பவள சங்கரி

kodumanal 5

இதுவரை நடத்தப்பட்ட பல்வேறு அகழாய்வுகளில் உலகளவில் சிறப்புப் பெற்ற மிக முக்கியமான அகழாய்வாக கொடுமணல் அகழாய்வு கருதப்படுகிறது. கல்வெட்டறிஞர் , புலவர்,பேராசிரியர் செ.இராசு அவர்கள் முதன் முதலில் ‘நொய்யல் ஆற்று நாகரிகம்’ என்று குறிப்பிட்டு வெளியிட்ட ஆய்வறிக்கை மூலமாக பிரபலமானது. மெருகூட்டப்பட்ட 8000 கண்ணாடி மணிகள் ஒரு கல்லறையில் கிடைத்த தகவல், 1985 முதல் 1991 வரை பேராசிரியர் எ.சுப்பராயலு அவர்கள் தலைமையில் நான்கு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. கொடுமணல், கொங்கு நாட்டின் ஈரோடு மாவட்டத்தில், பெருந்துறை வட்டத்தில் நொய்யல் ஆற்றின் வடகரையில், சென்னிமலையிலிருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் 18 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. சங்ககாலத் தமிழ் மக்கள் பல்வேறு தொழில்நுட்பங்களில் மேன்மை பெற்றவர்களாக இருந்தனர் எனவும், அதன் மூலம் வளர்ச்சி பெற்று, பன்னாட்டு வணிகத்திலும், ஒட்டுமொத்தப் பொருளாதாரத்திலும் மிக உன்னத நிலையை அடைந்திருந்தனர் எனவும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள ‘தொல்லியல் நோக்கில் சங்ககாலம்’ என்ற தனது நூலில், பக்: 79 முதல் 130வரை 52 பக்கங்களில் விரிவாகக் கூறியுள்ளார் முனைவர் கா.இராசன் அவர்கள்.

கொடுமணல் பகுதியில் பச்சைக்கல், நீலக்கல், பளிங்கு, சூதுபவளம், சேசுபர், அகேட், குருந்தம், வைடூரியம், லாபியஸ் லசுலி (Lapius Lajuli), மாவுக்கல் முதலிய அரிய கற்களைக் கொண்டு மணிகள் செய்யும் தொழில் சிறப்பாக நடந்து வந்துள்ளது எனவும், மேற்கூறியவற்றில் வைடூரியம், சூதுபவளம், அகேட் போன்றவை மூலப் பொருட்களாக இந்தியாவின் பிற பகுதியிலிருந்து தருவிக்கப்பட்டு இங்கு ஆபரணங்களாக உருவாக்கப் பட்டுள்ளன எனவும் (பக்.122) மயிரிழை அளவு துளைகள் கொண்ட மணிகள் கொடுமணலில் கிடைப்பதால், தமிழர்கள் தொழில்நுட்பம் அறிந்தவர்களாக இருந்துள்ளனர் எனவும், இத்தொழில் சங்க காலத்தில் சிறப்புற்று விளங்கியதோடு, அதிக அளவு அந்நியச் செலவாணியை தமிழகத்திற்கு ஈட்டித் தந்துள்ளது எனவும்(பக்.124) அறியமுடிகிறது என்கிறார் முனைவர் இராசன் அவர்கள். அதோடு இரும்புக் கருவிகளான கத்தி, வாள், ஈட்டி, கேடயம், அங்கவடி (horse – stirrups) போன்றவைகளும் அதிக அளவில் கிடைத்துள்ளன. அக்கால வணிகத்தில் குதிரை முக்கியத்துவம் பெற்றிருந்ததை குதிரையின் அங்கவடி கிடைத்துள்ளதால் அறியமுடிகிறது. மத்திய தரைக்கடல் பகுதிகளிலிருந்து கடல்வழியாக குதிரைகள் ஏராளமாக தமிழகம் வந்திறங்கியதைப் பட்டினப்பாலை (185) குறிப்பிடுவது இங்கு ஒப்பு நோக்கத்தக்கதாகும். இன்றளவிலும் ஈரோடு அந்தியூர் பகுதியில் குதிரைச் சந்தை மிகச்சிறப்பாக உலகளவில் வணிகம் செய்யப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

“கொடுமணம் பட்ட வினைமாண் அருங்கலம்
பந்தர் பயந்த பலர் புகழ் முத்தம்”

என்னும் பதிற்றுப்பத்து (74:5-6) சங்கப்பாடல் மூலமாக இதன் சிறப்பை அறியமுடிகிறது. சங்ககாலத்தில் கொடுமணம் என்று அழைக்கப்பட்ட இவ்வூர் இன்று கொடுமணல் என வழங்கி வருகிறது. யவனர் என இலக்கியங்களில் குறிப்பிடப்படும் கிரேக்கம், ரோம், எகிப்து நாடுகளைச் சேர்ந்த மக்கள் இந்த கொடுமணலுக்கு வந்து சென்றுள்ளனர்.

