முனைவர் நா. கணேசன் அவர்களை வாழ்த்தி வரவேற்கிறோம்!

0

பவள சங்கரி

முனைவர் நா. கணேசன் ஹூஸ்டன் மாநகரில் 30 ஆண்டுகளாக விண்வெளி இயங்கியல் (Space Dynamics) பொறியாளராகப் பணியாற்றியவர், நம் வல்லமை இதழ் மற்றும் குழுமத்தில் பல ஆண்டுகளாக தமது சிறந்த படைப்புகளையும், தமிழின் வேர்சொற்கள் குறித்த ஆகச்சிறந்த கருத்துகளையும், விவாத மேடைகளையும் ஏற்படுத்தி தமிழார்வலர்களின் சிந்தையின் விழிப்புணர்வை மலரச் செய்பவர் என்றால் அது மிகையாகாது..

இணையம் தொடங்கிய நாளிலிருந்து தமிழ், இந்தியாவின் வரலாற்றில் திராவிட மொழிகளைப் பேசுவோரின் பங்கு, சிந்து சமவெளியும் தமிழர்களும், சொல்லாய்வுகள் பற்றி எழுதிவருகிறார். அமெரிக்காவில் பேரா. ஹார்ட் அமைத்த பெர்க்கிலி தமிழிருக்கை அமைய உதவியவர். தற்போது ஹூஸ்டன் பல்கலையில் 6 மில்லியன் டாலரில் நிரந்தரமான தமிழிருக்கை அமைக்கும் குழுவின் பொருளாளர், யூனிக்கோடு குறியேற்றம் தமிழுக்கு கணினி, இணையம், செல்பேசிகளில் அமைய உழைத்தவர். ’எழுத்து என்பது ஒரு கருவி. பொருளாதாரம், பணிகள் போன்றன நெருங்கிவரும் இந்தியாவில், ரோமன்/ஆங்கில எழுத்தில் இந்திய மொழிகள் எழுதும்முறை (ISO 15919) பரவலாக வேண்டும். அரசியல், உணர்ச்சி என்பதற்கும் மேலாக, இந்தியமொழிகளுக்கு இடையே உள்ள உறவுகளை அறிய இம்முறை உதவும். அப்போது, இந்தி எழுத்தைத் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் திணிக்கும் தேவை இல்லாமல் போய்விடும். ’India as a Linguistic Area’ எனும் பேரா. எமனோவின் கோட்பாட்டை ரோமன் இலிபி துணையாக இந்திய அரசாங்கம் ஏற்பது நாட்டுவளர்ச்சிக்கு உதவும்’ என்ற கொள்கையுடையவர், என்று நண்பர் முனைவர் மு.இளங்கோவன் அவர்களின் கருத்துரையும் குறிப்பிடத்தக்கது. உசாத்துணை: http://muelangovan.blogspot.com/2008/06/blog-post_29.html

அன்பு நண்பர், வல்லமை இதழின் சிறந்த பங்களிப்பாளர் முனைவர். நா. கணேசன் அவர்கள் வல்லமையாளர் விருது வழங்கும் வகையில் நம் வல்லமை ஆசிரியர் குழுவில் இணைந்து பணியாற்றுவதை வாழ்த்தி வரவேற்கிறோம். குடத்திலிட்ட விளக்காக ஒளிரும் ஆகச்சிறந்த வல்லமையாளர்களை இவர்தம் அரிய முயற்சியால் கண்டடைந்து வெளிக்கொணர்வோம் என்று நம்புவோம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *