ஆதி முதல்வனே! ஸ்ரீ கணேசா!!
விசாலம்
விக்னங்கள் வராமல் நம்மைக் காக்கும் ஒரு தெய்வமாக விநாயகர் நம் முன் தெரிகிறார். அந்த அசைக்க முடியாத நம்பிக்கையினால் எந்தக் காரியம் செய்தாலும் எந்தப் பூஜை ஆரம்பித்தாலும் விநாயகர் பூஜையுடன் தான் ஆரம்பிக்கிறோம். எங்கும் பல பெயர்களுடன் இந்த விநாயகர் அருள் புரிகிறார். எல்லாத் தெய்வங்களையும் நமஸ்கரித்துக் கும்பிடுகிறோம். ஆனால், விநாயகருக்கு இன்னும் ஸ்பெஷல்! அவரை வழிபடும் போது இரண்டு கைகளின் முட்டியால் நெற்றிக்கு மேல் குட்டிக்கொண்டு தோப்புக்கரணமும் போடுகிறோம். அருகம்புல்லும் தோப்புக் கரணமும் இருந்தால் போதும் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து விடுவார் அவர்.
இவர் எப்படிக் கூப்பிட்டாலும் வந்து விடுவார். மஞ்சளில் பிடித்தாலும் சரி, களி மண்ணில் பிடித்தாலும் சரி, நாம் கையால் பிடிக்கையிலே அவர்தான் கணபதி என்ற பாவம் வந்தாலே போதும். அதற்கென்று தனி கண், காது என்று கூட வேண்டாம். அவர் அங்கு ஜம்மென்று அமர்ந்து விடுவார். எல்லாக் கோயில்களிலும் கணபதிக்கென்று ஒரு இடம் நிச்சயமாக இருக்கும். வைணவக் கோயில்களிலும் “தும்பிக்கை ஆழ்வார்” என்ற பெயரில் இவர் இருப்பார். இவரது உருவமே ஒரு தனி சிறப்பு. சின்னக் கண்கள், பெரிய முறம் போன்ற காதுகள், பருத்த வயிறு, சின்ன குண்டான கால்கள். ஆனாலும் அவரைப் பார்க்கப் பார்க்கப் பரவசம். இவரை உற்றுக் கவனிக்க ‘ஓம் ‘என்னும் எழுத்து புலப்படும். இவரைப் பார்த்தவுடன் நம் கண்கள் தானகவே மூடிக்கொண்டு மனமும் பிரார்த்தனை செய்யத் தொடங்குகிறது. இவரைப் பூஜிப்பவர்கள் “காணாபத்யா” என்ற பெயரைக் கொண்டுள்ளார்கள்.
ஏழைகளும் மிக எளிதாக இவரைப் பூஜிக்கலாம். விளக்கேற்றி, மஞ்சளை விநாயகராகப் பிடித்து, கொஞ்சம் இலைகளைப் பறித்து கூடவே அருகம்புல்லும் போட்டால் பூஜை முடிந்துவிடும். ஒரு தேங்காய் உடைத்தால் போதும். விநாயகரின் பூஜையின் போது உதவும் இலைகள், கொய்யா இலை, வன்னி இலை, ஊமைத்தம் பூவின் இலை, எருக்கு இலை, மருக்கொழுந்து, மருவு, வில்வம் போன்றவை. துளசி, சாதாரணமாகச் சேர்ப்பதில்லை. ஆனால் விநாயகச் சதுர்த்திக்கு மட்டும் துளசி பங்கு பெறுகிறது.
விநாயகர் தான் எத்தனை விதங்கள். தும்பிக்கையை இடமாக வளைத்து வைத்தவர், வலமாக வளைத்து வைத்திருப்பவர், நின்ற கோலத்தில் ஒரு காலைத் தூக்கியபடி நர்த்தனம் ஆடும் விநாயகர், மூஞ்சூர் மேல் அமர்ந்திருப்பவர் என்று பல வித்தியாசமான கோலத்தில் நாம் பார்க்கிறோம்.
ஆனால் ஹேரமப கண்பதிக்கு வாகனம் சிங்கமாக இருக்கிறது. ஹேரமப கண்பதிக்கு ஐந்து முகங்களும் பத்துக் கைகளும் இருக்கின்றன. அதில் முறையே கதை, அங்குசம், கரும்பு வில், சங்கு, சக்கரம், பாசம், தாமரை, நெற்கதிர், உடைந்த தந்தம், இரத்தின கலசம் உடன் இருப்பது
அவசியம். மஹாராஷ்ட்ரத்தில் ஸ்ரீ லோகமானய திலக்ஜியால் இந்தக் கணேஷ் சதுர்த்தி பிரபலமாக்கப்பட்டது. மராட்டியர்கள் இவரைச் சித்தி புத்தியுடன் உழவுக்கும் அவரே முதல் கடவுள் என்று பூஜிக்கின்றனர்.
பால கணபதி, குழந்தையாக நான்கு கைகள் கொண்டு சிறிய தும்பிக்கையுடன் மிக அழகாகக் காணப்படுகிறார்.
மகா கணபதியின் நெற்றியில் பிறைச்சந்திரன் இருக்கிறது. முக்கண்ணன் போல் மூன்று கண்கள் இருக்கின்றன. அவரது சக்தி மடியில் அமர்ந்திருக்க அவள் கையில் தாமரை மலர் இருக்கிறது.
சுசீந்திரம் ஆலயத்தில் கணபதி ஒரு பெண்ணாக, கணேசானி என்ற பெயருடன் ஒரு மண்டபத்தின் தூணிலே காணப்படுகிறார். இதே போல் வட நாட்டிலும் கணபதியைத் தேவியாக சித்திரித்துள்ளனர். வெளிநாடுகளிலும் பல விதமான கணபதியைக் காண்கிறோம். ஆனால் பெயர்கள் தான் வித்தியாசப்படுகின்றன.
விநாயகர் வழிபாடு சுமார் ஆறாவது நூற்றாண்டிலேயே ஆரம்பமாகிவிட்டது என்கிறார்கள். இந்த வழிபாடு பர்மா, ஜாவா, இந்தோனேஷியா, சியாம், சீனா, ஜப்பான், ஸ்ரீலங்கா போன்ற நாடுகளிலும் காணமுடிகிறது. புத்த மஹானும் தன் சிஷ்யருக்கு “கணபதி ஹிருதயம்” என்ற மந்திரத்தை உபதேசித்தார் என்று மஹாயனம் புத்த நூல் சொல்கிறது.
கணபதியைப் பற்றி எழுத எழுத நீண்டுக்கொண்டே இருக்கும்.
“வெள்ளைக் கொம்பன் விநாயகனைத் தொழத்
துள்ளி யோடுந் தொடர்ந்து வினைகளே
அப்ப முப்பழம் அமுது செய்தருளிய
தொப்பை யப்பனைத் தொழவினை யறுமே”
அவரை வணங்கி அவரரருள் பெறுவோமாக.
========================
படத்திற்கு நன்றி – விக்கிப்பீடியா