Advertisements
Featuredஇலக்கியம்கட்டுரைகள்பத்திகள்

“அவன், அது , ஆத்மா” (59)

(ஒரு எளிய மனிதனின் சுயசரிதை)

(மீ.விசுவநாதன்)

அத்யாயம்: 57

கவிமாமணி இலந்தை சு. இராமசாமி

“பாசம், பரிவு, பதமான நல்லன்பு
வாசம் புரியும் மனையெதுவோ – நேசமுடன்
என்றும் இயங்கும் இதயமே அம்மனையாம்
அன்னதனைக் காத்தல் அறி.”

இந்தக் கவிதையை எழுதியவருக்கு திருநெல்வேலி மாவட்டத்தில் கயத்தாறு அருகில் இருக்கும் ஒரு கிராமம் இலந்தைதான் பிறந்த ஊர். அவர் கவிமாமணி இலந்தை சு. இராமசாமி அவர்கள். மிகச் சிறந்த கவிஞர். தமிழறிஞர். பேராசிரியர் அ. சீனிவாசராகவனின் மாணாக்கர். பாரதி கலைக்கழகத்தின் மிகச் சிறந்த கவிஞர்களில் இவர் ஒரு ரத்தினம். கவியரங்கங்களில் பங்குபெறும் கவிஞர்களைக் அழைக்கும் போதும், கவிதையைப் படித்த பின்பு அதுபற்றிய தனது கருத்துகளை அந்தக் கவிஞர் தன் கவிதையை எந்த சந்தத்தில் படித்தாரோ அதே சந்தத்தில் மிக அழகாக எழுதி வாழ்த்தும் போதும் அவருக்குள்ள திறமையை அவன் எப்பொழுதும் ஒரு பிரமிப்போடுதான் பார்ப்பான்.

அவரது தலைமையில் பல கவியரங்குகளில் அவன் பங்கு கொண்டு அவரது பாராட்டையும், திருத்தங்களையும் பெற்றிருக்கிறான். அவற்றுள் அவனுக்கு இன்றும் பசுமையாக நினைவிருப்பது 14.12.1980ம் வருடம் சைதாப்பேட்டையில் கவிமாமணி ஐயாரப்பன் அவர்களின் இல்லத்தில் கவிதாயினி சௌந்தரா கைலாசம் அவர்கள் முன்னிலை வகிக்க இலந்தை இராமசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்ற கவியரங்கம். “பாபநாசம்” என்ற தலைப்பில் அவன் படித்த கவிதையை வரிக்கு வரி ரசித்துப் பாராட்டினார்.

தபால் கார்டில் எழுதி வந்த காலம் சென்று முகநூலில் பகிர்ந்து கொள்ளும் காலமிது. மரபுக் கவிதைகளுக்கு என்று “சந்தவசந்தம்” என்ற குழுமத்தைத் துவக்கியவர் இலந்தை சு. இராமசாமி அவர்கள். அதில் பல அறிஞர்கள், கவிஞர் பெருமக்கள் தங்களது படைப்புகளைப் பகிர்ந்து கொண்டு வருகிறார்கள். சுமார் மூன்று வருடங்களுக்கு முன்பு ஒருநாள் கவியோகி வேதம் அவர்கள் அவனைத் தொடர்பு கொண்டு, ” நீ….சந்தவசந்தத்தில் எழுது… அதில் பேராசிரியர் கவிஞர் பசுபதி, அனந்த், சிவசிவா, புலவர் இரா. இராமமூர்த்தி, அ.கி.வ., ஹரிகிருஷ்ணன், கோபால்ஜி, வ.வே.சு., நாகோஜி போன்ற அறிஞர்கள் எழுதுகிறார்கள். உனக்கு அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். விமர்சனங்கள் வரும். பாராட்டும் வரும். அதனால் உன்னை நீ உயர்த்திக் கொள்ள முடியும். உடனேயே இலந்தை அவர்களைத் தொடர்பு கொண்டு உனது படைப்புகளை அனுப்பிவை” என்று அவனை ஊக்கப் படுத்தினார். அதுமுதல் “சந்தவசந்தத்தில்” அவன் கவிதைகளைப் பகிர்ந்து கொண்டு வருகிறான். சந்தவசந்தத்தில் இணைந்த பிறகுதான் அவனுக்குத் தமிழ் இலக்கணத்தில் கொஞ்சம் உயர முடிந்தது. அதில் தொடர்ந்து எழுதிவரும் புலவர் இராமமூர்த்தி, கவிஞர் சந்தர் சுப்பிரமணியம், ரமணி, விவேக் பாரதி போன்ற வர்களின் நட்பும் அவனுக்குக் கிடைத்தது. “சந்தவசத்தத்தில்” நடைபெறும் கவியரங்கக் கவிதைகள் ஒவ்வொன்றும் ஒரு வகையில் பிரமாதமாக இருக்கும். இலக்கியச் சுவையைச் சுமந்து நமது மனச் சுமையை இறக்கி வைக்க வல்ல அருமையான கவிதைகள் அவை. கவிஞர் ரமணி அவர்களின் இலக்கணப் பகிர்வும், தகவல் பகிர்வும் மெச்சத் தக்கது. இந்த நல்ல குழுமத்தை உருவாக்கிய இலந்தையாரை அவன் மனதார வணங்குகிறான்.

இலந்தை சு.இராமசாமி அவர்களின் கவிதைத் தொகுப்புகள், அறிவியல் கட்டுரைகள், கதைகள் அனைத்தும் படிக்கப் படிக்க மகிழ்ச்சி தருபவைதான். அவரது “பாரதி அறிவியல்” என்ற கட்டுரைத் தொகுப்பை அவன் அடிக்கடி படிக்கும் பழக்கங் கொண்டிருக்கிறான். இலந்தையார் தன் மனைவிக்கு எழுதிய கவிதைக் கடிதங்களைத் தொகுத்து நூலாக்கி சமீபத்தில் வெளியிட்டார்கள். அது ஒரு தரமான கடித இலக்கிய நூல் என்பது அவனது கணிப்பு. இரண்டு வருடங்களுக்கு முன்பு தில்லை கங்கா நகரில் இருக்கும் அவரது இல்லத்தில் “சந்தவசந்தக் குழுமத்தின்” ஆண்டு விழாக் கூட்டம் நடைபெற்றது. அதில் இலந்தையாரின் துணைவியார் தாயாரின் கனிவோடு அனைவருக்கும் உணவு பரிமாறியதும். தேர்ந்த ரசிகராகக் கவிதைகளை ரசித்து மகிழ்ந்ததும் அவன் மனக்கண்ணின் இருக்கிறது. இலந்தையாரின் மகள் கவிதாவும், மகன் சுந்தரும் நல்ல இலக்கிய தாகம் கொண்டவர்கள் என்பது ஒரு பேறு.

” நினைப்பெல்லாம் நற்கவிதை நித்தமும் பொங்கும்
வினைப்பயனைப் பெற்ற விளைவே – அனைத்தும்
அளிக்கின்ற “வாராகி” அள்ளிக் கொடுக்கக்
களிக்கின்ற வேழக் கவி.. என்று அவன் அவருக்காகப் பிரார்த்திக்கிறான்.

08.12.2017 அவன் மீண்டும் அடுத்தவாரம் வருவான்……….

Print Friendly, PDF & Email
Download PDF
Advertisements
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க