள் காட்டும் அன்பு,கடவுளை அணுகும் முறைகள்,வழிபாட்டுமுறை ஆகியவற்றில் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை தெளிவாக எடுத்துக்காட்டமுடியும். தமிழிலுள்ள ஒரு இலக்கிய வடிவ நூலை எடுத்துக்கொண்டு அதே சமகால கிரேக்கம் அல்லது லத்தீன் மொழியிலுள்ள நூலை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு ஆய்வு நிகழ்த்தும்போது தான் சமகாலத்து கவிஞர்களின்  ஒற்றுமை வேற்றுமைகளை எளிதாக எடுத்துக் காட்டமுடியும்.   ஒப்பாய்வுக்கு வடிவமும்,காலமும்,பாடுபொருளும் மிகமுக்கியம்.

 தற்காலத்தில் ஒப்பாய்வுத்துறை மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியுள்ளது. நவீன காலத்து அறிஞர்கள்,புதிய சிந்தனையாளர்கள் இத்துறையை நல்ல வளர்ச்சி நிலைக்கு எடுத்துச்சென்றுள்ளனர். சமகாலம் அல்லாத படைப்புகளையும் இரு வெவ்வேறு வடிவ இலக்கியங்களையும் எடுத்துக்கொண்டும் ஆய்வு செய்கின்றனர்.

மூல நூல்களின் ஆசிரியர்களின் நோக்கத்தை தெளிவாக எடுத்துக்காட்டிவிடுகின்றனர்.

ஒப்பாய்வின்உண்மைத்தன்மை:

1.ஒரே இலக்கிய வகை

2.ஒரே இலக்கிய வடிவம்

3.ஒரே பாடுபொருள்

வெவ்வேறு மொழியாக இருந்தாலும் அந்த படைப்பின் வடிவம்,பாடுபொருள் ஒன்றாக இருக்கலாம். அப்படி இருக்கும் நிலையில் அதை ஒப்பாய்வுக்கு உட்படுத்தினால் சரியாக  அதன் ஒப்புமைப்பொருளை வெளிக்கொண்டுவர முடியும்.

மகாபாரதஉண்மைத்தன்மை:

பாரதம் அது தன் காலகட்டத்தில் மக்களிடத்தில் இருந்த நான்குவகை பிரிவுகளைஎடுத்துக்காட்டுகிறது. அது வேதகாலத்து நடைமுறை. அந்த பழம்பெரும் பாரத நாட்டில் அந்த காலகட்டத்தில்  நிகழ்ந்த நிகழ்வுகளை செவிவழியாக மக்கள் கதை வடிவில் சொல்லிவந்தனர்.

 இவ்வாறு மக்களின் செவிவழி செய்தியை இலக்கியமாக படைக்கப்பெற்றதுதான் மகாபாரதம். மகாபாரதத்தின்  காலம் இன்னும் ஆய்வுக்கு உட்பட்டதே. இன்றைக்கும் அறிஞர்கள் ஆராய்ந்து கொண்டே  இருக்கிறார்கள்.

திருக்குறள் உண்மைதன்மை :

சங்கம் மருவிய காலத்தில் நீதியானது மறைந்து மக்களிடத்தில் குற்றங்கள் பல நிகழ்ந்தபோது மக்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்று  அறக்கருத்துக்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் நோக்கில் எழுதப்பட்டதுதான் திருக்குறள். திருக்குறளின் காலமும் இன்னும் அறிஞர்களால்  ஆராயப்பட்டுக் கொண்டிருக்கிறது.

அற இலக்கியங்கள்

அற இலக்கியங்கள் உருவாகுவதற்கு ஒரு சரியான காரணம் உண்டு. உலகத்தில் தீமைகள் பெருகும்போது அறிஞர்கள்  மக்களை நல்வழிப்படுத்த அற இலக்கியங்களை பாடுவதாகக்  குறிப்பிடுவர். இது உலகத்தில் உள்ள எல்லா மொழிக்கும் பொருந்தும். மகாபாரதம்-திருக்குறள் இவற்றில் உள்ள அறக்கருத்துகளை ஆய்வு செய்வதால் அறம் என்ற சொல் குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும்.

(Ethiks) எனும் ரஷிய புத்தகம்:

1989ல் ரஷிய மொழியிலிருந்து நடாலியா பேல்ஷ்கயா என்பவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட எதிக்ஷ் என்னும் நூலில் இருந்து இதன் தொடர்பான சில செய்திகள்.

1.எதிக்ஷ் எனும் ஆங்கிலச் சொல் எதோஷ் எனும் கிரேக்கச் சொல்லில் இருந்து வந்ததாகும். கிரேக்கக் கவிஞர் ஹோமர் இலியட் எனும் இதிகாசத்தில் மக்கள் கூட்டமாக கூடி இருக்கும் இடத்தை இச்சொல்லால் குறிப்பிடுகிறார்.

2.எதிக்ஷ் எனும் தலைப்பிலான  தனி இயல் கி.மு.4ஆம் நூற்றாண்டில் தொடங்கியது. அரிஸ்டாட்டில்  இச்சொல்லை இப்பொருளில் முதன் முதலில் கையாண்டார்.

3.பண்டைய ரோம் நகரில் இலத்தின் மொழியில் மொராலீஷ்  இச்சொல்லை கி.பி.4ஆம் நூற்றாண்டு அளவில் இப்பொருளில் கையாண்டனர். மாரல்,மாரலிட்டி எனும் சொல்கள் இலத்தினிலிருந்து ஆங்கிலத்தில் வரவழைக்கப்பட்டவை ஆகும்.

4.மார்க்சிய கருத்துப்படி ஆளும் வர்க்கம் அறக்கருத்துக்களையும் கொள்கைகளையும் உழைப்பாளி வர்க்கத்தின் மேல் திணிக்கிறது.

5.அறம் என்பது இனத்திற்கு இனம்,இடத்திற்கு இடம், காலத்திற்கு காலம் வேறுபடுகிறது. சரியான வரையறைக்கு உட்பட்டதாக இல்லை. மிக பழமையான காலத்தில் வாழ்ந்த பழங்குடிகள் தங்களுடைய பகைவர்களையும் தங்கள் குழுவைச் சேர்ந்த முதியவர்களையும் நோயாளிகளையும் கொன்று தின்னும் பழக்கமுடையவர்களாக இருந்தனர். சார்லசுடார்வின்  “தியாரா டேல்ஃபியுகோ” என்ற இடத்தில் உள்ள பழங்குடி மக்களை பார்வையிட்ட போது, அந்த மக்கள் கொடும் பனியாலும், உணவே கிடைக்காத பஞ்சத்தாலும் வாடி,வதங்கி கொண்டிருந்தனர். அந்த நேரங்களில் தங்கள் குழுவை சேர்ந்த முதுமை அடைந்த பெண்களை கொன்று தின்றனர். வேட்டை நாய்களுக்கு அவர்களையே உணவாகக் கொடுத்தனர். ஏன் என்று அவர்களிடம் கேட்ட பொழுது அவர்கள் வேட்டை நாய்கள் நாங்கள் உண்பதற்கு புதிய உணவை வேட்டையாடி தரும். இந்தக் கிழப்பெண்கள் தருவார்களா? என்றார்களாம்.

6.இரத்த உறவு,அன்பு உறவு என்பதெல்லாம் பழங்குடிகளிடம் இல்லை. பிற்காலத்தில்தான் அது உருவாகியிருக்கிறது.

7.அறம்,அறம் அல்லாதன என்பன, காரணம் தேவை ஆகிய அடிப்படையில் உருவாகின்றன. அறத்தை நல்லது என்கிறோம். அதன் பொருள் உண்மையாக பயன் அளிக்கக்கூடியது என்றே தொடக்கத்தில் இருந்திருக்க வேண்டும்.

8.மனித குலத்தில் அறவாழ்க்கை என்பது படிப்படியாக உணவுப் போராட்டம், உடைப் போராட்டம், கால்நடை வளர்ப்பு,வேளாண்மை, பானை செய்தல்,இரும்பை உருக்குதல், நெசவு நெய்தல் போன்றவை கண்டுபிடிக்கப் பட்டபொழுது படிப்படியாக உருவாகியிருக்க வேண்டும்.

9.தொடக்க காலத்தில் நல்லவை என்பது உடல் பலம்,உறுதி கிடைக்கும் நல்ல பயன் ஆகியவற்றோடு தொடர்பு உடையதாக இருந்தது. நல்லது,அழகு, சரியானது ஆகிய சொல்கள் ஒரு காலத்தில் ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையதாக வழங்கப்பட்டன.

10.பழங்குடி மக்களிடம் வெளிப்படையான மோதல்கள் இல்லை. அம்மக்களை அவர்கள் தலைமுறை தலைமுறையாக பின்பற்றி வந்த பழக்க வழக்கங்கள் ஒருங்கிணைத்திருந்தன. அவர்களிடம் என்னுடைய,எங்களுடைய என்பன நல்லனவற்றையும்,பழக்கமானவற்றையும்,சரியானவற்றையும் குறித்தன. அவனுடைய,அவர்களுடைய என்பன அபாயகரமானதையும்,பகைமை உடையதையும் கொடியவற்றையும் குறித்தன.

11.பழங்குடி மக்களின் ஒழுங்கை அவர்களுடைய பழக்க வழக்கங்கள்,மரபுகள், கூடாதவை என்று ஒதுக்கின.வேலைக்குரிய சடங்குகள், சம்பிரதாயங்கள் ஆகியனவே அமைத்துக் கொடுத்தன.

12.பழங்குடி மக்களின் கூட்டமைப்பு, திருட்டு, கற்பழிப்பு, ஏமாற்று, துரோகம் ஆகியவற்றால் சிதறத்தொடங்கியது.

13.மேல்,நடு,கடை என்னும் அமைப்பில் சமுதாயம் பிரிவு வகையாக பிரியத் தொடங்கும் போதுதான் அறநெறிப் பிழை தொடங்கியது.

14.கிரேக்க,ரோம சமுதாயத்தில் பிரபுக்கள்,போர்வீரர்கள்,அடிமைகள் என வகுப்பு பிரிவுகள் தோன்றத்தொடங்கின. இந்தப் பிரிவுகள் தோன்றத் தோடங்கிய பிறகே வகுப்பிற்கு ஏற்ற அறமுறைகள் வகுக்கப் பட்டன.

15.கிரேக்க,ரோம அடிமைகளிடம் அவர்களின் எஜமானர்களுக்கே அவர்கள் சொந்தமான அடிமைகள் என்று மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டனர். ரோமர்களிடம் எஜமானர்களை வணங்கும் பழக்கம் வளர்ந்தது.

16.அடிமைகளிடையே போற்றப்பட்ட அறஒழுங்குகள் பின்னாளில் உருவான அறஇலக்கியங்களிலும் நீதி இலக்கியங்களிலும் எதிரொலித்தன.

17.ஒரு வித தந்தைக் கோட்பாடு திட்டமிட்டு நிலவுடைமை சமுதாயத்தில் வளர்க்கப்பட்டது.வேளாண் உழவர்கள், நிலக்கிழாரின் குழந்தைகள் போன்றவர்கள் தந்தைக்கு நிகரானவர்கள் என்றும்,அரசர், எல்லாருக்கும்  தந்தை போன்றவர் என்றும் ஒரு கருத்து உருவாக்கப்பட்டது. இதன் விரிவாக்கமே கிருத்துவத்தில் கடவுளே தந்தை என்றும் மக்கள் எல்லாம் அவரின் குழந்தை என்றும் ஒரு கருத்து வளர்க்கப்பட்டது.

18.ஃப்ரன்சில் நிலக்கிழார்கள் ஏழு திறமைகளை உடையவராக இருக்க வேண்டும். ஈட்டி எறிய தெரிந்தவராக, காப்பு வேலி அமைக்க தெரிந்தவராக, வேட்டையாடுபவராக, குதிரை ஓட்டுபவராக,  நீச்சல் தெரிந்தவராக ,சூதாடதெரிந்தவராக, செய்யுள் இயற்ற தெரிந்தவராக.

19.எஜமானர் தந்தைக்கு நிகரானவர். அவர் இறந்துவிட்டால் அவருக்கு கீழ் வேலை செய்வோர் இறந்துவிடுதல் உயர்ந்த குணமாக கருதப்பட்டது. ஜப்பானில் சாமுரே அரசர்களுக்காக தற்கொலை செய்துகொள்ளும் படையினர் ஆவர்.

20.பாதிரியார் கால்வின் கருத்துப்படி கிருத்துவத்தில் ஒருவர் வணிகத்தில் வெற்றி பெற்றுவிட்டால் அது கடவுளின் கருணை என்று கருதப்பட்டது. மாறாக ஏழ்மை, கடவுளால் கைவிடப்பட்ட பாவம் செய்தவர்களின் நிலைமை என்று கருதப்பட்டது.

21.தனி மனித வாதம் என்பது மனிதத்திற்கு எதிரானது.

22.At the time of the French Revolution, Maximilien Robespourem demanded that honour be replaced by honesty, the rule of fashion by the rule of reason,conventions by responsibilities, and good form by good people.(p.83)

தமிழில் அற இலக்கியம் உருவான பின்புலம்:

சங்க காலத்தில் சேர,சோழ,பாண்டியர்கள் தமிழகத்தை ஆண்டனர். கி.பி. 3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.575 வரை களப்பிரர்கள் தமிழகத்தை ஆண்டனர். களப்பிரர்கள் எங்கிருந்து வந்தவர்கள் என்று இன்றும் ஆய்வு நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் அவர்களை ஜைனர்கள், பெளத்தர்கள் என்னும் கூற்று உண்டு. களப்பிரர் வருகையால் ஜைனமும்,பெளத்தமும் தமிழகத்திற்கு வந்தன. தமிழர்களின் மொழி பண்பாடு ஆகியன சீர்குலைந்தன என்பர். இவற்றை மீட்கவே சான்றோர்கள் பலர் நீதி செய்யுள்களை எழுதினர் என்பர். சங்ககால தமிழர்களிடம் காணப்பட்ட கொலை,ஊன் உண்ணுதல்,கள் உண்ணுதல், விபச்சாரப் பெண்கள், ஆறலைக்களவு ஆகியன களப்பிரர் கால அற புத்தகங்களில் கண்டித்து எழுதப்பட்டன. சீர்கெட்ட ஒழுக்கங்களை இக்கால அற நூல்கள் சரிசெய்ய முயற்சி செய்தது. அசோகரின் கலிங்கப் போருக்குப் பிறகு பெளத்த துறவிகளின் தலையீட்டால் போர் குறைக்கப் பட்டது. பெளத்த மதத்தின் செல்வாக்கால் போர் செய்யும் உணர்வு குறைக்கப் பட்டது. சங்ககால பாடல்கள் போர் உணர்ச்சியை தூண்டும் தன்மை உடையது. ஆனால் சங்கம் மறுவிய கால பாடல்கள் போரை வெறுக்கும் பாடல்களை கொண்டது.

சங்ககாலத்து மூவேந்தரும்,வேளிரும்,குறுநில மன்னர்களும், ஓயாது போர் நிகழ்த்திக் கொண்டிருக்கின்றனர். இதன் எதிரொலியை புறநானூற்றிலும், பதிற்றுப்பத்திலும், மதுரைக்காஞ்சியிலும், பட்டினப்பாலை நெடுநல்வாடையிலும் காணலாம். சங்ககாலம் முடிவுற்று களப்பிரர் ஆட்சி தமிழகத்திற்கு வந்தது. களப்பிரர், சைன, பெளத்த மதத்தினர். எனவே, போர் உணர்ச்சிக்கு எதிரான கொல்லாமையும்,புலால் உண்ணாமையும் போதித்தனர். இப்போதனையின் பதிவுகளைப் பதினென் கீழ்க்கணக்கு அற நூல்களில் பார்க்கிறோம். இந்த அற நூல்களில் திருவள்ளுவர் சொன்ன படைமாட்சி(77), படைச்செருக்கு(78), படைத்திறன்(88) ஆகியன வற்புறுத்தப் பெறவில்லை. மாறாக, மென்மை பண்புகள் வற்புறுத்தப் பெறுகின்றன.

 இவற்றில் இருந்து உணரவேண்டியவை:

1.களப்பிரர் காலம் சங்ககாலத்தைப் போல் போர்க்காலமாக இல்லை. போர் முடிந்த அமைதிக் காலமாகப் பேணப் பெற்றது. இந்த அமைதிக்காலம் பல படைப்புகளுக்கு வித்திட்டது. சான்று, பதினென்கீழ்க்கணக்கு நூல்கள், சிலம்பு, மணிமேகலை முதலானவை.ஏனைய

2.ஜைன, பெளத்த மதச் செல்வாக்கால் போர் உணர்ச்சி தவிர்க்கப்பெற்றது. அற நெறிக்கே முதலிடம் அளிக்கப் பெற்றது. எனவே, சங்கால தமிழரால் பின்பற்றப் பட்ட தீயொழுக்கங்களை கண்டித்து, தமிழரை நல்வழிப்படுத்த வேண்டி அற இலக்கியங்கள் படைக்கப்பெற்றன.

ஆகவே, போர் அற்ற அமைதிக் காலத்திலேயே அற நூல்கள் பலவாகப் படைக்கப்பெற்றன. கி.பி.14 ஆம் நூற்றாண்டில் நாயக்கர், தமிழகத்தை ஆளத்தொடங்கினர். பாண்டியர், இசுலாமியர், போர்க்காலம் முடிவுற்று கிட்டத்தட்ட 200 ஆண்டுக்காலம் மிகுந்த போர்கள் இல்லாது இருந்தது. விளைவாக ஒளவையாரால் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி ஆகியனவும் அதிவீரராம பாண்டியரால் வெற்றி வேற்கையும், தினகரரால் தினகர வெண்பாவும்,பெயர் தெரியாத ஆசிரியரால் நீதி வெண்பாவும், உலக நாத பண்டிதரால் உலக நீதியும் குமரகுருபரரால் நீதிநெறி விளக்கமும், சிவப்பிரகாசரால் நன்னெறியும், முனைப்பாடியாரால் அறநெறிச் சாரமும், அடுத்து அடுத்துப் படக்கப்பெற்றன. அரசியல் அமைதிக்கும், அற நூல் எழுச்சிக்கும் தொடர்புகள் இருக்கின்றன.

அற இலக்கியங்கள் தமிழரால் பின்பற்றப்படாமல்  போனதற்கான காரணங்கள்:

அற இலக்கியங்கள் அறிவுறுத்திய அறிவுரைகளை தமிழகம் பின்பற்ற வில்லை என்பது வெளிப்படையான உண்மை. அவற்றிற்குரிய காரணங்களுல் இன்னொன்று சுட்டத்தக்கது. அற இலக்கியங்களைச் செவி நிறைய தமிழர்கள் கேட்டுக்கொண்டனர். ஆனால், கேட்டபடி பின்பற்றவில்லை.  காரணம் ரசனை உணர்வு, கண்ணால் பார்ப்பவற்றை ரசிக்கும், காதால் கேட்பவற்றை ரசிக்கும், ஆனால் கருத்துள்ள காட்சிகளையோ,கேள்விகளையோ நெஞ்சில் வாங்கி செரித்துக்கொள்ளாது. மென்று தின்னாமல் அப்படியே விழுங்கிவிட்ட சத்துணவு உடம்பிலும் இரத்ததிலும் சேராமல் கழிவாக வெளியேறிவிடுதல் போல கருத்துள்ள காட்சிகளையும், கேள்வி ஞானங்களையும் இவர்கள் ரசித்த அளவில் புறக்கணித்து விடுகிறார்கள்.

திரை இசையில் வரும் தத்துவப் பாடல்களை கேட்டு, பல வீர உணர்ச்சி மிக்க காட்சிகளை பார்த்து அத்தோடு மறந்துவிடுகின்றனர். அதற்கு மாறாக அவர்கள் தீயோரை எதிர்ப்பதில்லை. சூட்டில் பால் பொங்கி வழியும், பின்பு சூடு ஆறியவுடன் அது அடங்கிவிடுவது போல இவர்களும் அடங்கிவிடுகிறார்கள்.

செய்யுளில் உள்ள கற்பனை, உவமை, வீர உணர்வு ஆகியவற்றை இரசிக்கிறார்கள், பாராட்டுகிறார்கள். ஆனால் பின்பற்ற வில்லை. பின்பற்றுதல் என்பது ஒரு புதிய பழக்கத்திற்கு தன்னை ஆயத்தப் படுத்திக் கொள்வதும் ஆளாக்குவதும் ஆகும். பொய் பேசுவதில்லை என்னும் கருத்தை கேட்ட அளவில் இனி பொய்யே பேசுவதில்லை என்று தன்னை தயார்செய்து கொள்ள வேண்டும். அதனைப் பின்பற்றுவதன் மூலம் ஆளாக்கிக்கொள்ள வேண்டும். அதிக காலங்கள் பொய் பேசி பழக்கப்பட்டவன் தன் வயதான காலத்தில் பொய் பேசாத நிலைக்கு தன்னை மாற்றிக்கொள்வது அவ்வளவு எளிதன்று. நெடுங்காலம் கெட்டப்பழக்கங்களுக்கு அடிமையாகிவிட்ட சமுதாயத்திற்கு இந்த விதி பொருந்தும். தமிழில் படைக்கப்பெற்ற திருக்குறள், நாலடியார், பழமொழி ஆகிய அற இலக்கியங்கள் கற்றறிந்து வளர்ந்த வயதில் அவர்களால் அந்த இலக்கியங்களை படிக்க முடியும், கேட்க முடியும், இரசிக்க முடியும், பின்பற்றுதல் எல்லார்க்கும் எளிதானது அல்ல. மிகச்சிலரே அதைப் பின்பற்றி வாழ முடியும். பாரதத்தில் மக்களை நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்ட நிலை உள்ளது.

 அது

 1.பிரமணர்கள் 2.சத்ரியர்கள் 3.வைசியர்கல். 4.சூத்திரர்கள் என்பதே ஆகும். மகாபாரதம் இந்த நான்கு வகையான பிரிவினையுடைய மக்களுக்கு அறம் என்ற ஒன்றை வகுத்து வைத்திருக்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒரு அறம் உண்டு .மனிதர்கள் எல்லோருக்கும் ஒரே அறம் என்று கிடையாது. இந்த நான்கு பிரிவு மக்களுக்கும் தனித்தனியே அறம் என்பது மாறுபடும். இந்த நான்கு வகையினரையும் நாம் தனித்தனியே விரிவாக காணலாம்.

1.பிரமணர்கள்.

பிரமணர்கள் என்பவர்கள் கற்றல் என்னும் அறத்தை உடையவர்கள். இவர்களின் வேலை அல்லது கடமை கற்றல் அதை வைத்துக்கொண்டு தான் கற்றதை பிறருக்கு கற்பித்தல். இந்த அறத்திலிருந்து இவர்கள் மாறவே கூடாது. அவர்களின் கடமை கற்றல் கற்பித்தல். உலகத்தில் உள்ள எல்லா வகையான அறிவையும் கற்றுக்கொள்ள வேண்டும். அதை பிறருக்கு கற்பிக்கவேண்டும். இதுதான் அவர்களின் கடமை.யார் யாருக்கு கல்வியை கற்பிக்கவேண்டும் என்ற ஒரு அறத்தையும் இவர்கள் பின்பற்றினர். கற்ற கல்வியையும் ஒரு சிலருக்குத்தான் சொல்லிக்கொடுப்பார். அதிலும் சில அறமுண்டு.

2.சத்ரியர்கள்.

சத்ரியர்கள் நாட்டைக் காக்கவேண்டும்.சத்ரியன் வீரமுடையவன்.அவன் அந்த வீரத்தின் மூலம் இந்த நாட்டைக் காக்கவேண்டும். அன்னியர்களிடமிருந்தும் விலங்குகளிடமிருந்தும் நாட்டு மக்களை அவன் காக்கவேண்டும். சத்ரியர்களின் அறம் நாட்டைக் காப்பதே. அவர்களின் தொழில் அல்லது கடமை நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பதே ஆகும். அதை தவிர வேறு ஒருவரின் அறத்தில் இவர்கள் தலையிடக்கூடாது. அவரவர்கள்  அவரவர்களின் தர்மத்தை மட்டுமே கடைபிடிக்கவேண்டும்.

3.வைசியர்கள்

வைசியர்கள் என்பவர்கள் வணிகத்தில் ஈடுபடுபவர்கள். வைசியர்களின் தொழில் அல்லது கடமை எது என்றால் வாணிகத்தில் ஈடுபட்டு பொருள் ஈட்டுவது.நாட்டையும் நாட்டு மக்களையும் வளமாக்க வேண்டும். வைசியர்கள் அவர்களின் அறத்தில் இருந்து மாறாமல் அதை அவர்கள் ஒழுங்காக செய்யவேண்டும். வணிகத்தின் மூலம் நாட்டை வளப்படுத்துவதே அவர்களின் கடமை.

4சூத்திரர்கள்.

சூத்திரர்கள் என்பவர்கள் மூன்று பிரிவினரும் செய்யாத கடைநிலை தொழில் அல்லது வேலைகளை செய்யவேண்டும். மக்கள் பிரிவில் இவர்கள் கடைசியில் உள்ளவர்கள். இவர்களும் இந்த அறத்தை மீறக்கூடாது. சூத்திரர்களின் அறம் எதுவோ அதை மட்டும்தான் செய்யவேண்டும்.

இதுதான் மகாபாரதம் கூறும் அறம். மகாபாரதத்தில் இந்த அறம்தான் பயன்படுத்தப்படுகிறது. இந்த அறத்தைதான் கூறுகிறது. இந்த உலகத்தில் உயர்ந்த வாழ்க்கை வாழ்ந்தவர்கள் என்று கருதப்படுபவர்கள் தவம் செய்வதால், நீதியை நிலை நாட்டுவதால், ஆண்மையால், குற்றம் இல்லாத நல்ல செயல்களால் வாழ்பவர்களே கருதப்படுவார்கள். இவ்வாறு வாழ்பவர்களே இந்த மண் உலகை பல ஆண்டுகள் ஆட்சி செய்து விண் உலகையும் ஆள்வார்கள். இது உறுதியானது என்பதாகும்.

இல்வாழ்க்கை-விருந்து:

பரதன் குரு நாட்டை ஆட்சிப்பொருப்பு ஏற்று நடத்திவரும் காலத்தில் அவனது இல்லறத்தின் சிறப்பை கூற வரும் கவிஞர்,

“இறந்தவர்கள் எதிர்காலத்தில் வருவோர்கள் என்று எல்லோருக்கும் தன்னுடைய பெயர் புகழோடு தெரியும்படி சிறப்பாக விளங்கியவன் என்கிறார்.

திருக்குறள் விருந்து முடித்து போவோரை சிறப்பாக வழி நடத்தி, வருகின்ற விருந்தினருக்காக காத்திருப்பான் என்கிறது.

அகத்தியர் உலோபமுத்திரையை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு பிள்ளைகள் எதற்கு என்று எல்லோரும் கேள்வி எழுப்பினர். அகத்தியருக்கும் உலோப முத்திரைக்கும் பிள்ளைகள் பிறந்து என்ன செய்ய போகிறார்கள் என்பது கேள்வி. அதற்கு தெற்கே உள்ளவர்களுக்கு உதவி செய்வதற்கும், சூரிய குலத்தைச் சார்ந்தவர்களுக்கு யாகத்தின் பயனைக் கொடுப்பதற்கும், மண்ணின் உரிமையாளர்களுக்கு உணவு வழங்குவதற்கும் எங்கள் குலத்தில் பிள்ளை வேண்டும் என்கிறாள்.

கௌசிகருக்கு தன்னுடைய இயல்பை கூற்கின்ற வியாதன் தன்னுடைய வருமானத்தை பகுத்து உண்ணும் முறையை எடுத்துக் கூறுகிறான். அதாவது, அந்தணர்கள், ஆசிரியர்கள், தாய்தந்தையர்கள், புதியதாக வந்த விருந்தினர்கள் கடவுள் முதலியவர்களுக்கு உண்ணக்கொடுத்துவிட்டு பிறகு மீதி இருக்கும் உணவை உண்ணுவேன் என்கிறான். இந்தக்கருத்தை அறிவிக்கும் பாடல் ஆரண்ய காண்டம்.கௌசிகசருக்கம்.39

திருவள்ளுவர் துறவு மேற்கொள்வதை விட இல்லறம் சிறந்தது என்கிறார். வரலாற்று அமைப்புப்படி துறந்த அரசனை மீண்டும் ஆட்சி பொருப்பில் அமர்த்தும் நோக்கத்தில் பாரதம் கூறுகிறது. ஆனாலும் அரசாட்சி என்பது இல்லறத்தை கடைபிடிப்பவன் செய்ய வேண்டியது. ஆகவே இல்லறத்தை விட்டுவிட்டு துறவுக்கு செல்லாதீர்கள் என்று சொல்லும் குறளின் கருத்தோடு ஒத்து உள்ளது.

மனைவிக்கான நல்ல குணங்களைப் பெற்றவள்

மனைவி இல்லறத்திற்கு தேவையான நல்ல குணங்களைப் பெற்றிருக்க வேண்டும் என்பது திருக்குறள் கருத்து. கணவனுக்கு தேவையானவற்றை செய்து முடிக்கும் தன்மை உடையவளாக இருக்க வேண்டும் என்று திருக்குறள் எடுத்துக்கூறுகிறது.  இந்தக் கருத்தை ஒத்திருக்கும் பல இடங்கள் நல்லாப்பிள்ளை பாரததத்தில் இடம்பெற்றுள்ளது.

பூருவின் மனைவியாகிய கௌசலையை மனைவியின் மான்பு உடைய கௌசலை என்று சிறப்பிக்கின்றார்.

கௌசிக முனிவருக்கு மனைவியின் கற்பு நிலையை உணர்த்தும்போது கடவுளைப்போற்றியவள் இல்லை. இவள் கனவனைப் போற்றியவள் என்று கூறுகிறார்.(கௌசிக சருக்கம்.23)

உயிர் பெற்ற சத்தியவான் சாவித்திரியை புகழ்வதாக வரும் சாவித்திரி கதை சருக்கம் 77 திருக்குறளில் 53வது குறளை ஒத்து உள்ளது.

பல ஒழுக்கங்களும் படிக்கும் புத்தகங்களால் பயன் அடைவதும் அதனால் கிடைக்கக்கூடிய ஒளியும் வெற்றியும் புகழும் இன்பமும் கற்பு உடைய மனைவியால் கணவன்  பெறலாம் என்று நாடு கரந்துரை சருக்கத்தில் 67 வது பாடலில் கூறப்பெற்றுள்ளது.

கற்பு என்பது திருமணம் நடப்பதற்கு முன்பு தாயும் தந்தையும் சொல்லிக்கொடுத்ததன் வழியாகக் நடப்பதும் அல்லது நடைமுறைப்படுத்துவதும், திருமணத்திற்கு பிறகு கனவனின் சொல்லை கேட்டு அதன்படி நடப்பதும், பிறகு மக்கள் சிறந்த ஒழுக்கம் என்று கருதுவதை பின்பற்றுவதும் பெண்ணின் கடமை என்று அற புத்தகங்கள் சொல்லும் அந்த கருத்தை திருவள்ளுவர் 54வது குறளில் கூறியிருக்கிறார்.

இந்தக்கருத்தை ஆசிரியர் கணவனின் சொற்படி நடப்பது மனைவிக்கு அணி, நெறி இவற்றை அளிக்கும் என்கிறார்.

தன்னை நினைத்து அழைத்த திருதராட்டிரனை நோக்கி வியாசன் கூறுகிறான் ”கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு அருமையானது ஒன்றும் உலகில் இல்லை; எளிதில் கிடைக்கும்” என்கின்றான்.

இதனை விளக்குவது,

மாதவன் கமல மங்கை கேள்வனரி

வாசுதேவன் முகில் வண்ணன்

பாத பங்கயம் உளங்கொள்வோர்க்கு அரிது

பாரில் இல்லை (சஞயன் தூது.234)

திருக்குறளில்,

வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தாருக்கு

யாண்டும் இடும்பை இல

என்று உள்ளது.

யாயாதி சருக்கத்தில் கடவுள் வாழ்த்தில் கண்ணனை,

இணை இல்லாதவன் இறப்போடு பிறப்பென்னும் கடலுக்கோர்

புணையும் ஆனவன் புனிதர்கள் மனத்துறை புனிதன் (யாயாதிசருக்கம் 1)

என்று பாராட்டுகிறார். இவற்றுள், இணையில்லாதவன் என்பது தனக்கு உவமை இல்லாதவன் என்பதுடன், இறப்போடு பிறப்பென்னும் கடலுக்கோர் புணையும் ஆனவன் என்பது பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் என்கிறார் வள்ளூவர்.

முடிவுரை:

 வள்ளுவர் ஒரு போதும் தனி மனிதனுக்கென்று அறத்தைச் சொல்லவில்லை.

ஒருவன் செய்வதை பாராட்டியும் மற்றாவர்கள் செய்வதை தாழ்த்தியும் பேசவில்லை.

குற்றத்தை உயர்ந்தவர்கள் செய்யலாம் என்ற சிந்தனை இல்லை.

தவறு யார் செய்தாலும் தவறு.

மனிதர்கள் பிறப்பால் உயர்ந்தவர்கள் இல்லை.

மனிதன் செயலால்தான் உயர முடியும்.

வர்க்க பேதங்கள் அறவே இல்லை.

மனிதர்களுக்குள் வேறுபாடு  ஏற்புடையதன்று.

வள்ளுவரின் அறச்சிந்தனைகள் பொதுமைப்பண்புடையது.

மகாபாரதச் சிந்தனைகள் அவ்வாறின்றி அதன் எதிர் சிந்தனையில் பயணம் செய்கிறது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *