இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…(258)

0

அன்பினியவர்களே!

அன்பினிய வணக்கங்கள். 2017ஆம் ஆண்டின் இறுதி மடலில் உங்களிடையே வந்து விழுகின்றேன். ஆம், அடுத்த எனது மடல் வரும்போது நீங்களனைவரும் 2018ஆம் ஆண்டின் மடியில் தவழ்ந்து கொண்டிருப்பீர்கள். நாட்கள் வாரங்களாகி, வாரங்கள் மாதங்களாகி இதோ இவ்வருடத்தின் முடிவில் வந்து நிற்கிறோம். தைவ்வருடத்தின் முன்றிலில் நாம் ஒவ்வொருவரும் எத்தனையோ விதமான வித்தியாசமான அனுபவங்களினூடாக ஊர்ந்து வந்திருக்கிறோம். அடுத்த ஆண்டினுள் நாம் நுழையும்போது எமது அகவையில் மட்டுமல்ல எமது அனுபவத்திலும் நாம் முதிர்வடைந்தவர்களாகின்றோம்.

கடந்து கொண்டு முடிவில் வந்துநிற்கும் இந்த ஆண்டில் நாம் பெற்றவை பல. இழந்தவை பல. பொருளையிழந்திருக்கிறோம், உறவுகளை இழந்திருக்கிறோம், நட்புகளை இழந்திருக்கிறோம் அதேபோல உறவுகளைப் பெற்றிருக்கிறோம், பொருளீட்டி இருக்கிறோம். ஆம் வரவும், செலவும் வாழ்வின் முக்கிய நிகழ்வுகள். வரவில் மகிழ்வதும், செலவில் அழுவதும் மனிதவாழ்வின் இயற்கை நியதி. 2000 எனும் மைல்கல்லைத் தொட்டு இப்போது 17 வருடங்கள் ஓடி முடிந்துவிட்டன. ஓடியதில் வருடங்கள் களைத்து விட்டனவா? இல்லையே! ஒவ்வொரு வருடமும் ஒரு புது மலரைப் போல பல வர்ணங்களைத் தன்னுள் அடக்கிய வண்ணம் மலர்கின்றது. அவற்றினுள் நாம் அறிந்திடாத, இனிமேல் அறியப் போகும் பல புதுமைகள் பதுங்கிக் கிடக்கின்றன. அவை காலம் கனியும் போது எம்முன்னே மலர்ந்து விரிகின்றன. அதேபோல பல துயர்தரும் நிகழ்வுகளையும் அது தன்னுள் வைத்துக் கொண்டுதான் மலர்கின்றது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் வாழ்வை நாம் மகிழ்ச்சிகரமாக புதுவருடத்தில் தொடங்க வேண்டுமேயானால் நேரிய நம்பிக்கைகளை எதிர்நோக்கியே புது ஆண்டினுள் பிரவேசிக்க வேண்டும்.

எத்தனையோ விதமான மனிதர்களையும், பல்வேறு கலாசாரங்களையும் கொண்டுள்ள இப்பூகோள உருண்டை எப்போதும் போலத்தான் உருண்டு கொண்டிருக்கிறது. அதனுள் வாழும் நாம்மட்டும் எமது உணர்வுகளின் மாற்றம்தரும் தாக்கத்தினால் எமக்குள்ளே பல பேதங்களை வளர்த்து எம்மை நாமே துயருக்குள்ளாக்குக்கிறோம். ஆணவம், அகங்காரம், மமதை எனும் அதீத குணங்களை ஏனோ அதிக வேகத்துடன் வளர்த்துக் கொள்கிறோம்.

இருப்பவர், இல்லாதவர் எனும் பேதத்தின் அடிப்படையில் எமது வாழ்வின் தராதரங்களை நிர்ணயித்துக் கொள்கிறோம். போகும் பாதை வெவ்வேறாயினும் நாம் போகுமிடம் ஒன்றுதான் என்பதை நினைவிற் கொள்ள மறந்துவிடுகிறோம். நாம் விரைந்து அவசரமாக ஓடுவது எமது வாழ்வின் முடிவு எனும் கரையைத் தொடவே என்பதுவே உண்மை. ஆனால் அவ்வெல்லையைத் தேடிஓடும் பயணத்தில் சிலர் மாபெரும் செல்வந்தர்களாக, பலவிதமான வசதிகளுடன் பயணிக்கிறார்கள். பலர் பசியுடனும், தாகத்துடனும் வாழ்வின் அடிப்படை வசதிகளற்ற நிலையில் அப்பயணத்தை மேற்கொள்கிறார்கள். இவ்வோட்டப் போட்டியில் வசதியற்ற சிலர் வசதியற்ற காரணத்தினால் விரைவாக எல்லையைத்தொட்டு வெற்றி கொள்கிறார்கள். ஆனால் அதை வெற்றியாக யாரும் பார்ப்பதில்லை. இதுவே வாழ்க்கையின் யதார்த்த நிலையாகிறது.

