திருமால் திருப்புகழ்

கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

171030 – Karuna sagara -lr

சாந்த வதனமும் சரப சயனமும்
நீந்தும் சரோருக நாபியும் -ஏந்தும்
கரங்கள் நான்கும் கருத்த வடிவும்
வரங்க(ள்) அளித்திடும் வஸ்து….!

களைப்போடு வீடணன் கைகால் கழுவுகையில்
மலைக்கோட்டைப் பிள்ளை குறும்பால் -நிலைப்பாடாய்
கொள்ளிடத் தீவில் கிடக்கும் அயோத்தியின்
பள்ளிகொண்ட ரங்கனைப் பாடு….!

அராப்பள்ளி சாய்ந்து அரங்கத்தை ஆளும்
பராத்பரா, பார்த்தன்தேர் பாகா -”மரா”சொல்லி
கானகத்து வேடன் கவியானான், நின்னருளால்
நானதற்(கு) இணையாக நல்கு….!

கையே தலையணையாய் பைந்நாகம் பாய்விரிப்பாய்
செய்யும் தொழில்யோக சிந்தையாய் -செய்ய
குமுதத்தாள் தாங்க, குமுதத்தாள் நீட்டி
அமுதத்தன் தூங்கும் அழகு….!

நீல பத்பநாபன் விஷ்ணு-புரம் நாவலை
இரா.முருகன் படிக்கத் தந்தபோது….

கேசம் திருவல்லா கால்கள் திருவாப்பூர்
சேஷ சயனத்தில் ஸ்ரீநிதி -வாசா
பதினெட்டு மைலாய் படுத்தோய் எனக்கு
விதியெட்டா வாழ்வை வழங்கு….!

தங்கத்தில் திருவனந்தன் சயன கோலத்தை கணினியில் கண்டு….
————————————————————————-

பணம்தனில் தூங்கும் அனந்த சயனர்
கணங்களின் காவலுற்ற காசை -நினைந்திடும்
வேதாளங்கள் கையில் விலங்கிட வைத்திடும்
பாதாளம் பாய்ந்த பணம்….!

அடையார் அனந்த பத்பனாப ஸ்வாமி கோயிலில் எழுதியது
—————————————————————————

கடலேழில் தூங்கி களைப்புற்றாய் போலும்
அடையாற்றில் பள்ளி அடைந்தோய் -மடல்வாழை
தென்னை மரம்சூழ் திருவனந்தா, ஐம்புலக்
கண்ணைப் பறித்தெனைக் காண்….கிரேசி மோகன்….!

 

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க