பவள சங்கரி

 

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

சாந்தி மாரியப்பன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனைக் கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (10.03.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “படக்கவிதைப் போட்டி (151)

 1. மன எழுச்சியே மகிழ்ச்சி
  =========================
  செயற்கையான மலர்இதழ்கள்
  செய்துவைத்து அதன் மேலே
  சிறுமின்விளக்குகள்ஒளிபாய்ச்சி
  சிதறவைக்குது இருளைத்தானே!!
  மேல்நோக்கிஎழுகிற எண்ண அலை
  மேம்பட்டால் வராது வாழ்வில் பிழை!!
  ஒருநிலைப்படுத்தும்ஆற்றல் நிலை
  ஓங்கிடப்பெய்யும்பேரானந்த மழை!!
  இயற்கையான உடலுக்குள்ளும்
  இருட்டைவிரட்டிட மார்க்கமுண்டு!!
  உள்ளமென்னும் வீட்டுக்குள்ளே
  உதிரத்தில் உருவாகும்மின்சாரம்!
  நரம்புகள்வழியே அது பாய்ந்து
  இருதயபல்பை எரியவைக்கும்!!
  நாசம் செய்யும்கெட்டசிந்தனைகள்
  நன்மையைஎன்றும்கொடுக்காது!!
  நினப்புக் கலப்பையில் ஏர் உழுது
  நிலமாம் மனசை சமன் படுத்தி
  நடுகிற நாற்று செயலாய் ஆகி
  நன்கு வளர்ந்து மகசூல் பெருகும்!
  வாழ்வுத்தோட்டத்தின் விளைச்சல்
  வருங்காலவசந்தத்தை வழங்கும்!!
  பொம்மை பூக்கள் போலன்றி
  உண்மைவாசம்வாழ்வில் வீசும்!!
  ???????????????
  ஏ.ஆர்.முருகன்மயிலம்பாடி
  பவானி..ஈரோடு…
  9442637264…
  ???????????????

 2. வாழ்வில் ஒளியேற்றும் கல்வி…!
  °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
  -ஆ. செந்தில் குமார்.

  உதய வானில் சிறகடிக்கும் வண்ணப் பறவை போல…
  இதயம் கூட அமைதி அடையும் நல்ல நூல்களை நாட…!
  இதிகாசங்களும் ஆன்றோர் பலரும் காட்டும் வழி போல…
  எதிர்காலம் கூட வண்ணமயம் கற்ற வழி நிற்க…!

  புற இருளைப் போக்கிவிடும் ஆதவனைப் போல…
  அறியாமை அகஇருளை அகற்றிவிடும் கல்வி…!
  பிறவாமை வேண்டிநிற்கும் ஞானியரைப் போல…
  சிறப்புபல தந்திடுமே கற்கும் நல்ல கல்வி…!

  கதிரவனைக் கண்டுவிட்ட பனித்துளியைப் போல…
  எதிர்த்துநிற்கும் இன்னல்களைப் போக்கிடும் நல்லறிவு…!
  விதி வழியே சென்றிடுவோம் என்று சொல்லும் மனதும்…
  மதிநுட்பம் இருந்துவிட்டால் மாற்று வழியைத் தெரியும்…!

  மதயானை போன்றிருக்கும் மாந்தர்தம் மனதை…
  இதமாக்கி நெறிப்படுத்தி ஒளியேற்றும் கல்வி…!
  எதிரேறு பொறுத்தக்கல் ஆகின்றதோர் தெய்வம்…
  எதன்பொருட்டும் வருந்தாதோர் இலக்கடைவது திண்ணம்…!

 3. ஒளி பிறக்க…

  தலை குனி,
  நல்ல நூல்களை நோக்கி..

  ஒளி வட்டம்
  உன் தலையைச் சுற்றி
  வராவிட்டாலும்,
  உறுதியாய் நீ
  தலை நிமிர்வாய்,
  தானாய் ஒளி பிறக்கும்-
  வாழ்க்கையிலே…!

  -செண்பக ஜெகதீசன்…

 4. நெகிழிப்பூவே உனக்குப்
  புகழில்லை புவியுலகில்
  ==================

  அன்றாடம் தன்னிதழ்கள் பிரித்து மலராது
  ……….அழுக்காகும் அழுகாத நெகிழிப் பூக்கள்..!
  குன்று போலக் கடைகளிலே குவிந்திடும்
  ……….கண்கள் கூசுமளவிற்கு நிறமிகள் உண்டு..!
  இன்புறும் அளவுக்கு மணமென்ப தில்லை
  ……….இல்லாளுமிதை ஒரு நாளும் விரும்பாள்.!
  என்று மிதற்கெனவே தனி மதிப்பில்லை
  ……….எதற்கு மிதன் உபயோகம் பெரிதுதான்..!

