மொழிபெயர்ப்பாளர் மாநில மாநாடு!

மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பில் மொழிபெயர்ப்பாளர் மாநில மாநாடு!  பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவு

மக்கள் சிந்தனைப் பேரவையின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் ஈரோடு யு.ஆர்.சி பள்ளி அரங்கில் 12.11.2017 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு பேரவையின் மாநிலத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் தலைமையேற்றதோடு பேரவையின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து உறுப்பினர்களிடையே விளக்கிப் பேசினார்.

காலை 10 மணிக்குத்  தொடங்கி மாலை 7 மணிவரை நடைபெற்ற இக்கூட்டத்தில் 15 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் சிந்தனைப் பேரவையின் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன :

  • மக்கள் சிந்தனைப் பேரவையின் 20-ஆம் ஆண்டு நிகழ்வுகளை வருகிற 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கி ஓராண்டு முழுக்க பல வடிவங்களில் தமிழகமெங்கும் நடத்துவது
  • பிற மொழிகளிலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து பிற மொழிகளுக்கும் மொழிபெயர்த்து புதிய நூலாக்கப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ள மொழிபெயர்ப்பாளர்களை ஒருங்கிணைத்து மாநில அளவில் மொழிபெயர்ப்பாளர் மாநாட்டை திருச்சியில் 2018-இல் முழுமையான தயாரிப்புகளுடன் நடத்துவது எனவும் இதில் தமிழகத்தில் மட்டுமல்லாது வெளிநாடுகளில் வசிக்கும் தமிழ் மொழிபெயர்ப்பாளர்களையும் பங்கேற்கச் செய்வது
  • தமிழகமெங்குமுள்ள இளம் பேச்சாளர்களை ஒருங்கிணைத்து தமிழக இளம் பேச்சாளர் மாநாடு ஒன்றினை ஈரோட்டில் நடத்துவது, இதில் தமிழ் மாநிலத்திலுள்ள ஏற்கனவே பேச்சுத் துறையில் ஈடுபாடும் ஓரளவு பயிற்சியும் கொண்ட முப்பது வயதிற்கு உட்பட்ட இளம் பேச்சாளர்களை இம்மாநாட்டின் பிரதிநிதிகளாகப் பங்கேற்க வைப்பது.
  • வருகிற டிசம்பர் 11-ஆம் தேதி ஈரோட்டில் பாரதி விழாவை சிறப்பாக நடத்துவது, இந்நிகழ்வில் தமிழறிஞர் சிலம்பொலி    சு. செல்லப்பன் அவர்களுக்கு பாரதி விருது வழங்குவது, கவிஞர் தமிழ்ஒளியின்  திருவுருவப் படத்தைத் திறந்து வைப்பது
  • மக்கள் சிந்தனைப் பேரவையை மாநில அமைப்பாக விரிவடையச் செய்வது,  ஏற்கனவே அமைப்புக்கள் உருவாகியுள்ள மாவட்டங்களில் பேரவையின் நடவடிக்கைகளை மேம்படுத்தவது, இதுவரை பேரவை உருவாகாத மாவட்டங்களில் உடனடியாக பேரவையின் மாவட்ட அமைப்பை உருவாக்க நடவடிக்கைகள் எடுப்பது. எதிர்வரும் காலங்களில் மாநிலப் பொதுக்குழுக் கூட்டத்தை அடுத்தடுத்த மாவட்டங்களில் நடத்தி பேரவையின் மாநிலத் தன்மையை மேம்படுத்துவது. உள்ளிட்ட பல தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக மாநிலச் செயலாளர் ந.அன்பரசு வேலையறிக்கை வாசித்தார்.  பொருளாளர் க.அழகன்  வரவு-செலவு கணக்கை சமர்ப்பித்தார். துணைத்தலைவர் பேராசிரியர்                கோ.விஜயராமலிங்கம், துணைச் செயலாளர் ஜா. தினகரன் உள்ளிட்ட மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

T.Stalin Gunasekaran,

President,
Makkal Sinthanai Peravai,
A – 47, Sampath Nagar,
Erode – 638011.
Ph No : 0424  – 2269186.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க