பாலக்காடுமாவட்டத் தமிழின மக்களிடையே வழக்கிலிருக்கும் ஒப்பாரிப் பாடல்களில் வாழ்வியல் விழுமியங்கள்

0

முனைவா் ஆறுச்சாமி.செ, உதவிப்பேராசிரியா், கற்பகம் உயா்கல்வி கலைக்கழகம் ஈச்சநாரி, கோவை-21

ஒப்பாரிப் பாடல்கள்

            இறந்தவா் அருகிலிருந்து இறந்தவரின் பெருமைகளைக் குறித்துப் பெருந்துன்பப்பட்டு அவரது உறவினா்கள் புலம்பும் கையறுநிலைப் பாடல்களே ஒப்பாரிப் பாடல்களாகும்.

“கழிந்தோர் தேவத்து அழிபடா் உறீஇ

ஒழிந்தோர் புலம்பியக் கையறு நிலை”    ( தொல். பொரு புறம்.. 1025)

என்று தொல்காப்பியம்; ஒப்பாரி குறித்துக் கூறுவது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். எண்வகை மெய்ப்பாடுகள் குறித்து கூறவரும் தொல்காப்பியா் அதில் ஒருவகையான ‘அழுகை’ தோன்றுவதற்கான நிலைக்களன்களைச் சுட்டுகையில்,

                        “இளிவே இழவே அசைவே வறுமையென

                        விளிவில் கொள்கை அழுகை நான்கே”          ( தொல். பொரு. 1199)

என்கிறார் இறப்பில் ஏற்படுவது அழுகை என்கிறார். இதுவே ஒப்பாரியின் தொடக்கநிலை எனக் கொள்ளலாம். அழுகையில் உருவாவதே ஒப்பாரிப் பாடலாகும்.

ஒப்பாரி – சொல் விளக்கம்

            தமிழில் ஒப்பாரிக்கு ஒப்பாரி, பிலாக்கணம், பிணக்கானம், கையறுநிலைப் புலம்பல், இரங்கற்பா, சாவுப்பாட்டு, இழவுப்பாட்டு, அழுகைப்பாட்டு போன்ற பல பெயா்கள் வழங்கப்படுகின்றன.

            ஒப்பாரி என்பது ‘ஒப்ப + ஆரி = ஒப்பாரி’ எனும் வகையில் உருவானதாகும். இதற்கு தமிழ்ப் பேரகராதி ‘அழுகைப் பாட்டு’ என்று பொருள் கூறுகிறது. ஆங்கிலத்தில் ஒப்பாரி என்பதற்கு  Elegy, Dirge, Death, Lament, Mourning songs போன்ற சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன.

ஒப்பாரி- பாடுபொருள்

            இறந்தவரின் அருமை, பெருமைகள், குணநலன்கள், இறந்தவரின் இழப்பால் அவா் குடும்பத்தார் அடையும் துன்பம் போன்றவை ஒப்பாரியில் பாடுபொருள்களாக அமைகின்றன. பெண்கள் மட்டுமே ஒப்பாரி பாடுகின்றனா். ஆண்கள் பாடுவதில்லை. ஒப்பாரி பாடத் தயங்கினால் உடனே வயதானவா்கள்,

                                    “ஒப்பாரி பாடுங்கடிங் கொப்பனோளிகளா

                                    தப்பாம பாடுங்கடி தாசனோளிகளா”

என்று பாடி ஒப்பாரியைத் துவங்கி வைப்பா். இவ்வின மக்களிடையே சேகரிக்கப்பட்ட ஒப்பாரிப் பாடல்களைக் கீழ்க்காணுமாறு வகைப்படுத்திக் காணலாம்.

.       பெற்றோர்இறப்பில் மகள் பாடும் பாடல்

ஆ.      கணவனை இழந்த மனைவி பாடும் பாடல்

இ.       சகோரதனை இழந்த சகோதரி பாடும் பாடல்

ஈ.        மாமியாரை இழந்த மருமகள் பாடும் பாடல்

உ.       அண்ணன் மனைவி (அண்ணியின் )இறப்பில் பாடும் பாடல்

அ . பெற்றோர் இறப்பில் மகள் பாடும் பாடல்  

                                    ‘தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை

                                    தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை’

என்பது ஆன்றோர் வாக்கு. தாயும், தந்தையும் தம் நலனைக் கருத்தில் கொள்ளாது பிள்ளைகளின் மேன்மைக்காகப் பாடுபடுபவா்கள். பிள்ளைகளின் நல்வாழ்வுக்காக அவா்கள் எல்லாவிதத் துன்பங்களையும் தாங்கிப் பிள்ளைகளை வளா்க்கின்றனா்.

            பத்துமாதங்கள் வயிற்றில் சுமந்து, வலிகளையெல்லாம் தாங்கிக் குழந்தையைப் பெற்றெடுக்கிறாள் தாய். பின்னா் தன் விருப்பு வெறுப்புக்களைக் குறைத்துக்கொண்டு, தான் பெற்ற பிள்ளைக்காக அவள் வாழ முற்படுகிறாள். தன்னைப் பெற்று வளா்த்துச் சீராட்டி, பாராட்டி வளா்த்த தாய் இறந்தவுடன் அத்துன்பத்தைத் தாளாமல் மகள் அழுகிறாள். தன்னை வளா்த்த தாயினைப் பிரிந்த துயரத்தில் அவள் இருந்தால் தன்னை எப்படியெல்லாம் கவனித்திருப்பாள் என்று கூறி அழுகிறாள்.

                                    “வடக்கே வளஞ்சிருக்கும்

                                    வளையாச் சிறு மூங்கோ

                                    வாட்டிக் கணுவொடச்சு

                                    வரிசை வச்சும் போளதட்டி

                                    வரிசை வரும் நாளையிலே – சிறு

                                    வயசிலையோ தாயௌந்தே

                                    தெக்கே வளஞ்சிருக்கும்

                                    சின்னக் கணு மூங்கோ

                                    சீவிக் கணுவொடச்சு

                                    சீருவச்சும் போளதட்டி

                                    சீருவரும் நாளையிலே

                                    சிறுசிலையோ தாயௌந்தே

                                    கோடெ மளபேயும்

                                    கொம்பளவு தண்ணிவரும்

                                    கொம்பளவு தண்ணியிலெ – என்

                                    குயிலி நனஞ்சு வந்தா – என்

                                    தாயோ இங்கிருந்தா

                                    எலுமிச்சங்காப் பட்டெடுத்து

                                    கூந்தேலுணா்த்துமிம்பா

                                    கொளந்த பசியாத்துமிம்பா

                                    தாயோ காணமிங்கோ

                                    எலுமிச்சங்காப் பட்டெடுத்து

                                    கூந்தலுணா்த்தலியே

                                    கொளந்த பசியாத்தலியே..”

என்று அப்பாடல் அமைகிறது.

            பிள்ளைகளைப் பெற்று வளா்ப்பது தாயாக இருந்தாலும் அப்பிள்ளைகளின், உயா்வுக்கும், வாழ்வுக்கும் ஆதாரமாக இருப்பவா் தந்தைதான். அனைத்துச் செல்வங்களையும் குறையாமல் அளித்துச் சீரும் சிறப்புமாய் வாழ்க்கையை அமைத்துத் தர தந்தையே முக்கியக் காரணமாயிருக்கிறார். அத்தகைய தந்தை இறந்து போனால் அதன்மூலம் ஏற்படும் துன்பங்களை ஒப்பாரி மூலம் வெளிப்படுத்துகிறாள் மகள்.

                                    “ஆத்துக்கு அந்தப் பக்கம் – இவ

                                    அருங்கிளியே மாலையிட்ட

                                    அப்பனுக்கு சீக்குமுன்னு

                                    ஆனைமேலே காயுதங்கோ – நான்

                                    காயுதத்தைக் கண்டுடனே

                                    ஆனைக்குந் தீனுவச்சு கூடவந்த

                                    ஆளுக்குஞ் சாதமிட்டு

                                    ஆனைமேலே கால்போட்டு

                                    அஞ்சாம வந்துவிட்டேன்

                                    ஆறும் பெருகி வரும்

                                    அக்கரையும் பொங்கிவரும்

                                    ஆனையுட்டும் கீளெறங்கி

                                    ஆத்தேயடிச் செறக்கி

                                    அடிவரிசே பாலங்கட்டி – நான்

                                    ஆத்தயுட்டும் மேலேறி

                                    அலச்சுத்தா போகமுடியும்.

                                    குத்தியுட்டும் பொம்மாரே – நான்

                                    பொறந்ததா அரண்மனைக்கு

                                    போறான்னா சேதியுன்னு – நீ

                                    தட்டும் பறையடங்கு

                                    சருகாட்டம் சித்த நிக்கும்”

என்று அப்பாடல் அமைகிறது.

ஆ . கணவனை இழந்த மனைவி பாடும் பாடல்

            தன்னுடன் இல்லறம் நடத்திய கணவன் தன்னைவிட்டுப் பிரிந்து போனால் அத்துயரம் மனைவிக்கு தாங்கொணாத் துயரமாகும்.

                        “கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்”

என்று அத்துயரம் பற்றிச் சிலப்பதிகாரம் கூறுவது இங்குக் குறிப்பிடத்தக்கதாகும். ஊனும், உயிருமாய் ஒன்றிணைந்து வாழ்நதிருந்த தன் கணவன் தன்னைவிட்டு இறந்தவுடன் மனைவியால் அதை தாங்க முடிவதில்லை. கணவன் தன்னிடம் காட்டிய அன்பையும், ஆதரவையும், கணவனின்றி தானும், தன் பிள்ளைகளும் படும் துயரங்களையும் தன் பாடலில் ஒப்பாரியாய் வைத்துப் பாடுகிறாள்.

                                    “கோட்டைசுத்தி கல்பொறுக்கி

                                    கோபுரங்கோள் உண்டுபண்ணி

                                    கோபுரத்துக் குள்ளாலே

                                    கோடி போட்டாந் தன்னாசி

                                    கொள்ள பணந் தாரனும்பான்

                                    கொடியே யெடும்னும்பா

                                    கொள்ள பணம் தாரண்ணாலும்

                                    கொடியே யெடுக்க மாட்டேன்

                                    கொள்ளப் பணம் வாங்கமாட்டேன்

                                    கோபுரத்துக்குள் ளிருக்கும்

                                    கொம்பானை வேணுமிம்பேன்

                                    மாடிசுத்தி கல்பொறுக்கி

                                    மண்டபங்கோள் உண்டுபண்ணி

                                    மண்டபத்துக் குள்ளிருக்கும்

                                    என் மதயானை வேணுமிம்பேன்

                                    வள்ள பணந் தாரனும்பான்

                                    வளையே யெடும்னும்பான்

                                    வள்ளப்பணம் வாங்கமாட்டேன்

                                    வளையே யெடுக்க மாட்டேன்

                                    மண்டபத்துக் குள்ளிருக்கும்

                                    என் மதயானை வேணுமிம்பேன்

                                    பொன்னும் புளியமரம்

                                    பொதச்சுந்தான் போகணும்பான்

                                    பொன்னும் விசிறி கொண்டு

                                    பொதுக்கிணற்றுத் தீர்த்தங்கொண்டு

                                    புகையமைக்க வந்தவங்கோ

                                    புகையை யமைக்காம

                                    பொன்னுயிர சூரையிட்டோம்

                                    தங்கோ புளியமரம்

                                    தாளன் புடிச்சு போகணும்பான்

                                    தங்கோ விசிறி கொண்டு

                                    தனிக்கெணற்றுக் தீர்த்தங்கொண்டு

                                    தாறனை அணைக்காம

                                    நல்லுயிரைச் சூரையிட்டோம்”

இ. சகோதரனை இழந்த சகோதரி பாடுவது

            சகோதரன் – சகோதரி உறவுமுறை பாசப்பிணைப்பு நிறைந்ததாகும். சகோதரிக்குத் திருமணமானவுடன் அவளுக்கும், அவள் பிள்ளைகளுக்கும் சகோதரன் சீா்வரிசைகள் செய்து அழகு பார்க்கிறான். தாய்மாமன் சீர் நாட்டுப்புறச் சடங்குகளில் முக்கியமான சீராகும்.

            அத்தகைய சிறப்புக்குரிய சகோதரன் இறந்துபோனால் சகோதரி ஆதரவற்றவளாகிறாள். தன் சகோதரனின் பாசப்பிணைப்பும், இனி தன்னை ஆதரிக்க யாருமில்லையே எனும் ஏக்கமும் அவளது ஒப்பாரியில் எதிரொலிக்கிறது.

                                    “பத்துக் குஞ்சோம் பொட்டுவண்டி

                                    பாதையிலே சாரோடும்….. ஏ

                                    பாதையிலே போறவரு …. ஏ

                                    பச்சவண்டி யாருதுன்னா

                                    பாதை சாருக்காருது

                                    பச்சவண்டி நம்முளுது

                                    பச்சவண்டிக் குள்ளிருக்கும்

                                    பாதால எமபொறப்பு……..நான்

                                    பாலக் கொண்டி பக்கம் வச்சு

                                    பன்னீரே கிட்ட வச்சு………நான்

                                    பாலே குடியுமிண்ணா

                                    பன்னீரே சாப்பிடுங்கோ

                                    பாலும் பாசியுமில்லே

                                    பன்னீரோ தாகமில்லே…..உன்

                                    பாடு கொற சொல்லுமின்னா

                                    அண்ணா இன்னக்கி

                                    பாடு கொற செல்லியிட்டா

                                    அண்ணா சாமிறெயங்கீரும்

                                    உங்கொ தங்கமுகம் வாடீரும்”

ஈ . அண்ணியின் இழப்பில் பாடப்படும் பாடல்

            சகோதரனின் மனைவி (அண்ணி) இறந்து போனால் சகோதரிபாடும் பாடலில் அண்ணியின்றி வாடும் அண்ணன், பிள்ளைகள் ஆகியோரின் துன்பம், தன்னை ஆதரித்த அண்ணியின் பாசம் போன்றவை பாடுபொருள்களாக அமைகின்றன.

                                    “இக்கி பச்சக்கல்லு சூட்டடுப்பு

                                    பால்காச்சப் போட்டடுப்பு

                                    இக்கிப் பாலோ கலந்தாலும்

                                    இக்கிப் பாசம் பிரியாது

                                    இன்னக்கிப் பாலும் கலராச்சோ

                                    பாசம் பிரியாச்சோ…..

                                    இக்கி நீலக்கல்லு சூட்டடுப்பு

                                    நெய்காச்சப் போட்டடுப்பு

                                    இக்கிப் நெய்யோ கலந்தாலும்

                                    இக்கிப் நேசோம் பிரியாது

                                    இன்னக்கிப் நெய்யும் கலராச்சோ

                                    நேசம் பிரியாச்சோ…..”

உ . மாமியார் இழப்பில் மருமகள் பாடுவது     

தாயைப் போல தன்னைப் பேணிக் காத்த தன் மாமியார் இறந்து போனவுடன் அவரின்றித் தானும், தன் கணவனும், குழந்தைகளும் பெரியவர்கள் துணையின்றி ஆதரவற்றுப் போனதை எண்ணி மருமகள் ஒப்பாரி பாடுகிறாள்.

                                    “மாமியோ நல்ல மாமி – எனக்கு வந்த

                                    மன்னவரோ ராசபுத்தி – இக்கி

                                    மன்னவரேப் பெத்தெடுத்தோம்

                                    மதிப்புள்ளோர் காலமிங்கோ – இக்கி

                                    மயிலி நான் தொணையௌந்தேன்

                                    மன்னவரோ தாயௌந்தார்.

                                    இக்கி கோட்டயோ நல்ல கோட்ட – எனக்கு வந்த

                                    கொண்டவரோ நல்லபுத்தி

                                    கொண்டவா; மேல் குத்தமில்லே

                                    கோட்டைமேல் தோசமில்லே – என்னக்

                                    கொண்டவரேப் பெத்தெடுத்தோம்

                                    கொணமுள்ளோர் காணமிங்கே – இக்கி

                                    குயிலி நான் தொணையௌந்தேன் – என்னக்

                                    கொண்டவரோ தாயௌந்தார்”

பயன்பட்ட நூற்கள்,

  1. சு. சக்திவேல், நாட்டுப்புறவியல் ஆய்வு
  2. ஆறு. அழகப்பன், நாட்டுப்புறப் பாடல்கள்-திறனாய்வு
  3. தொல். பொருள். பா. 1205
  4. தொல். பொருள். பா. 1199
  5. சிலப்பதிகாரம்.

 தகவலாளிகள்

  1. பாக்கியம்மாள், தகவலாளி, வேலந்தாவளம், வடகரப்பதிப் பஞ்சாயத்து பாலக்காடு.

2.மாரியம்மாள் , தகவலாளி,  புதுச்சேரி பஞ்சாயத்து, பாலக்காடு.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *