பவள சங்கரி

அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

pongal

ஒவ்வொரு ஆண்டும் தைத்திங்கள் முதல் நாளன்று தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா ‘பொங்கல் திருவிழா’ – உழவர் திருநாள். சங்ககாலம்தொட்டு அறுவடைக் காலங்களில், மழையுடன் நாடு செழித்து, மக்கள் மகிழ்ச்சியுடன் வாழும்பொருட்டும், பயிர்களின் விளைச்சல் அளித்த அன்னை பூமி, கதிரோன், ஏர் உழுத மாடு போன்றனைத்திற்கும் நன்றி செலுத்தும் விதமாக இனிமையான சர்க்கரைப் பொங்கல் வைத்து சிறப்பாக வழிபடுவது வழக்கம். தொடர்ந்து பல காலங்களாக வழிவழியாக இந்த நிகழ்வு திருவிழாவாகவே கொண்டாடப்பட்டுவருகின்றது. இவ்விழா, சமயங்கள் கடந்து அனைத்து தமிழர்களால், தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. உழவர் பெருமக்கள் மாரியின் தயவால், ஆடிப்பட்டம் தேடி விதைத்து, அன்று முதல் சோர்வின்றி உழைத்துச் சேர்த்த நெல் மணிகளை மார்கழியில் அறுவடை செய்து களம் சேர்த்து, தங்கள் உழைப்பின் பயனை மகிழ்ச்சியுடன் நுகரத் தொடங்கி அதைக் கொண்டாடும் திருநாளே தைப்பொங்கல். ஏர் உழும் ஆவினத்தின் உழைப்பையும் போற்றி நன்றி நவிலும் திருநாள் இது.

புத்தாடை உடுத்தி, முற்றத்தில் வண்ணக் கோலமிட்டு அதன் நடுவில் புதுப் பானை வைத்து புத்தரிசியிட்டு, பாலும், வெல்லமும், நெய்யும் சேர்த்து பொங்கல் வைப்பார்கள். பானைக்குப் புதிய மஞ்சளைக் காப்பாக அணிவித்து, புதிய கரும்பையும், பசுமையான காய்கறிகளையும் வைத்துப் படையலிடுவர். தலை வாழையிலையில் வைத்து, விளக்கேற்றி கதிரவனை வணங்கி “பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!” என்று உரக்கக் கூவி, குலவையிட்டு மகிழ்ந்துக் கொண்டாடுவர்.

சங்க இலக்கியங்களில் தைப்பொங்கல் குறித்த சில பாடல்களைக் காணமுடிகின்றது:

“தைஇத் திங்கள் தண்கயம் படியும்” – நற்றிணை
“தைஇத் திங்கள் தண்கயம் போல்” – புறநானூறு
“தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ” – கலித்தொகை
“தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” – குறுந்தொகை
“தைஇத் திங்கள் தண்கயம் போல” – ஐங்குறுநூறு

இந்த உழவர் திருநாள் தொன்று தொட்டு நம் தமிழ் நாட்டைப் போன்றே பல்வேறு நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

ஜப்பான் நாட்டில், டோரி நோ ஈச்சி (Tori no Ichi) என்ற இத்திருவிழா ஈடோ காலம் (1603-1868) முதற்கொண்டு கொண்டாடப்பட்டு வருகின்றது. நல்ல மகசூல் பெற்று அறுவடை செய்து, அவைகளை வளமாக விற்பனையும் செய்யும் பொருட்டு பிரார்த்தனை செய்வதே இதன் நோக்கமாகும்.டோக்கியோ நகரிலுள்ள ஆலயத்தில் மிகச்சிறப்பாக நடைபெறும் இவ்விழாவிற்காக ஒவ்வொரு ஆண்டும் 200 கடைகள் அமைக்கப்படுகின்றன. இவை பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. ஈடோ காலத்திற்குப் பின்னர் இன்றும் தொடர்ந்து, இரவு முழுவதும் நீடிக்கும் இந்த திருவிழாக்கள் நவம்பர் மாதம் ரூஸ்டர் நாளில் நடைபெறுகின்றன.

கருணைக்கிழங்குத் திருவிழா (Yam festival), ஆப்பிரிக்காவில் அறுவடைக்காலங்களில் விவசாயிகள், கடவுளுக்கு நன்றி தெரிவிப்பதற்காக மூன்று நாட்கள் கோலாகலமாகக் கொண்டாடும் திருவிழாவாகும்.

இசுரேலில், எபிரேய மாதத்தின் 15 வது நாளில், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் சுக்கோத் எனும் திருவிழா நடத்தப்படுகின்றது. அறுவடை நேரத்தில், “அறுவடைத் திருவிழா” எனவும் யூத நன்றி விழா எனவும் பெருவிருந்துடன் கொண்டாடப்படுகின்றது.

சூசுக் (Chu Suk) என்பது கொரிய நாட்டின் நன்றித் திருவிழா ஆகும், கொரியர்கள் அறுவடைத் திருவிழாவை செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதி, அதாவது 8 வது சந்திர மாதத்தின் 15 வது நாளில் கொண்டாடுகின்றனர். அன்று அதிகாலையில், அவர்கள் தங்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டி தங்கள் மூதாதையர்களுக்கு, அறுவடை செய்த புதிய பயிர்களால் தயாரிக்கப்படும் உணவுப் பதார்த்தங்கள் மூலம் மூதாதையர் வழிபாட்டு சடங்கு செய்கின்றனர்.

இதுபோன்று வியட்நாம், இலங்கை, (உழவர் திருநாள்) அமெரிக்கா (நன்றி நவிலல் நாள்), சீனா (ஆகஸ்ட் – சந்திரன் திருவிழா) பல நாடுகளிலும் பல்வேறு பெயர்களில் இத்திருவிழா கொண்டாடப்பட்டாலும் இதன் அடிப்படை நோக்கம், அறுவடைத் திருநாள் என்பதுதான்!

பொங்கல் நல்வாழ்த்துகள்!

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “பொங்கல் நல்வாழ்த்துகள்!

  1. நமது வல்லமை வாசகர்கள் அனைவர்க்கும், குடும்பத்தார்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்……மீ.விசுவநாதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.