  வாடிவிடும் தன்மையோ இதற்கு இல்லை
  ……….வாழ்த்தக் கொடுப்பதற்கும் வழி யில்லை..!
  கோடீஸ்வரன் இறந்து விட்டால் அவன்
  ……….கழுத்தில் நீண்ட நாள் தொங்கிடுமன்றோ..!
  சூடிக்கொள்ளவும் முடியாது வாயினால்ப்
  ……….பாடிபகவானுக்கு பூஜை செய்ய இயலாது..!
  ஓடிவரும் வண்டினங் களிதை அண்டாது
  ……….ஒளியூட்டினால் சற்றே அழகு மிகக்கூடும்..!

  செங்கதிரோன் ஆசியுடன் சோலையிலே
  ……….செழித்து சிந்தனை குளிரச்செயும் மலரே..!
  தங்கத்தைப் போலப் பெருமை உனக்கு
  ……….மங்காத புகழும் பெருமதிப்பும் உண்டாம்..!
  மங்கையர் சூடும் மலருக்கெது ஈடாகுமம்
  ……….மலரின் வாசனைக் கெதுவும் ஒப்பாகா..!
  அங்கத்தில் அணிய முடியா நிலையில்
  ……….அலர் மாலையில் சேருமா?..நெகிழிப்பூ..!

 5. ஒருபுனல் தம்பமிடை சிலம்பமும் எழுந்ததே!

  இருபுனல் கபாடமுள் உருபுனல் லலாடமும்
  வருபுனல் தடாகமுடி இருபுயக் கதம்பமும்
  தருபுனல் தெறிக்குமிழி இருநிறக் கபம்பமும்
  ஒருபுனல் தம்பமிடை சிலம்பமும் எழுந்ததே!

  பொருள்
  மூச்சுப் பயிற்சியாம் வாசியோகத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் நீலமும் பச்சையுமாய் ஒளிக் குமிழிகள் புருவ மத்தியில் எழுவதைக் காண்பர்.

  விளக்கம்
  உடற்கூற்றில், புருவமத்தியில், நாசிச்சந்தியில் புனல் வடிவில் இரு கதவு மடிப்புகள் (இடகலை – பிங்கலை)அமைந்திருக்கின்றன; அவை வெளிவிளிம்பில் ஒற்றைப்புனலாய் சங்கமித்து மேலே எழுகின்றன – ஒரு ஊசித்துவாரத்தைப் போன்று. வாசி மூச்சுப் பயிற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு, தேர்ச்சிநிலையை அடையும்போது, இப்புனல்களின் அடிப் பூட்டு திறந்து, அவற்றின் அடி உள்ளிலிருந்து ஒளிப் புனல் ஒன்று கிளம்புகிறது; அது முடிச்சு போலுள்ள கதவுமடிப்புகளின் இரு புயங்களினூடே பச்சை, நீலமெனும் இருநிறக் கதம்பத்தில் ஓளித்தடாகத்தை உருவாக்கியபடி, குமிழிகள் தெறித்தபடியாக மேலே கீற்றிடுகிறது. அக்கீற்றில் இருநிறக் ஒளிக்குமிழிகளும் பிரிந்தும் பிணைந்தும் ஒளிச்சரத்தை (கபம்பம் எனப்படும் வாலுளுவையின் ஒளிஊடுருவும் சிறு உருண்டையான கனிகளைக் கொண்ட கனிச்சரம் போன்ற தோற்றம் தரும்) உருவாக்குகின்றன. அவ்வமயம் அச்சரத்தில் எழும் லம்பதம்பங்களினால் ஆங்கே நீலத்துக்கும் பச்சைக்கும் இடையே சிலம்பம் நிகழ்கின்றது. இதனை வாசியோக மொழியில், வாலை விளையாடுதல் என்றும் அழைப்பதுண்டு. வாசியோகத்தில், உடலில் வெப்பமும் அதிர்வும் குறைந்து, உடலெங்கும் அமைதி பரவ, கண்ணின் நரம்புகள் சிவப்பு நிறத்தை ஒதுக்குவதால் பச்சையும் நீலமும் லலாடம் எனப்படும் புருவ மையத்தில் செரிகின்றன. ஒளியியல் வழியாகப் பார்த்தால், ஒளிப்பிரிகையில் பச்சைக்கும் நீலத்துக்கும் பெரும் ஜோடிப்பொருத்தம் உண்டு. 100 நானோ மீட்டர் அலை நீள வித்தியாசம் இவ்விரு நிறத்துக்கும் இருக்க, இவற்றிற்கு இடையே நிகழும் தேடலும், கூடலும், ஊடலும் வெகு சுவாரசியமானவை. இயற்கையில் பெருவாரியான ஆக்கிரமிப்பைச் செய்பவை இவ்விருநிறங்களே தாம்! உடலியல், உயிரியல், ஒளியியல் பரிமாணங்களைத் தாண்டி, ஊர்வன – பறப்பன வாழ்வியல் வாயிலாகவும், இறையியல் வாயிலாகவும் நீலி மரகதரை வெகு ஆழமாகப் பேசமுடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *