இந்த வார வல்லமையாளர்! (244)
செல்வன்
இவ்வார வல்லமையாளராக யது கிருஷ்ணா அவர்களை அறிவிக்கிறோம்.
இவ்வாரம் கேரளாவில் முதல்முதலாக பத்தனம்திட்டா திருவில்லா மகாதேவ ஸ்வாமி ஆலய கருவறையில் நுழைந்து பூசை செய்த முதல் பட்டியல் சாதி குருக்கள் எனும் சிறப்பைப் பெற்றுள்ளவர் யது கிருஷ்ணா. அதிலும் கேரளாவின் மிகச்சக்தி வாய்ந்த ஆன்மிக அமைப்பான திருவாங்கூர் தேவசம் போர்டில் இணைந்துள்ளார் யது கிருஷ்ணா.
யது கிருஷ்ணாவின் கதை நம் மனதை உருக்கும் சக்தி கொண்டது. அவர் பிறந்தது பட்டியல் சாதியான புலையர் எனும் சாதியில். அவரது குடும்பத்தில் ஆறாவது பிள்ளை அவர். அவரது தந்தை ரவியும் தாய் லீலாவும் தினக்கூலிகள். சிறுவயது முதல் ஆன்மிகத்தில் மிகுந்த நாட்டம் கொண்டவர் யது கிருஷ்ணா. தினமும் வீட்டுக்கு அருகே உள்ள பத்திரகாளி கோயிலுக்குச் சென்று வழிபடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். தன் தாய் மிகுந்த பக்தி உள்ளவர் என்றும் பூஜை சமயம் பூக்களை மாலையாகக் கட்டி அவர் தர அதைத் தான் எடுத்துச்சென்று காளியை வணங்கியதாகவும், தன் தாயே தன் ஆன்மிக குரு எனவும் கூறுகிறார் யதுகிருஷ்ணா
10ஆம் வகுப்பு முடித்தபின் சமஸ்கிருதம் கற்றார் யதுகிருஷ்ணா. வித்யாபீடம் எனும் அமைப்பில் சேர்ந்து தந்திரி தந்திரம் எனப்படும் பூஜை வழிமுறைகளையும் கற்றுத்தேர்ந்தார். அப்போதெல்லாம் அவருக்கு தான் பூசாரி ஆவோம் என்றே தெரிந்திருக்கவில்லை. ஆன்மிக நம்பிக்கையாலேயே இவற்றை கற்றுத்தேர்ந்தார். முழுமையாகக் கற்று முடிப்பதற்கு 20 ஆண்டுகள் ஆகலாம் என்ற நிலையில், இவர் தந்திரி தந்திரா பூஜை வழிமுறைகளை 10 ஆண்டுகளில் கற்றுத்தேர்ந்தார்.
அதன்பின் பரவூர் பத்திரகாளி கோயிலில் குருக்களாக பணியில் அமர்ந்தார். அங்கே பணியாற்றியபடி சமஸ்கிருதம் மற்றும் பூஜைமுறைகளைக் கற்றுக்கொண்டு கல்லூரிக்கும் சென்று வந்தார்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனும் சட்டம் நிறைவேறியபின் முதல் பட்டியல் சாதி பூசாரியாக தேர்வாகி திருவாங்கூர் தேவசம் போர்டிலும் தேர்ந்தெடுக்கப்பட்டார் யதுகிருஷ்ணா
தன் சாதியால் அவர் கோயிலில் அல்லது வித்யாபீடத்தில் அவமதிக்கப்பட்டதுண்டா என கேட்கப்பட்டபோது “ஒரு இடத்திலும் அவமதிக்கப்பட்டதில்லை. நான் சம்ஸ்கிருதம் படிக்கத் தங்கிய வீட்டில் என்னுடன் தங்கிய அறைத்தோழர் ஒரு கவுட சரஸ்வதி பார்ப்பனர். என் சாதி மனித சாதி என்றே அவர் கருதி என்னுடன் அன்புடன் பழகினார். அவர் மட்டுமல்ல குருதேவ வித்யாபீடத்திலும் பார்ப்பனர், பிறசாதியினர் என்ற பேதமே இருந்ததில்லை.
எனக்கு பத்தனம்திட்டா ஆலயத்தில் வேலை கிடைத்ததும் நான் பணியாற்றிய பரவூர் பத்திரகாளி அம்மன் கோயில் நிர்வாகிகளும், பக்தர்களும் என்னைப் பிரிவதை நினைத்து வருந்தினாலும், பதவி உயர்வு கிடைத்து செல்வதை மிகுந்த மகிழ்ச்சியுடன் பாராட்டி வாழ்த்தினார்கள். மற்றவர்கள் பூசாரி வேலையை ஒரு தொழிலாகக் கருதலாம். எனக்கு இது ஒரு ஆன்மிக சேவை. எனக்கு விடுமுறை எடுக்காமல் சனி, ஞாயிறு அன்றுகூட பூசை செய்வதே விருப்பமானது” என்கிறார்
குறைவற்ற பக்தி, நிறைந்த ஆன்மிகம் ஆகியவற்றைக் கொண்ட யதுகிருஷ்ணா குருக்கள் அவர்களை வாழ்த்தி, அவரை வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமை மிகுந்த பெருமை அடைகிறது.
இத்தனை உயர்ந்த பக்தி கொண்ட உங்களுக்கு பூசை செய்ய வாய்ப்பளித்ததால் பத்தனம்திட்டா மகாதேவஸ்வாமி ஆலயமே பெருமை அடைவதாகத் தான் நான் கருதுகிறேன்.
“தாயினும் நல்ல தலைவர் என்று அடியார்
தம்அடி போற்றிசைப் பார்கள்
வாயினும் மனத்தும் மருவிநின்று அகலா
மாண்பினர் காண்பல வேடர்” (தேவாரம்)
இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 ]
ஒரு பெருமையான நிகழ்வு. இறைவனைத் தொழ பக்தி ஒன்றே போதும். இந்தச் செய்தியின் மூலம் “எதையும் உள்ளன்போடு கற்கவேண்டும், மனத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும்” திரு. யது கிருஷ்ணா உணர்த்தி உள்ளார். அவரை வல்லமையாளராகத் தேர்வு செய்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது தங்கள் தகவல்+விருது.
இப்படியே பேதமற்ற சமுதாயம் தமிழ்நாட்டிலும் இருக்குமானால்
நம் உளத்தில் நீங்காத சுடர் ஆக அன்றோ இருப்பான்? வல்லமை வாழ்க
யோகியார்
“மற்றவர்கள் பூசாரி வேலையை ஒரு தொழிலாகக் கருதலாம். எனக்கு இது ஒரு ஆன்மிக சேவை”. என்கிற ஒரு நல்ல ஆன்மிக சேவையாளருக்கு உரிய பதவி கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவரை இந்தவார வல்லமையாளராகத் தேர்வுசெய்திருக்கிறீர்கள். அவருக்கும் தேர்வுசெய்த வல்லமைக்கும் பாராட்டுகள்.
அ. இராஜகோபாலன்.