துர்க்கை அம்மன்
விசாலம்
நவராத்திரி என்றாலே தேவிபாகவதம் உடனே நினைவுக்கு வரும். தேவிபாகவதம் என்று நினைக்க அழகான துர்க்கை நம் கண்முன் நின்று அருள் புரிவாள். வேதத்தில் துர்காசூக்தம் என்று ஒன்று உண்டு .அதில் தாமக்னி வர்ணாம் தபஸா ஜ்வலந்தீம் ‘ என்றும் அக்னே த்வம் பாரயா நவ்யோ” என்றும் கூறப்பட்டிருக்கிறது இதில் துர்க்கையை அக்னியின் வடிவானவள் என்றும் அந்த ஜோதியின் வீர்யத்தையும் புகழ்கிறது இதனால்தானோ அநேக கோயில்களில் துர்க்கை அல்லது சில அம்பாளின் சிரசை சுற்றி அக்னிப்பிழம்புகள் வட்டமாக சூழப்பட்டிருக்கும்
சில அம்மன் கோரப்பற்களுடனும் காணப்படுவாள். அநேகமாக வடக்கு திசையை நோக்கி அமர்ந்திருப்பாள் , சில இடங்களில் 24 கரங்களுடன்ஒவ்வொரு கரத்திலும் ஒவ்வொரு ஆயுதம் தாங்கி நிற்பாள்.ஒரு காலின் கீழ் மகிஷனுடைய தலை மிதிப்பட்டிருக்கும் . துர்க்கை என்றாலே நம்மைக் காப்பாற்றும் அன்னை என்ற பொருள் கொள்ளலாம் கோட்டைக்கு சம்ஸ்கிருதத்தில் துர்க்கம் என்று சொல்வதால் இந்தப் பெயர் துர்க்கைக்கு மிகப்பொருந்துகிறது . ஒரு அரண் போலிருந்து நம்மைக்காப்பாற்றும் தேவியாக துர்க்கை விளங்குகிறாள்.இவளுக்கு மகிஷாசுரமர்த்தினி என்றும் ஒரு பெயர் உண்டு . மகிஷன் என்ற அசுரனைக் கொன்றவள் இவள். ஒரு சமயம் தேவர்களின் தலைவனான இந்திரனுக்கு ‘மகிஷாசுரன்’ என்ற அசுரனுடன் போர் மூண்டது . மிகவும் சக்தி பெற்ற மகிஷனுடன் போர் செய்யமுடியாமல் பல தேவர்கள் தோற்றனர்.
மனம் கலங்கி அவர்கள் பிரம்மாவிடம் முறையிட்டனர் .பிரும்மா தேவர்களுடன் மஹேஸ்வரனையும் மஹாவிஷ்ணுவையும் கண்டு வணங்கி தங்கள் பிரச்சனையைக் கூறினர்.இதனால் கோபம் கொண்டனர் அந்தக் கோபத்தின் தாக்கத்தினால் ,சக்தியால் நெற்றியிலிருந்து ஒரு அக்னிப்பிழம்பாய் ஒரு பேரொளி தோன்றியது.பின் அந்த ஒளி ஒரு பெண்ணின் உருவம் கொண்டது . அங்கிருந்ததேவர்களும் ,பின் இந்திரன் வருணன் .வாயு சூரியன் ,குபேரன் .பூமி பிரும்மா சந்தியா எல்லோரும் அந்த உருவத்தைப் படைத்தனர் .உருவம் வந்தபின் அதற்குச் சக்தி வேண்டுமே !
சிவபெருமான் தன் திருசூலத்திலிருந்து வேறொரு சூலம் உண்டாக்கிக் கொடுத்தார் அக்னி ஈட்டியைக் கொடுத்தார். விஷ்ணுவோ தன் சக்கரத்திலிருந்து மற்றொரு சக்கரம் கொடுத்தார் வாயு வில் அம்பு . இந்திரன் வஜ்ஜிராயுதம் , வருணன் பாசக்கயிறு, காலதேவன் வாள் கேடயம் , . யமன் காலதண்டம், ஆதிசேஷன் நாகாபரணம் , ஹிமவான் சிம்மவாஹனம் , . என்று பல பொருடகள் அந்த தேவிக்கு வந்து சேர அளக்கமுடியாத சக்தி சேர அகிலாண்டகோடிபிரம்மாண்ட நாயகியாய் மகிஷனை வதம் செய்யப் புறப்பட்டாள், அண்டம் நடுநடுங்க மகிஷன் தேவியைக்கண்டான் .இருவரின் போர் தேவிபாகவதத்தில் மிகச்சிறப்பாக சித்தரிக்கப்பட்டுள்ளது முடிவில் அவன் துணைகளையெல்லாம் பறிகொடுத்து தனியாக நின்றான் .தேவி உக்கிரமாக அவனைத்தூக்கி வீசி கீழே வீழ்த்தி தன் பாதத்தை அவன் மேல் இருத்தி நின்றாள் . பின் மகிஷாசுரமர்த்தினி ஆனாள்.
இந்த மகிஷன் தான் தவம் இருந்த போது பெண்களின் பலவீனத்தை எடை போட்டு பெண்ணைத்தவிர பிறரால் தனக்கு மரணம் நேரக்கூடாது என்ற வரத்தைக்கேட்டான் இதனால் பெண் வடிவமாக வநதாள் அன்னை . மகிஷனும் தன் உருவங்களை பலவாறாக மாற்றிக் கொண்டான் யானையானான் ,.சிங்கமானான், பாம்பானான் ஆனால் தேவியோ எல்லாவற்றையும் அழித்து வெற்றிவாகை சூடிக்கொண்டாள்.இந்த நவராத்திரியில் முதல் மூன்று நாட்கள் துர்க்கைக்கும், .அடுத்து மூன்றுநாட்கள் திருமகளுக்கும் கடைசி மூன்று நாட்கள் கலைமகளுக்கும்பூஜை நடக்கும் மூன்று சக்திகளின் அருள் எல்லோருக்கும் கிடைக்க பிரார்த்திக்கிறேன்
நவராத்திரி வாழ்த்துகள்