க. பாலசுப்பிரமணியன்

 

திருதலைச்சங்க நாண்மதியம்

அருள்மிகு நாண்மதியப் பெருமாள் திருக்கோவில்

 

OLYMPUS DIGITAL CAMERA

நல்லதே நடக்கும் நாரணன் நினைப்பால்

நன்மையைப் பெருக்கிடும் நாண்மதியனே !

நலங்கிட்ட நங்கை நாச்சியார் துணைவன்

நாமங்கள் ஆயிரம் கொண்ட நாதமூலனே !

 

பேதங்கள் இல்லாப் பாற்கடல் மன்னன்

சேதங்கள் இல்லாச் சிந்தையைத் தருவான்

வேடங்கள் போடும் வேடிக்கை வாடிக்கை

வேதங்கள் போற்றும் வைகுந்த நாயகன் !

 

சந்திரன் சாபங்கள் சடுதியில் விலகிட

சரணம் அடைந்தான் சாம்பனின் அருளால்

சாபங்கள் நீக்கிச் சங்கடம் விலக்கிட

சன்மதி பெற்றே வான்மதி வளர்ந்தான் !

 

சங்கினைப் பரிசாய் சங்கரன் தந்திட

அங்கத்தின் ஒளியில் அதுவும் சேரும்

சமரினில் ஒலிக்கும் சங்கொலி கேட்ட

அரக்கர்கள் வாழ்வோ விதையின்றி வீழும் !

 

தலைச்சங்கப்  பெருமாள் தரணியைக் காக்க

தலைமுதல் தாள்வரை போற்றியே நின்றால்

அலைமகள் துணையுடன் அருள்தர வருவான்

நிலமகள் கருணையும் தடையின்றிக் கிடைக்கும் !

 

மலரும் மாலையும் கனிகளும் வேண்டாம்

மாதவன் நினைப்பே  மனந்தனில் போதும்

மாலையும் காலையும் மனதினில் நிறுத்த

மார்கழி மணாளன் மனநலம் தருவான் !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *