பொதுத்துறை நிறுவனங்களும், வங்கிகளில் அடமானமும்!

0

பவள சங்கரி

தலையங்கம்

இன்று பல ஊடகங்களிலும் பெரிதும் பேசப்பட்ட போக்குவரத்துக் கழகங்களின் பணிமனைகளும், பேருந்துகளும், மண்டல அலுவலகங்களும் தனித்தனியாக சுமாராக ஏழு போக்குவரத்துக் கழகங்கள் அடமானம் வைக்கப்பட்டு 2000 – 2500 கோடி உரூபாய்களை கடனாகப் பெற்றுள்ளன. சட்டப்படி பொது மக்களுக்குச் சொந்தமான இந்த போக்குவரத்துக் கழகங்கள் அடமானம் வைக்க முடியுமா? தொகை செலுத்தப்படாவிட்டால் அவற்றை கையகப்படுத்த சட்டத்தில் வழிமுறை உள்ளதா? தலைநகரில் உள்ள போக்குவரத்துக் கழகங்களும் இதில் அடங்கும்.

இரண்டு பேருந்துகள் நான்கு பேருந்துகள் வைத்திருக்கும் தனியார் நிறுவனத்தினர்கள் ஆண்டிற்கு ஒன்றோ அல்லது இரண்டாண்டிற்கு ஒன்றோ இலாபத்திலிருந்து புதிய வழித்தடங்களையும் வாங்கி இணைக்கமுடிவதையும் காணமுடிகிறது. சில பெரிய தனியார் நிறுவனங்கள் மிகச் சிறப்பாகச் செயல்படுகின்றன. இது மட்டும் எப்படி சாத்தியமாகிறது.

ஒரு பேருந்திற்கு ஒரு நாள் வருவாய் சுமாராக 13 முதல் 14,000 உரூபாய். ஒரு நாளைக்கு அரசு அங்கீகரித்துள்ள டீசல் செலவு 103 லிட்டருக்கு சுமாராக 7,000 உரூபாய். ஓட்டுநர், நடத்துனர், உதிரி பாகங்கள், அலுவலகச் செலவுகளுக்காக ஒரு பேருந்திற்கு 3,000 உரூபாய் செலவு. ஆக மொத்தம் ஒரு பேருந்திற்கு ஆகக்கூடிய செலவுகள் 10,000 உரூபாய். இதற்கு மேலே ஆயிரம் உரூபாய் எதிர்பாராத செலவினத்திற்கு ஒதுக்குவோம். ஆக ஒரு பேருந்திற்கு 2,000 முதல் 3,000 உரூபாய் வரை மீதமாகவேண்டும். தமிழ் நாட்டிலுள்ள பேருந்துகள் மொத்தம் சுமாராக 1 இலட்சம் என்று வைத்துக்கொண்டால் போக்குவரத்துக் கழகங்களின் ஒருநாள் வருமானம் சுமாராக 20 முதல் 30 கோடியாகும். ஆண்டு ஒன்றிற்கு 7,000 கோடி உரூபாய் வருமானம் வர இருக்கும்போது எதற்காக இந்த அடமானங்கள்? இது நிர்வாக சீர்கேடுகளால் ஏற்படும் பிரச்சனையா என்ற ஐயத்தையே தோற்றுவிக்கிறது. வைத்த அடமானப் பொருளை மீட்பதற்கு நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? தனியார் போக்குவரத்து நிறுவனங்கள் தங்கள் வருமானத்தைப் பெருக்குவதற்கு கூரியர் பணியகங்களை நடத்துவதுபோல அரசு போக்குவரத்துக் கழகங்களும் துணைப்பணிகளிலும் ஈடுபடுவதால் எந்தவித செலவுமின்றி பல ஆயிரம் கோடிகளை வருமானமும் பார்க்கலாம் என்பதும் கண்கூடு.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *