-நிலவளம் கு.கதிரவன்

முன்னுரை: –

பால் என்பது மனிதர்களுக்கு புரதச் சத்தினை வழங்கும் முக்கியமான உணவுப் பொருளாகும். முக்கியமாகக் கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் ஏற்றதும், பேறுகாலப் பிரச்சினைகளைத் தவிர்ப்பதிலும் முக்கியப் பங்காற்றுகிறது.  இந்தப் பாலானது கர்ப்பிணிப் பெண்களுக்கு எவ்வாறு உதவுகிறது? அதிலும் உயர் பாக்டீரியா பால் இவர்களின் பேறுகாலங்களில் ஏற்படும் ஆபத்தான நோய்களிலிருந்து எவ்வாறு காக்கிறது என்று சமீபத்தில் நார்வே நாட்டில் ஆராய்ச்சிசெய்து வெளியிட்டுள்ளனர்.  அந்த ஆராய்ச்சியில் என்ன சொல்லியுள்ளார்கள்? ஆராய்ச்சி முழுமையானதா? இது பற்றிய அமெரிக்காவின் பார்வை என்ன? தமிழ்நாட்டில் வாழும் இந்தியனாய் நமது நிலைப்பாடு என்ன? என்பது பற்றித்தான் இக்கட்டுரை ஆராய்கிறது.  வாருங்கள் கட்டுரையின் உள்ளே செல்வோம்.

புரோபயாடிக் பால் (Probiotic Milk) : –

தற்பொழுது சந்தையில் பல்வேறு நிலைகளில் கொழுப்பு நீக்கிய பால், சமன் செய்யப்பட்ட பால், நல்ல பாக்டீரியா நிறைந்த பால் எனப் பெயரிட்டு விற்பனை செய்து வருகின்றனர்.  சரி, புரோபயாடிக் பால் என்றால் என்ன?  ஒன்றும் இல்லை.  பாக்டீரியாவில் நல்ல பாக்டீரியாவும் உள்ளது;  தீமை செய்யும் பாக்டீரியாவும் உள்ளது.  இதில் நல்ல பாக்டீரியா மட்டுமே உள்ளடக்கிய பாலின் பெயர்தான் உயர் பாக்டீரியா பால் அல்லது நல்ல பாக்டீரியா பால் என்றழைக்கப்படுகிறது.

இந்த நல்ல பாக்டீரியா பால்… இனிமேல் புரோபயாடிக் பால் என்றே அழைப்போம்.  புரோபயாடிக் பால் கர்ப்பிணிப் பெண்களுக்கு எவ்வாறு உதவுகிறது? கர்ப்பப் பருவ காலங்களில் இப்பாலின் பங்கு என்ன? எவ்வளவு தாய்மார்கள் இப்பாலைத் தினசரி அருந்துகின்றனர்? இதன் விளைவால் கர்ப்ப காலங்களில் கர்ப்பிணிப் பெண்களுக்கு பேறு காலங்களில் ஏற்படும் மாற்றம் என்ன? என்பது பற்றியெல்லாம் மிகச் சமீபத்தில் நார்வே நாட்டில் புதிய ஆய்வு ஒன்றின் மூலம் முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.

நார்வே நாட்டின் ஆய்வு :-  

கர்ப்ப காலத்தில் உயர் பாக்டீரிக்கள் நிறைந்த புரோபயாடிக் பாலை அருந்தி வந்தால், இக்காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் இரண்டு அபாயங்களை குறைக்கலாம் என்கிறது நார்வே ஆய்வு.

புரோபயாடிக் பாலை உட்கொண்டு வந்த, குழந்தை உருவாவதற்கு முன் நிலையுள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கும், இத்தகைய பாலை அருந்தாத கர்ப்பிணிப் பெண்களையும் இணைத்து ஆய்வுசெய்தபோது இவர்களில் புரோபயாடிக் பாலினை அருந்தி வந்த பெண்களுக்கு முன்கூட்டியே அதாவது 37 வாரத்திற்கு முன்னரே ( Preterm Delivery ) குழந்தை பிறக்கும் ஆபத்து பெருமளவில் குறைவு என்பதையும், கர்ப்ப காலத்திற்குப் பின்னர் புரோ பயாடிக் பால் எடுத்துக் கொள்ளும் பெண்களுக்கு ” ப்ரீஎக்ளாம்ஸியாவின் ” ஆபத்து குறைவாக உள்ளதாகவும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

ப்ரிஎக்ளாம்ப்ஸியா (Preeclampsia) ஆபத்து என்பது கர்ப்ப காலங்களில், கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் உயர் ரத்தஅழுத்தம் மற்றும் சிறுநீரில் அதிக அளவிலான புரதம் என்ற சிக்கல்கள்தான். இதனால் கர்ப்பிணிப் பெண்களின் உடல்நிலை பாதிக்கிறது. இவ்வகையான ஆபத்து உடல் அழற்சி பிரச்சினையோடு (Inflammation) இணைந்துவிடுகின்றபோது முன் கூட்டிய பிரசவம், சுகப் பிரசவமின்மை போன்ற அபாயங்கள் ஏற்படுகிறது.

இந்நிலையில்தான் இதுபோன்ற ஆபத்துகளைக் குறைக்க புரோபயாடிக் பால் உதவுவதாகவும், இதனால் உடல்அழற்சிப் பிரச்சினை குறைவதாகவும், பேறுகால ஆபத்துகள் பெருமளவில் குறைவதாகவும் ஸ்வீடன் பல்கலைக் கழக மருத்துவர் மஹ்ஸா நார்ட்க்விஸ்ட் கூறுகிறார் .

நார்வே தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் கூட்டாய்வு : –

புரோபயோடிக் பால் சம்பந்தமாக ஆய்வு செய்வதற்கு நார்வே தாய்மார்களில் சுமார் 70,000 கர்ப்பிணிப் பெண்களை ஆய்வுக்கு உட்படுத்தினர்.  இவர்கள் அனைவரும் நீண்ட காலம் இக் கூட்டாய்வில் அங்கம் வகிப்பவர்கள்.  ஆய்வில் ஈடுபட்ட கர்ப்பிணிப் பெண்களிடம் கர்ப்ப காலத்தின் 15 மற்றும் 30ஆவது வார இறுதியில் அவர்களின் உடல்நிலை மற்றும் வாழ்க்கைமுறை பழக்க வழக்கங்களின் தரவுகள் பெறப்பட்டது.  22ஆவது வார முடிவில் அவர்கள் தங்களின் உணவுப் பழக்கவழக்கங்களின் தரவுகளை முன்னரே வழங்கியிருந்தனர்.

ஆய்வில் கலந்துகொண்ட பெண்களில் கர்ப்பத்திற்கு முன் புரோபயோடிக் பாலை எடுத்துக் கொண்டவர்கள், கர்ப்ப காலத்தின் ஆரம்ப மற்றும் இறுதிக் காலத்தில் என பல கட்டங்களாக இப்பாலை எடுத்துக் கொண்டவர்கள் என பல பிரிவுகளாக பிரித்து கேள்விகள் கேட்கப்பட்டன.  காரணம் இவ்வாய்வில் ஈடுபட்ட ஆய்வாளருக்கு நார்வேயில் பரவலாக புரோபயோடிக் பால் கிடைக்கும் என்பதை நன்கறிந்தவர்.

ஆய்வில் 23 சதவிகித பெண்கள் கர்ப்பம் தரிப்பதற்கு முன்னர் புரோபயோடிக் பாலை அருந்தியதாகவும், 38 சதவிகித பெண்கள் கர்ப்பம் தரித்த ஆரம்ப காலத்தில்  (கர்ப்பம் தரித்த 13ஆவது வாரம் வரை) புரோபயோடிக் பால் அருந்தியதாகவும், 32 சதவிகிதப் பெண்கள் கர்ப்பம்தரித்த இறுதி காலத்தில் ( 13ஆவது வாரத்திற்கும் 30ஆவது வாரத்திற்கும் இடையில்) நல்ல பாலை அருந்தியதாகவும், இவர்கள் அனைவரும் நாளொன்றுக்குச் சராசரியாக 1.5 கப் எடுத்துக் கொண்டதாகவும் கூறினர்.

பாதுகாப்புச் சாத்தியமுள்ள விளைவுகள்: –

ஆய்வின் முடிவில் கர்ப்ப காலத்தின் இறுதியில் புரோபயோடிக் பாலை அருந்தியவர்கள், புரோபயோடிக் பாலை எடுத்துக் கொள்ளாத பெண்களை விட 20 சதவிகிதம் ப்ரிஎக்ளாம்ப்ஸியா ஆபத்து குறைந்தவர்களாக இருந்தனர் என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.

அதேபோன்று கர்ப்ப காலத்தின் இறுதி நாட்களில் புரோபயோடிக் பாலை எடுத்துக் கொண்டவர்களுக்கு ப்ரிக்ளாம்ப்ஸியா ஆபத்து அறிகுறிகளான உயர் ரத்த அழுத்தம், சிறு நீரகத்தில் உயர் புரோதம் போன்றவற்றின் பாதிப்புகள் குறைவாக இருந்ததை கண்டறிந்ததாக ஆய்வாளர் நார்ட்க்விஸ்ட் தெரிவித்தார்.

இவ்வாய்வில் இப்பாலை உட்கொள்ளும் நேரத்தைக் கணக்கிட்டு, குறைப் பிரசவ காலத்தோடு ஒப்பிடப்பட்டது. இதில் ஆரம்ப கர்ப்ப காலத்தில் புரோபயோடிக் பாலை எடுத்துக் கொண்டவர்களுக்கு 21 சதவிகிதம் குறைப் பிரசவப் பிரச்சினை இல்லை என்பதும் தெளிவானதாக ஆய்வாளர் கூறினார்.

நார்வே ஆய்வின் நீதி : –

ஆய்வாளர் புரோபயோடிக் பால் சம்பந்தமாக ஆய்வில் ஈடுபட்டது, அவ்வாய்வுக்கு நார்வே தாய்மார்களை அதிக அளவில் பயன்படுத்தியது, அதன் தொடர்ச்சியாக முடிவுகளை வெளியிட்டது என எல்லாம் சரியாக நடைபெற்று, இறுதியில் ஒரு குண்டை தூக்கி போட்டார்.  அதுதான் அவர் ஆய்வின் நீதியாக சொன்னது.

அதாவது இவ்வாய்வு ஒரு வரம்பிற்கு உட்பட்டே நடைபெற்றதாகவும், புரோபயோடிக் பால் சம்பந்தமான மதிப்பீடு ஏதும் எங்களால் செய்யப்படவில்லையென்றும், உடல்அழற்சி விளைவுகளை (Inflammation) குறைப்பதில், இப்பாலில் உள்ள பாக்டீரியாவின் வீரியத்தை மதிப்பிடவில்லையெனவும் கூறினார்.  கூடுதலாக இவ்வாய்வு காரணம் மற்றும் விளைவுகளை (Cause and effect) நிரூபிப்பதற்கு பதிலாக புரோபயோடிக் பால் மற்றும் கர்ப்பிணிப் பெண்களின் பிரச்சினைகள் என்ற அளவில் மட்டுமே நிகழ்ந்ததாக குறிப்பிட்டார்.

அமெரிக்காவின் நீதி : –

இவ்வாய்வின் மீது ஆரம்பத்திலிருந்தே ஆர்வமாக இருந்தவர் வாஷிங்டன் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக மகப்பேறு சிகிச்சை நிபுணர் டாக்டர் சூசன் பாத்கேட்.  காரணம் பெரும் எண்ணிக்கையிலான கர்ப்பிணிப் பெண்களிடமிருந்து உணவுத் தகவல்களைப் பெற்று ஆய்வு செய்ததுதான்.  ப்ரிஎக்ளாம்ப்ஸியா ஆபத்துகள் தொடர்பாக இவர் ஆராய்ச்சி செய்தவர் என்றாலும் மேற்கண்ட கள ஆய்வில் இவர் ஈடுபடவில்லை.

ப்ரிஎக்ளாம்ப்ஸியாவின் அதிக ஆபத்தில் உள்ள பெண்களுக்குத் தங்களின் கர்ப்ப காலத்தின் இரண்டாவது பருவத்தில் அதாவது இரண்டாவது மூன்று மாதங்களில் தினசரி ஆஸ்பிரின் மாத்திரியைக் குறைந்த அளவு எடுத்துக் கொள்ளப் பரிந்துரைப்பதாக டாக்டர். பாத்கேட் கூறுகிறார்.  இது வீக்கத்தை, அழற்சியைக் குறைக்க உதவும் என கருதுவதாகவும் தெரிவித்தார்.

நார்ட்க்விஸ்ட் குறிப்பிட்டுள்ளபடி ப்ரிஎக்ளாம்ப்ஸியா மற்றும் பேறு காலத்திற்கு முன்னரே பிறக்கும் ஆபத்துகளும், இதற்கான பாதைகள் அழற்சி நோயால் பாதிக்கப்படுதாகவும், இத்தகைய ஆபத்துகள் நஞ்சுக் கொடி வழியாகவும் தோன்ற வாய்ப்பிருப்பதாகக் கூறுகிறார்.

மேலும் அழற்சி ஆபத்துக்களைக் குறைப்பதன் வழியாக, பேறுகாலப் பிரச்சினைகளையும் குறைக்க முடியும் என்ற அறிவும், தெளிவும் இருப்பதுடன் கர்ப்பிணிப் பெண்களுக்கு மேற்கண்ட சிக்கல்களைத் தடுக்க உதவும் புரோபயோடிக் பாலை அருந்துவதற்கு உரிய பரிந்துரைகள் அளிப்பதற்கு கூடுதல் ஆராய்ச்சிகள் தேவை என்கிறார் டாக்டர் சூசான்பாத்கேட்.  புரோபயோடிக் பால் என்பது நார்வே நாட்டினைப் பொறுத்து மக்களின் பொதுவான உணவுப் பொருள்களில் ஒன்றாக இருக்கலாம்.  ஆனால் அமெரிக்காவில் இவ்வழக்கம் இல்லை என்கிறார்.

இந்திய நீதி : –

நார்வே நாட்டு கர்ப்பிணிப் பெண்களிடம் புரோபயோடிக் பால் அருந்துவது  தொடர்பாக ஆய்வினை செய்த ஆய்வாளர் இறுதியில் அந்த பாலின் மீதான ஆய்வு இது இல்லை என்றும், நல்ல பாக்டீரியா மீதான வீரியத்தையும் நாங்கள் ஆய்வு செய்யவில்லை என்கிறார்.  அமெரிக்க பல்கலைக் கழக மருத்துவரோ நார்வே நாட்டில் புரோபயோடிக் பால் என்பது பொதுவான உணவுமுறை என்றும், பேறுகால ஆபத்துகளுக்கும், இப்பாலுக்கும் எவ்விதமான தொடர்பு உள்ளது என்பதை இனி வரும் ஆய்வுகள்தான் தெரிவிக்க வேண்டும் என்று கூறி அமெரிக்காவில் இத்தகைய பழக்கம் இல்லை என்று ஒரே போடுபோட்டுவிட்டார்.

இப்பொழுது நமது இந்தியத் தாய்மார்கள் என்ன செய்ய வேண்டும்? ஒன்றும் இல்லை மக்களே, தலைப்பை ஒருமுறை படியுங்கள். ம்.. இப்படி அன்போடு தினசரி அழைத்து நம்மிடம் வழங்கும் பாலை நன்றாக காய்ச்சி உறையிட்டுத் தயிராக்கி தினசரி கர்ப்பிணித் தாய்மார்கள் அருந்தினால் பேறுகால ஆபத்துகளை தவிர்க்கலாம்.  காரணம் தயிரில் போலிக் அமிலம் மிகுதியாக உள்ளது.  தவிரவும் யோகர்ட் என்ற இனிப்புத் தயிரினை சாப்பிடலாம்.  இதில் நல்ல பாக்டீரியாக்கள் மிக அதிக அளவில் உள்ளது. இதைத் தவிர இட்லி, தோசை, ஆப்பம், முளை கட்டிய பீன்ஸ், முட்டை கோஸ் என இவை அனைத்திலும் நல்ல பாக்டீரியாக்கள் உள்ளன.

உடல்அழற்சியை (Inflammation) தவிர்க்க வேண்டுமா? தினசரி 15 நிமிடம் நடைப் பயிற்சி.  நமது பாரம்பரியமான யோகா.  இதைத் தொடர்ந்து செய்து வந்தால் உடல் அழற்சியோ, வீக்கமோ ஏற்பட்டிருந்தால் கூட பெருமளவில் குறைத்துக் கொள்ளலாம். இதுவும் தவிர்த்து சத்தான காய்கறிகள், கீரை வகைகள். அப்புறமென்ன நமக்கு கவலை?

முடிவுரை : –

உணவுப் பொருட்களைப் பொறுத்தவரை தினசரி ஆய்வுகள் வந்த வண்ணம்தான் உள்ளன. தொடர்ந்து அதற்கு எதிர்க்கருத்துகளும் வருகிறது.  இதையும் தாண்டிக் கர்ப்பிணித் தாய்மார்களை முன்னிட்டு சர்வ தேச வியாபாரம்.  எனவே இதையெல்லாம் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், நமது பாரம்பரியமான உணவு வகைகளைப் பேணிக் காத்தோமேயானால் கர்ப்ப காலம் வசந்த காலமாகவே அமையும்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.