மீன் கொடுத்துப் பெண் தேடுதலும் உணவு ஊட்டுதலும்

0

சற்குணா பாக்கியராஜ்

இனப் பெருக்கக் காலத்தில் பல ஆண் பறவைகள் தங்கள் துணைப் பறவைகளுக்கு உணவு ஊட்டிப் பராமரிப்பதை நம்மில் பலரும் பார்த்திருக்கலாம் அல்லது கேள்விப்பட்டிருக்கலாம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சங்கக் காலப் புலவர் முக்கல் ஆசான் நல்வெள்ளையார் சிவந்த வாயையுடைய ஆண் கடல் காகம் தன்னுடைய கடுஞ் சூல் பேடைக்காக அயிரை மீனைக் கழியில் தேடுவதைக் கீழ்க் கண்டவாறு வர்ணிக்கிறார்.

“கடல்அம் காக்கைச் செவ் வாய்ச் சேவல்
படிவ மகளிர் கொடி கொய்து அழித்த
பொம்மல் அடும்பின் வெண் மணல் ஒருசிறை கடுஞ் சூல் வதிந்த காமர் பேடைக்கு
இருஞ் சேற்று அயிரை தேரிய, தெண் கழிப்
பூஉடைக் குட்டம் துழவும் “
நற்றிணை 272: 1-6
.
பறவையியலை ஆராயும் போது கடல் பறவைகள் இனத்தைச் சார்ந்த ஆலாப் பறவை (டெர்ன் -Tern) இனப் பெருக்கக் காலத்தில் அயிரை போன்ற சிறு மீன் இனங்களைக் கவர்ந்து அடைகாக்கும் தனது பெடைக்கு உணவாகக் கொடுக்கிறது என்பதைப் பல நாடுகளிலுள்ள பறவையியலாளர்கள் நடத்தியுள்ள ஆராய்ச்சிகள் மூலம் தெரிய வருகிறது .

இனப் பெருக்கக் காலம் நெருங்கும் போது ஆலாப் பறவைகள் தங்கள் சொந்த இருப்பிடங்களுக்குத் திரும்பிச் சென்று காலனிகள் உருவாக்கிய பின் பெண் தேடும் படலத்தைத் தொடங்குகின்றன. ஆண் பறவைகள் மீனைப் பிடித்து அலகில் கெளவிக் கொண்டு பெண் பறவைகள் இருக்கும் இடத்தில் உயர்ந்தும் தாழ்ந்தும் பறந்து சென்று தாங்கள் பிரமச்சாரிகள் என்பதை விளம்பரம் செய்கின்றன. தனக்குப் பிடித்த பெண் பறவையை ஆண் பறவையால் தெரிந்தெடுக்க முடியாது. ஆண் துணையைத் தேடிக் கொண்டிருக்கும் பெண் பறவை மீன் கொண்டு பறக்கும் ஆண் பறவையை விரும்பினால் அதைப் பின் தொடர்ந்து பறக்கும். இந்த நிகழ்ச்சியைப் பறவையியலாளர்கள் “Fish Flight” அல்லது “Fish Offering Ceremony” என்று அழைக்கின்றனர். இந்தச் சடங்கு சில வேறுபாடுகளோடு உலகெங்கிலும் உள்ள எல்லா வகை ஆலாப் பறவைகளிலும் காணப்படுகிறது.

சில நேரங்களில் ஆண் பறவை, பெண் பறவையின் முன்னால் நின்று தலையையும் நெஞ்சையும் நிமிர்த்திப் பெருமையோடு ராஜ நடை நடந்து தன் பலத்தை வெளிப்படுத்தும். இதனை “Strutting Display” என்பர். ஒரு ஆண் பறவையின் பலம், கொண்டு வரும் மீனின் பருமன், எண்ணிக்கை இவைகளைக் கொண்டு பெண் பறவை, ஆண் பறவையைத் தேர்ந்தெடுக்கும். அதன் பின் பரிசுப் பொருளான மீனைப் பெற்றுக்கொண்டு இணைந்து கூடுகட்டி இனப்பெருக்கம் செய்யும்..

LittleTerns: Courtship behavior: மீன் கொண்டு பறத்தல், நன்றி படம்: கூகிள்

இந்த மீன் கொடுக்கும் சடங்கு, பெண் பறவை திடமான ஆண் பறவையைத் தெரிந்தெடுக்கவும் அடுத்த சந்ததி பலமுள்ளதாக வருவதற்கும் அடிகோலாக அமைகிறது.

ஆலாப் பறவைகள் இணை சேர்ந்த பின் பல நாட்கள் ஆண் பறவை துணைப் பறவைக்கு உணவு கொடுப்பதில்லை. இரண்டு பறவைகளும் சேர்ந்து கூடு கட்ட ஆரம்பித்து பெண் பறவைக்குக் கரு உருவாகும் சமயம் ஆண் பறவை திரும்பவும் உணவு கொடுக்க ஆரம்பிக்கிறது. பெண் பறவை இரை தேடச் செல்லாமல் உணவுக்காக ஆண் துணையைக் கெஞ்சும். பெண் பறவை நிறைச் சூல் நிலையில் இருக்கும் போது ஆண் பறவை சில சமயம் மணிக்கொரு தடவை உணவைக் கொண்டு கொடுக்கிறது.

“கருவுற்றிருக்கும் சமயம் பெண்பறவையின் எடை அதிகரிப்பதால் பெண் பறவை பறந்து நீரினுள் பாய்ந்து இரை தேட முடியாத நிலையிலுள்ளது, ஆண் பறவை உணவு ஊட்டும் போது இரண்டு பறவைகளிடையே உறவு பலமாகிறது, கரு ஆரோக்கியமாக வளருவதற்கு ஏற்ற சத்தான உணவும் கிடைக்கிறது,” என்று பறவையிலாளர்கள் விவரிக்கின்றனர்

( “Courtship and Feeding “ Paul R. Ehrlich, David S. Dobkin, and Darryl Wheye 1988).

ஆண் ஆலாப் பறவை பாசத்தோடு தன் துணைக்காக இரை தேடுவதைப் புலவர்,
“பொம்மல் அடும்பின் மணல் ஒரு சிறை,
கடுஞ் சூல் வதிந்த காமர் பேடைக்கு,
இருஞ் சேற்று அயிரை தேரிய, தெண் கழிப்
பூஉடைக் குட்டம் துழவும் ” என்கிறார்.

மேற் கண்ட சங்கப் பாடலில் புலவர் வர்ணிக்கும் “கடல்அம் காக்கை” கடல் பறவையினத்தைச் சார்ந்த கடல் காகமா (Gull) அல்லது ஆலாப் பறவையா(Tern) என்ற கேள்வி எழலாம்.

தமிழகத்தில் Gull பறவையை “கடல் காகம்” அல்லது “கடல் புறா” என்றும் ஆலாப் பறவையை “கடல் குருவி” என்றும் சில இடங்களில் அழைக்கின்றனர். இரண்டு பறவைகளும் Laridae குடும்பத்தைச் சார்ந்தவை. இவை நீர்க் கரையோரங்கள் முக்கியமாகக் கடற்கரையைச் சார்ந்த பகுதிகளான கழிகள், சதுப்பு நிலங்கள், வயல் பகுதிகள் அறுவடை செய்யப்பட்ட நிலங்களில் கூட்டமாகவோ தனித்தோ காணப்படுகின்றன.

கடல் புறா (Gull)

கடல் புறாக்கள், புறாக்களைப் போலில்லாமல் காகங்களின் பண்புகளையுடையவை. காகங்களைப்போல் உணவைப் பகிர்ந்து கொண்டும் சமயத்திற்கேற்றவாறு கிடைக்கும் உணவையும் கழிவுப் பொருள்களையும் உண்ணத் தயங்காதவை. கடல் புறாக்களை நீர்க்கரைகள் மட்டுமல்லாமல் பூங்கா, புல் வெளிகளிலும் மனிதர்கள் வாழும் பகுதிகளிலும் காணலாம்.
மேலும் கடல் புறாக்களால் நீரில் வெகு நேரம் மிதக்க முடியும். நீர்க் கரைகளில் அலகாலும் கால்களாலும் துழாவி இரை தேடுபவை. நீரில் மிதக்கும் உணவைப் பறந்து வந்து அலகால் எடுக்க முடியும். ஆனால் நீரில் மூழ்கி இரை தேடுவதில்லை. இவைகளின் அலகுகள் முனையில் வளைந்திருக்கும்.

கடல் புறா (Gull)..படம்: சற்குணா பாக்கியராஜ்

குளிர்காலத்தில் தமிழகத்திற்கு வலசை வரும் ஐந்து வகைக் கடல் புறாக்களும் குளிர் காலம் முடிந்ததும் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்பி விடுகின்றன. தமிழகத்தில் இனப் பெருக்கம் செய்வதில்லை..


மேலும் ஆண் கடல் புறா இனப் பெருக்கக் காலத்தில் பெண் பறவைக்கு உணவு கொடுக்கும் போது சற்றுச் செரித்த உணவை வெளிக் கொண்டு வந்து (regurgitate) கொடுக்கிறது. மீனைக் கவர்ந்து கொண்டு வந்து கொடுப்பதில்லை.
ஆலாப் பறவை (Tern)

இரை தேடும் ஆலாப் பறவை, படம்: சற்குணா பாக்கியராஜ்

ஆலாப் பறவைகள் நீரில் நெடு நேரம் மிதப்பதில்லை. பாதங்களில் சவ்வுகள் இருப்பினும் நீந்துவதில்லை. இவைகளின் முக்கிய உணவு மீன், இறா, புழு, பூச்சிகளாகும். ஆலாப் பறவைகளின் அலகுகள் நீண்டு கூர்மையாக இருக்கும்.


