பெட்டையும் முட்டையும்!
மீனாட்சி பாலகணேஷ்
முருகன் குறிஞ்சிமலையின் தலைவன்; அந்நிலத்துக்கு இறைவன். இருப்பினும் ஐவகை நிலங்களிலும் முருகப்பெருமான் செய்த விளையாடல்கள் பற்றிய அழகான பாடல்களைப் பிள்ளைத்தமிழ் நூல்களில் நாம் கண்டுகளிக்கலாம்.
முருகனின் திருவிளையாடலாகப் பாலைநிலத்தில் நடைபெற்ற ஒரு அழகான கதை!
துறையூரைச் சேர்ந்த தமிழ்ப்புலவர் பொய்யாமொழியார்; இவர் பராசக்தி அன்னையையே பாடுபவர்; வேறு தெய்வங்களைப் பாடவே மாட்டார். முருகன் இவரிடம் தன்மீதும் தமிழ்க்கவிபாடும்படி கேட்க, “பெட்டையையும் பாடி முட்டையையும் பாடுவேனோ?” எனக்கூறி மறுத்துவிட்டார். இப்புலவர் ஒருமுறை மதுரைத் தமிழ்ச்சங்கத்தினைக் காக்கவேண்டிப் புறப்பட்டு மதுரை நோக்கிச் சென்றார். இப்படிப்பட்ட வாய்ப்பிற்காகக் காத்திருந்த முருகன் அவர் செல்லும் காட்டுவழியில் ஒரு வேடச்சிறுவனாக உருக்கொண்டு புலவரை வழிமறித்தான். “நானொரு புலவன்,” எனப் பயந்தவண்ணம் கூறிய புலவரிடம், ஒரு கவிதை பாட வேண்டினான் கள்ளச்சிறுவன். ‘நமது உயிருக்கு இவனால் ஆபத்தில்லை; தமிழின் அருமை உணர்ந்த கள்ளன் போலும்!’ என மகிழ்ந்த புலவரிடம், “என்மீது சுரம்போக்காக ஒரு கவி பாடுக,” என்றான் வேட்டுவச் சிறுவன். “உன் பெயரென்ன அப்பா?” எனக்கேட்ட புலவரிடம், முன்பு அவர் கூறியதனை நினைவில் கொண்டு, “என் பெயர் முட்டை,” என்றான் குறும்புக்காரக் குமரன். புரிந்துகொள்ளவில்லை புலவர் பெருமகனார்!
சுரம்போக்குத் துறையாக ஒரு பாடலைப் பாடினார்.
‘பொன்போலும் கள்ளிப் பொறிபறக்குங் கானலிலே
என்பேதை செல்லற் கிசைந்தனளே- மின்போலு
மானவேள் முட்டைக்கு மாறாய தெவ்வர்போங்
கானவேள் முட்டைக்குங் காடு.’
அதாவது கள்ளிச்செடியின் பொன்போன்ற நெருப்புப்பொறி பறக்கும் கானலாகிய சுரத்தே (பாலைநிலத்தே) தலைவனுடன் பேதைப்பெண் செல்ல விரும்பினாளே! அது எப்படிப்பட்ட பாலை நிலம் தெரியுமா? மின்னலைப் போன்ற ஒளிவீசும் வேலினை ஏந்திய முட்டை என்பவனுடைய பகைவர் அவனிடம் தோற்றோடுகின்றனர். அங்ஙனம் ஓடும்போது காட்டிலுள்ள கருவேலமரத்து முட்கள் அவர்கள் பாதங்களில் குத்தி வருத்தும் தகைமைத்தது இக்காடு என்பது பொருள்.
வேடச்சிறுவனாக வந்த முருகன் இதில் பொருட்குற்றம் உள்ளதெனக் கூறினான். வெட்டிப்போட்டாலும் காயாத வேலமுள் நாள்பட்டுக் காய்ந்துவிடும் இயல்பு கொண்டது. அப்படிப்பட்ட முள் கள்ளி வெந்து பொறியாகப் பறக்கும் பாலையில், பச்சையாக வேகாமல் இருந்து காலில் தைக்கும் எனக்கூறுவது பொருந்துமோ? (காய்ந்து உலர்ந்து வெந்தமுள் குத்தவியலாது) ‘இப்படிப்பட்ட பொருட்குற்றம் உடைய பாடலைப் புலவராகிய நீர் பாடலாகுமோ?’ என்றான் வேடச்சிறுவன். பொய்யாமொழியார் பேச்சற்றுத் திகைத்து நின்றார்.
“நான் பாடுகிறேன், நீர் கேளும்,” எனப் பாடலானான் சிறுவன்:
‘விழுந்ததுளி யந்தரத்தே வேமென்றும் வீழின்
எழுந்த சுடர்சுடுமென் றேங்கிச்-செழுங் கொண்டல்
பொய்யாத கானகத்திற் பெய்வளையுஞ் சென்றனளே
பொய்யா மொழிப் பகைஞர் போல்.’
‘மேகத்திலிருந்து விழுந்த மழைத்துளியானது தரையை அடையும் முன்பே பாலைவனத்தின் வெம்மையால் ஆகாயத்திலேயே வெந்து ஆவியாகிவிடும்; அம்மேகம் தாழச் சென்றாலோ பாலையினின்று எழும் வெப்பம்- நெருப்பு- தன்னைச் சுட்டுவிடும் என்றும் ஏக்கம்கொண்டு மேகம் ஒருகாலத்திலும் மழைபொழியாது: அத்தகைய கொடிய பாலைவனக் காட்டினிலே கையில் வளையலணிந்த பெண் தனது தலைவனுடன் சென்றாளே! அது பொய்யாமொழிப் புலவர் எனும் பகைவரின் செயல் போலுள்ளதே!’ எனப்பாடி, பெட்டை- முட்டை பற்றிய நினைவினைப் புலவருக்கு வரச்செய்து மறைந்தான் வேடச்சிறுவனாக வந்த முருகப்பிரான்.
வரகவி மார்க்கசகாயதேவர் தாமியற்றிய திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ் நூலில் இந்த நிகழ்ச்சியைக் குறிப்பிட்டுப் பாடியுள்ளார்.
‘எனது பெயர் முட்டையெனப் பாடும்,’ என்று சிறுவன் கூறியபோதிலும் கருத்துணராத புலவர் ‘பொன்போலும்,’ எனப்பாடினார். “இது வெம்மையான பாலைநிலத்திற்குப் பொருந்தாது. உம்பெயர் என்னவென்று கூறும்,” எனக்கேட்டு ‘விழுந்ததுளி’ என அவர்மீது ஒரு பாடலைப் பாடிய முருகனே! அதுகேட்டு ஐயமுற்ற புலவர் ‘நீ யார் அப்பா?’ என வினவ, உன் அழகுத் திருவுருவைக் காட்டி, புலவரின் நாவில் உன் வேல்கொண்டு பொறித்து மறைந்த முருகப்பெருமானே! அறிவிற் சிறந்த சதுரனே!” என முருகப்பிரானை வாழ்த்தி அவனைச் சப்பாணிகொட்ட வேண்டுகிறார் புலவனார்.
‘பொய்யா மொழிப்புலவர் மதுரையிற் சங்கம்
புரக்கவெழு நாள்மறவனாய்
புறவற வளைத்தெனது பெயர்முட்டை பாடெனப்
பொன்போலு மென்றுபாட
வெய்யான பாலைக்கி தேலாது நும்பெயர்வி
ளம்பென…’
(திருவிரிஞ்சை முருகன் பி. த.- சப்பாணிப்பருவம்- வரகவி மார்க்க சகாய தேவர்)
இதே கருத்தினை கவிராச பண்டாரத்தையா அவர்களும் தாமியற்றியுள்ள திருமலை முருகன் பிள்ளைத்தமிழ் நூலில் சிறுபறைப்பருவப் பாடலொன்றில் குறிப்பிட்டுள்ளது வியப்பினையளிக்கின்றது.
‘மக்கள் நடமாட்டமற்ற சுரமாகிய பாலை நிலத்தில் பொய்யாமொழிப்புலவருக்கு முன்பு தோன்றி அவர்பாடிய பாடலில் குற்றங்கண்டு பின்பு நீயொரு செழுங்கவிதை பாடினாய்!’ என்கிறார் பண்டாரத்தையா. அத்தகைய முருகனை, மறைகள் முழங்கும் திருமலையிலுறைபவனைச் சிறுபறைகொட்ட வேண்டுகிறார்.
மருவாத பாலையில் பொய்யா மொழிக்குமுன்
வந்தொரு செழுங்கவி தையு
………………………………………………
செழுமறை முழக்கமுறு திருமலை யருட்குமர
சிறுபறை முழக்கியருளே.
(திருமலை முருகன் பி. த.- சிறுபறைப்பருவம்- கவிராச பண்டாரத்தையா)
எத்தனை விதமான நயங்கள்! அழகுகள்; கற்பனைகள். பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் நற்றமிழின் இனிய வளங்களைக் காட்டி மகிழ்விக்கும் இலக்கியச் சுரங்கங்கள் அல்லவோ?
மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
{முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
தமிழ்த்துறைத் தலைவர்,
கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம்,
கோயம்புத்தூர்- 21.}
************