நிர்மலா ராகவன்

 

கடவுள் நம்பிக்கை – மூட நம்பிக்கை

`ராத்திரி வேளையில் கண்ணாடியில் பார்த்துக்கொள்ளாதே. அடுத்த ஜன்மத்தில் மோசமான பிறவி வாய்க்கும்!’

`செவ்வாய், வெள்ளி, அமாவாசை ஆகிய நாட்களில் சவரம் செய்துகொள்வதும், நகம் வெட்டிக்கொள்வதும் ஆகாது!’

நடுத்தர வயதான சாம்பு இப்படியெல்லாம் ஓயாது தம் குழந்தைகளை விரட்டிக்கொண்டிருப்பார். அவர் கூறியது அறிவுரையா, அச்சமுறுத்தலா?

தந்தையைத் தட்டிக்கேட்டால் மரியாதையாக இருக்காதே! அதனால் அவருக்குக் கீழ்ப்படிந்தனர் அவர் பெற்ற மக்கள். இந்த சர்வாதிகாரத்தில் வளர்ந்த (வளைந்த?) குழந்தைகள் புதிதாக எந்த காரியம் செய்வதற்கு முன்னரும், `இப்படிச் செய்தால் ஏதாவது கெடுதல் வந்துவிடுமோ?’ என்று தமக்குத் தாமே தடை விதித்துக்கொள்ள ஆரம்பித்தனர்.

புத்திசாலிகள் அவர்கள் நன்றாகச் செய்யக்கூடிய காரியத்தில்கூட சிறிது சந்தேகத்துடன் ஈடுபடுவர். அதற்கு எதிர்மாறாக, `நாம் சொல்வதும் செய்வதும் சரிதானா, தவறாகவும் இருக்கலாமே!’ என்று நினைத்துப்பார்க்கவும் விரும்பாது, வெறி பிடித்தவர்கள்போல் நடப்பர் சாம்புவைப் போன்றவர்கள்.

பயம் ஏன் எழுகிறது?

எந்த நாட்டினர் ஆனாலும், ஒரு சூழ்நிலையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்றுக்கு (அதாவது, கிராமம் அல்லது சிற்றூர்களிலிருந்து பெரிய நகர்ப்புறத்திற்கு) குடிபெயர்ந்தால், தம் பழக்கவழக்கங்களையும், நம்பிக்கைகளையும் பிறர் ஏற்க மறுப்பார்களோ என்ற அச்சம் எழுகிறதாம் சாம்புவைப் போன்றவர்களுக்கு. (உளவியலில் படித்தது).

`நான் சொல்வதும் செய்வதும்தான் சரி!’ என்ற பிடிவாதம் மிகும் அவர்களுக்கு. புதிதாக எதையும் ஏற்க மறுப்பார்கள். கூட இருப்பவர்களும் தம்மைப்போல்தான் நடக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்துவார்கள்.

கதை: அதிகாரத்தால் பயம்

எங்கள் குடும்ப நண்பர் வேல்முருகன் சமீப காலமாக தன் தங்கைக்கு மனநிலை சரியில்லை என்றும், சிகிச்சைக்கு அழைத்துப்போவதாகவும் என்னிடம் தெரிவித்தார்.

“உங்களிடம் உண்மையைச் சொல்லிடறேன்,” என்று மேலும் கூறினார்: “என் தந்தை ரப்பர் தோட்டப்புறத்தில் வளர்ந்தவர். அங்கேயே காலத்தைக் கழித்துவிட்டு, கோலாலம்பூருக்கு வந்தவர். இங்கும், `வீட்டுக்குள் நுழையுமுன் கால்களை வாசலிலேயே கழுவிவிட்டுக்கொள்!’ என்று அதிகாரம் செய்தால் எப்படி!”

இது ஒரு சிறிய காரணம்தான். இதைப்போல் பலவும் இருக்கும்.

காலத்திற்கும் இடத்திற்கும் ஒவ்வாது, `இப்படி நட, அப்படிச் செய்!’ என்று மூத்தவர் ஒருவர் ஓயாமல் விரட்டிக்கொண்டே இருந்தால், எல்லா பாதையும் தடைப்பட்டுப்போகின்றனவே! சுய சிந்தனைக்கே இடம் கொடுக்காத நிலையில், புத்தி தடுமாறாமல் என்ன ஆகும்!

மரண பயம்

புதிய காரியங்கள் செய்வதிலிருந்து, மரணம்வரை எது எதற்கோ பயம் மனிதர்களுக்கு. சிறுவர்களுக்கு இறப்பு என்றாலே கொள்ளை பயம். ஆனால், வயோதிகர்களோ, பலகீனம், பல்வித நோய்கள், தனிமை என்று அவதிப்படும்போது, மரணத்தை வரவேற்கும் மனநிலையைப் பெறுகிறார்கள்.

(சிலர், `எனக்குச் சாவதற்குப் பயமில்லை. ஆனால், பிடித்தவர்கள் எல்லாரையும் விட்டுவிட்டுப் போகவேண்டுமே என்றுதான் வருத்தம்!’ என்று சொல்வதையும் கேட்டுள்ளேன்).

சுயநலவாதி

தன்னைப்பற்றி மட்டுமே சிந்தித்துக்கொண்டிருக்கும் ஒருவன் அச்சம், தனிமை, ஆத்திரம் போன்ற குணங்களுக்கு அடிமையாகி அல்லல்படுகிறான்.

காலம் கடந்தபின்னரும்

கடந்த காலத்தையே நினைத்துக்கொண்டு, அதிலிருந்து வெளிவராது, `இனி என்ன நடக்குமோ!’ என்று எதிர்காலத்தை எண்ணி அஞ்சுபவர்கள் பலர். தற்காலத்தில் ஒன்றுமே செய்யாமல் இருந்தால், `நம்மால் முடியுமா!’ என்ற அவநம்பிக்கையும், அச்சமும் பிறந்துவிடுமே!

அச்சத்தை எதிர்கொள்!

அச்சத்தை முறியடிக்க ஒரே வழிதான் உள்ளது: தைரியம்!

தைரியம் என்றால் எதற்கும் அஞ்சாமல் இருப்பது என்பதில்லை. அச்சத்தை எப்படி எதிர்கொள்வது என்று புரிந்து நடப்பது.

கதை

“எனக்கு நாட்டியம் கற்றுக்கொள்ள ஆசை. சிறு வயதில் கொஞ்சம் கற்றேன். ஆனால் இப்போது குண்டாக இருக்கிறேனே!” என்று முதலில் தயங்கினாள் மனோகரி.

அக்கலையின்மீதிருந்த விருப்பம் வென்றது. `பிறர் சிரிப்பார்களோ, என்ன சொல்வார்களோ!’ என்ற வீண்யோசனையைக் கைவிட்டாள். உடல் வலியை அலட்சியம் செய்தாள். சிறுமியான மகளுடன் தானும் கற்றாள்.

ஆடும்போது தவறு ஏற்பட்டால், மனோகரி கூனிக் குறுகுவதோ, அசட்டுச்சிரிப்பு சிரிப்பதோ கிடையாது. மேடையில் ஆடும் அளவுக்கு சிறப்பாளோ, என்னவோ! ஆனால், `துணிந்து செய்திருக்கலாமோ!’ என்று என்றாவது வருந்த வேண்டாம். ஆடும்போதே மகிழ்ச்சி பொங்குகிறது. இதுவரை இல்லாத தன்னம்பிக்கையும், சுதந்திர உணர்வும் வந்துவிட்டன மனோகரிக்கு. இது போதாதா!

யாருக்குப் பயமில்லை?

அது எப்படி, சிலபேருக்கு மட்டும் நிமிர்ந்து நடக்க முடிகிறது என்று எப்போதாவது உங்கள் யோசனை போனதுண்டா?

அவர்கள் நேர்மையானவர்கள். தாம் கூறியதை அடிக்கடி மாற்றிச் சொல்லவேண்டிய அவசியம் அவர்களுக்குக் கிடையாது. அதனால், `இவரிடம் என்ன சொன்னோம்?’ என்று நினைவு வைத்துக்கொண்டிருக்க வேண்டாம். இதனாலேயே இவர்களுக்குப் பயமுமில்லை, `தவறாகச் சொல்லிவிட்டோமோ?’ என்ற குற்ற உணர்வும் கிடையாது.

மூடநம்பிக்கைகளால் அச்சம்

மூடநம்பிக்கைகளைப் பரப்புகிறவர்கள், `கடவுள், மதம்’ என்று போலிச்சமாதானங்களை முன்வைத்து வெல்கிறார்கள்.

அச்சமுறுத்தும் மூடநம்பிக்கைகளுக்கு விஞ்ஞானம்தான் எதிரி என்று கூறலாம். ஏன், எப்படி என்ற கேள்விகளுக்கெல்லாம் விஞ்ஞானம் விடை அளிக்கிறது.

இப்படிப்பட்டவர்கள் தாம் சொல்வதே சரி என்று சாதிப்பார்கள், அதில் அவர்களுக்கே சந்தேகம் இருந்தாலும்! தம்மைப்போல் இல்லாதவர்களைப் பொறுக்கமாட்டார்கள். சிலர் – ஹிட்லரைப்போல – வன்முறையில் இறங்குகிறார்கள். இன்றும் உலகெங்கும் காணப்படுகிறார்கள்.

இந்த வெறித்தனம் மனிதத்தன்மைக்கு அப்பாற்பட்டது. ஆயினும், தீயவைதாமே எளிதாகப் பரவுகின்றன!

கதை

ஸால்மா என்ற பதின்ம வயதுப் பெண் காதில் இரு துளைகளைக் குத்திக்கொண்டு, அவைகளில் சிறிய தோடுகளை அணிந்து பள்ளிக்கூடத்திற்கு வந்தாள்.

`இது நம் மதத்திற்கு எதிரானது,’ என்று கட்டொழுங்கு ஆசிரியை மிரட்டினாள்.

மாணவி முதலில், `அம்மா அப்படிச் சொல்லவில்லையே!’ என்று சமாளித்தாலும், பலரும் சேர்ந்து மிரட்டியபோது, தாளமுடியாது கதறினாள்.

மதம் கடவுளை அடைய வழிகாட்டுகிறது என்றால், இந்தச் சிறிய விஷயத்தில் எல்லாம் கடவுள் தலையிடுவாரா?

மதம் என்பதின் குறிக்கோளே ஒருவனை நல்ல வழியில் செலுத்துவதுதானே?

காதில் இருக்கும் துளைக்கும், நற்குணத்திற்கும் என்ன சம்பந்தம்?

“சில மதகுருமார்கள் பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிப்பது நல்ல செய்தி. மூட நம்பிக்கைகளைப் பரப்ப அடுத்த தலைமுறை எழுவதில்லையே!” என்று வேடிக்கையாகக் குறிப்பிட்டிருக்கிறார் அமெரிக்கரான கார்ல் ஸேகன் (CARL SAGAN). 1996-ல் மறைந்த இவர் ஒரு வானியல் நிபுணர். பாமரருக்கும் புரியும்படி விஞ்ஞானத்தைப் பரப்பியவர்.

“பயத்தை எதிர்கொள்ளும்போது ஞானம் பிறக்கிறது!” என்கிறார் தத்துவ ஞானி.

கடவுளை நம்புவதே மூடநம்பிக்கை என்றில்லை. கடவுள் பெயரால், தமக்குத் தோன்றியபடியெல்லாம், தமக்குச் சாதகமாக ஏதேதோ நம்பிக்கைகளைப் பரப்பி, பக்தர்களை பயப்படவைப்பதுதான் ஒப்புக்கொள்ளக்கூடியது இல்லை.

கதை

“நான் எது ஒன்று செய்யும்போதும் கடவுளை நினைத்துத்தான் ஆரம்பிப்பேன். நல்லபடியாக முடிந்ததும், கடவுளுக்கு நன்றி சொல்வேன்”. (சமைக்கும்போது அம்மன் பாடல் ஒன்றை நினைத்தபடி இருந்தாலே ருசி கூடுகிறது என்பதைத் தற்செயலாகக் கண்டுபிடித்தேன்).

நான் இப்படிச் சொல்லக் கேட்ட என் பேரன், “செய்வதையெல்லாம் நாம் செய்துவிட்டு, `கடவுளால்தான்!’ என வேண்டுமா?” என்று சந்தேகம் கேட்டான். அப்போது அவனுக்குப் பதின்மூன்று வயது.

“சில சமயம், ஒரு போட்டிக்குப் போகுமுன்னர் எதிர்பாராது உடல்நிலை கெட்டு, போட்டியில் கலந்துகொள்ளவே முடியாமல் போய்விடுகிறதே! அது யார் செயல்?”

அவன் யோசிக்க ஆரம்பித்தான்.

“கடவுள் நம்முடனேயே இருந்தால், நம்மை யார், என்ன செய்துவிட முடியும்!” என்று நம்பிக்கையுடன் இருந்தால், பயமே எழாது என்று எங்கோ படித்தேன்.

நீங்களும்தான் பரீட்சை செய்து பாருங்களேன்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *