லண்டன் தோண்டன் ஹீத் (Thornton Heath) சக்தி விநாயகர் ரதோற்சவம்

சக்தி சக்திதாசன்

London_Sakthi_Ganapathy
தெய்வம் இருக்கிறதோ இல்லையோ, எமக்கும் மேலே ஒரு சக்தி இருக்கிறது என்பதைத் திடமாக நம்புக்கிறவன் நான். நாம் எண்ணியது எவ்வளவு முயன்றும் நடைபெறாது போவதும், நாம் எண்ணாதது, நினைத்திரா நேரத்தில் நடந்து விடுவதும் உலகத்தில் நிகழ்வது இயற்கை.

இதை எத்தனையோ மக்கள் எத்தனையோ விதமாக விவரிப்பார்கள். அவை அனைத்தும் சரி என்றோ, பிழை என்றோ வாதிடுவது அல்ல என் நோக்கம். அப்படி வாதிடும் அளவிற்கு அறிவிற் சிறந்தவனும் அல்ல நான்.

மக்கள் அனைவரின் மனங்களிலும் நம்பிக்கை இருக்கிறது. அந்த நம்பிக்கையை இழந்து விட்டவர்கள் வாழ்வது சாத்தியமில்லை. அந்த நம்பிக்கைக்குப் பல வடிவங்கள் கொடுத்து, பல பெயர்களால் பலரும் பார்க்கிறார்கள். அந்த நம்பிக்கையைத் தம் அகத்தில் கொண்டு வாழ்வதற்கு அவர்கள் அனைவருக்கும் சகல விதமான உரிமைகளும் உண்டு.

அனைத்து மதங்களையும் அனைத்துத் தெய்வங்களையும் அதற்குரிய கவுரவங்களோடும் அதற்குரிய நடைமுறைகளோடும் மதிப்பவன் நான்.

சுமார் ஆறு வருடங்களுக்கு முன்னர் ஒருநாள் காலை வேலைக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையிலே எனதருமை மனைவி மைதிலி மிகவும் விசித்திரமான முறையில் எம் வீட்டு முன்றலிலேயே தன் காரினில் ஒரு விபத்தில் சிக்கிக்கொண்டாள்.

விளைவு அவள் காலின் தொடை எலும்பு முறிந்துவிட்டது. அலுவலகத்தில் நானும், பல்கலைக்கழகத்தில் என் மகனும் இருந்த நிலையில் சுமார் ஒரு மணி நேர அவஸ்தையில் மூர்ச்சையாகிக் கொண்டிருக்கும் நிலையில், தெருவிலே போய்க்கொண்டிருக்கும் ஒரு ஆங்கிலேய மனிதர் தற்செயலாக வீட்டினுள் பார்க்க நேரிட்ட காரணத்தினால் அவள் உரிய நேரத்தில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டாள்.

அந்த விபத்தைப் பற்றியும், அதனோடு சம்பந்தப்பட்ட என்னுணர்வுகளைப் பற்றியும் ஒரு விரிவான பதிவினை முன்பு “சமாச்சார்.காம்” என்னும் வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தேன்.

London_Sakthi_Ganapathyஅவளை வைத்தியசாலையில் அனுமதித்த மறுநாள் அவளுக்குச் சத்திர சிகிச்சை நடந்தது. அச்சிகிச்சை மூன்று மணிநேரம் நடைபெற்றது.

எமக்குத் திருமணமாகும் போது எனது மனைவி 19 வயது நிரம்பிய ஒரு பெண். நானும் எனது பட்டப் படிப்பில் ஈடுபட்டிருந்த நேரம். நம்மை நாமே நம்பிய நிலையில் ஒருவருக்கொருவர் துணை என்னும் நினைப்பில் 25 வயது நிறைந்த நானும் 19 வயது நிரம்பிய என் மனைவியும் இல்லற வாழ்வில் நுழைந்தோம்.

