கணியன்பாலன்

 

        சங்க இலக்கியமும் பழந்தமிழக  வரலாறும்

 

கி.மு. 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மதுரை மருதனிள நாகனார் என்கிற சங்ககாலப்புலவர் பொருள் தேடி ஆழ் கடலில், மிகப்பெருங்கப்பலில் நீண்ட பயணம் செய்த சங்க காலத்தலைவன் குறித்துப்பாடிய அகம் 255ஆம் பாடல், “உலகுகிளர்ந்தன்ன உருகெழுவங்கம்” எனத்தொடங்கி “வருவர் மன்னால்-தோழி!” என முடிகிறது. இப்பாடலில்,

‘புலால் மணமுடைய கடலின் அலைகளில், உலகமே பெயர்ந்து வந்தது போன்று அச்சம்தரும் மிகப்பெரிய கப்பலை, இயற்கையான பருவக் காற்று வீசி, இரவு பகல் பாராது, எங்கும் நிற்காது, வேகமாக அதனைக் கொண்டு செல்ல, அப்பெருங்கப்பலை இயக்குபவனாகிய நீகான், கடற்கரைத் துறை முகத்தில் இருக்கும் உயர்ந்த கட்டிடத்தின் மீதுள்ள கலங்கரை விளக்கத்தின் ஒளிகண்டு திசை அறிந்து அதனைச் செலுத்த, பொருள் ஈட்டும் பணி காரண மாக அக்கப்பலில் நெடு நாட்களுக்கு முன்சென்ற நமது தலைவர் மேலும் அதிக நாட்கள் அங்கு தங்காது, நமது துன்பம் நீங்குமாறு விரைவில் திரும்பி வருவார்’ எனத் தனது தோழியிடம் கூறி ஆறுதல் பெறுகிறாள் ஒரு சங்ககாலத் தலைவி. தலைவனின் இப்பிரிவு கடலிடைப் பிரிவு என்றே சொல்லப்பட்டுள்ளது. இப்பாடல் அன்று தமிழர்கள் மிகப்பெருங் கப்பல்களில் வெளிநாடுகள் சென்று வணிகம் புரிந்து பொருள் ஈட்டினர் என்பதை மிகச் சிறப்பாக வெளிப்படுத்துகிறது.

இறங்கு குடிக் குன்ற நாடன் என்கிற புலவர், வட நாட்டுக்குப் போர்ப் பயணம் செய்த ஒரு தமிழ்த்தலைவன் குறித்து தனது அகம் 215ஆம் பாடலில் பாடியுள்ளார். அதில், ‘உயர்ந்த குறுக்கிடும் இமயம் போன்ற பெரிய மலை உச்சிகளைத் தாண்டி உள்ள, பலமொழி பேசுகிற நாடுகளுக்கு, விரும்பிய செயலைச் செய்வதற்காக, உறுதியும் வலிமையும் மிக்க நெஞ்சமோடு, சிறந்த வேலினை ஏந்தி போருக்குச் செல்கிற, மாட்சிமை மிகுந்த தலைவனை வெற்றி பெற வாழ்த்தி விடை தருதல் தான் நன்று’ எனச் சங்ககாலத்துத்தலைவி ஒருத்தி தனதுதோழியிடம் கூறுவதாகச் சொல்கிறார். வேந்துவினை இயற்கை என்கிற வேந்தன் தன் பகைவன் நாட்டைக் கைப்பற்றச்செல்கிற பொருளியல் சூத்திர உரையில் இப்பாடல் இடம் பெற்றுள்ளது. இந்தப் பாடல் தமிழக வேந்தன் ஒருவன் பெரிய மலை உச்சிகளைத் தாண்டி உள்ள பலமொழி பேசுகிற வடநாட்டைக் கைப்பற்றச் சென்ற போது அவனுடன் போருக்குச் சென்ற படைத்தலைவன் அல்லது குறுநில மன்னன் ஒருவன் குறித்துப் பாடிய பாடலாகத் தோன்றுகிறது. இந்த மலைஉச்சிகள் விந்திய, சாத்பூரா மலை உச்சிகள் ஆகும். தமிழ் வேந்தர்கள் வட நாட்டுக்கு படையெடுத்துச் சென்றார்கள் என்பதற்கு இப்பாடல் ஒரு உறுதியான சான்றாக இருக்கிறது எனலாம்.

புறம் 400ஆம் பாடலில் தமிழர்களின் சங்ககாலத்துக் கடல்வணிகம் குறித்தும், அதனால் தமிழரசுகள் பெற்ற வருமானம் குறித்தும், “ஆற்று நீர் கடலில் கலக்கும் துறைகளைச் செம்மை செய்து உருவாக்கப் பட்டிருக்கும் கடற்கரைத் துறைமுகநகர் தோறும் கடலில் செல்லும் வங்கம் எனப்படும் பெருங் கப்பல்கள் மூலம் சென்று வணிகம் செய்யும் நல்ல ஊர்களையும் வணிகத்தையும் உடையவன் சோழன் நலங்கிள்ளி. இவன் நாடு அக்கடல் வணிகம் மூலம் கிடைக்கும் வருவாயை உடையது” எனக் கூறுகிறார் கோவூர்கிழார். அதாவது கடலோரமாக இருக்கும் நகர்களில் எல்லாம் இவனது நாட்டுப்பெருங்கப்பல்கள் மூலம் வணிகம் நடைபெறுகிறது எனவும் அதனால் கிடைக்கும் வருவாயை உடையவன் இந்தச் சோழன் நலங்கிள்ளி எனவும் கூறுகிறார் கோவூர்கிழார் என்கிற கி.மு. 2ஆம், 1ஆம் நூற்றாண்டு சங்ககாலப் புலவர். இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் கங்கைமுதல் தென்கிழக்காசிய நாடுகள் முழுவதும், மேற்கே பாரசீகவளைகுடா உட்பட செங்கடல் வரையிலும் இவனுடைய பெரும் கப்பல்கள் சென்று வணிகம் புரிந்து வந்தன. இவன் பெரும் கடற் படைகொண்டு இவ்வணிகத்தைப் பாதுகாத்து வந்தான். இவன் வடக்கே உச்சயினிவரையிலும், கிழக்கே ஈழத்தின் மீதும் படையெடுத்து வெற்றி பெற்றவன் என்கிறது முத்தொள்ளாயிரம்.

பக்குடுக்கை நன்கணியார் என்கிற சங்ககாலப்புலவர், தனது புறம் 194ஆம் பாடலில்இந்த உலகைப் படைத்த இறைவன் சிறிதும் பண்பில்லாதவன் எனக் குற்றம் சாட்டுகிறார். அப்பாடல் “இனிய காண்க, இதனியல்புணர்ந் தோரே” என முடிகிறது. அப்பாடலில் அவர், “ஒரு வீட்டில் சாவு; இன்னொரு வீட்டில் மணவிழா; சாவு வீட்டில் துக்கம்; மணவீட்டிலோ மகிழ்ச்சி. இவ்வாறு இன்பமும் துன்பமும் கொண்டது தான் வாழ்க்கை. இதனைப் படைத்தவன் பண்பில்லாதவனே! எனினும் வாழ்க்கையின் இந்த இயல்பை உணர்ந்தவரே அதில் இனிமையைக் காணமுடியும்” எனக் கூறுகிறார் இவர் இந்திய அளவில், தொல்கபிலர் உருவாக்கிய ‘எண்ணியம்’ என்கிற சாங்கியக் கோட்பாட்டின் தலைவராக கி.மு. 6ஆம் நூற்றாண்டில் இருந்தவர். இந்திய மொழிகளில் எண்ணியத்தின் கடவுள் மறுப்பிற்கும், ஆசிவகத்தின் கடவுள் மறுப்பிற்கும் எடுத்துக்காட்டாகக் காட்டப்படுவது இவரின் இந்தப் புறம் 194ஆம் பாடலே என்பது வியப்பூட்டும் விடயமாகும். பொருள்முதல்வாத மெய்யியல் தமிழகத்தில் மிக ஆழமாக வேரூன்றி இருந்தது என்பதற்கு இவர் போன்றவர்களே காரணமாவர்.

கி.மு. முதல் நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்த பாண்டியன் ஏனாதி நெடுங் கண்ணன் என்கிற பாண்டியர் தலைவன் குறுந்தொகையில் பாடிய தனது 156ஆம் பாடலில், “பார்ப்பன மகனே! பார்ப்பன மகனே! இதுதான் காதல் பிரிவால் ஏற்படும் பெரும் மனச்சோர்வு என்பதோ? முள் முருங்கை மரத்தில் கிளைகளைக் களைந்து செய்த சிறு தடியோடு, பிச்சைப் பாத்திரத்தையும், விரத உணவையும் உடைய பார்ப்பன மகனே! எழுத்தில் எழுதப்படாத, வாய்மொழிமூலம் கற்பிக்கப் படக்கூடிய உனது வேதத்தில் பிரிந்துவிட்ட காதலர்களை ஒன்று சேர்க்கும் மருந்து ஏதாவது உண்டா? சொல்!” எனப்பொருள் படும் சங்ககாலப்பாடலைப் பாடியுள்ளான். காதலுக்காக, பார்ப்பனர்கள் புனித நூலாகக் கருதும் வேதத்தைக் கேள்விக்கும், கேலிக்கும் உள்ளாக்குகிறான் ஒரு பாண்டியர் தலைவன். இதுதான் அன்றைய சங்ககால வாழ்வில் பார்ப்பனர்களுக்கும் வேதத்திற்கும் இருந்த நிலை. ஆனால் இந்நிலை கி.மு. வுக்குப்பின் மாறிவிடுகிறது.

கி.மு. 3ம் நூற்றாண்டைச் சேர்ந்த படுமரத்து மோசிகீரனார் என்கிற சங்ககாலப் புலவர் தனது 75ஆம் குறுந்தொகைப்பாடலில்

“நீ கண்டனையோ? கண்டார்க் கேட்டனையோ?

ஒன்று தெளிய நசை யினம்: மொழிமோ!

வெண்கோட்டு யானை சோணை படியும்

பொன்மலி பாடலி பெறீஇயர் –

யார்வாய்க் கேட்டனை, காதலர் வரவே?” எனப் பாடியுள்ளார்.

பாணன் ஒருவன் தலைவன் வந்து கொண்டுள்ளான் எனத் தலைவியிடம் கூறிய போது அதனால் மகிழ்ந்த தலைவி, “என் காதலர் வரவை நீ பார்த்தாயோ, பார்த்தவர் சொல்லிக் கேட்டனையோ, என் அன்புக்குரிய அவர் வரவைப்பற்றித் தெளிவாகச் சொல்!, எனது காதலர் வரவு குறித்து யார் யார் சொல்லி நீ அதனைக் கேட்டாய்! வெண்மையான தந்தங்களை உடைய யானைகள் நிறைய உலவும் சோனை ஆற்றின் கரையிலிருக்கும் பொன்போன்ற பாடலிபுத்திர நகரையே உனக்குப் பரிசாகத் தருகிறேன்!” என அவனிடம் கூறுகிறாள். தனது காதலன் வரவைச் சொன்னதற்காக, அன்றைய உலகின் மிகப்பெரும் நகரங்களில் ஒன்றான பாடலிபுத்திர நகரையே பரிசாகத் தருவதாகக் கூறுகிறாள் நமது சங்ககாலத்தலைவி. சோணை ஆறு கங்கை ஆற்றின் கிளை நதியாகும். பெரும்பாலோருக்குப் பாடலிபுத்திர நகர் கங்கை நதியின் கரையில் இருப்பதாகவே தெரியும். ஆனால் கி.மு. 3ஆம் நூற்றாண்டு வாக்கிலேயே அந்நகர் கங்கையின் கிளைநதியான சோணை ஆற்றின் கரையில் இருப்பதை அறிந்து இந்தத் தமிழ்ப்புலவர் பாடியுள்ளார். தமிழர்கள் பாடலிபுத்திரம்வரை சென்று வணிகம் புரிந்தனர் என்பதற்கு இப்பாடல் ஒரு சான்றாக உள்ளது எனலாம். சங்கப்பாடல்கள் பெருமித உணர்வைத் தூண்டும் வல்லமை கொண்டன என்பதற்கும் மிகச்சிறந்த தரவுகளைக்கொண்டன என்பதற்கும் இப்பாடல் ஒரு சான்றாகும்.

இப்பாடல்கள் சங்கஇலக்கியம் என்பது மிகச்சிறந்த தரவுகளைக் கொண்ட ஒரு தங்கச்சுரங்கம் என்பதை உறுதிப்படுத்துகின்றன. இந்தச் சங்க இலக்கியத்தை அடித்தளமாகக் கொண்டுதான், “பழந்தமிழ்ச்சமுதாயமும் வரலாறும்” என்ற எனது நூல் கட்டமைக்கப்பட்டது. அந்நூல் ஆறு பகுதிகளைக்கொண்டது. அதில் 3 – 5 வரையான பகுதிகளில் உள்ள தமிழக வரலாற்றின் முக்கிய விடயங்கள் இங்கு சுருக்கித்தரப்பட உள்ளன என்பதோடு ஒரு சில புதிய விடயங்களும் சேர்க்கப்பட உள்ளன.

ஒவ்வொரு சமூகத்துக்கும், ஒவ்வொரு தேசிய இனத்துக்கும் வரலாற்றுப்பெருமிதம் வேண்டும். ஜெர்மன் தேசியஇனம் குறித்தப் பெருமிதம்  மார்க்சு அவர்களிடம் ஆழமாகவே இருந்தது. முதலாளித்துவ வளர்ச்சிக் கட்டத்தில் இந்தச் சிந்தனை இருக்கவே செய்யும். நமது தமிழ் தேசிய இனம் உண்மையாகவே ஒரு நெடிய பாரம்பரியத்தையும்,  மிக நீண்ட வரலாற்றையும், சீர்மிகு மரபையும், தனக்கேயான தனித்துவத்தையும் கொண்ட ஒரு சிறப்புமிக்க தேசிய இனமாகும். அதன் மொழியான தமிழ் மொழியோ, பழமையும் சிறப்பும் மிக்க ஒரு செவ்வியல்மொழியாகும். ஆகவே தமிழர்களாகிய நாம், நமது தமிழ்தேசிய இனம் குறித்து, வரலாற்றுப் பெருமிதம் கொள்வதற்கு  வேறு எந்த தேசிய இனத்தைக் காட்டிலும் பேரளவான காரணங்கள் இருக்கின்றன. ஆனால் நமது தமிழ்தேசிய இனம் குறித்த வரலாற்றுப்பெருமிதம் நம்மிடம் இல்லை.  அதற்கு, நமது தமிழ் தேசிய இனத்தின் வரலாற்றை அதன் வரலாற்றுப் பெருமிதங்களை அடையாளம் காட்டக்கூடிய அறிவியல் அடிப்படையிலான, மறுக்க முடியாத சான்றுகளைக்கொண்ட ஒரு முழுமையான வரலாறு நம்மிடம் இல்லை என்பது ஒரு பெருங்குறையாகும். அப்பெருங்குறையைப் போக்குவதற்கான தொடக்கக் கட்ட ஒரு சிறு முயற்சிதான் “பழந்தமிழ்ச்சமுதாயமும் வரலாறும்” என்ற எனது நூலாகும். அந்நூலில் உள்ள சங்க இலக்கியம், கல்வெட்டுகள், நாணயங்கள், தொல்லியல் ஆதாரங்கள், வெளிநாட்டு அறிஞர்களின் குறிப்புகள் போன்றனவற்றை அடிப்படையாகக் கொண்டு உருவான பழந்தமிழக வரலாற்று ஆய்வு விடயங்களின்  சுருக்கமே இங்கு தொடர் கட்டுரைகளாகத் தரப்பட உள்ளன.

ஆதார நூல்: பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர் வெளியீடு, சூன்-2016. பக்: 37-47.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *