எழிலரசி கிளியோபாத்ரா – [பேரங்க நாடகம்] (10)

ஆண்டனி & கிளியோபாத்ரா
மூன்றாம் பாகம்

அங்கம் -7 காட்சி -1

அவளோர் தர்க்க ராணி! வாயாடி மாது!
அவளைப் பற்றிவை  இவற்றுள் அடங்கும்:
திட்டுவாள்! சிரிப்பாள்! அழுவாள்!
கொதித்தெழும் ஆவேசம், ஆத்திர உணர்ச்சி,
உன் கவனம் கவரும்! போற்ற விழைவாய்!
உண்மை யாய்த் தோன்றும் அவை உனக்கு! …..

 ஆண்டனி

 

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

.

 

நாடகப் பாத்திரங்கள்:

எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவில்:

கிளியோபாத்ரா: எகிப்தின் பட்டத்தரசி
ஆண்டனி: ரோமாபுரியின் மூன்று தளபதிகளில் ஒருவர்
டையோமீடிஸ்: கிளியோபாத்ராவின் பணியாள்
ஸெலியூகஸ்: கிளியோபாத்ராவின் கணக்காளி
பெல்லோடோரஸ்: கிளியோபாத்ராவின் பாதுகாப்புக் காவலன்.
பிதாதீதா: கிளியோபாத்ராவின் ஆயா
சிஸேரியன்: கிளியோபாத்ராவின் மகன்

ரோமாபுரியில்:

ரோமின் தளபதி: மார்க் ஆண்டனி,
அக்டேவியஸ் சீஸர்: ரோமின் இரண்டாம் தளபதி, ஜூலியஸ் சீஸரின் சகோதரன் மகன்
லெப்பிடஸ், ரோமின் மூன்றாம் தளபதி
எனோபரஸ் (ஆண்டனியின் பாதுகாவலன்),
டெமிட்ரியஸ்: ஆண்டனியின் நண்பன்
·பிலோ: ஆண்டனியின் நண்பன்
ஸெக்டஸ் பாம்ப்பி (கொல்லப்பட்ட போர்த் தளபதி பாம்ப்பியின் வாலிப மகன்)
அக்டேவியா (ஆண்டனியின் இரண்டாம் மனைவி, அக்டேவியஸின் சகோதரி)

ரோமா புரியின் நிலைமை: ஃபிலிப்பிப் போரில் புரூட்டஸ், காஸ்ஸியஸ் மற்ற சதிகாரர் யாவருமிறந்த பிறகு, ஆண்டனி, அக்டேவியஸ், லெப்பிடஸ் மூவர்களின் கூட்டு மேற்பாட்டில் ரோமாபுரி இயங்கி வருகிறது. ஜூலியஸ் சீஸர் கொலையாகி இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஆண்டனி கிளியோபாத்ராவைக் காண எகிப்த் வருகிறான். மனைவி ·புல்வியா மரணம் அடைந்த பிறகு, ஆண்டனி தனிமையாகிக் கிளியோபாத்ரா மீது நாட்டம் உண்டாகுகிறது. அதே சமயத்தில் நிதிக் களஞ்சியம் காலியாகிப் போர்வீரர்களுக்குக் கூலி கொடுக்க நிதியின்றிப் பணம் திரட்ட வேண்டி, ஆண்டனி எகிப்து செல்லத் திட்டமிடுகிறான். எகிப்த் அரசியிடம் நேராகக் கையேந்திப் பிச்சை கேட்கத் துணிவின்றி, கிளியோபாத்ரா தன்னைக் காண வரவேண்டும் என்று காவலர் மூலம் உத்தரவு அனுப்புகிறான். ஆனால் கிளியோபாத்ரா எகிப்த் தளத்தில் தானிருப்பதாகவும், ஆண்டனிதான் அவளைக் காண வரவேண்டும் என்று மறுமொழி அனுப்புகிறாள். எகிப்துக்கு வந்த ஆண்டனி தன் மனைவி புல்வியா போர்க்களத்தில் தனித்துப் போய் நோயில் மரணமடைந்த தகவல் கேட்டு மனம் நோகிறான். ரோமுக்கு மீளவும் விரும்பாது, கிளியோபாத்ராவின் கவர்ச்சியிலிருந்து மீளவும் முடியாது திண்டாடுகிறான் ஆண்டனி. இளைய பாம்ப்பி ரோமாபுரியைத் தன்வசமாக்க முயற்சிக்கிறான். கிளியோபாத்ராவிடம் மனதைப் பறிகொடுத்த ஆண்டனி ரோமுக்கு மீளத் தயங்குகிறான். அக்டேவியஸ் தன் தங்கையை மணக்க வழி செய்து ஆண்டனி ரோமுக்கு வரத் தந்திரம் செய்கிறான்.

++++++++++++++++++

நேரம், இடம்: அலெக்ஸாண்டியா, கிளியோபாத்ராவின் மாளிகை. பகல் வேளை.

நாடகப் பாத்திரங்கள்: கிளியோபாத்ரா, சேடிகள், அடிமைகள், ஐரிஸ், அலெக்ஸாஸ், சார்மியான்.

காட்சி அமைப்பு: ஆண்டனியைக் காணாமல் கிளியோபாத்ரா கவலையுடன் அலைமோதிக் கொண்டிருக்கிறாள்.

அலெக்ஸாஸ்: மகாராணி! ஒரு முக்கியமான செய்தி! ஆண்டனி எகிப்திலில்லை! தளபதி ஆண்டனி ரோமாபுரிக்குப் போயிருப்பாதாக எனக்குத் தகவல் கிடைத்துள்ளது.

கிளியோபாத்ரா: [கவலையுடன்] எப்போது போனார்? எதற்காகப் போனார்? நமது ஒற்றர் படை அறியாமல் எப்படிப் போனர்? என்னிடம் சொல்லாமல் போனாரே!

அலெக்ஸாஸ்: ரோமுக்கு வரும்படி ஆண்டனிக்கு அவசரச் செய்தி வந்திருக்கிறது! பாம்ப்பியின் போர்ப்பலம் அதிகமென்று தெரிந்ததால் அக்டேவியஸ் அவசரத் தூதரை அனுப்பி யுள்ளார். ஆண்டனி போகாவிட்டால், பாம்ப்பியின் படையினர் ரோமாபுரியைப் பிடித்து விடுவார் என்னும் பயம் உண்டாகி விட்டது. போரை முன்னின்று நடத்தி, பாம்ப்பியை முறியடிக்க ஆண்டனி ஒருவரால்தான் முடியும் என்பது அக்டேவியஸ் முடிவு. அதன் விளைவு ஆண்டனி மறைவு!

கிளியோபாத்ரா: [மன வேதனையுடன்] அப்படியானல் ரோமில் போர் நிகழப் போவது உண்மைதானா? போர்க்களத்தின் முன்னணியில் நின்று போரிடும் ஆண்டனிக்கு ஏதாவது நிகழ்ந்தால் என்கதி என்னவாகும்? சீஸர் கொல்லப் பட்டதும் என்மனம் இப்படித்தான் அலைமோதியது. சீஸர் மாண்ட பிறகு எகிப்தின் ஆதரவாய் ஆண்டனி இருப்பார் என்று ஆனந்தமாய் இருந்தேன். சீஸர் போனதும் எனக்கு ஆண்டனி உதவியாக இருப்பார் என்று மகிழ்ச்சியாக இருந்தேன். ஆண்டனிக்கு எந்த ஆபத்தும் வந்தால் என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. சீஸர் காலிசெய்த என்னிதயத்தில் ஆண்டனிக்கு ஓரிடம் வைத்திருந்தேன்! ஆனால் அவரது மனம் வேறிடம் தேடிப் போகிறதே!

அலெக்ஸாஸ்: மகாராணி! ஆண்டனிக்குப் போரில் ஒன்றும் நிகழாது. அவர் மகா வீரர்! அப்படி அவருக்கு ஏதேனும் ஆனால் அக்டேவியஸ் உள்ளார். அவர் எகிப்தின் ஆதரவாளர் அல்லவா?

கிளியோபாத்ரா: [சினத்துடன்] இல்லை! சீஸரையும் அப்படித்தான் நினைத்தேன். அவருடைய நண்பன் புரூட்டஸே சீஸர் வயிற்றில் குத்தினார்! அக்டேவியஸ் எகிப்தின் ஆதரவாளி அல்லர்! எகிப்தை உரிமை நாடாகக் கருதாமல், அடிமை நாடாக மிதிக்க எண்ணுபவர் அவர். எகிப்தின் மீது அவருக்குப் பரிவுமில்லை! பகையுமில்லை! ஆனால் சீஸரை நான் மணந்தது அவரது வாரீசான அக்டேவியஸ¤க்குப் பிடிக்க வில்லை! எனக்கும் சீஸருக்கும் ஆண் மகவு பிறந்ததும் அக்டேவியஸ¤க்குப் பிடிக்க வில்லை! நான் ரோமாபுரிக்குச் சென்ற போது, அக்டேவியஸ் என்னைப் பார்த்த அந்த அடாத பார்வை என் நினைவில் பதிந்து போயுள்ளது. என் மகனைப் பார்த்த அவரது கழுகுப் பார்வையை நான் மறக்கவில்லை. அக்டேவியஸ் மெய்யாக என் பகைவர்! அதனால் எகிப்துக்கும் பகைவர்! அக்டேவியஸை நான் நம்ப மாட்டேன்.

அலெக்ஸாஸ்: மகாராணி! நீங்கள் சொல்வதில் ஓர் உண்மை யிருக்கிறது. அக்டேவியஸ் ஆண்டனியை உங்களிடமிருந்து பிரிக்க வழி செய்வதாகத் தெரிகிறது.

கிளியோபாத்ரா: [ஆர்வமோடு] எதை வைத்து அப்படிச் சொல்கிறாய்? எனக்குப் புரிய வில்லை! எகிப்தின் நண்பரை என்னிட மிருந்து பிரிப்பதால் அவருக்கென்ன அனுகூலம்?

அலெக்ஸாஸ்: மகாராணி! ஆண்டனிக்கு மறுமணம் செய்து வைக்க அக்டேவியஸ் முற்படுவதாகக் கேள்விப் பட்டேன்!

கிளியோபாத்ரா: [கையிலிருந்த மதுக் கிண்ணத்தை வீசி எறிந்து] என்ன? ஆண்டனிக்கு அடுத்தோர் திருமணமா? மனைவி புல்வியா செத்தின்னும் பத்து நாட்கள் கூட ஆகவில்லை! அவளைப் புதைத்த பூமியில் இன்னும் புல் கூட முளைக்க வில்லை! புல்வியாவுக்கு வடித்த கண்ணீர் ஆண்டனிக் கின்னும் வற்றி உலரவில்லை! அதற்குள் அடுத்தோர் திருமணமா? நம்ப முடிய வில்லை! யாரந்த புதுப்பெண்?

அலெக்ஸாஸ்: அவள் பெயர் அக்டேவியா!

கிளியோபாத்ரா: [கோபத்தில் அலறி] யாரந்த சிறுக்கி? அவளுக்கு ஆண்டனி மேல் காதலா? அல்லது ஆண்டனிக்கு அவள் மீது மோகமா? புல்வியா போனதும் புதுப் பெண் மீது கண் விழுந்து விட்டதா?

அலெக்ஸாஸ்: அக்டேவியஸின் தங்கை அவள்! அக்டேவியா ஓர் அழகியாம்! பதினாறு வயதாம்! பார்த்தவர் மயங்கிப் போகும் பாவையாம்! ஆண்டனிக்கு அவள் மீது ஆசையாம்!

கிளியோபாத்ரா: [ஆத்திரமோடு] அப்படி நிச்சயம் இருக்க முடியாது. அக்டேவியஸே ஆண்டனிக்கு வயதில் சிறியவர்! அவருடைய தங்கை எப்படி யிருப்பாள்? ஆண்டனிக்கு அருமை மகளைப் போலிருப்பாள்! மனைவியாக உடம்பு இருக்காது. அந்த சிறுக்கியை மணந்து கொள்ள ஆண்டனி சம்மதம் தந்து விட்டாரா?

அலெக்ஸாஸ்: [மிக்க பயமுடன்] மகாராணி! நானொரு தூதுவன். என் மேல் கோபப் படாதீர்கள்! எப்படிச் சொல்வது என்று தயங்கினேன். ஆண்டனி ஒப்புக்கொண்டு விட்டார் என்று அறிந்தேன், மகாராணி!

கிளியோபாத்ரா: [கண்களில் கோபக்கனல் பறக்க] என்னை வஞ்சித்து அவளை மணக்க ஆண்டனி சம்மதித்து விட்டாரா? என்னை நோக வைக்க ஆண்டனி செய்வதாக நான் உணர்கிறேன்! ரோமானியர் அனைவரும் வஞ்சகர், சீஸரைத் தவிர! அலெக்ஸாஸ்! உடனே நமது ஒற்றனை ரோமாபுரிக்கு அனுப்பு! அங்கே என்ன நடக்கிற தென்று நான் அறிய வேண்டும். ஒருத்தன் அல்ல ஒன்பது பேரை அனுப்பு. அனுதினமும் எனக்குச் செய்தி கிடைக்க வேண்டும். போ அலெக்ஸாஸ் போ! [அலெக்ஸாஸ் போகிறான். முகத்தைத் திருப்பிக் கொண்டு அழுகிறாள்] ஐரிஸ்! மதுபானம் கொண்டுவா! [மதுபானத்தைக் கிண்ணத்தில் ஊற்றித் தருகிறாள்] ஐரிஸ்! இப்போது ரோமில் என்ன நடக்கும்? எப்படி இருப்பாள் அந்தக் குமரி அக்டேவியா? என்னை விட அழகானவளா? என்னை விட அறிவானவளா? என்னை விட உயரமாக இருப்பாளா? அல்லது குட்டையாக இருப்பாளா? என்னைப் போல் வெள்ளையாக இருப்பாளா?

ஐரிஸ்: மகாராணி! பதினாறு வயதுப் பேதை எப்படி யிருப்பாள்? பிரபு ஆண்டனிக்கு அவளைப் போல் மூன்று மடங்கு வயது! மகளும், தந்தையும் மணமேடையில் அமர்ந்தால் எப்படி யிருக்கும்? பார்க்கச் சகிக்காது! பல்லாங்குழி விளையாடும் பாவையைப் பைத்தியகாரர் தளபதிக்கு மணமுடிக்கிறார்!

கிளியோபாத்ரா: ஐரிஸ்! ஆண்டனி திருமணத்தை நிறுத்த வேண்டுமே, எப்படிச் செய்வது?

ஐரிஸ்: மகாராணி! திருமணத்தைத் தடுக்க முடியாது! ஆனால் ஆண்டனியின் புதுப் பெண்ணைப் பிரித்து விடலாம். அதைச் செய்வது எளிது! கவலைப் படாதீர்கள், மகாராணி! நான் ஏற்பாடு செய்கிறேன்.

கிளியோபாத்ரா: [தனக்குள் மெதுவாக] வரட்டும் ஆண்டனி! அவரை மயக்க வேண்டும் மதுவைக் கொடுத்து! அவரை மணக்க வேண்டும் நான் மணாளனாக! அக்டேவியா ஆண்டனியின் மனைவியா? கிளியோபாத்ரா உள்ளவரை அது நிகழாது! ரோமுக்கு ஆண்டனி மீளாதபடிச் செய்வது என் கடமை! பார்க்கிறேன், யார் பெரியவள் என்று? வாலிபக் குமரி கிளியோபாத்ராவா? அல்லது இளங்குமரி அக்டேவியா? [ஆங்காரமாக] அக்டேவியா ஆண்டனியின் மனைவியாக எகிப்த் மண்ணில் கால் வைத்தால், தடம்பட்ட தளமெல்லாம் நாகப் பாம்புகளை நடமாட விடுவேன்! அவளை நான் உயிரோட வாழ விடமாட்டேன்! ஆண்டனி எனக்குச் சொந்தம்! அவரை வேறெந்த மாதும் என் முன்பாக முத்தமிடப் பொறுக்க மாட்டேன்!

