”வாழ்வின் யதார்த்தமே சினிமாவில் வெற்றி பெறும்” – பாரதிஜிப்ரான் – செய்திகள்
வாழ்வின்
வந்தவாசி. 28 செப்டம்பர் 2011. வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு கிராமத்தில் அகநி வெளியீட்டகம் சார்பில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில், எப்பொழுதும் வாழ்வின் யதார்த்தத்தை பிரதிபலிக்கும் திரைப்படங்களே வெற்றி பெறும் என்று கவிஞரும் திரைப்பட உதவி இயக்குநருமான பாரதிஜிப்ரான் பேசினார்.
இவ்விழாவிற்குத் திட்ட மேலாளர், கவிஞர் ம. அப்துல் மஜீத் தலைமையேற்றார். அ. சிவக்குமார் அனைவரையும் வரவேற்றார்.
கவிஞரும் திரைப்பட உதவி இயக்குநருமான பாரதிஜிப்ரான் எழுதிய “குழந்தைகள் சூழ்ந்த வானம்” கவிதை நூலை யுரேகா கல்வி இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கவிஞர் மு. முருகேஷ் வெளியிட, ராமலிங்கம் அன் கோ உரிமையாளர் இரா. சிவக்குமார் பெற்றுக்கொண்டார்.
விழாவில் ஆசிரியர் பயிற்றுநர் திரு. த. குணசேகரன், அறிவியல் பட்டதாரி ஆசிரியர் இரா. அருண்குமார், கவிஞர் எழில்பிரியன், நூலகர் ஜா. தமீம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.
ஏற்புரை வழங்கிய கவிஞரும், ‘தரணி’ திரைப்படத்தின் உதவி இயக்குநருமான பாரதிஜிப்ரான் பேசும் போது, மக்கள் கலையின் மிகப்பெரிய ஊடக சக்தியாக இன்றைக்கும் திரைப்படம் விளங்குகிறது. கோடிக்கணக்கான பண முதலீட்டில் தான் திரைப்படம் எடுக்கமுடியும் என்கிற நிலையிலும், குறைந்த முதலீட்டில் எடுக்கப்படுகிற நல்ல படங்களை மக்கள் ஆதரிக்கிறார்கள்.
ஹீரோயிசம், வெளிநாட்டு படப்பிடிப்பு, செயற்கையான கதையம்சம் போன்றவை நல்ல சினிமாவின் வரவிற்கு பெரும் சவாலாக உள்ளன. மக்களின் சினிமா ரசனையை உயர்த்த வேண்டியதும் சமூக அக்கறைமிக்க இயக்குநர்களின் பணியாகும். என்றைக்கும் மக்களின் யதார்த்த வாழ்வை பிரதிபலிக்கும் திரைப்படங்களே வெற்றிபெறும். சமீபத்தில் தென் தமிழக மக்களின் வாழ்வியல் போராட்டங்களைப் பிரதிபலித்த ஆடுகளம், தென்மேற்குப் பருவக்காற்று ஆகிய தமிழ்த் திரைப்படங்கள் பல தேசிய விருதுகளை பெற்றிருப்பதிலிருந்தே இந்த உண்மையை நம்மால் உணரமுடிகிறது என்றார்.