கொழிஞ்சாம்பாறை வட்டாரத்தில் நிழ்த்தப்படும் புனித அலேசியார் நாடகம்

0

முனைவர் பா. உமாராணி

சமூக வாழ்வியலையும், இனம் சார்ந்த வழக்காறுகளையும், அதனோடு தொடா்புடைய பண்பாட்டுக் கூறுகளையும் படம்பிடித்துக் காண்பிப்பன நாட்டுப்புற கலைகள் ஆகும். நாட்டுப்புறக் கலைகள் என்பது பொழுதைக் கழிக்கும் ஒரு செயலாக அல்லாமல் அது அம்மக்களுடைய உணா்வுகளோடு தொடா்புடைய ஒரு கூறாகவுமே இயங்கி வருகின்றது. அப்பொழுதுதான் காலம் கடந்தும் அக்கலைகளை மக்கள் பதிவு செய்து கொண்டிருப்பார்கள். இல்லையெனில் அக்கலைகள் தோன்றிய சமூகச் சூழல் மாற்றம் அடைந்ததும் அழிந்தொழிந்துவிடும். எனின் அக்கலைகள் நிலைத்தத் தன்மையுடையதாய் அமைய வேண்டுமெனில் அது அப்பாண்பாட்டோடு நெருங்கிய தொடா்புடையதாயும், அம்மக்களின் நம்பிக்கைகளோடு ஒன்றிணைந்து செல்வதாயும் அமைந்திருக்க வேண்டும்.

நாட்டுப்புறக் கலைகளில் பெரும்பான்மையும் நம்பிக்கையோடு தொடா்புடையதெனினும் மதம் சார்ந்து நிகழ்த்தப்படும் சில நிகழ்த்துக் கலைகள் அவற்றிலிருந்து வேறானதொரு பரிமாணத்தை அடைந்திருக்கிறது என்பதற்குச் சான்றாக புனித அலேசியார் நாடகம் அமைந்துள்ளது.

அந்நிய ஆதிகத்தின் தாக்கம் காரணமாகவும், மதத்தை வளா்க்கும் நோக்கத்துடன் செயல்படும் மிஷனரிகளின் பாதிப்பும் இன்னும் குறிப்பிட்ட சில பகுதி மக்களிடையே காணப்படுகிறது. மிஷனரிகளின் வளா்ச்சி, அதிகம் கல்வியறிவில்லாத மக்களிடையே எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதையும், அவா்கள் பிற சமூகத்தினரின் பழக்கவழக்கங்களோடு ஒன்றிணைந்து தங்களுடைய மத நம்பிக்கைகளையும் ஒன்றிணைத்துச் செல்வதையும் கேரள எல்லையோரத்தில் வாழ்கின்ற கொழிஞ்சாம்பாறை வட்டார மக்களிடையே காணமுடிகிறது. கொழிஞ்சாம்பாறை வட்டாரம் குறித்த செய்திகள் முன்னைய மூவரசா் நாடகம் என்ற கட்டுரையில் இடம்பெற்றுள்ளது.

இந்துக்களின் பண்பாட்டை தங்களுக்குள் உள்வாங்கிக் கொண்டிருகின்ற தமிழ் இலத்தின் கிறித்துவா் தம்முடைய இறைவழிபாட்டு முறைகளிலும் அத்தகையதொரு நம்பிக்கை சார்ந்த வாழிபாட்டு முறைகளைக் கையாளுவதைக் காணமுடிகிறது. இக்கட்டுரை சுருக்கமாக புனித அலேசியார் நாடகம் குறித்த செய்தியைப் பதிவு செய்துள்ளது.

புனித அலேசியார் நாடக வரலாறு

பாலக்காடு பகுதியில் வாழ்கின்ற தமிழ் இலத்தின் கிறித்துவா் வாழும் பங்குத் தளங்களில் நடிக்கப்பட்டு வரும் நாடகங்களில் மிகப் பழமையானதாக புனித அலேசியார் மற்றும் புனித எஸ்தாக்கியார் நாடகங்கள் அமைந்துள்ளன. “Flos Sanctorum” என்ற போர்த்துகீசிய நூலினை 1586-ஆம் ஆண்டு ஆண்டிறிக் என்னும் அடிகளார் தமிழ்மொழியில் மொழிபெயா்ப்புச் செய்தார். புனிதா்கள் பலரின் வாழ்க்கை வரலாறுகளையும், விவிலியம் சார்ந்த விழாக்களையும் இந்நூல் உள்ளடக்கியுள்ளது. இந்நூலில் உள்ள 25-வது தலைப்பில் “க. அலேசு நடந்த நடபடிகள் வருமாறு“ என்று புனித அலேசியாரை பற்றிய செய்தியை அடிப்படையாகக் கொண்டே இந்நாடகம் நடிக்கப்பட்டு வருகின்றது.

புனித அலேசியார் நாடகம்

புனித அலேசியார் நாடகம் 18- கூறுகளாக அமைந்து புனித அலேசியாரின் கதையை மொழிகின்றது. சிலுவை விருத்தம் தொடங்கி மாதா கொச்சகம் வரையிலான இப்பதினெட்டு பகுதிகளில் கவிநயமும், இலக்கிய நயமும் இணைந்து சிறந்தொரு நாடகமாக இது அமைந்துள்ளது. 15-ஆம் நூற்றாண்டின் நாடக அமைப்புகளை உள்ளடக்கியதாக அமைந்திருப்பதோடு அன்றைய மக்களின் வழிபாட்டு முறைகளை, வாழ்வியல் சார்ந்த பழக்கவழக்கங்களையும் இந்நாடகம்  எடுத்தோதியுள்ளது. நாடக அமைப்பின் கூறுகளை (கட்டியங்காரன் தொடக்கம், குருவணக்கம் போன்றவை) உள்ளடக்கியுள்ளதோடு பல இனிய காட்சி அமைப்புகளையும் கொண்டுள்ளது இந்நாடகம்.

 1. சிலுவை விருத்தம்

பாலக்காட்டுப் பகுதியில் நிகழ்த்தப்படும் பல நாடங்களின் தொடக்கப் பாடல் சிலுவை விருத்தப்பாடலாகவே அமைந்துள்ளது.

”அா்ச்சிய சிலுவை வைத்தேன் அதினுட அடையாளத்தால்

கா்ச்சி சத்துருவிலின்று கனிவதாய் ரெட்சிவென்று

உச்சித சருவேயேகன் யுகந்திடும் பிதாச்சுதன்பால்

நற்புமிஸ்ப் பிரிந்து சாந்துனாமத்தாலாமென் சேசு”

என்ற சிலுவை விருத்தப்பாடல் புனித கனுகொந்தம்மாள் கீா்த்தனை நாடகம் என்ற பகுதியில் வரும் சிலுவை விருத்தமாக அமைந்துள்ளதோடு, அப்பாடல் புனித அலேசியார் நாடகத்தின் சிலுவை விருத்தப் பாடல் போலவே அமைந்துள்ளது வியப்பிற்குரியது.

 1. சேசு வணக்கம்

சிலுவை விருத்தத்தை அடுத்து வரும் பகுதி சேசு வணக்கமாகும். இதில் கல்வாரி இறைவனை தன் பாடலுக்குத் துணையாக அழைக்கும் செய்தி இடம்பெற்றுள்ளது.

 1. தேவதாய் வணக்கம்

கன்னி மரியாளிடம் தம்முடைய பண்ணோடு கூடிய தம் சொற்களுக்கு கண்ணேரு வராமல் காக்கவேண்டும் என்ற காப்புப் பாடலாக அமைத்துள்ளது. இதுவும் ஒரு வெண்பா அமைப்பில் இடம்பெறும் பாடலே.

 1. நூலின் பெருமை

புனித அலேசியார் நாடக நூல் தோற்றம் பற்றிய செய்தியினை விளக்குவதாக அடுத்த பகுதி அமைந்துள்ளது. இதில் பாயிரம் முதலாக நூல் தோன்றிய செய்தியினை, ”கற்கடக மாதம் என்பது மளையாள மாதம். இதற்கு நிகரான தமிழ் மாதம் ஆடிமாதம். 1806-ஆம் ஆண்டு ஜூலை, மாதத்தில் புனித அலேசியார் கதையை நாடகமாக்கப் பேசினார்கள். அடுத்து வரும் பாடல், தூயதா்மநாதபுரம் தன்னில் மேவுஞ் சூசை பிரான்சீஸ்கு வெனும் குருசுவாமி, துலா மாசத்தில் பாயிரத்தை முதல் துவக்கி ஆறாம் தேதி நாடகமாய் செய்துமுடித்தார் என்ற செய்தியினை கூறுகிறது. இதிலும், துலாம் மாதம் மலையாள மாதம். இதற்கு நிகரான தமிழ்மாதம் ஐப்பசி. 1806-ஆம் ஆண்டு அக்டோபா் 22-ஆம் தேதி நாடகத்தை முதலாகத் தொடங்கி பாடி முடித்தார்.” (டாக்டர் A. சோசப் பெஸ்கி, புனித அலேசியார் நாடகம், ப.44) என்ற காணமுடிகிறது. இதனை,

”ஆயிரத்தியெண்ணூற்றி ஆறாமாண்டில்

அன்பொடு பாடிவைத்தலேசு காதை

தூயதர்மநாதபுரம் தன்னில் மேவுஞ்

சூசை பிரான்சீஸ்கு வெனும் குருசுவாமிதான்

நேயமுடன் யேற்படுத்த வுரைத்த தாலே”

என்ற பாடல் வரிகள் மூலம் அறியலாம்.

 1. குருவணக்கம்

கொழிஞ்சாம்பாறையை அடுத்துள்ள அத்திகோடு என்ற பகுதியில் வாழும் அப்பாவு அந்தோணிமுத்து என்ற பண்டிதகார் குடும்பத்தவரான இவரைப் பற்றி பெருமையாக குருவணக்கப் பாடல் அமைந்துள்ளது. மேலும்,

”தார்பொருஞ் சங்கீத சுருதிக்கேற்ற

தாளமொடு நவரசங்கள் குறைவில்லாமல்

ஏர்பொருத்த யெனுக்குரைத்த குருசு சின்னப்பன்

இருபதத்தை யான் வணங்கி யிரைஞ்சுனேனே”

என்று நாடகத்தின் சிறப்பினையும் அதனை இயற்றியவரின் சிறப்பினையும் எடுத்துமொழிவதாக குருவணக்கப்பாடல் அமைந்துள்ளது.

 1. அந்தோணியார் வணக்கம்

நாடகத்தை சிறப்புற எடுத்துப்பாடிய அந்தோணியாரின் துணை வேண்டுவதாக அமையும் பகுதி அந்தோணியார் வணக்கப் பகுதி.

இதுவரையுமான ஆறு கூறுகளும் நாடகத்திற்கான தொடக்கக் கூறுகளாக அமைந்துள்ளது. அதனை அடுத்துவரும் பகுதிகள் அலேசியார் நாடகக் கதை தொடங்கும் பகுதியாக அமைகிறது.

 1. புனித அலேசியார் நாடகம்

நாடகத்தின் தொடக்கம் வாழ்த்துப்பாடலாக அமைந்துள்ளது. இதனை ஆரம்பனே தொடங்கி வைக்கிறான். இதில் இறைவனையும், மற்றுள்ளோரையும் வாழ்த்திப்பாடுகின்றனா். நாடகத்தின் தொடக்கக் காட்சியில் கட்டியங்காரன் தோன்றி உரோமை நாட்டரசனின் வருகையை அறிவிக்கின்றான்.

”இராசாதிராசன் வந்தார் எம்பரதோர்

ராசன் கொலுவில் வந்தார்

…………………………….

மிக்கசபை மகிழ வேந்தர் புடை சூழ

பக்கமிருந்து மதிபகரும் அமைச்சருடன்”

என்று அரசன் வரவை கட்டியங்காரன் உரைக்கிறான். இதில் “எம்பரதோர்“ என்ற சொல்லாட்சியானது ரோமப் பேரரசா்களைக் குறிக்க வழங்கும் போர்த்துக்கீசிய சொல்லாகும்.

கட்டியங்காரன் வரவு கூறி முடிந்ததும் அரசன் அரங்கில் தோன்றுகிறான். தன் மந்திரியான பெமியானை அழைக்க கட்டளையிடுகிறான். இதில் வரும் மந்திரியான பெமியான் பெயரினை, ”நாடகத்தின் மந்திரி பெயர் பெமியான். ஆனால் க.அலேசு வரலாற்றில் பெமியோன் என்ற பெயா், எபேமியானு (Euphemian) என்னும் பட்டணசுமாமி என்பதாகும். பட்டணசுமாமி என்பது உரோமை நகா் மேயர் பதவியைக் குறிக்கும் சொல்” (மேலது, ப.46) குறித்த கருத்தை பதிவு செய்துள்ளார் சோசப் பெஸ்கி அவா்கள்.

மந்திரியின் வரவினை அடுத்து அரசன் மந்திரிக்குப் பணிக்கும் பணிகளைக் குறிப்பிடுகிறான். அதனை அடுத்து அரசன் அவையை விட்டு வெளியேற பெமியான் தன் மனைவி அகிலமாதுவை அழைக்க உத்தரவிடுகிறான். அகிலமாது வந்தவுடன் தங்களுக்கு குழந்தையில்லாத நிலையினைக் கூறி வருந்தும் காட்சி இடம்பெறுகிறது. தங்களுக்குப் புத்திர பாக்கியம் வேண்டி பல ஊர்களிலுமுள்ள கோயில்களில் வழிபட செல்கிறார்கள்.

 1. வரங்கேட்கும் தரு

வரங்கேட்கும் தருவில் பத்து வரிகளை உடைய பாடல் உள்ளது. ஆனால் சாத்தன் குளம் அலேசு நாடகச்சுவடியில் இப்பாடல் இல்லை. அழகிய நடையோட்டத்துடன் இப்பாடல் அமைந்துள்ளது. ”தரு” என்பது ஓா் இசைப்பாட்டு.

 1. திருச்சிலுவைக் கோவில்

புனித அலேசியார் நாடகத்தில் வரும் ”திருச்சிலுவை கோயில்” என்பது கொழிஞ்சாம்பாறையை அடுத்துள்ள மேனோன்பாறை பங்கு தளத்திற்கு உட்பட்ட திருச்சிலுவைக் கோயிலையே குறிக்கின்றது. இக்கோவிலில் அகிலமாது இறைவனை வேண்டி பிள்ளைவரம் பெற்றதாக நம்பப்படுகிறது.

 1. புத்திர பாக்கியம்

திருச்சிலுவைக் கோயில் இறைவனால் சில காலத்தில் அகிலமாது பிள்ளை வரம் பெறுகிறாள். அதனை மருத்துவச்சி பெமியானிடம் தெரிக்கிறாள். பெமியான் மிக்க மகிழ்ச்சியடைந்து,

”எத்திசைப் புகழும் கீர்த்தி இறைவனார் கொலு முன்பாக

நித்தமும் கார்த்து நிற்கும் நெறியு்ள சேவுகோனே

அத்தனருளினாலே அகிலெனும் மாதுக்கு இப்போ

உத்தமன் பிறந்தானென்று ஊரெங்கும் அறிவிப்பீரே”

என்ற பகுதி அமைந்துள்ளது. இதில் பெமினான் தொழும்பர்களை (பணியாட்கள்) அழைத்து மகன் பிறந்த செய்தியினை அறிவிக்கச் செய்கிறான். அரசனும் மற்றுள்ள அனைவரும் வந்து கண்டு காணிக்கைகள் செலுத்திச் செல்கின்றனா்.

ஞானஸ்தானம் மற்றும் கல்வி முதல் அர்ச் பாப்பு தேவாலாயம் வருதல் ஈறாக

ஞானஸ்தானம் மற்றும் கல்வி, உறவுமுறை விருத்தம், திருமணம், கந்தார்த்தம் (கந்தார்த்தம் என்பது ஓா் இசைப்பாட்டு. நாடக அரங்கில் கந்தார்த்தப் பாடலுக்கு ஆடவேண்டும்.)  தேவதாய் அழைப்பு, திராசுப் பயணம் மற்றும் அர்ச் பாப்பு தேவாலாயம் வருதல் ஈறாக உள்ள பகுதிகளில் அலேசியாரின் வாழ்க்கை  படிப்படியாக எடுத்தோதப்படுகின்றது. அலேசுவுக்கு மோட்சவழிகளைக் குறித்தும், சிலுவை மந்திரங்களைக் குறித்தும், இன்னும் பிற இறைவழிபாட்டுடன் தொடா்புடைய கல்வியினை குறித்தும் குருக்கள் கற்பிக்கின்றார். காலங்கள் செல்ல அலேசு 16 வயது அகவையினை அடைகிறான். அவனுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று பெற்றோர்கள் விரும்ப அலேசுவும் சம்மதிக்கிறான். பெரியோர்கள் அனைவரும் சேர்ந்து பரினாள் என்ற பெண்ணைத் தேர்ந்தெடுத்து அலேசுவுக்குத் திருமணம் செய்து வைக்கின்றனா். (அகிலமாது மற்றும் பரினாள் குறித்த செய்திகள் மூலச் சுவடி நூலில் இல்லை)

திருமணம் முடிந்து அலேசுவும் பரினாளும் இல்லற வாழ்வினைத் தொடங்க முனைகின்றனா். இந்நிலையில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படுகின்றது. சிற்றின்ப ஆசையை துறந்து இறைவனை அடைதலே சிறந்த இன்பம் என்று கூறுகின்றான் அலேசு. அதற்கு,

”மன்னா் மதிக்க வந்த றோமை நகா்

மந்திரிதன் சுதனே

சொர்ணமுடிபுனை மன்னாதி மன்னவா

துறையே சிகாமணியே

என்னமொழி யுரைத்தீா் மன்னா் திரு

வாக்காலெதிர்மொழி தானுண்டோ

வர்ணமலா் சூட்டும் மங்கையைத் தங்கையென்று

வாக்காலுமுரைப்பார்க்களோ”

என்று உரைக்கின்றாள் பரினாள். ஆனால் அலேசுவோ,

”வாக்கல்லவோ தங்கையே மதுரமே

வாழ்மலரென்யங்கமே மோட்ச

பாக்கிய யோக்கியம் சேர வழியிது

பந்தையந் தான் தங்கையே”

என்று மனைவியைத் தங்கையே என்று அழைத்து வீட்டைவிட்டு வெளியேறுகிறான். வீட்டிலிருந்து புறப்பட்ட அலேசு தரைவழியாக நடந்து சென்றபோது பூவில்லா வனங்கள் திடீரென்று பூத்துக் குலுங்கின. அன்னம், மயில் போன்ற உயிரிகளெல்லாம் இவரைக் கண்டு மகிழ்ச்சியடைந்தாக இந்நாடகப் பாடல் அமைந்துள்ளது.

கடற்கரையை அடைந்த அலேசு மரக்காயரைக் கண்டு தன்னையும் யாத்திரை அழைத்துப்போகச் சொல்லுகிறான். அங்ஙனம் கடல் பயணத்தை மேற்கொண்ட அலேசு சென்ற கப்பல் பெரும்புயலில் அகப்பட்டு தீசு என்ற பட்டணத்திலே கரையொதுங்குகின்றது அங்கு தாம் கொண்டுவந்த விலையுயா்ந்த பொருட்களை தானமாக அளித்து மகிழ்கிறான். இதற்கிடையில் அகிலமாது பரினாளிடம் அலேசுவைப் பற்றி விசாரிக்க அவள் நடந்தவற்றைக் கூறுகின்றாள். தாங்கொண்ணாத் துயர் அடைந்த அகிலமாதுவும், பெமியானும் அலேசுவைத் தேட ஆட்களை அனுப்புகின்றனா்.

தீசு நகரில் 17 ஆண்டுகள் வாழும் அலேசு பரதேசி போல இரந்துண்டு வாழ்கிறார். அவா்மேல் கருணை கொண்ட தேவதாய் கோவில் பணிவிடைக்காரரிடம் கூற கோவில் பணியாட்கள் அலேசு அவா்களுக்கு பணிவிடை புரியத்தொடங்குகின்றனா். இதனை ஏற்காத அலேசு இன்னும் இங்கே தங்கியிருந்தால் மக்கள் தன்னைப் புகழத்தொடங்க விடுவா் என்று எண்ணி அங்கிருந்து மேலும் கடற்பயணத்தை மேற்கொள்கின்றார்.

அலேசு தீசு நகரை விட்டு திராசு பட்டணத்தை அடைய கப்பல் மரக்காயரை அணுகிறார். அவரிடம் பொருளின்மையைக் கூற, அவா் நீண்ட கடல்பயணத்தில் ஆபத்து வராமலிருக்கு நீா் செபம் செய்ய வேண்டும் என்று கேட்கின்றார். அதனை ஏற்றுக் கொண்டு செபம் செய்ய கடற்பயணம் தொடங்குகிறது. ஆனால் இடையில் ஏற்பட்ட புயலின் காரணமாக திராசு பட்டணத்தை அடையமுடியாமல் உரோமை நகரில் இறங்குகின்றார். அங்கு தன்னுடைய தாய், தந்தை, மனைவி போன்றோர் தன்னை அடையாளம் கண்டுவிடாமல் இருக்க இறைவனை வேண்டுகிறார். அதனை ஏற்றுக் கொண்ட இறைவன் அவரை உருமாற்றுகிறார். தன்னுடைய வீட்டிலேயே பரதேசியாக தங்க வைக்கப்படுகிறார். பெற்றோருக்கு இவா் யாரென்று தெரியவில்லை. எனினும் அத்தவசிக்கு வேண்டுவனவற்றை அளிக்குமாறு ஏவலா்களிடம் கூறுகிறான் பெமியான். ஆனால் வேலையாட்கள் அவரை அவமானப்படுத்துகின்றனா். அவா்களுக்காவும் இறைவனிடம் மன்னிப்புக் கேட்கின்றார் அலேசு. இந்நிலையில் அகிலமாதுவும், அவன் மனைவியும் புலம்புவதைக் கேட்க,

”இந்தவுலகாசை போதும் யான் பொறுத்திட்டேன்

இனியேகரிடம் சேர யான்மனம் குறித்திட்டேன்”

என்று இறைவனிடம் வேண்டுகிறார்.

உரோமை நகருக்கு அப்போது வருகைதந்த “அா்ச்சிஷ்ட விநோசி பாப்பும்“ தேவாலயத்திற்கு எழுந்தருளுகின்றார். வேதமொழி உபதேசத்தினிடையே வேத வாக்கியம் சித்திக்கப்படுகிறது. அலேசு இறக்கப்போகும் செய்தியை “ஒரு திவ்ய பலி நிகழும் இன்றிலிருந்து  ஆறு நாட்களுக்கு பின்னா்“ என்று குறிக்கின்றார் பாப்பு. அதனைச் செவியுற்ற அரசன் அப்புண்ணியவாளன் மரணமடைந்த செய்தியை அறிய வேண்டி அவ்வேதவாக்கியச் செய்தியை பட்டிணத்தில் அறிக்கை விடுக்கிறான்.

புனிதர் அலேசுவும் தன் மரணநாள் இன்று எனத் தெரிந்து வேலையாட்களிடம் ஒரு கடுதாசியும் மைகுடுவையும் பெற்று தன் வரலாற்றை எழுதி முடித்துவிட்டு இறந்துவிடுகிறார். பின் எங்கு தேடியும் புண்ணியாளனைக் காணமுடியாமல் இருக்க அரசன் இறைவனை வழிகாட்டும்படி இறைஞ்ச, இறைவன் அலேசியார் இறந்துகிடக்கும் இடத்தை காண்பிக்கிறார். கையில் கடிதத்துடன் மண்டியிட்ட நிலையில் இறந்து இருப்பதைக் கண்ணுற்று அவரைச் சிவிகை ஏற்றி, பொற்சரிகைச் சேலை போர்த்தி, மலா்சூட்டி கானங்கங்கள் முழங்கிட கல்லறை தன்னில் வைத்து அடக்கம் செய்தனா் என்று அலேசியார் நாடகம் முற்றுப்பெறுகிறது.

அலேசியார் நாடகத்தில் குறிக்கப்பெரும் கற்பனைகள், வாழ்வியல் உண்மைகள் போன்றவை இலக்கியத்தரம் மிகுந்தவையாக உள்ளன. பிற மதத்தினரின் வாழ்வியல் நம்பிக்கைகளோடு அக்காலச் சூழலுக்கு ஏற்ப இந்நாடகம் புனையப்பட்டுள்ளது என்பது உண்மை. முழுமையும் மதம் தொடா்பான நாடகம் என்பதால் விவிலியக் கருத்துக்கள் மிகுதியும் காணப்படுகின்றன. நீண்ட வசனங்கள் இல்லாமல் குறுகிய வடிவத்தில் வேதக்கருத்துகளை இந்நாடகம் முன்மொழிகிறது. மதம் பரப்புதலை நோக்கமாகக் கொண்ட மிஷனரிகள் அம்மதக்கருத்துக்களை பரப்புரை செய்ய தேர்ந்தெடுத்த நாடக இலக்கிய வகைமையில் ஒன்றாகவே இது அமைந்துள்ளது. அன்றைய மக்களின் மொழிநடையில், அவா்களின் வாழ்வியல் பின்புலத்தோடு இக்கதை மொழியப்பட்டுள்ளது.

பயன்பட்ட நூற்கள்

 1. புனித அலேசியார் நாடகம், Dr.A. Joseph Besky, Center  For Chiristian Research (CCR), St. Jesoph’s College (Autonomous), Trichy, First Edition-2013.
 2. புதிய சுல்தான்பேட்டை மறைமாவட்ட வரலாறு, Dr. A.Joseph Besky, LIVIA ARAN ANBHAGAM, Athicode, Chittur, Palakkad, kerala. First Edition-2014.
 3. இந்திய மொழிகள் ஓர் அறிமுகம், பூரணச்சந்திரன்.
 4. பாலக்காடு -சித்தூர் தமிழா் வாழ்வியல், மா. பேச்சிமுத்து.

கட்டுரையாளர்

முனைவர் பா. உமாராணி, உதவிப்பேராசிரியா், கற்பகம் உயா்கல்விக் கலைக்கழகம், கோயம்புத்தூர்-21.

 

 

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *