திருத்தணிகை

 

விண்ணசையும் மண்ணசையும் கோளசையும் கண்ணசைவில்

வேலசையும் வேகத்தில் விதியசையும் நல்லிசையாய்

பண்ணிசைத்துப் பாடிடவே உன்புகழைப் பேரழகா

காற்றிசைக்கும் தென்றலாய் காலமெல்லாம் மாறாதோ ?

 

பணியேதும் இனியில்லை உன்னருகில் அமர்ந்திடுவேன்

தணிகைமலைப் புகழ்பாடி தனிப்பொழுதைக் கழித்திடுவேன்  

மணியோசை ஒலித்துவிடும் திருக்கோவில் வாசலிலே

அணிசெய்த உன்னழகை அனுதினமும் பார்த்திருப்பேன் !

 

அகத்தியனுக்கே தமிழ்த்தந்தாய் அகிலமெல்லாம் பயனுறவே

அகமுவந்து வாசுகிக்கே அருள்புரிந்தாய்  நோய்தீர்த்து

அசுரனின் சக்கரத்தை அன்புடனே நெஞ்சிலேநிறுத்தி

அகிலமெல்லாம் காத்துநின்றாய் ஆறுமுகனே அடைக்கலமே !

 

மனத்துள்ளே கோயில்கட்டி மலையப்பா அழைத்துடுவேன்

எனக்குள்ளே நீயிருந்தால் இல்லையென்றும் எதிர்மறைகள்

குகைக்குள்ளே நீயிருந்த தவக்கோலம் போதுமய்யா

குடியிருக்க நீவருவாய் எனக்குள்ளே குருபரனே !

 

மலர்தூவி மாலையிட்டு மனதாரப்  போற்றிவிட்டேன்

மறக்காமல் பாலோடுதேனும் பஞ்சாமிர்தம் படைத்துவிட்டேன்

மறைக்காமல் என்குறைகள் உன்னிடமே சொல்லிவிட்டேன்

மனமிரங்கி வாராயோ மனத்தினிலே  ஆட்சிசெய்ய ?

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *