எழிலரசி கிளியோபாத்ரா – [பேரங்க நாடகம்] (9)

அங்கம் -6 காட்சி -4

எங்கே ஆண்டனி? எவருடன் உள்ளார்?
என்ன செய்கிறார்? என்னைக் கூறாய்
உன்னை அனுப்பிய தென்று! ஆண்டனி
சோகமா யிருந்தால், சொல்வாய் அவரிடம்,
ஆடிப் பாடி உள்ளேன் என்று! அவர்
பூரித்தி ருந்தால் நோயில் துடிப்பதாய்க்
கூறிடு! போய்வா சீக்கிரம் ! …

(கிளியோபாத்ரா)

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

கண்ணியப் பிரபு! ஒரு வார்த்தை புகல்வேன்!
பிரியத்தான் வேண்டும் நீங்களும் நானும்!
அது மட்டு மில்லை!
நேசிப்ப துண்மை நீங்களும், நானும் !
அது மட்டு மில்லை!
நிச்சயம் அறிவீர் நீவீர்! சொல்கிறேன்,
மறக்கும் என் நினைவு, என்னைத்
துறக்கும் ஆண்டனி போன்றது! …

(கிளியோபாத்ரா)

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

என்னை மறந்து ஆண்டனி ஒதுங்கினால்
முன்னம் பீடிக்கும் மனநோய் என்னை!
மின்னலாய் நீங்கிப் பொங்கும் உடல்நலம்,
அன்புக் காதலை ஆண்டனி காட்டினால்! …

(கிளியோபாத்ரா)

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

முகத்தைத் திருப்பி அழுவாய் அப்புறம்
மனைவிக் காக நீ ஆண்டனி !
என்னிடம் விடைபெற்று ஏகுவாய், இப்புறம்
எகிப்துக்குக் கண்ணீர் விடுவதாய்க் கூறி ! …

(கிளியோபாத்ரா)

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

 

நாடகப் பாத்திரங்கள்:

எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவில்:

கிளியோபாத்ரா: எகிப்தின் பட்டத்தரசி
ஆண்டனி: ரோமாபுரியின் மூன்று தளபதிகளில் ஒருவர்
டையோமீடிஸ்: கிளியோபாத்ராவின் பணியாள்
ஸெலியூகஸ்: கிளியோபாத்ராவின் கணக்காளி
பெல்லோடோரஸ்: கிளியோபாத்ராவின் பாதுகாப்புக் காவலன்.
பிதாதீதா: கியோபாத்ராவின் ஆயா
சிஸேரியன்: கிளியோபாத்ராவின் மகன்

ரோமாபுரியில்:

ரோமின் தளபதி: மார்க் ஆண்டனி,
அக்டேவியஸ் சீஸர்: ரோமின் இரண்டாம் தளபதி, ஜூலியஸ் சீஸரின் சகோதரன் மகன்
லெப்பிடஸ், ரோமின் மூன்றாம் தளபதி
எனோபரஸ் (ஆண்டனியின் பாதுகாவலன்),
டெமிட்ரியஸ்: ஆண்டனியின் நண்பன்
•பிலோ: ஆண்டனியின் நண்பன்
ஸெக்டஸ் பாம்ப்பி (கொல்லப்பட்ட போர்த் தளபதி பாம்ப்பியின் வாலிப மகன்)
அக்டேவியா (ஆண்டனியின் இரண்டாம் மனைவி, அக்டேவியஸின் சகோதரி)


கிளியோபாத்ரா

 

ரோமா புரியின் நிலைமை: •பிலிப்பிப் போரில் புரூட்டஸ், காஸ்ஸியஸ் மற்ற சதிகாரர் யாவருமிறந்த பிறகு, ஆண்டனி, அக்டேவியஸ், லெப்பிடஸ் மூவர்களின் கூட்டு மேற்பாட்டில் ரோமாபுரி இயங்கி வருகிறது. ஜூலியஸ் சீஸர் கொலையாகி இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஆண்டனி கிளியோபாத்ராவைக் காண எகிப்த் வருகிறான். மனைவி •புல்வியா மரணம் அடைந்த பிறகு, ஆண்டனி தனிமையாகிக் கிளியோபாத்ரா மீது நாட்டம் உண்டாகுகிறது. அதே சமயத்தில் நிதிக் களஞ்சியம் காலியாகிப் போர்வீரர்களுக்குக் கூலி கொடுக்க நிதியின்றிப் பணம் திரட்ட வேண்டி, ஆண்டனி எகிப்து செல்லத் திட்டமிடுகிறான். எகிப்த் அரசியிடம் நேராகக் கையேந்திப் பிச்சை கேட்கத் துணிவின்றி, கிளியோபாத்ரா தன்னைக் காண வரவேண்டும் என்று காவலர் மூலம் உத்தரவு அனுப்புகிறான். ஆனால் கிளியோபாத்ரா எகிப்த் தளத்தில் தானிருப்பதாகவும், ஆண்டனிதான் அவளைக் காண வரவேண்டும் என்று மறுமொழி அனுப்புகிறாள்.

நேரம், இடம்: அலெக்ஸாண்டியா, கிளியோபாத்ராவின் மாளிகை. பகல் வேளை.

நாடகப் பாத்திரங்கள்: கிளியோபாத்ரா, சேடிகள், ஆண்டனி, ஆண்டனியின், பாதுகாவலர், படையாட்கள்

காட்சி அமைப்பு: கிளியோபாத்ராவின் மாளிகையில் ரோமானிய படையினர் ஆண்டனியைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார். போர்க்களத்தில் தனித்துப் போய் மரணம் அடைந்த மனைவி புல்வியாவை எண்ணிக் கலங்கிய வண்ணம் ஆண்டனி ரோமாபுரிக்கு மீள வேண்டும் என்று அலை மோதிய நிலையில் இருக்கிறான். அப்போது கிளியோபாத்ரா ஐரிஸ், சார்மியான், அலெக்ஸாஸ் சகாக்களோடு வருகிறாள்.

கிளியோபாத்ரா: [ஆத்திரமுடன்] அலெக்ஸாஸ்! சார்மியான்! எங்கே ஆண்டனி? யாரோ டிருக்கிறார்? தேடிப் பாருங்கள். எகிப்தில் நடமாடிக் கொண்டு என் கண்களில் படாமல் என்ன செய்கிறார் என்று தெரிந்து வாருங்கள். என்னை விட்டுப் போக அவரைக் கவர்ச்சி செய்வது எது?

சார்மியான்: மகாராணி! நாலைந்து நாட்களாக நானும் ஆண்டனியைப் பார்க்க வில்லை.

அலெக்ஸாஸ்: மகாராணி! அவரது மனைவி புல்வியாவை நினைத்துப் புலம்பிக் கொண்டிருந்தார்.

கிளியோபாத்ரா: [சினத்துடன்] உயிரோடு கிளியோபாத்ரா உள்ள போது, செத்துப் போன புல்வியாவை நினைத்தா புலம்பிக் கொண்டிருக்கிறார்? அவளைத் தனியாகப் போர்க்களத்தில் விட்டு வந்த ஆண்டனிக்கு, அவள் மீது எப்படி அனுதாபம் வந்தது?

அலெக்ஸாஸ்: அவள் தனியே நோயில் சாகட்டும் என்று ஆண்டனிதான் காத்திருந்தார்.

கிளியோபாத்ரா: அப்படி என்றால் அவள் செத்துவிட்டாள் என்று ஆண்டனி ஆனந்தமாகத்தான் இருப்பார்! போய்ப் பார்த்து வா அலெக்ஸாஸ்! அவர் ஆனந்தமாக இருந்தால், கிளியோபாத்ரா திடீரொன நோயால் தாக்கப் பட்டுப் படுக்கையில் கிடக்கிறாள் என்று சொல்.

சார்மியான்: அப்படி யில்லை மகாராணி! அலெக்ஸாஸ் சொல்வது தவறு. ஆண்டனி மனக் கவலையில் வாடுகிறார் என்பது நானறிந்த உண்மை.

கிளியோபாத்ரா: [ஆர்வமோடு] அப்படியா? போய்ப் பார்த்து வா, சார்மியான்! ஆண்டனி மனக் கவலையில் இருந்தால், கிளியோபாத்ரா ஆடிப் பாடி ஆனந்தமாய் இருக்கிறாள் என்று சொல்.

ஐரிஸ்: மகாராணி, நீங்கள் ஆண்டனி பிரபுவை நேசிப்பது போல், உங்கள் மீது அவர் தீராக் காதல் கொள்ளும்படிச் செய்ய வேண்டும்.

கிளியோபாத்ரா: எப்படிச் செய்வது சொல் ஐரிஸ். நான் என்ன செய்யாமல் தவறுகிறேன்?

ஐரிஸ்: அவர் கேட்பதை எல்லாம் அளித்து விடுங்கள். எதையும் குறுக்கிட்டு மாட்டேன் என்று எதிர்க்காதீர்கள்.

கிளியோபாத்ரா: முட்டாளைப் போல் பேசுகிறாய் ஐரிஸ்! அவரை இழக்கும் முறைகளைச் சொல்லிக் கொடுக்கிறாய்.

ஐரிஸ்: கவர்ச்சியாகப் பேசுங்கள், கனிவாகப் பேசுங்கள், காரமாய்ப் பேசினால் பாராமல் போவார். அதோ அங்கே, ஆண்டனி கோமான் வருகிறார். [ஆண்டனி சோகமாய் நுழைகிறார்]

கிளியோபாத்ரா: [தலையில் கைவைத்து ஆண்டனியைப் பார்க்காது] எனக்குத் தலைவலி! மனவலி! உடல் வலி! ஐரிஸ்! மதுபானம் கொண்டுவா! மருந்தைக் கொண்டுவா! அலெக்ஸாஸ், நீ போய் மருத்துவரை அழைத்து வா! வரும் போது ஜோதிடரைக் கண்டு என்னைப் பார்க்க வரச் சொல். ஏன் என்னை நோய் தாக்குது என்று கேட்க வேண்டும். [ஐரிஸ், அலெக்ஸாஸ் வெளியேறுகிறார்கள்]

ஆண்டனி: [வருத்தமுடன்] அன்பே! கிளியோபாத்ரா! என்ன செய்கிறது உடம்புக்கு? சொல்லி விடக் கூடாதா எனக்கு? நானிங்கே வந்திருப்பது உனக்காக! ரோமை விட்டு வந்திருப்பது உனக்காக! நாட்டை ஆளாது நானிங்கு வந்திருப்பது உனக்காக! வீட்டை, மனைவியை விட்டு வந்திருப்பது உனக்காக!

[ஐரிஸ் மதுக் கிண்ணமுடன் மருந்தைக் கொண்டு வந்து கிளியோபாத்ராவுக்குத் தருகிறாள்]

கிளியோபாத்ரா: ஐரிஸ்! பிடித்துக் கொள் என்னை! தலை சுற்றுகிறது. [ஆண்டனி ஓடி வந்து கிளியோபாத்ராவைப் பிடித்துக் கொள்கிறான்]

ஆண்டனி: நான் உன்னருகில் இருக்கிறேன், கிளியோபாத்ரா! உன் தலை சுற்றாமல் நான் பிடித்துக் கொள்கிறேன். [கிளியோபாத்ராவை மெதுவாக மெத்தையில் படுக்க வைக்கிறான்] ஐரிஸ்! மருந்தை என்னிடம் கொடு! எனக்கும் மது பானம் கொண்டு வா!

கிளியோபாத்ரா: ஐரிஸ்! மருந்தை என் கையில் கொடு. தன் வேளையில் மும்முரமாய் உள்ளவர் எனக்கு உதவி செய்ய வேண்டாம்! பாரா முகமாய்க் காணாமல் போனவர் பரிவு எனக்கு வேண்டாம். [ஆண்டனியைப் பார்த்து] புல்வியாவின் ஈமக் கிரியைக்குப் போக வில்லையா?

ஆண்டனி: போவதா, கூடாதா என்று அலைமோதும் என் இதயம்! போக நினைத்துப் படகில் ஏறி நான் அமர்ந்தேன்! உன் நினைவு வந்தது! கீழே இறங்கி வந்து விட்டேன்! கவலப் படாதே கிளியோபாத்ரா! உன்னை விட்டு ஒருபோதும் நீங்க மாட்டேன்!

கிளியோபாத்ரா: நீங்கள் சொல்வது உண்மையா? உங்கள் புல்வியாவை விட முக்கியமானவளா நான்? முறைப்படி உங்களை மணந்தவள் அவள்! எனக்கென்ன பிடியுள்ளது? உங்களை உரிமையாக பிணைத்துக் கொள்ள என்னிடம் என்ன உள்ளது? நீங்கள் நினைத்தால் வருவீர்; நினைத்தால் போவீர்! அலெக்ஸாண்டிரியா அரண்மனை ரோமானியரின் சத்திரமாகி விட்டது! சாவடியாகி விட்டது!

ஆண்டனி: கண்ணே, கிளியோபாத்ரா! அப்படிச் சொல்லாதே! ஆண்டனிக்கு ரோமாபுரிதான் ஒரு சத்திரமாகி விட்டது. அலெக்ஸாண்டிரியா சொந்த பூமியாகி விட்டது! கிளியோபாரா எனக்குச் சொந்தமாகப் போகிறாள்.

கிளியோபாத்ரா: எகிப்த் எப்படி உங்களுக்குச் சொந்த பூமியானது! செத்துப் போன சீஸரின் மனைவி என்றுதான் எல்லாரும் என்னை நினைக்கிறார்கள். எப்போது நீங்கள் என்னைச் சொந்த மாக்கப் போகிறீர்?

ஆண்டனி: [வருத்தமுடன்] புல்வியா செத்து அவள் ஆத்மா போய் விட்டாலும், அது என்னைச் சுற்றிக் கொண்டுள்ளது இப்போது! அவள் போய்விட்டாலும் அவளது நிழல் என்னைப் பின்பற்றி வருகிறது. அந்த மனக் கனவுகள் என்னை விட்டு அகல வேண்டும். உன்னை நான் ஏற்றுக் கொள்ளும் போது, என்மனம் உன்னைத்தான் முற்றுகையிட வேண்டும். புல்வியாவின் ஆவி என்னைச் சுற்றி வரும்போது, நான் எப்படி உன்னைப் பற்றிக் கொள்வது?

கிளியோபாத்ரா: [ஆத்திரமாக] ஆண்டனி! ரோமுக்குப் போங்கள்! புல்வியா புதைக்கப் பட்ட பூமியில் உங்கள் கண்ணீரைக் கொட்டுங்கள்! எகிப்தில் உங்கள் கண்ணீர் ஒருதுளி சிந்தக் கூடாது! உங்கள் உடல் எகிப்தில் இருந்தாலும் உள்ளம் ரோமில்தான் உலவிக் கொண்டு வருகிறது! புல்வியாவுக்கு புனிதக் கண்ணீரும், கிளியோபாத்ராவுக்கு முதலைக் கண்ணீரும் விட வேண்டாம். அப்புறம் திரும்பி அவளுக்காக அழுவீர் ஆண்டனி! இப்புறம் என்னிடம் விடைபெற்று ஏகுவீர், கண்ணீரை எகிப்துக்கு விடுவதாய்க் கூறி!

ஆண்டனி: [கோபமாக] கிளியோபாத்ரா! என் குருதியைக் கொதிக்க வைக்கிறாய்! போதும் நிறுத்து உன் புலம்பலை!

கிளியோபாத்ரா: [கனிவுடன்] ஆண்டனி! ஒரு வார்த்தை சொல்கிறேன்! நீங்களும் நானும் பிரிய வேண்டும்! அது மட்டு மில்லை! நீங்களும் நானும் ஒருவரை ஒருவர் நேசித்தோம். அது போகட்டும்! உங்களைப் போல் எனக்கும் மறதி வரட்டும்! நிம்மதியாக மறந்து நான் தனியாகக் கிடக்கலாம். நீங்கள் என்னருகில் இருந்தாலும், நான் தனிமையில்தான் நோகிறேன். உங்கள் அரசாங்கப் பணிகள் உங்களை அழைக்கின்றன! எனது கனிவு மொழிகளைக் காதில் போட்டுக் கொள்ள வேண்டாம். போங்கள்! வெற்றி உங்களுக்குத்தான்! தோல்வி எனக்குத்தான்! பிரிவு எனக்குத்தான்! வேதனை எனக்குத்தான்!

ஆண்டனி: சரி போகிறேன், கிளியோபாத்ரா! போனதும் வந்து விடுகிறேன்! கண நேரப் பிரிவு! கண நேரப் பிணைப்பு! பிணைப்பும், பிரிவும் மாறி மாறி வரும் பகலிரவு போல! கண்ணிமைப் பொழுதில் சேர்கிறோம்! கண்ணிமைப் பொழுதில் பிரிகிறோம்! பிணைப்பு பிரிவுக்கு வழி யிடுகிறது! பிரிவு பிணைப்புக்கு முயல்கிறது! பிணைப்பும், பிரிவும் ஒரு நாணயத்தின் இரண்டு முகங்கள்! ஒருமுக நாணயத்தை எங்காவது கண்டிருக்கிறாயா? போய் வருகிறேன், கிளியோபாத்ரா!

[ஆண்டனி வெளியேறுகிறார். கிளியோபாத்ரா கண்ணீருடன் ஆண்டனி போகும் திசையை நோக்குகிறாள்]

*********************

அங்கம் -6 காட்சி -5

தூக்க பானத்தைக் கொடுத்திடு!
காலப் பெரு இடைவெளி கடந்திட!
எனைவிட் டேகினார் என்னினிய ஆண்டனி! …

கிளியோபாத்ரா

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

எங்குள்ளார் ஆண்டனி? நிற்கிறாரா? குந்தி யுள்ளாரா?
நடக்கிறாரா? அன்றிக் குதிரைமேல் சவாரியா?
ஆண்டனி பளுவைச் சுமக்கும் குதிரையே!
யாரைச் சுமந்தேன் எனும் தீர நடையில் செல்! …

(கிளியோபாத்ரா)

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

என்னரும் ராணி அவர் இறுதியாய்ச் செய்தது!
முத்த மிட்டார் இவ்வாசிய முத்தை இருமுறை!
அப்பிக் கொண்டன நெஞ்சை அந்த மொழிகள்!
“அருமை நண்பா! நிமிர்ந்த ஆண்டனி
எகிப்து அழகிக்குச் சிப்பிக் களஞ்சியம்
அனுப்பிய தாக உரைத்திடு” என்பார்.
பிணைப்பேன் அவள் பொன் ஆசனத்துடன்,
பிடித்த என் நாடுகளை எல்லாம்.
ஆசிய நாடுகள் அனைத்தும் அவளை
ஆசை நாயகியாய் அழைக்கும் எனச்சொல்! …

(அலெக்ஸாஸ்)

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

பனித்த குருதியில் என்னறியாப் பருவத்தில்,
நல்லது, கெட்டது புரியாத் தருணத்தில்,
தனித்து அப்பாவி போல் சொல்லியது :
கொண்டுவா தாளையும், மையையும். எகிப்த்
குடியினர் அனைவரும் அனுதினம் எழுதிக்
கடிதம் போகும் ஆண்டனி அவர்க்கு! …

கிளியோபாத்ரா

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

நாடகப் பாத்திரங்கள்:

எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவில்:

கிளியோபாத்ரா: எகிப்தின் பட்டத்தரசி
ஆண்டனி: ரோமாபுரியின் மூன்று தளபதிகளில் ஒருவர்
டையோமீடிஸ்: கிளியோபாத்ராவின் பணியாள்
ஸெலியூகஸ்: கிளியோபாத்ராவின் கணக்காளி
பெல்லோடோரஸ்: கிளியோபாத்ராவின் பாதுகாப்புக் காவலன்.
பிதாதீதா: கியோபாத்ராவின் ஆயா
சிஸேரியன்: கிளியோபாத்ராவின் மகன்

ரோமாபுரியில்:

ரோமின் தளபதி: மார்க் ஆண்டனி,
அக்டேவியஸ் சீஸர்: ரோமின் இரண்டாம் தளபதி, ஜூலியஸ் சீஸரின் சகோதரன் மகன்
லெப்பிடஸ், ரோமின் மூன்றாம் தளபதி
எனோபரஸ் (ஆண்டனியின் பாதுகாவலன்),
டெமிட்ரியஸ்: ஆண்டனியின் நண்பன்
ஃபிலோ: ஆண்டனியின் நண்பன்
ஸெக்டஸ் பாம்ப்பி (கொல்லப்பட்ட போர்த் தளபதி பாம்ப்பியின் வாலிப மகன்)
அக்டேவியா (ஆண்டனியின் இரண்டாம் மனைவி, அக்டேவியஸின் சகோதரி)

ரோமா புரியின் நிலைமை: ஃபிலிப்பிப் போரில் புரூட்டஸ், காஸ்ஸியஸ் மற்ற சதிகாரர் யாவருமிறந்த பிறகு, ஆண்டனி, அக்டேவியஸ், லெப்பிடஸ் மூவர்களின் கூட்டு மேற்பாட்டில் ரோமாபுரி இயங்கி வருகிறது. ஜூலியஸ் சீஸர் கொலையாகி இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஆண்டனி கிளியோபாத்ராவைக் காண எகிப்த் வருகிறான். மனைவி ஃபுல்வியா மரணம் அடைந்த பிறகு, ஆண்டனி தனிமையாகிக் கிளியோபாத்ரா மீது நாட்டம் உண்டாகுகிறது. அதே சமயத்தில் நிதிக் களஞ்சியம் காலியாகிப் போர்வீரர்களுக்குக் கூலி கொடுக்க நிதியின்றிப் பணம் திரட்ட வேண்டி, ஆண்டனி எகிப்து செல்லத் திட்டமிடுகிறான். எகிப்த் அரசியிடம் நேராகக் கையேந்திப் பிச்சை கேட்கத் துணிவின்றி, கிளியோபாத்ரா தன்னைக் காண வரவேண்டும் என்று காவலர் மூலம் உத்தரவு அனுப்புகிறான். ஆனால் கிளியோபாத்ரா எகிப்த் தளத்தில் தானிருப்பதாகவும், ஆண்டனிதான் அவளைக் காண வரவேண்டும் என்று மறுமொழி அனுப்புகிறாள். எகிப்துக்கு வந்த ஆண்டனி தன் மனைவி புல்வியா போர்க்களத்தில் தனித்துப் போய் நோயில் மரணமடைந்த தகவல் கேட்டு மனம் நோகிறான். ரோமுக்கு மீளவும் விரும்பாது, கிளியோபாத்ராவின் கவர்ச்சியிலிருந்து மீளவும் முடியாது திண்டாடுகிறான் ஆண்டனி.

ரோமாபுரி அரண்மனையில் தளபதி அக்டேவியஸ் எகிப்திலிருந்து ஆண்டனி போரில் கலந்து கொள்ள வரவில்லை என்று செய்தி கொண்டுவந்த கடிதத்தைக் கையில் பார்த்துக் கொண்டு ஆத்திரமோடு உள்ளார். கொல்லப்பட்ட பாம்ப்பியின் மகன் ஸெக்டஸ் பாம்ப்பி தனது படைகளுடன் ரோமைக் கைப்பற்ற வந்து கொண்டிருக்கிறான்.

அக்டேவியஸ்: பார் லெப்பிடஸ்! ஆண்டனி வரவில்லை! எகிப்தில் கட்டாய வேலை யிருப்பதால், ஆண்டனி போரில் கலந்த கொள்ள முடியாதாம். ஸெக்டஸ் பாம்ப்பி ரோமின் எல்லையில் உள்ளதாய் அறிந்தேன்! லெப்பிடஸ்! நீ ஒருவன் மட்டும் பாம்ப்பியை எதிர்க்க முடியாது! ஆண்டனி முன்போல் படை வீரரை நடத்திச் செல்ல வேண்டும். ஆனால் கிளியோபாத்ரா கவர்ச்சி வலையில் மிதந்து கொண்டிருக்கிறார் ஆண்டனி! என்ன கட்டாய வேலை எகிப்தில் உள்ளது ஆண்டனிக்கு? கிளியோபாத்ரா கண்சிமிட்டும் போது முத்தமிடுவதைத் தவிரக் கட்டாய வேலை வேறு என்ன ஆண்டனிக்கு?

லெப்பிடஸ்: நமது நிதிக் களஞ்சியம் வற்றிப் போனதை மறந்து விட்டாயா, அக்டேவியஸ்! நமது படையாட்கள் பல மாதங்கள் சம்பளம் தரப்படாமல் முணங்குவது உன் காதில் கேட்க வில்லையா? கிளியோபாத்ராவை ஆசை ராணியாக வைத்துக் கொண்டால்தானே பொன் நாணயங்களை ஆண்டனி கறந்து கொண்டு வரலாம். என்னாற்றல் மீது அவருக்கு உறுதி உள்ளது. அதனால்தான் அவர் வரவில்லை! நான் உள்ள போது நீயேன் கலங்க வேண்டும்?

அக்டேவியஸ்: சீஸருக்குப் பிறகு ரோமாபுரியின் பராக்கிரமத் தளபதியாய், ஆண்டனி தனித்து நிற்கிறார். அவரிடம் நாம் குற்றம் காணக் கூடாது! ஆனால் மாவீரர் ஆண்டனி யில்லாமலே நான் பாம்ப்பியின் படைகளை நசுக்க முடியும். எனக்கு நம்பிக்கை உள்ளது!

அக்டேவியஸ்: உன் நம்பிக்கை மட்டும் போதாது லெப்பிடஸ்! நமது ரோமானியப் படைகள் சாதாரண மனிதர். அவரைப் புலிகளாகப் பாய வைக்க ஒரு தளபதியால் முடியும்! அதே புலிகளைப் பூனைகளாகவும் ஒரு தளபதி ஆக்கிவிட முடியும். ஆண்டனி சாதாரணப் படை வீரரை ஆவேசப் புலிகளாக ஆக்க வல்லவர்! நமது பொறுப்பில் விட்டுவிட்டு ஆண்டனி கிளியோபாத்ரா மடியில் படுத்துக் கிடப்பது எனக்கு வேதனை தருகிறது. பாம்ப்பியை நாமிருவரும் தோற்கடித்தால் அவர் தன் முதுகில்தான் தட்டிக் கொள்வார். மாறாக நாமிருவரும் தோற்றுப் போனால், உன்னையும் என்னையும் திட்டி ஊரெங்கும் முரசடிப்பார்!

லெப்பிடஸ்: ஈதோ போர் முனையிலிருந்து நமக்கு முதல் தகவல் வருகிறது.

[அப்போது ஒரு படைத் தூதுவன் வருகிறான்]

முதல் தூதுவன்: மாண்புமிகு தளபதி அவர்களே! ஒவ்வொரு மணிக்கும் தகவல் வருமினி உங்களுக்கு. வெளி நாட்டுப் போர்க்களம் எப்படி உள்ள தென்று சொல்லவா? பாம்ப்பியின் கடற் படைப்பலம் வல்லமை உள்ளது. அக்டேவியஸ் தீரருக்கு அஞ்சியவர் அனைவரும் பாம்ப்பியின் பக்கம் போய்ச் சேர்ந்திருக்கிறார். அவரது ஒற்றர் அவருக்குத் தவறான தகவலைக் கொடுக்க வழி செய்தோம் நாங்கள்!

அக்டேவியஸ்: மெச்சினேன் உன்னை! தப்பான தகவல் கொடுங்கள்! தவறான பாதையைக் காட்டுங்கள்! மாட்டிக் கொண்டதும் அவரைச் சுற்றித் தாக்கி ஈட்டியால் குத்துங்கள்!

[முதல் தூதுவன் போகிறான். அடுத்த தூதுவன் நுழைகிறான்]

இரண்டாம் தூதுவன்: மாபெரும் கடற் கொள்ளைக்காரர் பலரைப் பாம்ப்பி படைவீரராய்ச் சேர்த்திருக்கிறார். அந்த பயங்கர வாதிகள் பரிவுள்ள மனிதர் அல்லர். வன விலங்குகள்! நாம் மிகக் கவனமாகப் போரிட வேண்டும்.

அக்டேவியஸ்: முன்பே அறிவித்ததற்கு நன்றி. போய் வா [தூதுவன் போகிறான்] லெப்பிடஸ்! புதிதாகப் பயிற்சி பெற்ற அந்த வாலிப படைகளை அனுப்பி வை! வாலிபர் நெஞ்சம் வைரம் போன்றது. கடற் கொள்ளைக்காரர் ஓய்வெடுக்கும் நேரம் பார்த்துக் கப்பலுக்குள் அவர் நுழைய வேண்டும். திடீரெனத் தாக்கி அவருக்கு மரண அதிர்ச்சி கொடுக்க வேண்டும். ஆண்டனி யிருந்தால் அவரது ஆலோசனை பயன்படும். அவர் கடற்போர் புரியும் நேரத்தில் கிளியோபாத்ராவுடன் குளத்தில் நீராடிக் கொண்டிருப்பார்.

லெப்பிடஸ்: ஆண்டனியால் நமக்கும் அவமானம்!, அவருக்கும் அவமானம்! தன்மான மின்றி அடிமையாய்ப் பெண்மானின் காலை வருடிக் கொண்டிருக்கிறார்! ஆண்டனி கிளியோபாத்ராவுக்கு அடிமையா? அல்லது கிளியோபாத்ரா ஆண்டனிக்கு அடிமையா? .. நான் கவலைப் படவில்லை. நமது படைகள் கூடட்டும்! நமது கலப்பு யோசனைகள் சேரட்டும்! நாம் எதிர்த்து முன்னேறா விட்டால், பாம்ப்பி நமது சோம்பலில் பலப் பெறுவார்! நாளை நமது கடற்படையைத் திரட்டித் தயார் செய்கிறேன்! நான் போகட்டுமா? விடை பெறுகிறேன். [வெளியேறுகிறான்]

அக்டேவியஸ்: போய்வா லெப்பிடஸ்! … ஆண்டனி! உனக்கு அழிவு காலம் உதய மாகி விட்டது. அறிவை அடகு வைத்து அணங்கின் பிடியில் வீரன் நீ அகப்பட்டுக் கிடக்கிறாய்! உன் கண்கள் காதலில் மூழ்கி ஒளியிழந்து குருடாகி விட்டன! நீ கண்ணை மூடினால் ரோமாபுரி இருட்டாகி விடாது! [போகிறான்]

கிளியோபாத்ரா: [மனம் நொந்துபோய்] ஐரிஸ்! அந்த மயக்க பானத்தை எனக்கு எடுத்து வா! [ஐரிஸ் போகிறாள்] நான் மறக்க வேண்டும் என் மன வேதனையை! நான் தூங்க வேண்டும், கால இடைவெளியைக் கடக்க! தூங்கி விழிக்கும் போது ஆண்டனி என் கண் முன்னே நிற்க வேண்டும்! அதுவரை எனக்கு உணவில்லை! கனவில்லை! நினைவில்லை! எதுவுமில்லை! ஆண்டனி விழிமுன் நின்றால், கண்ணிமைகள் தானாகவே திறக்கும். சார்மியான்! வாசலில் போய் நில், வருகிறாரா என்று பார்த்துச் சொல்! [சார்மியான் போகிறான்]. அலெக்ஸாஸ்! எனக்குத் தெரியாமல், எனக்குச் சொல்லாமல் ஆண்டனி ரோமாபுரிக்குப் போய் விட்டாரா என்று அறிந்து வா! போனால் எப்போது திரும்பி எகிப்துக்கு வருவாரெனத் தெரிந்து வா! [அலெக்ஸாஸ் போகிறான்]

[ஐரிஸ் கொண்டு வரும் தூக்க பானத்தை அருந்திப் படுக்கையில் சாய்கிறாள்]

கிளியோபாத்ரா: [எழுந்து] மார்டியான்! ஆண்டனி எங்கே போயிருக்க முடியும் என்று உன்னால் ஊகிக்க முடியுதா? எங்காவது காத்துக் கொண்டு நிற்கிறாரா? கவலையுடன் நெற்றியில் கைவைத்து எங்காவது உட்கார்ந் திருப்பாரா? ரோமுக்குப் போவதா, வேண்டாமா வென்று திக்குமுக்காடி அங்குமிங்கும் நடக்கிறாரா? அல்லது குதிரை மீதேறிச் சவாரியில் அப்பால் போய்க் கொண்டிருக்கிறாரா? அப்படியானல் அவரது பளுவைத் தாங்கும் அந்த குதிரை ஓர் அதிர்ஷ்டக் குதிரை! எத்தகைய கோமானைச் சுமக்கிற தென்று அக்குதிரை பெருமைப் பட்டுக் கொள்ளலாம்!

[அப்போது கையில் சிறு பேழையோடு அலெக்ஸாஸ் நுழைகிறான்]

அலெக்ஸாஸ்: மகாராணி! ஈதோ ஒரு பரிசை ஆண்டனி அனுப்பி யிருக்கிறார்! உள்ளிருப்பது நல்முத்து ! மூன்று முறை முத்தமிட்டு ஆண்டனி அளித்ததாகத் தூதர் சொல்கிறார். இது ஆசிய முத்து! ஆண்டனியின் இனிய அதரங்கள் அன்புடன் முத்தமிட்டு அளித்த முத்து ஈதோ! [கையில் கொடுக்கிறான்]

கிளியோபாத்ரா: ஆண்டனி முத்தமிட்ட முத்தென்றால் அதன் மதிப்பு ஆயிரம் மடங்கு! அடுத்தொரு முத்து வந்தால் காதணியாக மாட்டிக் கொள்வேன். என் தலையணைக் கடியில் வைத்துக் கொள்கிறேன். எனக்கினிய கனவுகள் வரும்! அக்கனவுகளில் முத்தை முத்தமிட்ட ஆண்டனி என்னை முத்தமிட வருவார்!

அலெக்ஸாஸ்: மகாராணி! ஆண்டனி தூதர் மூலம் ஒரு கடிதமும் அனுப்பியுள்ளார் உங்களுக்கு. ஈதோ கடிதம் [கடித்ததைக் கொடுக்கிறான்]

கிளியோபாத்ரா: [கடித்தை வாசிக்கிறாள்] “ஆசியச் சிப்பியின் முத்தை உனக்கு அனுப்பியிருக்கிறேன். அது தனித்துவம் படைத்தது. ஏனெனில் எனதினிய முத்தங்களைச் சுமந்து கொண்டு வருகிறது. கண்ணே கிளியோபாத்ரா! ஈதோ என் மாபெரும் பரிசு! நான் கைப்பற்றிய நாடுகளை எல்லாம், உனது எகிப்திய அரசுடன் இணைப்பேன். கிழக்காசிய நாடுகளும் உன்னைத் தம் ஆசை ராணியாகப் போற்றும்!” [பூரித்து எழுகிறாள்] யாரங்கே! அலெக்ஸாஸ்! தாளும், மையும் கொண்டுவா! நான் ஆண்டனிக்குக் கடிதம் எழுத வேண்டும். எகிப்தில் எழுதத் தெரிந்த அத்தனை பேரையும் தினமொரு முறை எழுத வைத்து, ஆண்டனிக்குக் கடிதம் அனுப்புவேன். முதல் கடிதம் என் கடிதம் என்னாசைக் காதலருக்கு!

*********************

2 thoughts on “எழிலரசி கிளியோபாத்ரா – [பேரங்க நாடகம்] (9)

 1. கிளியோபாட்ரா எனும் நங்கை
  கிரங்கவைக்கும் மங்கை!!…
  அவள்வரலாறு..உலக அரங்கை
  அதிர வைத்த ஒருங்கை…
  பேரங்கமாய்பதியும் அங்கை..
  பேரன்போடுபிடிக்கிறேன் செங்கை!!
  வாழ்க உங்கள் தமிழ் செய்கை!!
  வளர்கபல்லாண்டு..வாழ்க்கை!!
  (அன்புடன்..
  ஏ.ஆர்.முருகன்மயிலம்பாடி..)

 2. ரோமாபுரி, எகிப்திய நாடுகளின் தலைவிதியை மாற்றிய வீர அரசி கிளியோபாத்ரா நாடகத்தைப் பாராட்டிய நண்பர் ஏ. ஆர். முருகன்மயிலம்பாடிக்கு என்னினிய நன்றியைத் தெரிவிக்கிறேன்.

  கனிவுடன்,
  சி. ஜெயபாரதன்

Leave a Reply

Your email address will not be published.