-நாகேஸ்வரி அண்ணாமலை

‘யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்’ என்றார் பாரதி.  ‘தமிழுக்கு அமுதென்று பேர்;  அது எங்கள் உயிருக்கு நேர்’ என்றார் பாரதிதாசன்.  தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் தங்கள் தாய்மொழியை நினைத்துப் பெருமைப்பட வேண்டும்.  தாய்மொழிக்குப் பெருமை சேர்க்க வேண்டும்.  இது எல்லோரும் ஒப்புக்கொள்ளக் கூடிய விஷயம்.  அதை எப்படிச் செயலில் காட்டுவது என்பதில்தான் எல்லோரிடையேயும் ஒற்றுமை இருப்பதாகத் தெரியவில்லை.

இப்போது அமெரிக்காவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களுள் ஒன்றான ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கு தமிழக அரசு பத்து கோடி ரூபாய் – டாலரில் சொல்வதென்றால் 15 லட்சம் டாலர் – கொடுப்பதாக வாக்களித்திருக்கிறது.  இறந்த அம்மையார் கொடுப்பதாக வாக்களித்திருந்ததால் இப்போதுள்ள தமிழ்நாடு அரசு கொடுக்கத் திட்டமிட்டிருக்கிறதாம்.  இதற்கு மூல காரணமாக இருந்தவர்கள் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த, அமெரிக்காவில் வாழும் இரு மருத்துவர்கள்.  இவர்கள் இருவரும் ஆளுக்கு அரை மில்லியன் டாலர் (ஐந்து லட்சம்) ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஒன்று நிறுவுவதற்கு கொடுத்தார்கள்.  ஹார்வர்ட் பல்கலைக்கழகம் ஒரு மில்லியன் போதாது என்று கூறி மொத்தம் எட்டு மில்லியன் (எண்பது லட்சம்) வேண்டும் என்று கேட்டது.  இதனால் அமெரிக்காவில் வாழும் அமெரிக்கத் தமிழர்கள் கொஞ்சம் பணம் திரட்டினார்கள்.  அப்படியும் ஹார்வர்ட் கேட்ட பணத்துக்கு நிறையத் துண்டு விழுகிறது.  அதை ஓரளவிற்கு நிரப்புவதற்குத் தமிழ்நாடு அரசு 15 லட்சம் டாலர் கொடுப்பதாக வாக்களித்திருக்கிறது.

ஏழை நாடான இந்தியாவின் ஒரு மாநிலமான தமிழகம் இத்தனை பணம் செலவழித்து அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றின் மூலம் தமிழை வளர்க்கத்தான் வேண்டுமா?  மேலும் அமெரிக்காவில் வாழும் தமிழர்களும் மற்ற தமிழ் அறிஞர்களும் விரும்பும் விதத்தில் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் தமிழை வளர்க்குமா?  சமீபத்தில் சென்னையில் ஒரு பேட்டியில் இஸ்ரேலைச் சேர்ந்த டேவிட் ஷுல்மன் தமிழில் சம்ஸ்கிருதத்தின் தாக்கம் இருப்பதாகச் சொன்னதற்கு அவரைத் தமிழ்நாட்டுத் தமிழறிஞர்களில் சிலர் வெகுவாக விமர்சித்தார்கள்.  உலகிலேயே தமிழ்தான் மூத்த மொழி, சிறந்த மொழி என்று சொன்னால்தான் இவர்களுடைய விமர்சனத்திற்கு ஆளாகாமல் இருக்க முடியும்.  ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உலகின் மூத்த மொழி தமிழ்தான் என்று சொல்வார்கள் என்று எதிர்பார்க்கிறார்களா? ஷுல்மன் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு பற்றிய நூலை வெளியிட்டது ஹார்வர்ட் பல்கலைக்கழகம்.

ஹார்வர்ட் பல்கலைக்கழகம் தமிழை எப்படி ஆராய்ச்சி செய்யும், எப்படி வளர்க்கும் என்பது ஒரு புறம் இருக்கட்டும்.  முதலில் தமிழைத் தமிழ்நாட்டில் வளர்ப்பது பற்றித் தமிழ் வல்லுநர்களும் அரசியல்வாதிகளும் ஆராயட்டும்; அதற்குரிய செயல்களில் இறங்கட்டும்.  ஆங்கிலக் கல்வி மோகம் அதிகமாகிவரும் இந்தச் சமயத்தில் தமிழைச் சிறப்பாகக் கற்பது பற்றி எத்தனை பெற்றோர்கள் சிந்திக்கிறார்கள்?  அவர்களையும் குறை சொல்வதற்கில்லை.  தங்கள் குழந்தைகளுக்கு எங்கு, எதில் வேலைவாய்ப்பு இருக்கிறதோ  அதைத்தானே படிக்கும்படி அவர்களும் வற்புறுத்துவார்கள்.  இந்தியாவில் இப்போது தொழிற்கல்வி பயிலக் கடும் போட்டி நிலவுகிறது.  அந்தப் படிப்பில் சேர வேண்டுமானால் அதற்குரிய பாடங்களில் நிறைய மதிப்பெண்கள் வாங்க வேண்டியிருக்கிறது.  இந்தப் போராட்டத்தில் மொழித் தேர்ச்சி பற்றி யாரும் கவலைப்படுவதில்லை  வெளிநாட்டில் வேலைவாய்ப்பிற்காகவாவது ஆங்கிலத்தில் பயிற்சி பெற விழைகிறார்கள்.  அதனால் தமிழைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை.  தமிழில் தேர்ச்சி பெற்றால் எங்கு வேலை கிடைக்கும் என்பது பற்றித்தான் கவலைப்படுவார்கள்.

இப்போது தமிழ்நாட்டில் கல்வித்தரம் மிகவும் தாழ்ந்துபோயிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தியா முழுவதும் இதே நிலைதானா என்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை.  ஆசிரியத் தொழிலுக்குத் திறமையானவர்களை ஈர்ப்பதாகக் கூறிக்கொண்டு ஆசிரியர்களின் சம்பளத்தை உயர்த்திக்கொண்டே போகிறது அரசு.  ஆனால் ஆசிரியர்களின் தரமோ அவர்களின் கற்றுத்தரும் திறமையோ கூடியிருப்பதாகத் தெரியவில்லை.  எங்கள் காலத்தில் நாங்கள் பள்ளியை விட்டு வெளிவரும்போது தமிழில் ஓரளவு நல்ல பயிற்சியும் கல்லூரியைவிட்டு வெளிவரும்போது ஆங்கிலத்தில் ஓரளவு பயிற்சியும் பெற்றிருந்தோம்.  இதற்கு முக்கியக் காரணமாக நான் கருதுவது அப்போதைய ஆசிரியர்களின் திறமை, ஆசிரியத் தொழில் மேல் அவர்களுக்கிருந்த பிடிப்பு ஆகியவை.  இப்போது அந்தக் குணங்களை ஆசிரியர்களிடம் பார்ப்பதே அபூர்வமாக இருக்கிறது.  அப்போதுள்ள சமூகத்திலும் மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோர்களுக்கு மதிப்பு இருந்தாலும் ஆசிரியத் தொழிலுக்கு வந்தவர்களிடம் தரமும் திறமையும் இருந்தன.   நான் பள்ளியில் தமிழைப் பாட மொழியாகக் கொண்டுதான் கற்றேன்.  கல்லூரியில் சேர்ந்த பிறகுதான் ஆங்கிலம் பாட மொழி.  இப்போது எனக்கு இரண்டிலும் ஓரளவு தேர்ச்சி இருக்கிறது.

இப்போது கல்லூரி முடித்து வரும் மாணவர்களிடம்கூட இரண்டிலும் தேர்ச்சியைப் பார்க்க முடியவில்லை.  ஆங்கிலத்தில் பள்ளியிலிருந்தே பாட மொழியாகக் கற்பதைப் பெருமையாக எண்ணி அதில் கற்கப் போய் ஆங்கிலத்தில் மட்டுமல்ல, தமிழிலும் தேர்ச்சி இல்லை இக்கால மாணவர்களுக்கு.  முதலில் கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும்; அதற்கு ஆசிரியர்களின் தரத்தையும் அவர்களின் கற்பிக்கும் திறமையையும் உயர்த்த வேண்டும்.  தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கும் எல்லோரும் தமிழில் நன்றாக படிக்க, எழுதப் பயிற்சி தர வேண்டும்; பள்ளி, கல்லூரிப் படிப்பை முடித்தவர்களுக்கு நல்ல தமிழில் –நல்ல தமிழ் என்றால் பண்டிதத் தமிழ் அல்ல- எழுதும் திறமை வேண்டும். தொலைக்காட்சியில் தமிழைச் சரியாக உச்சரிக்கத் தெரிய வேண்டும். நம் பள்ளிகளில், கல்லூரிகளில் தமிழைச் சரியாகக் கற்றுக்கொடுக்காமல் ஹார்வேர்டில் தமிழ் கற்றுக்கொடுப்பதில் என்ன அர்த்தம் என்று புரியவில்லை.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.