இவை இரை தேடுவதற்காக ஆறு, ஏரி, கடல் இவற்றுக்கு மேல் ஒரு கூட்டமாக அல்லது தனித்து வட்டமடித்துப் (hover) பறந்து சென்று கொண்டிருக்கும். இரையைக் கண்டவுடன் செங்குத்தாக நீருக்குள் விழுந்து அடுத்த கணம் அலகில் ஒரு மீனுடன் வெளி வந்து விண்ணில் பறக்கும். ஆலாப் பறவைகள் அலகினாலோ அல்லது கால்களாலோ துழாவி இரை தேடுவதாக அறிவியலில் சான்றுகள் காணப்படவில்லை..

புலவர் முக்கல் ஆசான் நல்வெள்ளையார் வர்ணித்துள்ள ஆண் கடல் காகம், ஆலாப் பறவையாகத்தான் இருக்க முடியும். கடல் புறாவிற்கும் ஆலாப் பறவைக்கும் பால் வேறுபாடு வெளிப்படையாகத் தெரியாது. ஆனால் கருவுற்றிருக்கும் துணைப் பறவைக்காக மீனைத் தேடிக் கவர்ந்து சென்று உணவூட்டுவது ஆண் ஆலாப் பறவை என்பது உலகம் முழுவதிலும் ஆராய்ச்சியாளர்களால் நிரூபிக்கப்பட்ட உண்மை!!


“செவ் வாய்” என்று பாடலில் காணப்படுவது பறவையின் அலகா அல்லது வாயின் உள் பகுதியா?
தமிழ் நாட்டிற்கு வலசை வரும் கிருதா ஆலாப் பறவைக்கும் (Whiskered Tern) சாதா ஆலாப் பறவைக்கும் (Common Tern) காஸ்பியன் ஆலாப் பறவைக்கும் (Caspian Tern) அலகுகள் சிவப்பு நிறம். இந்த ஆலாப் பறவைகள் கூட்டமாகவும் காணப்படும். இவை தமிழகத்தில் இனப் பெருக்கம் செய்வதில்லை.

“செவ் வாய்” காஸ்பியன் ஆலாப் பறவை,
காஸ்பியன் ஆலாப் பறவையின் சிவந்த அலகும் வாயின் உள் பகுதியும்.. படம்: “Bird Research Northwest” நன்றி

காஸ்பியன் “குளிர் காலத்தில் தமிழகத்தில் அதிகமாக் காணப்பட்டாலும் மற்ற காலங்களிலும் இதை ஒரு சில இடங்களில் (உ..ம்: கோடிக்கரை) காணலாம். அருகில் உள்ள இலங்கையில் இப்பறவை இனப் பெருக்கம் செய்வதே இதன் காரணமாக இருக்கலாம்”( Grubh, R.B, 2012).

பிற ஆலாப் பறவைகளின் அலகுகள் மஞ்சள் அல்லது கறுப்பு நிறமாக இருக்கும்.

 

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அறிவியல் வளர்ச்சி இல்லாத காலத்தில் புலவர்கள் தங்களுடைய அன்றாட வாழ்க்கையில் சுற்றுச் சூழ் நிலையை உன்னிப்பாகக் கவனித்து தங்களுடைய பாடல்களில் கருப் பொருள்களாகப் புகுத்தியுள்ளனர் என்பதற்கு இந்தப் பாடலும் ஒரு சான்று.

References
Ali, Salim (2002): The Book of Indian Birds Thirteenth Edition, Bombay Natural History Society, Oxford University Press
Fazili, F. M (2014) Breeding biology of Indian whiskered tern Chlidonias hybrida indica (Stephens) at lake Wular Kashmir, Nature and Science 2014; 12(3)
Grubh. R (2012): Wetland Birds of Tamil Nadu, Institute for Reservation of Natural Environment
Lewis T. NOTES ON THE BREEDING-HABITS OF THE LITTLE TERN, British Birds,Vol.XIV: 74-82
Meng and Melinda Chan in 2005; Little Terns: Courtship behavior – Bird Ecology Study Group www.besgroup.org/2006/07/27/little-terns-courtship-behaviour/Observations were made by. All images by them.
Paul R. Ehrlich, David S. Dobkin, and Darryl Wheye,1988,”Courtship and Feeding “

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.