உமா சண்முகம்

இன்றைய இளைய தலைமுறையினர் ரொம்பவும் மன அழுத்தத்தில் தவிக்கின்றனர். முந்தைய தலைமுறையினரை விட இவர்களுக்கு மட்டும் ஏன் மன அழுத்தம் அதிகமாக உள்ளது?. சமுதாய வாழ்வில் ஒருவருக்கு மிக முக்கியமான காலக்கட்டம் என்பது 21 முதல் 45 வயது வரையான இந்த இடைப்பட்ட வயது தான். இதில் தான் ஒருவர் தன் கல்வியை முடித்து  பொருளாதாரத்தில் முன்னேறுகிறார். குடும்பத்தை வளர்க்கிறார்.

ஆனால் இந்த வயதுகளில் உள்ளவர்களுக்குத்தான் அதிகமான மன அழுத்தமும் ஏற்படுகிறது. அதுவும் கடந்த 5 ஆண்டில் அதிக அளவில் இந்த வயதினருக்கு மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் சர்வே கூறுகிறது. அதுவும் 72 சதவீத எழுத்தாளர்கள், 42 சதவீத கலைஞர்கள், 41சதவீத அரசியல்வாதிகள், 36 சதவீத வல்லுனர்கள், 35 சதவீத இசைக்கலைஞர்கள்,  33 சதவீத விஞ்ஞானிகள் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளில், 21 முதல் 45 வயதினரில் மன அழுத்தத்திற்கு ஆளாவோர் எண்ணிக்கை 2 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக உயர்ந்துள்ளது என்றும் உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. மென் பொருள் துறையில் உள்ள இளைஞர்களில் 76 சதவீதம் பேருக்கு மன அழுத்தம் உள்ளது. அது போல 58 சதவீதம் பேர் தூக்கமின்மையால் அவதிப் படுகின்றனர் என்பதும் அதிர்ச்சியான தகவல்.

இளைஞர்களைக் குறி வைப்பதேன்

இப்போதுள்ள இளைஞர்களில் சிலருக்கு வாழ்க்கையின் இலக்கு புரிவதில்லை. கைக்கொள்ளாத பணம், அடிக்கடி ஷாப்பிங் இவைகள்தான் உலகம் என்று சிலர் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர். வாழ்க்கையின் உண்மையான பரிமாணம் தெரிந்ததும், அதாவது திருமண வயதை எட்டும் போதுதான் அவர்களுக்கு வாழ்க்கையின் சவால்கள் புரிகின்றன.

இதனால் சிறிய விஷயத்தைக் கூடத் தாங்கிக் கொள்ள முடியாமல் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இதனால்தான் விவாகரத்து பெருகுவதாக சொல்கிறார்கள், உளவியல் நிபுணர்கள்.

நண்பர்களைக் கூட வலைப் பக்கங்களில் தேடுவது, சமுதாயச் சூழலில் வளராத நிலை, எப்போதும் நெட் மேனியாவாக இருப்பதால் தனிமை, இப்படி உள்ளவர்கள் மட்டுமே மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இளைய தலை முறையினருக்கு இப்போது எதற்கும் டைம் இல்லை. எப்போதும் மொபைல் அல்லது நெட் சாட்டிங்தான். குடும்பத்திலுள்ளவர்களுடன் சுமூக இணக்கம் இதனால் கெடுகிறது. தவறான பழக்க வழக்கங்களுக்கும் போக வைக்கிறது.

எல்லோரும் இப்படி இல்லை என்றாலும் மன அழுத்தத்துக்கு உள்ளாவோருக்கு இவைதான் காரணம். இப்படிப் பட்ட சூழ்நிலையில் அவர்கள் தங்களின் பாதிப்பை குறைத்துக் கொள்ளவோ அதில் இருந்து மீளவோ முடியாமல் தவிக்கின்றனர். சிலர் தற்கொலை வரை போவதற்கும் இதுதான் காரணம்.

40 நொடிக்கு ஒரு இழப்பு

1.மன அழுத்தத்தின் உச்சம் தற்கொலை. உலகில் 40 நொடிக்கு ஒரு மனித உயிர் இழக்கப்படுகிறது.

2. இந்தியாவில் 5 நிமிடத்திற்கு ஒருமுறை தற்கொலை நிகழ்கிறது. 18 முதல் 45 வயதினர்தான் அதிக அளவில் தற்கொலை எண்ணத்திற்கு ஆளாகின்றனர். ஆண்டுக்கு ஒரு லட்சம் பேருக்கு மேல் தற்கொலையில் மடிகின்றனர்.

3. அதிக பட்சம் ஏழு முறை தற்கொலைக்கு முயற்சித்தவர்கள் உள்ளனர். 2020-ல் உலகம் முழுவதும் 15 லட்சம்பேர் தற்கொலைக்கு ஆளாவரென்று சர்வே கணிப்பு கூறுகிறது.

6.இந்தியாவில் உடல் உழைப்பு குறைந்ததும் ஸ்ட்ரெஸுக்குஒரு காரணமாகும். 29 சதவீத இந்தியர்களிடம் உடல் உழைப்பே இல்லை. ஆண்களை விட பெண்களிடம் இந்த மெத்தனம் அதிகம் உள்ளது.

7. பரவாத நோய்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் முதலாவது உச்சி மாநாடு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்தது. அதில் சமர்பிப்பதற்காக இந்தியப் பொது சுகாதார அமைப்பின் சார்பில் நாடு முழுவதும் விரிவான ஆய்வு நடத்தப்பட்டது. அதில் இடம் பெற்றுள்ள தகவல்கள், ஆரோக்கியத்தின் மீது இந்தியர்களுக்கு விழிப்புணர்வு இல்லாததைக் காட்டுகின்றன.

அறிக்கையில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் வருமாறு..

இந்தியாவில் வயது வந்தோர் எண்ணிக்கையில் 29 சதவீதத்தினர் உடற்பயிற்சி என்ற ஒன்றை அறிந்திருக்கவில்லை, ஈடுபடவும் இல்லை. சொல்லப் போனால் அவர்களிடம் அசைவே குறைவு. இந்த விஷயத்தில் ஆண்களை விடப் பெண்கள் மேலும் மோசமான நிலையில் உள்ளனர். உடல் உழைப்பு இல்லாத பெண்கள் எண்ணிக்கை 34 சதவீதமாக இருக்கிறது. அதாவது 3-ல் ஒரு பெண்ணிடம் உடலுழைப்பு இல்லை.

வாரத்தில் சரியாக 149 நிமிடங்கள் உடல் உழைப்பு அவசியம் என்ற அளவு கோலில் மேற் கொள்ளப்பட்ட ஆய்வில் இது தெரிய வந்தது. குழந்தை முதல் வயதானோர் வரை ஆண்களில் உடல் உழைப்பு இல்லாதவர்கள் எண்ணிக்கை 24 சதவீதம். அதாவது 4-ல் ஒரு ஆணிடம் சாதாரண உடற்பயிற்சி என்பதே இல்லை.

உடல் உழைப்பு இல்லாதவர்களில் கிராம வாசிகளை விட நகர வாசிகளின் நிலைமை மோசம். 45 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினரில், பாதிக்கும் மேற்பட்டோர் தேவையான அளவு உடல் உழைப்பு இல்லாமல் உள்ளனர் என்கிறது ஆய்வு அறிக்கை.

உடற்பயிற்சி, உடல் உழைப்பு இல்லாததின் விளைவுகள்..

1. நகரங்களில் 6.6 முதல் 12.7% வரை மக்கள் இதய நோயால் பாதிக்கப் படுகின்றனர்.

2.கிராமங்களில் 2.1முதல் 4.3 சதவீதம் பேருக்கு இதய கோளாறுகள் ஏற்படுகிறது

3.இரு தரப்பையும் சேர்த்து 3.6 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

4. 5.1 கோடிப் பேர் டயபடீஸ் நோயாளிகளாவர். 2025-ல் இது 8.7 கோடியாக உயரும் அபாயம் உள்ளது.

5. இந்திய நோயாளிகளில் 8.5% பேர் மன நோயால் பாதிக்கப் பட்டவர்கள்.

அறிக்கை உணர்த்தும் ஆபத்தை உணர்ந்து சுதாரித்துக் கொள்வோம்.

படத்திற்கு நன்றி

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “மன அழுத்தம்

 1. மன அழுத்தம் இக்காலத்தில் மனிதர்களைப் பாதிக்கும்
  முக்கிய அம்சமாக இருக்கிறது. கவலைப்படுவதால்
  பிரச்சனைகள் நம்மை விட்டு விலகுவதில்லை. நாம்
  நம்மைக் காக்க கவலைப்படுவதிலிருந்து நாம் தான்
  விலகவேண்டும். நகைச்சுவை உணர்வுடன் செயல்படுவது தான்
  கவலைக்கு மாற்று என்று கண்டு “இடுக்கண் வருங்கால் நகுக”
  என்றார் திருவள்ளுவர். நிகழ்வுகள் எதுவும் நம்மைக் கேட்டு
  நடப்பதில்லை. நடக்கும் நிகழ்வுகளை அப்படியே ஏற்றுக் கொள்ளும்
  பக்குவம் நமக்கு வேண்டும். மனத்தைச் சமநிலையில் வைத்துக்
  கொள்ளப் பழகுவது நல்லது. வள்ளுவர் இக்கருத்தையும்
  “இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
  துன்பம் உறுதல் இலன்.” என்ற குறளில் சொல்லியிருக்கிறார்.
  இரா.தீத்தாரப்பன், ராஜபாளையம்.