கொடுமணல் அக்காலத்தில் ஒரு பெரிய தொழில் நகரமாக இருந்திருக்கிறது என்பதையும் இது புலப்படுத்துகிறது. இ.எச்.வார்மிங்டன் (E.H. warmington) தமது The commerce between the Roman Empire and India, (1948) என்ற நூலில், ரோமானியர் அக்காலத்தில் மிக விரும்பி பயன்படுத்திய அரிய கல் வகைகள் என்று குறிப்பிட்டுள்ளவைகள் கொடுமணலில் கிடைத்த மேற்கண்ட கற்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆய்வுக்குழு தலைவர்,பேராசிரியர் இராசன் தினமலர் இதழ் நேர்காணலில்  கூறியதாவது:

“கொடுமணல் பகுதியில், விலை உயர்ந்த, சிறந்த தொழில் நுட்பங்களை கொண்ட அணிகலன்கள் தயாரிப்பு தொழிற்சாலைகள் இருந்துள்ளன. திருப்பூர் – ஈரோடு மாவட்ட எல்லையிலுள்ள கொடுமணல் கிராமம், 2500 ஆண்டுகளுக்குமுன், வணிக பெருநகரமாக விளங்கியதற்கான ஆதாரங்கள், அகழ்வாராய்ச்சியின் மூலம் கிடைத்துள்ளன. “சபையர்’ எனப்படும் நீலக்கல், “குவார்ட்ஸ்’ எனப்படும் பளிங்கு கற்கள், “பெரில்’ எனப்படும் வைடூரியங்கள் மற்றும் கல் மணிகளை அறுக்கவும், மெருகூட்டவும் பயன்படும் குறுந்தம் கல் வகைகளும் இங்கு இருந்ததால், இங்கு தொழில் சிறப்பாக இருந்துள்ளது. மேலும், கார்னீலியன், அகேட் ஆகிய மணிகள் தயாரிக்கும் மூலப்பொருட்கள், குஜராத் பகுதியில் இருந்தும், “பிளாக் கேட் ஐ’ எனப்படும் பூனைக்கண் மணிகள் இலங்கையில் இருந்தும், லேபிஸ் லஸ்லி மணிகள், ஆப்கானிஸ்தானில் இருந்தும் வந்துள்ளன. அதோடு, சங்கு அறுத்து, அணிகலன்கள் தயாரித்ததும், துணி உற்பத்தியும் சிறந்து விளங்கியதற்கு சான்றாக உபகரணங்கள் கிடைத்துள்ளன. கார் நீலியன் எனப்படும் சூதுபவள மணிகள், பளிங்கு கற்கள், வைடூரியம், வீடு, தொழிற்கூடங்கள், 218 மணிகள், சங்கு அணிகலன்கள் என நூற்றுக்கணக்கில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 50 ஏக்கர் பரப்பளவுள்ள வாழ்விட பகுதியில், 9 அகழாய்வு குழிகளும், 100 ஏக்கர் பரப்பளவுள்ள ஈமக்காட்டில், நடுகல், வட்ட கல் என 100 ஈமச்சின்னங்கள் உள்ளன. இதில், ஒரு ஈமச்சின்னமும் தோண்டப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகம் முழுவதும் கல் மணி அணிகலன்கள் மற்றும் உலோக அணிகலன்கள், சங்கு அணிகலன்கள் தயாரிப்பில் சிறந்து விளங்கியதும், ஒரு குழுவாக வாழ்ந்ததும், பண்டை காலத்திலேயே, உலக அளவில், மதிப்புமிகு பொருட்கள் உற்பத்தி செய்து வணிக தொடர்பு வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது. ஐந்து கல் தொலைவில் உள்ள கத்தாங்கண்ணியில் கிடைத்த ரோமானிய நாணய குவியலும், வணிக தொடர்புகளை உறுதிப்படுத்துகின்றன. அறிவியல் சார்ந்த கார்பன் ஆய்வு, அமெரிக்காவுக்கு அனுப்பி ஆய்வு செய்ததில், கொடுமணல் காலம் கி.மு., ஐந்தாம் நூற்றாண்டுக்கு முந்தையது என தெரிந்துள்ளது.கொடுமணல் என்ற நகரம், மிகச்சிறந்த தொழில்நுட்பங்களுடன் கூடிய தொழிற்கூடங்களை கொண்ட நகரமாகவும், உள்நாடு, வெளிநாடு வணிக உறவுகளைக் கொண்ட வணிக நகரமாகவும், சமூக, பொருளாதார, எழுத்தறிவு பெற்ற நகரமாகவும் விளங்கியுள்ளது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது என்று இராசன் கூறினார்”

http://www.dinamalar.com/news_detail.asp?id=714866&Print=1

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.