சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம்-2
சு.கோதண்டராமன்
பிரெஞ்சுப் புரட்சியின் தாரக மந்திரமான சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவக் கொள்கைகளை அந்நாட்டு ஆட்சியாளர்கள் குடியேற்ற நாடுகளிலும் பரப்பினர். ஃப்ரெஞ்சு ஆட்சியின் கீழிருந்த மக்கள் பிரிட்டிஷ் இந்திய மக்களை விட கனிவு மிக்கவர்களாக இருந்ததை என் அனுபவத்தில் கண்டேன்.
காரைக்கால் நகரம் இந்து, முஸ்லீம், கிருத்துவர், கிட்டத்தட்ட சம எண்ணிக்கையில் இருப்பினும், ஒற்றுமையாக வாழும் இடம். தர்காவில் ஆண்டு தோறும் நடக்கும் கந்தூரித் திருவிழாவில் கொடியேற்றுபவர் மாவட்ட ஆட்சித்தலைவர் தான், அவர் எந்த மதத்தைச் சேர்ந்தவரானாலும் சரி. கந்தூரி ஊர்வலமும், கிருத்துவ ஊர்வலமும் பிற சமய மக்கள் வேடிக்கை பார்க்க அமைதியாக நடைபெறுகின்றன.
ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் அந்தோணியார் கோவிலுக்கு வருபவர்களில் இந்துக்களே மிகுதியாக இருப்பர். அம்மையார் கோவில் திருவிழாவில் பெருமளவில் முஸ்லீம்களும் கிருத்துவர்களும் கலந்துகொண்டு மாம்பழம் வாரி இறைப்பது வழக்கமான காட்சி.
கன்னாரத்தெரு, தட்டாரத்தெரு, நாயக்கன் குளத்து வீதி, கன்னடியர் தெரு, சேணியர் குளத்து வீதி என்று தெருப் பெயர்களில் இன்றும் சாதி காணப்பட்டாலும், அங்கு சாதிப் பூசல் ஏற்பட்டதில்லை. குறிப்பாக, தமிழகத்தில் மேடை தோறும் முழங்கும் பிராமண எதிர்ப்பு அங்கு அறவே இல்லை.
வேற்றுமைகள் பல இருப்பினும் மனிதர் என்ற முறையில் அனைவரும் சமம் என்ற கருத்து மக்களின் மனதில் ஆழப் பதிந்துள்ளதால் எந்த அரசாங்க அலுவலகத்துக்குப் போனாலும், கீழ்நிலை எழுத்தராகட்டும், உயர் அதிகாரியாகட்டும், வந்தவரை உட்காரச் சொல்லித் தான் வந்த வேலை என்ன என்று விசாரிப்பார். ஒவ்வொரு அலுவலருக்கு முன்பும் பார்வையாளர் இருக்கை உண்டு.
அரசாங்க அலுவலகங்களில் நமக்கு ஒரு வேலை ஆகவேண்டும் என்றால் நேரில் போய்ப் பார்த்தால் போதும். உடனே முடிந்து விடும். இயல்பாகவே எதையும் சீரியஸாக எடுத்துக் கொள்ளாதவர்கள் என்பதால் பார்க்கவில்லை என்றால் வேலை நடக்காது. லஞ்சம் எதிர்பார்த்து தாமதப் படுத்த மாட்டார்கள். பார்த்தால் போதும்.
11 மணிக்குப் புதிய மீன் வரும் நேரத்தில் பல அரசாங்க அலுவலர்களை மார்க்கெட்டில் பார்க்கலாம். வாங்கி வீட்டில் கொடுத்து விட்டு வருவார்கள். மதியம், பொசியம் போடுபவர்கள் போட்டு விட்டு, உணவு உண்டு விட்டு சாவகாசமாக வருவார்கள். 2 மணிக்கு பிற்பகல் வேலை தொடங்குவது அபூர்வம். அது அவர்கள் சுதந்திரம்.
நல்லது கெட்டது எதுவானாலும் எல்லா சாதி, சமய மக்களும் கலந்து கொள்வார்கள். போலித்தனம் இல்லாத சகோதரத்துவம் காணப்படும்.
எம்.எல்.ஏ, அமைச்சர்கள் யாவரும் காட்சிக்கெளியர். எவரும் பந்தா செய்து கொள்ள மாட்டார்கள். குழந்தைக்குக் காது குத்தல் முதலிய சிறிய நிகழ்ச்சிகளுக்குக் கூட, யார் பத்திரிகை கொடுத்தாலும் நேரில் வந்து வாழ்த்திச் செல்வார்கள்.
தமிழ்நாட்டைப் போல அங்கும் அப்போது சைக்கிளில் இருவர்- டபிள்ஸ்- செல்வது தடுக்கப்பட்டிருந்தது. அப்படி யாரேனும் போய், போலீஸ்காரர் பார்த்து விட்டால், தமிழகக் காவலர் போல, “ஏய் இங்கே வா” என்று கூப்பிட மாட்டார். மாறாக, “முசே, இறங்கிப் போங்க, முசே” என்று வேண்டிக் கொள்வார்.
(தொடரும்)
{ஃப்ரெஞ்சு ஆட்சியின் கீழிருந்த மக்கள் பிரிட்டிஷ் இந்திய மக்களை விட கனிவு மிக்கவர்களாக இருந்ததை என் அனுபவத்தில் கண்டேன்… தமிழகத்தில் மேடை தோறும் முழங்கும் பிராமண எதிர்ப்பு அங்கு அறவே இல்லை….அரசாங்க அலுவலகங்களில் நமக்கு ஒரு வேலை ஆகவேண்டும் என்றால் நேரில் போய்ப் பார்த்தால் போதும். உடனே முடிந்து விடும். இயல்பாகவே எதையும் சீரியஸாக எடுத்துக் கொள்ளாதவர்கள் என்பதால் பார்க்கவில்லை என்றால் வேலை நடக்காது. லஞ்சம் எதிர்பார்த்து தாமதப் படுத்த மாட்டார்கள். பார்த்தால் போதும்.போலித்தனம் இல்லாத சகோதரத்துவம் காணப்படும்.எம்.எல்.ஏ, அமைச்சர்கள் யாவரும் காட்சிக்கெளியர். எவரும் பந்தா செய்து கொள்ள மாட்டார்கள். குழந்தைக்குக் காது குத்தல் முதலிய சிறிய நிகழ்ச்சிகளுக்குக் கூட, யார் பத்திரிகை கொடுத்தாலும் நேரில் வந்து வாழ்த்திச் செல்வார்கள்.,,“முசே, இறங்கிப் போங்க, முசே” என்று வேண்டிக் கொள்வார்.}
மேற்கூறிய பண்புகளை விலாவாரியாக விவரிக்கவேண்டும். அவை மற்ற நாடுகளில் இல்லை என்று சொல்லமாட்டேன். ஆனல், உங்கள் அனுபவத்தை மதிப்பதால், கலாச்சார பண்புகளையும், அவற்றின் தற்கால நிலையையும் அறிய ஆவல்.