*********************

அங்கம் -7 காட்சி -2

செம்மைப் போர்  கடற்படை என் கைப்பலம்!
எம்மை ரோமாபுரி மிகவே நேசிக்கும்!
எனது பராக்கிரமம் பெருகும்! ஜோதிட
முன்னறிப்பு மெய்யாகும்! என்னாசை நிறைவேறும்!
வெளிப்புற விருந்தில் எகிப்தி லிருப்பார் ஆண்டனி!
போர் புரிய ரோமா புரிக்குப் போகார்.

இளைய பாம்ப்பி

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

அக்டேவியஸ், லெப்பிடஸ் எகிப்தி லிருப்பார்,
ஆண்டனி எங்குளார் எனத் தேடிக் கொண்டு !
மையல் மோகினி கிளியோ பாத்ராவின்
மந்திரக் கவர்ச்சியில் மயங்கிக் கிடப்பார்! …

இளைய பாம்ப்பி

 

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

ரோமா புரியின் நிலைமை: ·பிலிப்பிப் போரில் புரூட்டஸ், காஸ்ஸியஸ் மற்ற சதிகாரர் யாவருமிறந்த பிறகு, ஆண்டனி, அக்டேவியஸ், லெப்பிடஸ் மூவர்களின் கூட்டு மேற்பாட்டில் ரோமாபுரி இயங்கி வருகிறது. ஜூலியஸ் சீஸர் கொலையாகி இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஆண்டனி கிளியோபாத்ராவைக் காண எகிப்த் வருகிறான். மனைவி ·புல்வியா மரணம் அடைந்த பிறகு, ஆண்டனி தனிமையாகிக் கிளியோபாத்ரா மீது நாட்டம் உண்டாகுகிறது. அதே சமயத்தில் நிதிக் களஞ்சியம் காலியாகிப் போர்வீரர்களுக்குக் கூலி கொடுக்க நிதியின்றிப் பணம் திரட்ட வேண்டி, ஆண்டனி எகிப்து செல்லத் திட்டமிடுகிறான். எகிப்த் அரசியிடம் நேராகக் கையேந்திப் பிச்சை கேட்கத் துணிவின்றி, கிளியோபாத்ரா தன்னைக் காண வரவேண்டும் என்று காவலர் மூலம் உத்தரவு அனுப்புகிறான். ஆனால் கிளியோபாத்ரா எகிப்த் தளத்தில் தானிருப்பதாகவும், ஆண்டனிதான் அவளைக் காண வரவேண்டும் என்று மறுமொழி அனுப்புகிறாள். எகிப்துக்கு வந்த ஆண்டனி தன் மனைவி புல்வியா போர்க்களத்தில் தனித்துப் போய் நோயில் மரணமடைந்த தகவல் கேட்டு மனம் நோகிறான். ரோமுக்கு மீளவும் விரும்பாது, கிளியோபாத்ராவின் கவர்ச்சியிலிருந்து மீளவும் முடியாது திண்டாடுகிறான் ஆண்டனி. இளைய பாம்ப்பி ரோமாபுரியைத் தன்வசமாக்க முயற்சிக்கிறான். கிளியோபாத்ராவிடம் மனதைப் பறிகொடுத்த ஆண்டனி ரோமுக்கு மீளத் தயங்குகிறான். அக்டேவியஸ் தன் தங்கையை மணக்க வழி செய்து ஆண்டனி ரோமுக்கு வரத் தந்திரம் செய்கிறான்.

நேரம், இடம்: ஸிசிலித் தீவின் மெஸ்ஸினா முனையில் இளைய பாம்பியின் போர்க் கூடாரம்.

நாடகப் பாத்திரங்கள்: போர்த் தளபதி பாம்ப்பி, படை வீரர்கள் மெனாஸ், மெனிகிரேட்ஸ்

காட்சி அமைப்பு: பாம்ப்பி, மேனாஸ், மெனிகிரேடஸ் போருடையில் உள்ளார்கள். போர்முகாமில் போர் செய்யும் முறைகள், பாதைகள் ஆராயப் படுகின்றன.

இளைய பாம்ப்பி: தெய்வங்கள் நியாயமாக நடந்தால், நியாயவாதிகளுக்கு வெற்றியைத் தரவேண்டும். தெய்வங்கள் எப்போதும் நியாயமற்ற அயோக்கியருக்குத்தான் உதவி செய்கின்றன! என் தந்தைக்கும் அப்படித்தான் ஆனது. எல்லா தெய்வங்களும் அவரைக் கடைசியில் கைவிட்டன! எகிப்தில் தணித்து விடப்பட்டு அவரது தலையை எகிப்தியர் துண்டாக்கினர்! ஜூலியஸ் சீஸர் அதிர்ஷ்டக்காரர். சென்ற விட மெல்லாம் சீஸருக்குத்தான் வெற்றி மேல் வெற்றிகள்! சீஸரை வரவேற்க, சீஸரை மகிழ்விக்க தந்தையின் தலை காணிக்கையாக தரப்பட்டது! சீஸரை என்னால் கொல்ல முடிய வில்லை! அதற்குள் அவரது செனட்டர்களே அவரைக் குத்திக் கொன்றார்! சீஸரைப் பலிவாங்கா விட்டாலும், நான் சீஸரின் சீடர்களைப் பலிவாங்க வேண்டும்.

மேனாஸ்: உங்கள் கொள்கைப்படி பார்த்தால், வெற்றி வீரர் சீஸர் பக்கம்தான் நியாயம் இருந்ததாகத் தெரிகிறது. உங்கள் தந்தையின் பரம எதிரி சீஸர் அல்லவா? உங்கள் தந்தையை விரட்டிச் சென்றவர் சீஸர் அல்லவா?

பாம்ப்பி: உண்மைதான்! எகிப்தில் என் தந்தை தலை துண்டிப்புக்குக் காரணமானவர் சீஸர்! அந்த அநியாயத் தளபதிக்கு தெய்வங்கள் உதவி செய்தன! நியாதிபதியான என் தந்தைக்குக் கிடைத்த பரிசு மரணம்! நமது பிரார்த்தனைகள் தெய்வத்தின் செவியில் கேட்பதில்லை. இம்ம்முறை நான் முழு ஆற்றலுடன் போரிடப் போகிறேன். ரோமாபுரியை மீட்பதில் வெற்றி பெற்றே தீருவேன்! இதுதான் தக்க தருணம்! நம் கடற்படை பெரியது! நமது கப்பல்கள் ஏவுகணைகள் கொண்டவை! நாம் வெல்ல வேண்டுமென்று ரோமானியர் விரும்புகிறார்! நமது படை வீரர்கள் பகைவர் எண்ணிக்கையை விட அதிகம். நல்ல நேரமிது! ஆண்டனி ரோமில் கிடையாது! சுகவாசி எகிப்தில் கிளியோபாத்ராவின் மோக மயக்கத்தில் கிடக்கிறார். கவர்ச்சி மாது கிளியோபாத்ராவின் மடியில் தலைவைத்து மதுவைக் குடித்துக் கொண்டிருக்கிறார். தக்க தருணம் இதுவே!

மேனாஸ்: பாம்ப்பி! ஆண்டனி எகிப்தில் இல்லை! அக்டேவியஸ் அவரை வரும்படி அழைத்திருக்கிறார். ரோமை நோக்கி ஆண்டனி வருவதாக அறிந்தேன். அவரில்லாமல் அக்டேவியஸ், லெப்பிடஸ் இருவருமே நமக்கு இணையாகப் போரிடுவர் அல்லவா?

பாம்ப்பி: அப்படியில்லை மேனாஸ்! ஆண்டனிக்குள்ள போர்த் திறமை கோழையான அக்டேவியஸ், லெப்பிடஸ் இருவருக்கும் கிடையாது. ஆண்டனி எகிப்தை விட்டு எப்போது புறப்பட்டார்? மையல் மோகினியின் மந்திர வலையில் சிக்கிய ஆண்டனி மதி மயங்கிக் கிடப்பதாகத்தான் நான் அறிந்தேன். யார் சொன்னது ஆண்டனி ரோமுக்கு வருவதாக?

மேனாஸ்: கழுதை கண்ணுக்குத் தெரியும்படி காரெட்டைக் காட்டி, அக்டேவியஸ் ஒரு தந்திரம் செய்தார். மனைவி புல்வியா மாண்டு போனதும் ஆண்டனி மனநிலை சரியில்லை. தங்கை அக்டேவியாவை மண முடித்துத் தருவதாக ஆண்டனி அழைக்கப் பட்டிருக்கிறார்! எகிப்தில் காதல் மோகினி இருந்தாலும், ரோமில் ஆண்டனிக்கு ஒரு ராணி வேண்டுமல்லவா? அதனால் அவர் ரோமுக்கு வருவதாக நான் அறிந்தேன்.

பாம்ப்பி: பயங்கரத் திட்டமாகத் தெரிகிறது எனக்கு. பால்யத் திருமணம் போலத் தெரிகிறது எனக்கு. ஆண்டனி அதற்கு உடன்படுவாரா என்பது தெரியாது எனக்கு. நம்மைத் தோற்கடிக்க அக்டேவியஸ் செய்யும் மாபெரும் சதியாகத் தெரிகிறது எனக்கு! ஆண்டனியும் அக்டேவியஸ¤ம் ஒட்டிய நண்பர் அல்லர்! வெட்டிக் கொள்ளும் விரோதியர் அல்லர்! உள்ளார ஒருவர் மீது ஒருவருக்கு எதிர்ப்பாடு ஒளிந்துள்ளது. அந்த ஊமைப் போரை முறிக்க அக்டேவியஸின் யுக்தி உன்னதமானது. வெல்ல முடியாவிட்டால் பகவனை நண்பனாக்கிக் கொள் என்பது பழமொழி! ஆண்டனியை ஒருபடி மேலாக மைத்துனன் ஆக்கிக் கொள்கிறார் அக்டேவியஸ்! எல்லாம் நம்மை முறியடிக்கச் செய்யும் அக்டேவியஸ் தந்திரம்!

மேனாஸ்: அக்டேவியஸ் தங்கையை மணந்து கொண்டாலும், ஆண்டனிக்கு எகிப்த் ராணி மீதுதான் கண்ணோட்டம் இருக்கும். மைத்துனர் ஆண்டனி மந்திர வசீகரியின் மையலில் விழாதபடித் தடுக்க முனைகிறார். அது நடக்காது பாம்ப்பி! முதல் நாளே கிளியோபாத்ரா ஆண்டனியைத் தன்னவன் ஆக்கிக் கொண்டாள்! [மெதுவாக] முதல் நாளே ஆண்டனியும், கிளியோபாத்ராவும் மதுவருந்திக் காதல் மயக்கத்தில் ஒரே அறையில்தான் உறங்கி னாராம்! முதல் நாளே …. காதலனைக் கணவனாக்கிக் கொண்டாள் அந்த மோக மாது! கிளியோபாத்ரா … இப்போது … கர்ப்பவதி … என்று கேள்விப்பட்டேன்!

பாம்ப்பி: [அதிர்ச்சியுடன்] என்ன? கிளியோபாத்ரா கர்ப்பவதியா? ஆண்டனியின் மகவு கிளியோபாத்ராவின் வயிற்றில் வளர்ந்து வருகிறதா? அப்படியானால் ஆண்டனியின் திருமணத்தைக் கேள்விப்படும் கிளியோபாத்ரா ஆங்காரியாக மாறிவிடுவாளே! ஆண்டனியின் கழுத்தைத் துண்டித்து விடுவாளே! இந்த அதிர்ச்சி செய்தி அக்டேவியஸ¤க்குத் தெரியுமா? சீஸரின் மகனை கிளியோபாத்ரா பெற்றதும் அக்டேவிஸ் சீறி எழுந்தார்! சீஸரின் வாரிசு ஓர் எகிப்த் ஜிப்ஸியின் பிள்ளை என்றதும், ரோமாபுரியின் தூய கலாச்சாரம் போனது என்று வெகுண்டு எழுந்தார்! ஆண்டனியை வெறுக்கும் அக்டேவியஸ், கிளியோபாத்ராவை வேசியெனத் திட்டும் அக்டேவியஸ் எத்தகைய அதிர்ச்சி அடைவார் என்று எண்ணிப் பார்க்க முடியவில்லை!

மேனாஸ்: அவருக்குத் தெரிந்தால் தங்கை திருமணத்தை ஏற்பாடு செய்வாரா? கிளியோபாத்ராவைப் பற்றி சரியாகச் சொல்கிறேன்! வயிற்றில் வளரும் மகவுக்குத் தந்தையான ஆண்டனி என்ன செய்தாலும் பொறுத்துக் கொள்வாள் கிளியோபாத்ரா! ஆனால் நிச்சயம் அதிர்ச்சி அடைவாள், திருமணத்தைப் பற்றி அறிந்தால்! கவலைப் படாதீர்! அக்டேவியாவைப் பிரித்து ஆண்டனியை மீண்டும் பிடித்து விடுவாள், கிளியோபாத்ரா! இந்த திருமணச் சதித் திட்டத்தில் வெல்லப் போவது கிளியோபாத்ரா! தோற்கப் போவது அக்டேவியஸ்!

பாம்ப்பி: அதே போல் பார், நமது ரோமாபுரிப் போரிலும் தோற்கப் போவது அக்டேவியஸ்தான்! ஆண்டனியைப் போல் அக்டேவியஸ¤க்கு அனுபவம் போதாது! கிளியோபாத்ராவுக்கு உள்ள அறிவுக் கூர்மை புது மணப்பெண் அக்டேவியாவுக்குக் கிடையாது! ஆண்டனி கிளியோபாத்ராவின் மடியில் கிடந்தால் என்ன? புது மணப்பெண் அணைப்பில் கிடந்தால் என்ன? எனக்குக் கவலை யில்லை! ஆண்டனி போரை நடத்துவதற்கு முன்பு, நாம் போரை நடத்திச் செல்வோம்! ஒன்றாய் அக்டேவியஸையும், லெப்பிடஸையும் முறியடிப்போம். ரோமைக் கைப்பற்றுவோம்! போர் முரசம் தட்டுவோம். புறப்படு ரோமாபுரி நோக்கி! ஆண்டனி கால் வைப்பதற்கு முன்பு நாம் தடம் வைக்க வேண்டும் ரோமில்!

*********************

அங்கம் -7 காட்சி -3

அழகு, ஞானம், பணிவு
ஆண்டனியின் இதயத்தில்
நிலைத்து விட்டால்
அவருக்கு (புது மணப்பெண்)
அக்டேவியா ஓர் அதிர்ஷ்டப் பரிசு! ….

 மேஸினாஸ்

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

அற்பச் சிறு போரில் நிற்கார் ஆண்டனி!
அவரது அரிய போர்த் திறமை மற்ற
இருவரை விட இரட்டிப் பானது!
ஆழ்ந்த ஊகிப்பைத் தொடர்வோம்!
எகிப்தின் எழில் விதவை மடியை விட்டு
கடத்தி வருவது கடிது கடிது,
மோகக் களைப் பற்ற ஆண்டனியை !

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

நேரம், இடம்: ரோமாபுரி அரண்மனை. பகல் வேளை.

நாடகப் பாத்திரங்கள்: போர்த் தளபதிகள் ஆண்டனி, அக்டேவியஸ், லெப்பிடஸ், அக்கிரிப்பா பாதுகாவலர்.

காட்சி அமைப்பு: அக்டேவியஸ், லெப்பிடஸ், அக்கிரிப்பா ஆகிய மூவரும் கூடிப் பேசிக் கொண்டுள்ள போது ஆண்டனி நுழைகிறார்.

லெப்பிடஸ்: அக்டேவியஸ், எனக்குத் தெரியும். நிச்சயம் ரோமுக்கு வருவார் ஆண்டனி! நம்மைத் தனியே போரில் தடுமாற விட்டுவிட்டு அவர் கிளியோபாத்ராவின் அணைப்பிலே கிடக்க மாட்டார். வருவேன் என்று தகவல் அனுப்பியவர் வராமல் எப்படிப் போவார்?

அக்டேவியஸ்: நீ ஏமாறப் போகிறாய் லெப்பிடஸ்! எனக்கு நம்பிக்கை இல்லை. ஆண்டனி வரமாட்டார், பார். எகிப்தா, ரோமா என்று நாணயத்தைச் சுண்டி விட்டால், ஆண்டனிக்கு எகிப்துதான் விழும்! போர், போகம் என்று நாணயத்தைச் சுண்டி விட்டால், போகம் என்றுதான் ஆண்டனிக்கு விழும்! ஏனென்றால் ஆண்டனி நாணயத்தின் இருபுறத்திலும் அச்சாகி யிருப்பது ஒன்றேதான் போகம், போகம்! கிளியோபாத்ரா ஒரு மோகினிப் பிசாசு! ஆண்டனி ஒரு போகப் பிரியர்! புல்வியா செத்ததும் தனித்து விட்ட ஆண்டனிக்கு கிளியோபாத்ராவின் இதழ்கள் ஏன் இனிப்பாக இருக்காது? ஆண்டனியை விடச் செத்துப் போன அவரது மனைவி புல்வியா உண்மையில் ஒரு வீர மாது! என்னுடன் போரிட்ட புல்வியா மெய்யாக ஒரு தீர மங்கை! ஆண்டனி போல் அவள் மோகத் தீயில் மூழ்க வில்லை! ரோமைப் புறக்கணிக்க வில்லை! நாட்டுப் பாதுகாப்பை மறந்து காதலுக்காக மனதைப் பறிகொடுக்க வில்லை!

[அப்போது காவலன் ஒருவன் வந்து ஆண்டனி வருவதை அறிவிக்கிறான். சிறிது வினாடிகள் கழித்து நுழைகிறார் ஆண்டனி]

லெப்பிடஸ்: [மகிழ்ச்சியுடன்] நான் சொன்னதுதான் உண்மையானது. [வணக்கம் செய்து] வாருங்கள் ரோமாபுரித் தளபதியாரே! உங்கள் வருகைக்கு நாங்கள் காத்திருக்கிறோம்.

[ஆண்டனி முதலில் லெப்பிடஸின் கை, பிறகு அடேவியஸின் கையைக் குலுக்குகிறான்]

அக்டேவியஸ்: [சற்று கடுமையுடன்] வருக, வருக ஆண்டனி! எனது ஆழ்ந்த அனுதாபம், புல்வியாவின் அகால மரணத்துக்கு! நீ வருவாய் என்று அவள் உயிர் உனக்காகக் காத்திருந்தது! நீ வரவில்லை என்று தெரிந்ததும் அவள் உயிர் உடனே நீங்கியது! எகிப்தை வீட்டு ஏன் நீ உடனே வரவில்லை! புல்வியா அடக்கத்தின் போது ரோமாபுரி நகரே நீ வருவாய் என்று காத்துக் கிடந்தது! உன்னை வரவிடாமல் எகிப்தில் எந்த பிசாசு தடுத்தது? உன்னைப் பிடித்த வைத்த மந்திரக்காரியை உதறி விட்டு நீ வந்திருக்கலாம்! அப்படி நீ செய்ய வில்லை! ஏன்? ஏன்? ஏன்? சொல் ஆண்டனி!

லெப்பிடஸ்: கோபப்படாதீர் அக்டேவியஸ்! குற்றம் பார்க்கின் சுற்றமில்லை! பாம்ப்பியை நாம் மூவரும் சேர்ந்து தோற்கடிக்க வேண்டும்! நமது பகைவன் நமக்குள் இல்லை. நமக்குள் சண்டை என்று தெரிந்தால் பாம்ப்பி அதைக் கொண்டாடுவான்! நமது பிரச்சனை சிறியது! ஆனால் நமது மனது பெரியது! போரை எவ்விதம் நடத்திச் செல்ல வேண்டும் என்று நாம் சிந்திப்போம்! பாம்ப்பியின் கடற்படை வலுவாகி விட்டது! அதனை வெல்வது சிரமம். அதற்குரிய வழிகளைத் திட்டமிடுவோம்.

ஆண்டனி: [சினத்துடன்] எகிப்தில் நான் ஏன் ஒதுங்கிக் கிடந்தேன் என்று அக்டேவியஸ் ஏன் கேட்கிறார்? அக்டேவியஸ் ரோம் சாம்ராஜியத்தைச் சுற்றிப் பார்வை யிடாது, ரோமிலே ஏன் பதுங்கிக் கிடந்தார் என்று நான் கேட்கிறேனா? கப்பம் கட்டாத எகிப்த் தேசம் ஒப்பிய நிதியைத் திரட்டப் போனது என் தப்பா? படை வீரர்கள் மாதச் சம்பளம் தரப்படாமல் கும்பி குலைவதை அறிவீரா? கிளியோபாத்ரா ரோமுக்கு வாரிசு அளித்த சீஸரின் மனைவி! சீஸர் மாண்டதும் அவளது சிநேகத்தை அற்றுவிட வேண்டுமா? எகிப்த் ரோமாபுரின் ஆக்கிரமிப்பு நாடு! ஆம், கிளியோபாத்ரா என்னினிய காதல் தோழிதான்! என் காதலை இல்லை என்று நான் மறுக்க வில்லை! நாட்டுப் பற்று என்னை ரோமுக்குப் போகச் சொன்னாலும், ஏதோ ஒரு பாசம் என்னை எகிப்தில் கட்டிப் போட்டது!

அக்டேவியஸ்: உனது மனைவி புல்வியாவும், சகோதரனும் சேர்ந்து கொண்டு, என்னை எதிர்த்துப் போர் புரிந்தார். உனக்கு அது தெரியாதா? நீ ஏன் அவர்களைத் தடுத்து நிறுத்த வில்லை? நான் மடிய வேண்டும் என்று நினைத்தாயா? அல்லது அவர்கள் போரில் கொல்லப் படட்டும் என்று விட்டு விட்டாயா?

ஆண்டனி: அப்படி யில்லை அக்டேவியஸ். தப்பான எண்ணம் அது! உன்னுடன் போரிட என் மனைவியை நான் ஏன் அனுப்ப வேண்டும்? என் சொற்படிக் கேட்பவன் அல்லன் என் சகோதரன். அது உனக்கும் தெரியும்! என்னை எகிப்திலிருந்து இழுத்துவர புல்வியா செய்த புரட்சி அது! அதில் அவள் வெற்றி பெறவில்லை. என் சகோதரன் உன்னுடன் போரிட்டதற்கு நான் பொறுப்பாளி அல்லன்.

அக்டேவியஸ்: அலெக்ஸாண்டிரியாவில் கலகம் நேர்ந்த போது, மூன்று முறை நானுனக்குக் கடிதம் எழுதினேன்! அவற்றைப் பையிக்குள் போட்டு விட்டு நீ பதில் போடாமல் பதுங்கிக் கொண்டாய்! ஏன்?

ஆண்டனி: முப்பெரும் அரசர்களுக்கு கிளியோபாத்ரா அளித்த விருந்தில் அப்போது கலந்து கொண்டிருந்தேன்! அச்சமயம் வந்தது முதல் கடிதம். மற்ற கடிதங்களை நான் பெற்றுக் கொள்ள வில்லை!

அக்டேவியஸ்: ஒப்புக்கொள் ஆண்டனி! நமது கூட்டு ஒப்பந்தத்தை நீ முறித்தாய்! பகைவன் ரோமாபுரியின் வாசலில் நின்ற போது நீ கிளியோபாத்ராவின் மாளிகை வாசலில் மயங்கிக் கிடந்தாய்! நாட்டுப் பாதுகாப்பு உன் நாட்குறிப்பில் இடம் பெறவில்லை! நாட்டைத் துறந்து, நட்பைத் துறந்து, நம்பிய மனைவியைத் துறந்து நாசக்காரியின் மடியில் நீ மயங்கிக் கிடந்தாய்!

லெப்பிடஸ்: நமது வீட்டுப் போரை முதலில் நிறுத்தி, வெளி நாட்டு போரைப் பற்றி சற்றுப் பேசுவோமா?

அக்கிரிப்பா: எனக்கோர் நல்ல யோசனை உதயமாகி உள்ளது! ஆண்டனி தற்போது தனிமையாய்ப் போனவர்! அக்டேவியஸ்! உங்கள் தாய் வழிப் பிறந்த சித்தியின் புதல்வி அழகி அக்டேவியாவை …. ஆண்டனிக்கு …

அக்டேவியஸ்: போதும், நிறுத்திக் கொள்! உன் யோசனையைக் கிளியோபாத்ரா கேள்விப் பட்டால், உன் கழுத்தை அறுத்து விடுவாள்! தடாலென மயக்கமுற்று விழுந்திடுவாள்! அக்டேவியா வாலிப மங்கை! ஆண்டனி வயோதிகத் தளபதி! முதலில் அக்டேவியா ஆண்டனியை ஏற்றுக் கொள்வாளா? வயதுப் பொருத்தம் இல்லையே! மனப் பொருத்தம் உள்ளதா? எனக்குத் தெரியாது.

ஆண்டனி: நல்ல யோசனை அக்கிரிப்பா! நீ சொல்ல வந்ததைச் சொல்லி முடி! நான் இப்போது மணமாகாதவன். அக்டேவியா எப்படி இருப்பாள் சொல்? அழகாய் இருப்பாளா? எடுப்பான உடம்பா? ஒடுங்கிய இடுப்பா? எத்தனை வயதிருக்கும்? நானவளைப் பார்த்தில்லை!

அக்கிரிப்பா: ஆனால் அக்டேவியா உங்களைப் பார்த்திருக்கிறாள் ஆண்டனி! இருபத்தியைந்து வயது! பேரழகி! குதிரை போல மதமதத்த தோற்றம்! உங்களுக்கு ஏற்றவள்!

ஆண்டனி: நான் கண்டு பேச வேண்டுமே முதலில்! என்னைப் பற்றி அக்டேவியா என்ன நினைப்பாள்?

அக்கிரிப்பா: கவலைப் படாதீர்! புல்வியா செத்த பின் அக்டேவியா உங்களைப் பற்றித்தான் கனவு காண்கிறாள். உங்களைக் காணத் துடித்துக் கொண்டிருக்கிறாள். அவளது விருப்பத்தை உங்களுக்குச் சொல்லும் வேளை வந்ததால் சொல்கிறேன். கிளியோபாத்ரா உணர்ச்சியைப் பற்றி நான் கவலைப் படவில்லை! ஆனால் …… அவள் ஒரு ….!

அக்டேவியஸ்: ஆண்டனி! அவள் ஒரு விதவை, தெரியுமா? சமீபத்தில் அவள் கணவர் காலமாகி விட்டார்! அவள் கணவன் செத்த கவலையில் உண்ணாமல், உறங்காமல், ஓடாய்ப் போய் விட்டாள்!

ஆண்டனி: ஆகா! என்ன பொருத்தம்? இப்படி அமைவது எனக்கு ஓர் அதிர்ஷ்டம்! நானும் மனைவி இழந்தவன்! புல்வியா சமீபத்தில் செத்தது அவளுக்குத் தெரிந்திருக்கிறது! நானும் புல்வியா போன துக்கத்தில்தான் மன வேதனை அடைகிறேன்! மனப் பொருத்தம் உள்ளது எங்கள் இருவருக்கும். புல்வியாயை இழந்த எனக்கு ஆறுதல் அளிப்பாள் அக்டேவியா! கணவனை இழந்த அக்டேவியாவுக்கு ஆதராவாய் இருப்பேன் நான்!

அக்டேவியஸ்: ஆண்டனி! கவனகாகக் கேள்! அக்டேவியாவின் கணவன் ஏகதார விரதன்! அவனுக்கு ஒரே ஒரு மனைவி அக்டேவியா! அவனுக்கு ரோமில் ஒரு மனைவியும், எகிப்தில் ஒரு காதலியும் கிடையாது! அவன் விட்டுப் போன இடத்தை நீ நிரப்புவாய் என்று எனக்கு நம்பிக்கை யில்லை!

ஆண்டனி: கிளியோபாத்ராவை நீ நேராகப் பார்த்தால் அப்படிச் சொல்ல மாட்டாய்! கிளியோபாத்ரா என் காதலி யில்லை! கிளியோபாத்ரா என் மனைவி யில்லை! அவள் எனக்கு வெறும் தோழி மட்டுமே! என்னைப் பார்க்கும் போதெல்லாம் அவள் சீஸரைப் பற்றித்தான் பேசுவாள்! நான் அவளிடம் கொண்டிருப்பது வெறும் நட்பு! ஆனால் அது கள்ள நட்பில்லை! அவளைக் காதல் தோழி என்று நான் சொல்லியது தப்பு!

அக்டேவியஸ்: நல்ல நட்பு என்று சொல்ல வருகிறாய்! எனக்குத் தெரியும்! உன்னிதயக் கோட்டையில் வசந்த மாளிகை இரண்டு உள்ளன. ஒன்றில் எப்போதும் கிளியோபாத்ராதான் குடியிருப்பாள்! அவளை உன்னால் வெளியேற்ற முடியாது! அடுத்த மாளிகை ஒரு சத்திரம் போன்றது! யாரும் வரலாம், போகலாம், அடிக்கடி மாற்றிக் கொள்ளலாம்! அந்த மாளிகைக்கு அக்டேவியா வரமாட்டாள்!

ஆண்டனி: அப்படிக் கேலி செய்யாதே அக்டேவியஸ்! இப்போதே நான் அக்டேவியாவைப் பார்க்க வேண்டும்! ஏற்பாடு செய்வாயா? அவளை நான் மணந்து கொள்கிறேன். என்னால் தனிமையில் நோக முடியாது!

அக்டேவியஸ்: அக்டேவியா ஒரு நற்குண மாது! புல்வியாவை விட்டுவிட்டு நீ எகிப்துக்குப் போனது போல் செய்தால், அவள் தாங்கிக் கொள்ள மாட்டாள்! அவள் மென்மையான இதயத்தை உடைத்து விடுவாய்!

அக்கிரிப்பா: ஆண்டனி, நான் நினைத்தபடி செய்து விட்டேன்! முக்கியமான இந்த திருமணத்தால் அக்டேவியஸின் மைத்துனன் ஆகிவிட்டாய் நீ! அதனால் அக்டேவியஸின் பராக்கிரமம் இரட்டிப்பாகிறது! உங்கள் பழைய வெறுப்புகள் கரைந்து போகின்றன! உங்கள் பொறாமைக் குணங்கள் மறைந்து விடுகின்றன. நீங்கள் மூவரும் பகைவன் பாம்ப்பியை விரட்ட ஒன்றுபடுகிறீர்! இந்த திருமணம் அதை நிறைவேற்றி விடும்.

ஆண்டனி: கேளுங்கள்! பாம்ப்பி நமக்குப் பகைவன் அல்லன்! சமீபத்தில் அவன் எனக்கு எழுதிய கடிதத்தில் மதிப்புடன் நடந்து மன்றாடி யிருக்கிறான்! போர் வேண்டாம் என்று என் காலில் விழுகிறான்! நான் போரை முன்னின்று நடத்தில் தான் வெல்ல முடியாது என்று தாழ்ச்சியுடன் முறையிட்டுள்ளான். ஆகவே அவனுக்கு எதிராக நான் வாளுயர்த்த மாட்டேன்!

அக்டேவியஸ்: [அதிர்ச்சி அடைந்து] என்னால் இதை நம்ப முடியவில்லை! பாம்ப்பி ஏமாற்றுகிறானா என்று தெரியவில்லை! ஆண்டனி! நீ சொல்வது உண்மை என்றால், பல மாதங்களாக அவன் ஏன் தன் கடற் படையைப் பலப்படுத்தி வந்தான் என்று விளக்கு! உனக்கும், எனக்கும் பகை உண்டாக்க வழி செய்கிறான்!