சாதனைகள் எதுவுமின்றி, சோதனைகளைத் தாங்குவதை மட்டுமே சாதனையாக்கிக் கொண்ட பலர் ஒருவராலும் அறியப்படாமலே புதைக்கப்படுகிறார்கள். சரித்திரப் புத்தகத்தில் ஒருவரி கூட இவர்களைப் பற்றிப் பிரஸ்தாபிக்கப்படுவதில்லை. ஆனால் அதற்காக அவர்கள் வாழ்வோடு தாம் தினமும் நடத்தும் போராட்டத்தைக் கைவிட்டு விடுகிறார்களா? அளவுக்கதிகமான செல்வத்தில் திளைத்துச் செய்வதறியாது மகிழ்ச்சி எனும் பெயரில் பணத்தைத் தண்ணீர்போல வாரியிறைக்கும் கூட்டம் ஒரு புறம், உயிரை உடலோடு தக்க வைத்துக் கொள்வதற்கு குடிப்பதற்கு இரு குவளை சுத்தமான நீர் கிடைக்காமல் கண்ணீரும் வறண்டு போன நிலையில் வாடும் கூட்டம் மறுபுறம். இவர்கள் இருவரையும் வைத்துப் பிழைப்புநடத்தி வாழ்வை ஓட்டு கூட்டம் இடையில் இவர்கள் அனைவரையும் தன்னோடு சுமந்து கொண்டுதான் 2017ஆம் ஆண்டு தன்னுடைய முடிவில் வந்து நிற்கிறது. ஏதோ ஒரு நம்பிக்கையில் தன் மடியில் கிடக்கும் அனைவரையும் 2018இன் மடியில் தள்ளிவிடக் காத்து நிற்கிறது.

இவர்களுக்கெல்லாம் 2018 எவ்வகையில் விடியப் போகிறது என்பதனை ஒருவரும் வரையறுத்துக் கூற முடியாது. ஆயினும் வென்று விடுவோம் எனும் நம்பிக்கையில் தான் அனைவரும் அடுத்த வருடத்தினுள் கால் வைத்தாக வேண்டியிருக்கிறது. இருப்பவரோடு இல்லாதவர் சமதளத்தில் நின்றுதான் போராட வேண்டி இருக்கிறது. நம்பிக்கை இருக்குமட்டும் அனைவருக்கும் அடுத்த ஆண்டு ஆறுதலைக் கொண்டு வரட்டும் என்னும் பிரார்த்தனையோடு 2018இல் உங்களிடையே வருவேன்.

அன்பினிய உறவுகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

உருண்டு போகுது
வருடமொன்று
உள்ளே அழைக்குது
வருடமொன்று

போனது தந்த
ஏக்கத்தினால்
போவதா? இல்லையா?
என்றே தயங்கும்
எளியோர் கூட்டமொன்று

கண்டது எல்லாம்
மகிழ்ச்சி என்றே
கதவைத் தள்ளித்
திறக்க முயலுது
அடுத்தொரு கூட்டம்

வந்ததும் போனதும்
போதும் என்றே
பந்தங்கள் அறுத்து
விடுதலையான
பிறவிகள் சில
சிரிக்குது
சிலரின் வெறுமையைக்
கண்டே . . .

புதிதாய்ப் பிறந்த
மழலைகள்
அறிவரோ . . .
வருடங்கள் தம்முள்
வைத்திருக்கும் விந்தைகளை?

பிரியப் போகுது
வருடமொன்று
பிறக்கப் போகுது
வருடமொன்று
பிரியும் வருடத்தோடு
பிரியட்டும் சோதனைகள்
பிறக்கும் வருடத்தோடு
பிறக்கட்டும் சாதனைகள்

உள்ளத்தோடு
உறைந்திட்ட என்
உன்னத உறவுகளுக்கு
உளமார ஊறிடும்
புத்தாண்டு வாழ்த்துக்கள்!

கனவுகள் சிறக்கட்டும்
காவியங்கள் மலரட்டும்
வாழிய! வாழிய!
மகிழ்வு நிறைந்திட வாழ்ந்திடுக!

மீண்டும் அடுத்த மடலில்…

அன்புடன்
சக்தி சக்திதாசன்

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *