நிறங்களும் குணங்களும்-2
சாந்தி மாரியப்பன்
ஒரு நாட்டுல எங்க பார்த்தாலும் பச்சைப்பசேல்ன்னு இருக்கறதுன்னா என்ன அர்த்தம்?. அந்த நாடு செழிப்பா இருக்கறதுன்னுதானே!.இந்த ஒரு நிறத்தைப் பார்த்தால் மட்டுமல்ல, நினைச்சாலே மனசு குதூகலமடைகிறது. செழிப்பைக் குறிக்கும் இந்த நிறம் வளர்ச்சி, இயற்கை, மற்றும் ஒரு இடத்தின் உயிர்த்தன்மையையும் குறிக்கிறது. ஒரு இடத்துல புல் பூண்டாச்சும் வளர்ந்தாத்தானே அந்த மண்ணில் உயிர்ச்சத்து இருக்குதுன்னு சொல்றோம். இதனால்தானோ என்னவோ உலகின் சில இடங்களில் மணப்பெண்கள் திருமணத்தின்போது பச்சை நிறத்தில் உடையணிகிறார்களாம். வெண்மை மட்டுமல்ல பசுமையும் கூட சமாதானத்துக்கான நிறமாய் விளங்குகிறது. இருந்தும் பொறாமையையும் இந்த நிறமே குறிப்பது சுவாரஸ்யமான எதிர்மறைதான். பச்சை நிறத்துக்கு மன அழுத்தம், மனச்சோர்வு, இன்னபிற உடல் அசௌகரியங்களை குணப்படுத்தும் தன்மையும் இருக்கிறது. மருத்துவர்கள் கையில் கண்ணாடியை கழட்டி வெச்சுக்கிட்டு, ஒவ்வொரு திரைப்படங்கள்லயும் “ஏதாவதொரு மலை வாசஸ்தலத்துக்கு கூட்டிட்டுப்போனா வியாதி குணமாக வாய்ப்பு இருக்கு”ன்னு வசனம் பேசிக் கேட்டிருப்பீங்கதானே.
‘கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு’,.. ‘கருப்பே அழகு காந்தலே ருசி’.. இன்னும் எத்தனையெத்தனை விதமா எப்படியெப்படிச் சொன்னா என்ன?? ஒரு பலனும் இல்லைங்கறது நாட்டுல விக்கிற சிகப்பழகு க்ரீம்களோட விற்பனை நாளுக்கு நாள் எகிறுவதை வெச்சே புரியுமே. அதெப்படி ஏழே நாள்ல செக்கச்செவேர்ன்னு ஆக முடியும்ன்னு ஒருத்தரும் யோசிக்கறதேயில்லை.இவ்வளவு சொல்றவங்க விளம்பரத்துல ஒரு காகத்தை வெள்ளையாக்கி நிரூபிக்கட்டுமே. கருப்பு நிறத்தை நாம்தான் தாழ்வா நினைக்கிறோம். ஆனால், உண்மையில் சக்தி, உறுதி, பலம், புத்திக்கூர்மை போன்ற நேர்மறைக் குணங்களை கருப்பு நிறம் குறிக்கிறது. கொஞ்சம் குண்டாக இருப்பவர்கள் கருப்பு நிற உடைகளை அணிந்து கொண்டால், ஒல்லியாக தெரிவார்களாம். ஆளுமைத்தன்மையையும் இது குறிக்கிறது பெரிய நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புல இருக்கறவங்க அதிகமா இந்த நிறத்தில் உடையணிவது வழக்கம். கருப்பு என்பது நிறங்களின் இல்லாமை ஆகும். ஒரு பொருளானது, தன் மீது விழும் ஒளியை பிரதிபலிப்பதன் மூலம், குறிப்பிட்ட நிறத்தை உண்டாக்குகிறது. அப்படி, தன் மீது விழும் ஒளியில் அனைத்து நிறங்களையும் உள்வாங்கிக் கொண்டு எந்த நிறத்தையும் பிரதிபலிக்கலைன்னா, அங்கு கருப்பு நிறம் உண்டாகிறது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த கருப்பு நிறம் மர்மம், திகில், போன்றவற்றுக்கான நிறமாவும் விளங்குது.
உணர்ச்சிகளைத் தூண்டும் ஒரு நிறமே சிவப்பு. இது இதயத்தோட தொடர்புள்ளதாவும் அன்பு, பாசம், காதல், ஆசை போன்றவற்றின் நிறமாவும் குறிக்கப் படுகிறது. ஆர்வம் மற்றும் ஆற்றலுடனும் தொடர்பு இருப்பதால் தன்னம்பிக்கையையும் கூட்டுவதாக சொல்லப்படுது. இதுக்கு தூண்டும் சக்தி அதிகமிருப்பதால் பிறரின் கவனத்தையும் எளிதாக கவர்கிறது. இந்த நிறத்துக்குக் கோபத்தையும், உணர்ச்சிகளையும் தூண்டும் சக்தி இருப்பதாவும் சொல்லப்படுது. இவ்வளவும் இருந்தா அது கண்டிப்பா ஆபத்தையும் கொண்டு வரத்தானே செய்யும். அதனாலத்தான், சாலைகள்ல முக்கியமா நிறுத்தங்களுக்கான போக்குவரத்து சமிக்ஞைகளுக்கு சிவப்பு நிறம் உபயோகிக்கப் படுகிறது.