 2. ‘ஆரோக்கியத்தின் மீது இந்தியர்களுக்கு விழிப்புணர்வு இல்லாததைக் காட்டுகின்றன.’
  ~ இது உண்மை. என்னை கேட்டால், நான் தலைமுறைகளை குற்றம் சொல்ல மாட்டேன். கிராமப்புறங்களில் உடலுழைப்பு சோறு போட்டதால், பயன் கிட்டியது. நகர்ப்புறங்களில் என்றுமே உடலுழைப்பு இல்லாத ஓட்டமே. உடலை பேணினால் தான் மனம் திடமாகும். இரண்டும் ஒத்துழைத்தால் தான் உயிர் தரிக்கும். அதாவது, உடல் வலிமையினால், மனம் லேசாக இருப்பதாலும், வாழ்வு சிறக்கும். 

 3. மன அழுத்தம் என்பது இக்காலத்தில் இளவயதில் உள்ளவர்களுக்கு வருவதற்கு அவர்களின் வேலைப்பளு, நேரம் காலம் பார்க்காமல் வேலைக்கு சென்று வருவது அவர்களை என்னதான் சொகுசான வாகனங்கள் வீட்டில் வந்து “பிக்கப்” “டிராப்” செய்கின்ற நிலை என்றாலும் அவர்களின் ஓய்வற்ற வாழ்க்கைமுறை அவர்களை மன அழுத்தத்துக்கு தள்ளுகிறது. ரெண்டாவது இப்படிப்பட்ட நிலையில் இவர்களது சாப்பாட்டு முறையில் ஏகப்பட்ட குளறுபடிகள் தேவையான நேரத்தில் தேவையான உணவுகளை சாபிடுவதில்லை. முறையான தூக்கம் இல்லை. சாதரணமாக வீட்டுக்கு/தனக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக கூட இவர்கள் அக்கம் பக்கம் உள்ள கடைகளுக்கு நடந்து சென்று வாங்க மனமிருப்பதில்லை. இதனால் இவர்கள் சாதாரண நடைப்பயணம் கூட தடைபடுவதால், இயற்கையான உடற்பயிற்ச்சி செய்ய உபகரணங்கள் வாங்கி வீட்டில் வைத்து இருந்தும் கூட அதை இயக்கி செயல்படவும் நேரமில்லாமல் வேலை வேலை என்று பறந்து கொண்டிருப்பது வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு கஷ்டமாகவே இருக்கிறது என்பதுதான் உண்மை. இப்படி பரபரப்பாக இருப்பவர்களுக்காகத்தான் பெங்களூரில் அஹா பல்கலைகழகம் திரு மதன் கட்டாரியா அவர்கள் தலைமையில் சிரிப்பு உடற்பயிற்ச்சியினை சொல்லிதருகிறார்கள். இந்த பல்கலைகழகத்தில் நாம் எப்படி சிரித்தபடி சிறப்பாக வாழ்வது என்று சொல்லித்தருவது மிகவும் முக்கிய செய்தியாகும். இங்கு பயின்று தேர்ச்சி பெற்ற திரு சம்பத் என்கின்ற சிரிப்பானந்தா அவர்கள் அம்பத்தூரில் வாராவாரம் சண்டே காலை கிருஷ்ணாபுரம் பூங்காவில் ஆறு மணி முதல் அரை மணிநேரம் இந்த சிரிப்பு உடற்பயிற்ச்சியினை சிரித்தபடி சொல்லித்தருவது நல்ல விசயம்தானே. நமது சென்னை மாநகரிலும் கூட பெரும்பாலான பூங்காக்கள் மற்றும் கடற்கரை மணல்பரப்பில் இந்த சிரிப்பு உடற்பயிற்சி கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சியடைந்து வருகிறது. இதில் செலவு இல்லை. நேரம் காலம் பார்க்க வேண்டியதில்லை. நேரம் கிடைக்கும் போது வாய் விட்டு சிரியுங்கள் நோய் விட்டுப் போகும் என்பது உண்மைதான். சிரிப்பு ஒன்றுதான் மன அழுத்தத்தைப் போக்கும் அரு மருந்து. “சிரித்து வாழ வேண்டும்” பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே என்ற பழமையான பாடலின் வரிகளுக்குத் தகுந்தவாறு நமது வாழ்க்கைப் பயணத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். இந்த சிரிப்பு ஒன்றுதான் வருங்காலத்தில் மக்களின் (டென்சன்) மன அழுத்தத்தை குறைக்கும் அமுத மருந்து என்பதை நிலைநாட்டும் என்பதில் சந்தேகமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.