மீ.விசுவநாதன்
பகுதி: 13

பாலகாண்டம்

ஸ்ரீராம-தர்ம-சரிதம்-2-1

தாடகவனத்தை அடைதல்

 

காலையிலே எழுந்தவுடன் கதிரவனை வேண்டி
காகுத்தன் இலக்குவனும் கடமைகளைச் செய்து
வேலைகளை முடித்தவுடன், வேள்விதனைச் செய்யும்
மேலான முனிவர்கள் முகமலர்ச்சி யோடு
ஓலமிடும் கங்கையினை உடன்கடந்து செல்ல
ஓடமொன்று தந்ததிலே உடனமரச் சொல்லி
ஞாலமதில் தர்மமென்றும் நன்றாக வாழ
நாகுளிர ஆசிதர நகர்ந்ததுவே ஓடம் ! (1)

“மானசரோவர் எரியும் சரையூ நதியும்”

கங்கையிலே செல்கையிலே காகுத்தன், “இந்தக்
கடல்பேசும் பேரோசைக் காரணம்தான் என்ன?
எங்களுக்குக் கூறிடுக” எனப்பணிவாய்க் கேட்க,
“பிரும்மா”தன் மனத்தாலே பெரியதொரு ஏரி
பொங்கிடவே செய்ததினால் புகழயோத்தி சுற்றிப்
பூரித்துப் பாய்ந்தோடி “சரயு”வெனும் பேரால்
கங்கையிலே கலக்கின்ற கடும்சத்தம் ” என்றார்
களங்கமிலா மாமுனிதான் காகுத்தன் பார்த்து. (2)

“மலாதம், கரூசம்” என்ற நாடுகள்”

கரைவந்து சேர்ந்தவுடன் காட்டிற்குள் போகக்
கவனமுடன் நடந்தார்கள் ! கணக்கில்லா புட்கள்,
இரைதேடும் புலிக்கூட்டம், மிகநடுங்கும் மான்கள்
இயல்பாக இருக்கின்ற இடமென்று காட்டி
இறைதேடும் முனிவர்க்கும் இதுதானே சொர்க்கம்
இதன்கதையைச் சொல்கின்றேன் ஸ்ரீராமா கேட்பாய் !
கறைபட்ட இக்காட்டின் இந்தநிலை மாற்றக்
கடமையுனக் குண்டென்று காரணமும் சொன்னார் ! (3)

இந்திரனால் “விருத்திரா சுரன்”மாண்டான்! அந்த
இறப்பிற்காம் தோஷங்கள் இந்திரனும் கொண்டான்!
மந்திரங்கள் மூலமதை மாற்றிட்ட பின்பு
வளமாச்சு “கரூசமும், மலாத”வள நாடும்
இந்திரனின் நல்லாசி இதற்கிருந்த தாலே
எப்போதும் முனிவர்கள் இங்கிருக்கும் போது
அந்திபகல் எல்லாமே அவர்மனத்தில் சாந்தி
அதுவாக அமைந்திட்ட அருட்குகையாய் ஆச்சு ! (4)

“யட்சப் பெண் தாடகை”

இந்தஒரு காலத்தில் இடறொன்று “யட்சப்
பெண்ணுருவாய்” வந்ததனால் பெரியதொரு துன்பம்
வந்ததென்பேன் ! “சுந்தனின்” மனைவியென ஆனாள்
மகனாக “மாரீசன்” மடிமீது கொண்டாள் !
இந்தவழிக் காட்டினிலே இருக்கின்றாள் அந்த
இளவரக்கி தாடகையாய் எதிர்வந்து நிற்பாள் !
எந்தஒரு தயக்கமுமே நெஞ்சினிலே வேண்டாம்
இப்போதே கொன்றுவிடு என்றாரே ஞானி ! (5)

(தர்ம சரிதம் வளரும்)
(ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் பாலகாண்டத்தில் 24ம் பகுதி நிறைந்தது)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.