ஆண்டனி: காரணம் சொல்கிறேன்! போரை நிறுத்த பாம்ப்பி முயல்வது எனக்கு நன்றாகத் தெரிகிறது. பொறுங்கள் நமது ஒற்றரை அனுப்பி பாம்ப்பியின் மனதை அறிந்து வருகிறேன். நல்ல சமயத்தில்தான் அக்டேவியாவைத் திருமணம் செய்கிறேன். போருக்கு நான் செல்வதைப் புதுமணப் பெண் அக்டேவியா எப்படிப் பொறுத்துக் கொள்வாள்? அக்டேவியஸ், போரை நான் நிறுத்த முடியும்! புதுமணப் பெண்ணை நான் முதலில் திருமணம் செய்து கொள்ள வேண்டும்! திருமணத்துக்கு ஏற்பாடு செய்வீர் என் புது மைத்துனரே!

[சிரித்துக் கொண்டு அக்டேவியஸின் கைகளைக் குலுக்குகிறான்]

*********************

அங்கம் -7 காட்சி -4

(கிளியோபத்ரா) அரசிளங் குமரி!
மாவீரர் சீஸரின் கை வாளையும்
படுக்கை மீது விழ வைத்தவள்!
உடலுறவு கொண்ட சீஸருக் கொரு
மகனைப் பெற்ற மாது அவள்!

 

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

அந்தோ ஆண்டனி! நில்லாதே
அக்டேவியஸ் அருகில்! உன்னைக் காக்கும்
ஆத்ம தேவதை உன்னத மானது!
அஞ்சாதது! ஈடிணை யற்றது!
அவ்வித மல்ல அக்டேவியஸ் ஆத்மா!
ஆக்கிர மிக்கும், அச்ச மூட்டும்!
ஆதலால் நீ தூர விலகி நில்! …. [ஜோதிடன் எச்சரிக்கை]

வில்லியம் ஷேக்ஸ்பியர் [அண்டனி & கிளியோபாத்ரா]

Cleopatra near Nile Resort

ரோமா புரியின் நிலைமை: ·பிலிப்பிப் போரில் புரூட்டஸ், காஸ்ஸியஸ் மற்ற சதிகாரர் யாவருமிறந்த பிறகு, ஆண்டனி, அக்டேவியஸ், லெப்பிடஸ் மூவர்களின் கூட்டு மேற்பாட்டில் ரோமாபுரி இயங்கி வருகிறது. ஜூலியஸ் சீஸர் கொலையாகி இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஆண்டனி கிளியோபாத்ராவைக் காண எகிப்த் வருகிறான். மனைவி ·புல்வியா மரணம் அடைந்த பிறகு, ஆண்டனி தனிமையாகிக் கிளியோபாத்ரா மீது நாட்டம் உண்டாகுகிறது. அதே சமயத்தில் நிதிக் களஞ்சியம் காலியாகிப் போர்வீரர்களுக்குக் கூலி கொடுக்க நிதியின்றிப் பணம் திரட்ட வேண்டி, ஆண்டனி எகிப்து செல்லத் திட்டமிடுகிறான். எகிப்த் அரசியிடம் நேராகக் கையேந்திப் பிச்சை கேட்கத் துணிவின்றி, கிளியோபாத்ரா தன்னைக் காண வரவேண்டும் என்று காவலர் மூலம் உத்தரவு அனுப்புகிறான். ஆனால் கிளியோபாத்ரா எகிப்த் தளத்தில் தானிருப்பதாகவும், ஆண்டனிதான் அவளைக் காண வரவேண்டும் என்று மறுமொழி அனுப்புகிறாள். எகிப்துக்கு வந்த ஆண்டனி தன் மனைவி புல்வியா போர்க்களத்தில் தனித்துப் போய் நோயில் மரணமடைந்த தகவல் கேட்டு மனம் நோகிறான். ரோமுக்கு மீளவும் விரும்பாது, கிளியோபாத்ராவின் கவர்ச்சியிலிருந்து மீளவும் முடியாது திண்டாடுகிறான் ஆண்டனி. இளைய பாம்ப்பி ரோமாபுரியைத் தன்வசமாக்க முயற்சிக்கிறான். கிளியோபாத்ராவிடம் மனதைப் பறிகொடுத்த ஆண்டனி ரோமுக்கு மீளத் தயங்குகிறான். அக்டேவியஸ் தன் தங்கையை மணக்க வழி செய்து ஆண்டனியை மைத்துனன் ஆக்கிக் கொள்கிறான். திருமணத்தைக் கேள்விப்பட்ட கிளியோபாத்ரா வெகுண்டெழுகிறாள்.

++++++++++++++++++

நேரம், இடம்: ரோமாபுரி அரண்மனை. பகல் வேளை.

நாடகப் பாத்திரங்கள்: ஆண்டனி, அக்டேவியா, ஜோதிடர்.

காட்சி அமைப்பு: திருமணம் முடிந்த பிறகு புதுமணத் தம்பதிகள் ஆண்டனி,  மனைவி அக்டேவியா உரையாடிக் கொண்டிருக்கிறார்கள். சிறிது நேரத்தில் ஜோதிடர் வருகிறார்.

ஆண்டனி: [ஒரு கையில் மதுக் கிண்ணமும், மறு கையில் அக்டேவியாவை அணைத்துக் கொண்டு] கண்ணே அக்டேவியா! இன்று நமது பொன்னாள்! எனக்கினி மதுக்கிண்ணம் நீதான்! நீ அருகே உள்ள போது, ஸிஸிலி மதுவும் சுவை அளிப்பதில்லை! புல்வியா காலி செய்த உள்ளத்தை நிரப்பி விட்டாய் நீ! காய்ந்து போன என் நெஞ்சத்தில் மீண்டும் காதல் தேனாறு ஓடுகிறது! நீ வாலிப மாது! உன்னை விட நான் வயோதிகன்! உன்னால் எனக்கு வாலிபம் மீள்கிறது! ஆயினும் என்னால் உனக்கு வயோதிகம் வரக் கூடாது.

அக்டேவியா: இந்த நாளுக்கு நான் காத்திருந்தேன். என் கணவர் மாண்டதும் தனித்துப் போனேன் மீண்டும் நான்! தனிமையில் வாடினேன், வதங்கினேன், வாழ்வதை வெறுத்தேன். அப்போது போர்க்களத்தில் புல்வியா செத்த செய்தி வந்தது! உடனே என்னைப் போல் தனித்துப் போன உங்கள் மீது அனுதாபம் கொண்டேன்! எகிப்திலே ஒட்டிக் கொண்ட ஆண்டனியை எப்படி வெட்டிக் கொண்டு வருவது என்று சிந்தித்தேன்! நண்பன் அக்கிரிப்பா, தமையன் அக்டேவியஸ் உதவியை நாடினேன். தமையன் உங்களை ரோமுக்கு இழுத்து வந்தார்! அக்கிரிப்பா நம்மைப் பிணைத்து வைத்தார்! நாமின்று புதுமணத் தம்பதிகள். ரோமுக்கு மீண்டும் நீங்கள் திரும்பிப் போவீரா? என்னைத் தனியே விட்டுவிட்டு போவீரா?

ஆண்டனி: கண்ணே அக்டேவியா! நானொரு நாடோடி! என் மனம் போல் மாறுவது நான் வாழுமிடம்! வாழ்க்கை முழுதும் நான் ரோமிலே அடைபட்டுக் கிடக்க மாட்டேன். எகிப்துக்கு நான் மீண்டும் போக வேண்டிய திருக்கும்! நான் ஆரம்பித்த சில பணிகள் இன்னும் முடியவில்லை! என்னிதயத்தில் பாதியிடம் ரோமுக்கும், மீதியிடம் எகிப்துக்கும் உள்ளதை நான் தவிர்க்க முடியாது!

அக்டேவியா: [மிக்க கவலையுடன்] அப்படியானால் உங்கள் பாதி உள்ளம் கிளியோபாத்ராவுக்கு என்று சொல்கிறீரா? எனக்குப் பாதியிடம் போதாது ஆண்டனி! உங்கள் உள்ளமும், உடலும் எனக்கு வேண்டும்! கிளியோபாத்ரா செத்துப் போன சீஸரின் மனைவி! சீஸருக்கு ஆண் மகனை அளித்தாலும், மெய்யாக வேசி அவள்! நேற்று சீஸர்! இன்று நீங்கள்! நாளை யாரோ? யாருக்குத் தெரியும்? எனக்கீடாக உங்களை உரிமை யாக்கத் தகுதி அற்றவள் அந்த மந்திரக்காரி!

ஆண்டனி: பாவம் கிளியோபாத்ரா! சீஸரை இழந்து உன்னைப் போல் தனித்துப் போனவள். என்னை நம்பிக் கொண்டிருக்கிறாள்! அவளை வேசி என்று திட்டாதே! அவள் ·பாரோ மன்னர் பரம்பரையில் வந்தவள்! மகா வீரர் அலெக்ஸாண்டர் வம்சா வழியில் உதித்தவள். பல மொழிகள் தெரிந்த, பராக்கிரப் பாவை அவள்! எகிப்தைச் சீரிய முறையில் ஆண்டு வருபவள் அவள்! அவள் என்னாசைத் தோழி! ஆனால் நீ என்னாசை மனைவி! உனக்கீடாக மாட்டாள்!

அக்டேவியா: [ஆண்டனி கைகளைப் பற்றிக் கொண்டு, கவலையுடன்] நீங்கள் ரோமுக்குப் போகும் போது நானும் உடன் வருவேன்! நீங்கள் எகிப்திலும், நான் ரோமிலும் தனித்திருக்கக் கூடாது! எகிப்த் ரோமுக்குச் சொந்தம்! உங்களுக்குச் சொந்தமில்லை! நீங்கள் எனக்குரிமை யானவர்! ஆனால் கிளியோபாத்ரா உங்களுக் குரியவள் அல்ல. நீங்கள் எகிப்துக்குத் தனியே போகக் கூடாது! கிளியோபாத்ரா உங்களைச் சிறைப் படுத்தி விடுவாள்! சீஸரும் அப்படித்தான் அவளிடம் சிறைப்பட்டுப் போனாள்! வாக்குறுதி அளிப்பீரா?

[அப்போது ஜோதிடர் நுழைகிறார்]

ஜோதிடர்: மாண்புமிகு தளபதியாரே! மாதரசி அக்டேவியா! வந்தனம் உங்களுக்கு! அழைத்தீராமே!

ஆண்டனி: [கேலியாக] ஜோதிடரே, சொல்வீர்! எகிப்தில் குடியிருக்க விரும்புவீரா?

ஜோதிடர்: நான் அந்த நாட்டில் பிறந்தவன் அல்லன். நீங்களும் அங்கே பிறந்தவர் அல்லர். எதற்காகக் கேட்கிறீர் என்னை? கிளியோபாத்ராவின் அரண்மனையில் ஜோதிடருக்கு வேலை கிடைக்குமா? எகிப்த் மொழி தெரியாது எனக்கு! மேலும் எகிப்த் ஜோதிட நிபுணர்கள் என்னை விட சாமர்த்தியசாலிகள்! வேலை தேடிப் போனாலும் நிராகரிக்கப் படுவேன்!

ஆண்டனி: [கையைக் காட்டி] சொல்லப்பா ஜோதிடம்! யாருடைய அதிஷ்டம் உயர்ந்தது? என் அதிர்ஷ்டமா? அல்லது அக்டேவியஸ் அதிர்ஷ்டமா?

அக்டேவியா: [கையைக் காட்டி] ஜோதிடரே! முதலில் எனக்குச் சொல்லுங்கள். நான் எகிப்துக்குச் செல்வேனா?

ஜோதிடர்: மன்னிக்க வேண்டும். முதலில் ஆண்டனிக்குச் சொல்கிறேன்! உங்கள் அதிர்ஷ்டம் தாழ்ந்து போனது! அக்டேவியஸ் அதிர்ஷ்டம் கொடிகட்டிப் பறக்கப் போகிறது!

ஆண்டனி: எப்படி அதைச் சொல்வீர்? என் கையில் அக்டேவியஸ் ரேகை கிடையாது!

ஜோதிடர்: அக்டேவியஸ் கையை நான் பார்த்திருக்கிறேன். ஆண்டனி! அக்டேவியஸ் அருகில் நில்லாதீர்! அவரது ஆத்மா வலிமை மிக்கது! அச்சம் உண்டாக்குவது! ஆக்கிரமித்து அடிமை ஆக்குவது! உங்களின் ஆத்மா உன்னத மானது! அச்சமில்லாதது! ஈடிணை அற்றது. அவரை விட்டுத் தள்ளியே நில்லுங்கள்! அவரை எதிர்த்துச் செல்லாதீர்!

ஆண்டனி: [கவனமுடன்] யாரிடமும் அதைச் சொல்லாதே!

ஜோதிடர்: யாரிடமும் சொல்ல மாட்டேன், உங்களைத் தவிர. இனிமேலும் சொல்ல மாட்டேன், உங்களுக்குத் தேவையான வேளை தவிர. எதிலும் போட்டி என்று வந்தால் நீங்கள் அவரிடம் நிச்சயம் தோற்றுப் போவீர்! அக்டேவியஸின் அதிர்ஷ்ட தேவதை எந்த எதிர்பாரா விளைவிலிருந்தும் விடுவித்து அவருக்கு வெற்றியைத் தருவாள்! உங்களுடைய ஒளி அக்டேவியஸ் அருகிலே மங்கித்தான் போகும்! உங்களுடைய ஆத்மா அவர் அருகில் ஆட்சி செய்ய அஞ்சி ஒதுங்கி விடும்!

ஆண்டனி: [கோபத்துடன்] வாயை மூடிக் கொண்டு வெளியேறு! உன் வாக்குகள் யாவும் அர்த்த மற்றவை.

ஜோதிடர்: ஆண்டனி, மன்னித்து விடுங்கள். அக்டேவியா என்னிடம் கேட்டதைச் சொல்லி விட்டுப் போகிறேன். [அக்டேவியாவைப் பார்த்து] ஆமாம் என்ன கேட்டீர்? எகிப்துக்குப் போவேனா என்று கேட்டீர். காட்டுங்கள் கையை. [அக்டேவியா கையை நீட்டுகிறாள்] போவீர் நிச்சயம் எகிப்துக்கு! நிரம்ப பேரீச்சம் பழங்கள் தின்னுங்கள்! ஆண்டனி எகிப்துக்குப் போவார்! அவரோடு நீங்களும் போகலாம்.

அக்டேவியா: [கெஞ்சலாக] எகிப்தில் நானும் ஆண்டனியும் சேர்ந்து வாழ்வோமா? அல்லது பிரிந்து போவோமா? எனக்குப் பயமாய் இருக்கிறது ஆண்டனி எகிப்த் போவதற்கு!

ஆண்டனி: ஜோதிடரே! உமது வாயிலின்று வருவதெல்லாம் பொய்கள். உமது எச்சரிக்கையில் என்னை மட்டும் குழப்பியது போதும். எதையாவது தப்பாகச் சொல்லி அக்டேவியா தூக்கத்தைக் கெடுக்க வேண்டாம். போ, சீக்கிரம் போ! திரும்பிப் பாராமல் போ! [ஜோதிடர் விரைந்து வெளியேறுகிறார்] எகிப்த் நாடுதான் எனக்கு ஏற்றது! மனச் சாந்திக்கு என் திருமணம்! ஆனால் எகிப்தில்தான் என் சொர்க்கம் உள்ளது. நான் எகிப்துக்குப் போகத் தயார் செய். முதலில் நான் மட்டும் தனியே போவேன்! கிளியோபாத்ரா உன்னைக் கண்டால் என்ன செய்வாளோ, எனக்குத் தெரியாது. அவள் மனத்தைப் பக்குவப் படுத்தி உன்னை ஏற்றுக் கொள்ள ஒப்ப வைப்பேன்! அதுவரை அக்டேவியா, நீ பொறுமையாக இருக்க வேண்டும்.

*********************

Leave a Reply

Your email address will not be published.