நான் படித்து முடிக்கும் வரை தனது படிப்பைத் தள்ளி வைத்து தான் முழுநேர வேலையில் தன்னை ஈடுபடுத்தி, பகுதி நேர வேலை மட்டும் செய்தபடி நான் எனது கல்வித் தகைமைகளைப் பெறுவதற்காக உறுதுணையாக இருந்தாள். அதன் பின்பு கைக்குழந்தையான என் மகனுடன் வீட்டு வேலைகள் அனைத்தையும் பார்த்து, மாலை நேர வகுப்புகளில் பகுதி நேரக் கல்வி மூலம் தன்னை ஒரு பட்டதாரியாக்கினாள்.

இப்படியாக நம் வாழ்வின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருந்தவள், காலொடிந்த வாடிய மலராக வைத்தியசாலைப் படுக்கையில் வீற்றிருந்த காட்சி, என்னிதயத்தை உருக்குலைத்தது.

அவளது சத்திர சிகிச்சையின் அந்த மூன்று மணி நேர நீளத்தைத் தாங்க முடியாத நான், வைத்தியசாலைக்கு அருகிலிருந்த சக்தி விநாயகர் ஆலயத்தில் சென்று அமர்ந்திருந்தேன். அப்போது அந்தக் கோவில் மண்டபம் வெறுமையாக இருந்தது.

நானும், பிள்ளையாரும் மட்டுமே அங்கிருந்தோம். என் மனவுணர்ச்சிகளை ஓசையின்றி அவ்விநாயகருடன் பகிர்ந்துகொண்டேன். நெஞ்சம் கொஞ்சம் இலேசாகியது. அப்போது அங்கே வந்த அக்கோவிலின் பிரதம அர்ச்சகர் என்னருகே உட்கார்ந்து எனக்கு ஆறுதல் கூறினார்.

தெய்வம் என்றொரு சக்தி இருக்கிறதோ இல்லையோ, என் மனத்தின் வேதனையைக் குறைக்க அச்சமயம் அங்கு நிலவிய ஏதோ ஒரு நம்பிக்கை எனக்கு உதவியது.

என் மனைவி அவ்வைத்தியசாலையில் வீற்றிருந்த சுமார் இரு வார காலமும் அவளைப் பார்க்கப் போகும் ஒவ்வொரு நாளும் விநாயகரையும் பார்த்து வந்தேன்.

London_Sakthi_Ganapathy
அந்த விநாயகருக்கு வருடா வருடம் விநாயகர் சதுர்த்தி அன்று, ரதோற்சவம் நடைபெறும். அதே போல இவ்வருடமும் ரதோற்சவம் 11.09.2010 அன்று நடைபெற்றது. இவ்வாரம் எனக்கு இரவு நேர வேலை. அலுவலகத்துக்கு மாலை 6 மணியளைவில் புறப்பட வேண்டும்.

முந்தைய இரவு பணி முடிந்து வந்து தூங்கி எழுந்ததும், மனைவியையும் அழைத்துக்கொண்டு சுமார் மாலை 4 மணியளவில் ஆலயம் நோக்கிப் புறப்பட்டேன்.

நான் வாழும் பகுதியிலிருந்து ஆலயம் செல்வதற்கு சுமார் 20 நிமிடங்கள் எடுக்கும். ரதோற்சவம் மாலை ஆறு மணிக்கு ஆரம்பமாவதாக இருந்தது. நான் ஆறு மணிக்குப் பணிமனைக்குக் கிளம்ப வேண்டியதால் என் நண்பருடன் வீடு வந்து சேருமாறு என் மனைவியை வேண்டியிருந்தேன்.

ஆலயத்துக்கு மிக அண்மையில் காரை நிறுத்தும் வசதி இருக்கவில்லை. சுமார் ஒரு 10 நிமிட நடை தூரத்தில் நிறுத்தி விட்டு, கோவிலை நோக்கிப் புறப்பட்டோம்.

கோவிலை நோக்கி சேலை, வேட்டி அணிந்த பக்தர்கள் பலர் போய்க்கொண்டிருந்தார்கள். அவர்களை மிகவும் நூதனமாகப் பார்க்கும் ஆங்கிலேயர்கள் தெருவோரத்தில் இக்காட்சியைப் பார்த்தவாறே மெதுவாக நடந்தார்கள். பேருந்துகளிலும், மோட்டார் வண்டிகளிலும் போவோர்கள், வருவோர்கள் கோவிலின் வாயிலில் கட்டப்படிருக்கும் தோரணங்களையும் அதை நோக்கிச் செல்லும் பக்தர்களையும், அவர்களது உடைகளையும் அதிசயமாகப் பார்த்தார்கள்.

சிலரின் பார்வையில் வியப்பும், சிலரின் பார்வையில் அதிசயமும், சிலரின் பார்வையில் வெறுப்பும் தென்பட்டது.

கோவிலின் உள்ளே நுழைந்ததும் கோவிலின் மண்டபத்தின் உள்ளே கூட்டம் நிறைந்து வழிந்துகொண்டிருந்தது. ஜனத்திரள் கோவில் வளாகத்தினுள்ளும் விநாயகரின் ரதத்தைச் சுற்றியும் திரண்டிருந்தது.

காலணிகளை அகற்றும் இடத்தில் அகற்றி விட்டு நிமிர்ந்து பார்த்தேன். வாயிலில் ஒரு நாற்காலி. அதில் ஒரு ஆங்கிலேய பாணி உடையுடன் ஒரு ஆங்கிலேயர் அமர்ந்திருந்தார். அவரின் மீது என் பார்வை பதிய, அவரின் பார்வை என் மீது விழுந்தது.

புன்னகை புரிந்தவாறு இரு கரம் கூப்பி, சைகை மூலம் வணக்கம் சொன்னார். நானும் பதிலுக்கு வணங்கி விட்டு உள்ளே சென்றேன்.

என் மனம் அலைபாய்ந்த சமயங்களில் எனனைப் பார்த்துப் புன்னகையுடன் ஆறுதல் கூறிய அதே விநாயகர், மேனி முழுவதும் திரு அலங்காரத்துடன் வீற்றிருந்தார்.

அவருக்கு நாமாவளிப் பஜனை நடந்தது. சுற்றியுள்ளோர் கண்களை மூடி அவரருள் வேண்டி நின்றனர். ஆங்காங்கே நானறிந்த நண்பர்கள் என்னைப் பார்த்துத் தலைசாய்த்து கெளரவித்துக் கொண்டார்கள்.

இங்கிலாந்து நாட்டிலே மேலை நாட்டு உடைகளிலே பவனி வரும் இளம் பெண்கள், குழந்தைகள், இளைஞர் ஆசியக் கலாச்சார உடையிலே இன்றொரு நாள் தம் முகவரிகளை அடையாளப்படுத்திக்கொண்டு நின்றனர்.

விநாயகரை ஏந்திக்கொண்டு இலண்டன் தெருக்களைச் சுற்றப் போகும் ரதம், மிகவும் கம்பீரமாகச் சோடிக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

London_Sakthi_Ganapathy

கோவிலுள் நடந்த வழிபாட்டினை முடித்துக்கொண்டு, மங்கள நாதம் புடைசூழ விநாயகர் தனது ரதத்தை நோக்கி வந்தார்.

கடமை என்னை அழைக்க, அவசரமாக என் மனைவியிடம் சத்தமாகவும், விநாயகரிடத்தே ஓசையின்றியும் சொல்லிக்கொண்டு புறப்பட்டேன்.

வெளியே வரும்போது இந்த ரதோற்சவத்துக்குப் பாதுகாவலுக்காகப் போலிஸ் உத்தியோகத்தர்கள் நின்றுகொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர் மற்றவரிடம் “நாம் போகும் பாதுகாவல் பணிகளிலேயே மிகவும் மகிழ்ச்சிகரமானதும், அமைதியானதுமான பாதுகாவல் பணிகளுள் மிகவும் அமைதியானது இதுவே. இம்மக்கள் மிகவும் நட்பானவர்கள்” என்று ஆங்கிலத்தில் சொல்லிக்கொண்டிருந்தது என் காதுகளில் விழுந்தது.

விநாயகரின் புன்னகை பூத்த வதனம், என் கண்களில் தோன்றியது.

ஆமாம் “அன்பு” அதுதான் தெய்வம் அதற்கு வடிவமில்லை.

அதை எந்த வடிவத்திலும் வணங்குங்கள். ஆனால் மற்றோருடைய நம்பிக்கையைச் சிதைக்காதீர்கள் என்னும் கருத்து, என்னுள்ளத்தில் ஓங்கி ஒலித்தது.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க